முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

துன்பம் தொடரக் கூடாது

ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின் அது குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்டது.

Updated On : 15 டிசம்பர், 2016 at 4:11 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:25 AM

ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின் அது குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்டது. வாபஸ் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடி. புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பில் இது 86 சதவீதம். எண்ணிக்கையில் 24 சதவீதம்.
இந்த விவகாரத்தை அரைகுறை மனதுடன் ஆதரிப்போரும், இது தவறு என்று தெரிந்தும் எதிர்க்கத் துணிவில்லாதவர்களும் சலிப்பும் எரிச்சலும் ஏற்படும் வகையில் "நோக்கம் சிறந்ததுதான், ஆனால்...' என்று கூறிவருகிறார்கள்.
இருப்பினும், மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை. அதேநேரம், புதுப்புது எச்சரிக்கைகளால் அப்பாவி மக்களை அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக சில அடிப்படையான கேள்விகள் உள்ளன. பிரதமர், இந்த நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்கு முன், குறைந்தபட்சம் தன் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலருக்காவது தெரியப்படுத்தினாரா? ஆம் என்றால், அது ஒரு சிலர் மட்டும் ஆதாயம் அடையும் வகையிலான செய்கை ஆகாதா? இல்லை என்றால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமற்ற, சர்வாதிகார நடவடிக்கையாக இது ஆகாதா?
எவ்வளவு ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டன என அரசு நினைக்கிறது? சில பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி வெறும் 6 சதவீதமா? அல்லது அதைவிட அதிகம் இருக்கும் என்று அரசு கருதுகிறதா? எந்த அடிப்படையில் இதை அரசு கணிக்கிறது? கருப்புப் பணத்தை வெளிக்கொணர்கிறோம் என்ற பெயரில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் கொடுமைப்படுத்துவதை அரசு எந்தவகையில் நியாயப்படுத்துகிறது?
கணக்கில் வராத பணத்தை முறைப்படுத்துவதுதான் அரசின் இலக்கு என்றால், அடிப்படையற்ற வகையில் ஒரு தொகையை நிர்ணயித்து, அதற்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து அச்சுறுத்துவது ஏன்? இந்திய ரிசர்வ் வங்கி வழியாக தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
தங்களிடம் இருக்கும் பணமெல்லாம் வெற்றுத் தாளாக மாறிவிட்ட நிலையில், வங்கிக் கிளைகளுக்கு வெளியில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து வாடிக்கையாளர்கள் பலர் உயிரிழந்தது குறித்தும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் மன அழுத்தத்தில் வங்கி ஊழியர்கள் இருப்பது குறித்தும், மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தவர்கள் குறித்தும் எப்படி வரையறுப்பது?
இந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 என்று கூறப்படுகிறது. சிலர் அவ்வளவு பேர் இறக்கவில்லை என்கின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கைதான். ஆனால், ஒருவருமே இறக்கவில்லை என்று யாரும் இதுவரை கூறவில்லை.  
மரணம் நான்கு வகைப்படும்: இயற்கையானது, விபத்து, தற்கொலை, கொலை. ரூபாய் நோட்டு விவகாரத்தில் உயிரிழந்தவர்களை இதில் எந்தவகையில் சேர்ப்பது? இதற்கு யார் பொறுப்பேற்பது?
மனதை உலுக்கிவரும் வேறு சில கேள்விகள்: ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும், "இந்த ரூபாய் நோட்டை வைத்திருப்பவருக்கு இந்தத் தொகையை அளிக்க உறுதி அளிக்கிறேன்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி அளித்திருக்கிறார். அதை மிகச் சுலபமாக அரசு ரத்து செய்துவிட முடியுமா? இது சட்டபூர்வமானதா? எதிர்காலத்தில் இதுபோன்ற உறுதிமொழிகளை எப்படி நம்புவது?
