கவனக்குறைவா? விதிமீறலா?
சென்ற வாரம் சென்னையின் மையப் பகுதியில் ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. கட்டட வேலை நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று சாரம் விழுந்து, விலை உயர்ந்த "ஆடி' கார் சேதமடைந்தது. நல்ல
சென்ற வாரம் சென்னையின் மையப் பகுதியில் ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. கட்டட வேலை நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று சாரம் விழுந்து, விலை உயர்ந்த "ஆடி' கார் சேதமடைந்தது. நல்லகாலம், ஓட்டுநர் உயிர் தப்பினார். வாகன உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
இதேபோன்று வேறு ஒரு சம்பவம். இதுவும் ஒரு கோணத்தில் நோக்கினால் கட்டுமானத் தவறுதான். சென்னையில் ஒரு ரயில் நிலையத்தில், முதல் மாடிக்கு ஏறிய ஒரு பயணி, இயற்கை உபாதையைப்
போக்குவதற்காக அவசரம் அவசரமாக ஓர் அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
Advertisement
ஆனால் அவர் நினைத்த மாதிரி அது டாய்லெட் அல்ல. பாதி திறந்திருந்த, பயன்படுத்த இயலாத மின்தூக்கி இடம், பிறகு என்ன ஆயிற்றோ? பயணி வெளியே வர முயற்சி செய்ததாகவும், சில ஊழியர்கள்
பார்த்து உதவி புரிந்து வெளியே மீட்டதாகவும் செய்தியிலிருந்தது.
ஆனால் மனிதருக்கு எலும்பு முறிவு நேர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். "நாங்கள் நடுத்தரக் குடும்பம். ரூ.42,000 செலவாகுமாம். ரயில்வே நிர்வாகம் தருவார்களா?' என்று
அங்கலாய்த்திருக்கிறார் அக் குடும்பப் பெண்மணி.
ரயில்வே நிர்வாகம், தொகை தருவதற்கு விதிகள் அனுமதிக்குமோ என்னவோ? ஆனால், உடனடியாக அவர்கள் சிமென்டும் சுண்ணாம்பும் சேர்ந்த கலவையால், குறிப்பிட்ட இடத்தை முழுமையாக மூடஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று ஆங்கில ஏடு தெரிவித்தது.
இந்த மின்தூக்கியில் அகப்பட்டுக் கொண்ட அனுபவம் எனக்குமுண்டு. வெளியூரில் பிரபல ஓட்டலில் "லிப்டில் மேலே செல்லும்போது, தடாலென்று நடுவில் லிப்ட் நின்று விட்டது (கூடுதல் நபர்கள்காரணம்). லிப்ட் பணியாள் எங்களை மெதுவாக வெளியேற்றினார். ஆளில்லா மின்தூக்கி யென்றால் அபாயம் கொஞ்சம் அதிகம்.
ஒரு பத்து நாள் முன், அருகிலுள்ள தளத்தில் ஏறினேன்; கூட ஓரிரு இளைஞர்கள், மின்தூக்கி சில கணங்கள் வேலை செய்யவில்லை. பின்னர் திடீரென உயர்ந்தது. இளைஞன் இறங்க வேண்டிய இடம்
இரண்டாவது. எனக்கோ முதல் தளம். ஆனால், ஏதோ கோளாறினால், லிஃப்ட் தள எண்களை மாற்றி மாற்றிக் காண்பித்தது! வெறுத்துப் போய் படிகளில் மள மளவென்று இறங்கி நடந்தேன்.
இளைஞர்களே பதட்டமடைந்தார்கள் என்றால், வயதானவர்களைப் பற்றி என்ன சொல்ல? மின்தூக்கி வசதியே வயதானவர்களுக்குத்தான் என்கிற எண்ணம் ஒப்பந்தக்காரர்களுக்கு இருப்பதில்லை.
இன்னொரு நிகழ்வு. சென்னையில் உள்ள பெரிய கடையொன்றில், ஏழாவது மாடியின் தளம் திடீரென விரிசல் கண்டது. வாடிக்கையாளர்கள் நிமிட நேரத்தில் கீழே "வந்து' விட்டார்கள். அப்போது ஏற்பட்ட
தள்ளுமுள்ளுளில், பலருக்கு லேசான காயம்.
இது குறித்து கட்டடப் பொறியாளரிடம் விசாரித்தபோது, "வெயில் தாங்காமல், பல வருடங்களான கட்டடங்களில் விரிசல் வர சாத்தியக் கூறுண்டு' என்றார். அவர் விவரித்த தொழில்நுட்பக் காரணங்கள்மனத்துக்குச் சமாதானமாகவில்லை. மேலும், ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து போகும் கட்டடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டாமோ?
மேற்குறிப்பிட்டது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக நிறைய நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏன்? கவனக்குறைவா? அசிரத்தையா? விதிமீறலா? அப்பட்டமான விதிமீறல்களுக்கு சென்னை
மவுலிவாக்கமும், கல்கத்தா பாலமுமே உதாரணங்கள்.
இன்னொன்று கவனிக்கத்தக்கது. பொதுவாக இத்தகைய சம்பவங்களில், பாதிக்கப்பட்ட நபர்கள், "ஏதோ கடவுள் அருள். இந்த மட்டோடு போயிற்றே?' என்று தேற்றிக் கொள்கின்றனர். விதியின் மீதுபாரத்தைப் போட்டுக் காலத்தைக் கழிக்கின்றனர்.
குடும்ப வாழ்வில், தனிப்பட்ட முறையில் எதிர்பாராத சோகங்கள் நேர்ந்தால், முன் போல் யாரும் இப்போது வாளா இருப்பதில்லை. பல வருடங்கள் திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாமலிருந்தால்,
செயற்கைக் கரு மையத்துக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவு நேர்ந்தால், ஆணும் சரி பெண்ணும் சரி மறுமணம் புரிந்து கொள்ளுகிறார்கள். பழைமையில் ஊறிப் போன ஜோசியர்கள் கூட, "உங்களுக்கு அடுத்த ஆண்டுதையில் மறுமணம் நிகழும்' என்று எழுதுகிறார்கள்.
ஆனால், பொது இடங்களில் நேரும் விபத்துக்களில் மக்களின் மனப்பான்மை வேறு விதமாக உள்ளதே? ஏன்? இதுகுறித்து எனது வழக்குரைஞர் நண்பர் ஒருவரைக் கேட்டேன். "சொந்தக் குடும்பங்களில்
சோகம் ஏற்பட்டால், உறவினர்கள் உதவுவார்கள். மேலும் மணமுறிவு போன்றவற்றுக்கெல்லாம் தனி நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், பொது இடங்களில் ஏற்படுகிற விபத்துகளில் நீதி கோர,
நீதிமன்றங்களைத்தான் நாட வேண்டும். பணச் செலவு, நேர விரயம் எல்லாம் ஆகும்' என்று விளக்கமளித்தார்.
பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அறிவுரைதான் ஞாபகம் வருகிறது: "உங்கள் வாழ்நாளில் எத்தனை தடவை சாலையைக் கடந்திருக்கிறீர்கள்? கார் ஓட்டிச் செல்லும்போது, நீங்கள் தவறு செய்ய
வேண்டும் என்கிற அவசியமில்லை. அடுத்தவரின் தவறுகூட உங்களுக்கு விபத்தில் முடியலாம். எனவே, சாவின் பிடிக்குள் இருந்தாலும் எப்போதும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள், அந்தவகையில் நீங்கள் வெற்றிகரமான மனிதர்தான்!' (மனம் மலரட்டும் - இரண்டாம் பாகம்)
பல வருடங்களுக்கு முன்பே அவர் இதுபோல் சொல்லியிருக்கிறார். பற்பல மாடிக் கட்டடங்கள் எழும்புகிற இந்தக் காலத்தில், சுவாமிகளின் வாசகம் இரட்டிப்பு முக்கியத்துவம் பெறுகிறதல்லவா?