ரிசர்வ் வங்கியை விட்டுத் தள்ளுங்கள். தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் மக்களுக்கு, வங்கி வாசலில் "ரொக்கம் இல்லை' என பலகை தொடர்ந்து தொங்கவிடப்பட்டிருந்தால் வங்கிகள் மீதான நம்பிக்கை என்னவாகும்?
காசோலைகளுக்குப் பணம் வழங்காமல் இருப்பது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி தனது பணியை வங்கிகள் சரியாகச் செய்யவில்லை என்பது ஆகாதா? அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி அறிவிக்கப்படாவிட்டால், விடுமுறை நாள்களைகூட எடுத்துக்கொள்ள வங்கிகளுக்கு அனுமதி இல்லை.
இதன் பொருள் என்னவென்றால், முதலீட்டாளர்களின் வைப்புத்தொகைக்கு பாதுகாவலர்களான வங்கிகள், அவர்கள் திருப்பிக் கேட்கும்போது அத்தொகையை அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அப்படியெனில், தங்கள் பணத்தைத் திரும்பப் பெற பொது மக்களுக்கு அனுமதி மறுப்பது சட்ட விரோதமானது அல்லவா?
இந்தியாவில் 90 சதவீத தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழில்களிலேயே பணிபுரிகின்றனர். அவர்கள் ரொக்கமாகவே வருமானத்தைப் பெறுகின்றனர். அப்படி இருக்கையில், புழக்கத்தில் உள்ள ரொக்கத்தில் 86 சதவீதத்தைத் திரும்பப் பெறுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதா?
மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு, வேலை இழப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.)  வீழ்ச்சி, ஜி.டி.பி. மீதான நீண்ட காலத் தாக்கம் போன்றவற்றுக்கு யார் பொறுப்பேற்பது?
புதிய நோட்டுகள் விரைவில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? வாபஸ் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கு, இந்தியாவில் உள்ள நான்கு அச்சகங்களும் தங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தினாலும் ஒன்பது மாதங்கள் பிடிக்கும்.
சொற்ப வருமானத்தில் வறுமையில் உழலும் மக்கள் அதிகம் வசிக்கும் நமது நாட்டில், 68 சதவீத பொருளாதார பரிவர்த்தனைகள் ரொக்கமாகவே மேற்கொள்ளப்படும் நமது நாட்டில், திடீரென அனைவரும் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறுவது என்பது சாத்தியமானதா?
நாடு முழுவதும் முழு அளவிலான வங்கிக் கட்டமைப்பு உள்ளதா? 2016 ஆகஸ்ட் நிலவரப்படி, நமது நாட்டில் 1,32,834 வங்கிக் கிளைகள் உள்ளன. அதில் 50,554 கிளைகள் (38%) மட்டுமே ஊரகப் பகுதிகளில் உள்ளன. 6 லட்சம் கிராமங்களைக் கொண்ட நாட்டில் இவ்வளவு குறைவான வங்கிக் கிளைகள் இருப்பது, மின்னணுப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்குப் போதுமானதா?
அதிர்ஷ்டம் வாய்ந்த சில பெரிய கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளதால், நம் நாட்டில் 40 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள 1.97 லட்சம் ஏ.டி.எம்.களில் 33 ஆயிரம் மட்டுமே ஊரகப் பகுதிகளில் உள்ளன. 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கு இவை போதுமானதா? இவற்றில் 30 சதவீதத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.கள் வேலை செய்வதே இல்லை.
குறைவான கல்வியறிவும், பொருளாதார கல்வியறிவும் கொண்டவர்கள் அதிகமானோர் வாழும் நமது நாட்டில், வங்கிகள் மூலமும், ஏ.டி.எம்.கள் மூலம் கையாளும் அளவுக்கு பணமும், நேரமும் நமது மக்களுக்கு உள்ளதா?
பணமே இல்லாத நிலையில், வங்கிக் கணக்கு தொடங்குவதால் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படப் போகிறதா? "ஜன்தன்' வங்கிக் கணக்குகள் பலவற்றில் பணமே இல்லாததே இதற்கு சாட்சி.
"ஜன்தன்' வங்கிக் கணக்கில் தங்கள் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்துடன், தங்கள் கணக்கில் பணம் போட அனுமதித்த ஏழைகளைக் காப்பாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், இதை ஆழ்ந்து ஆய்வு செய்தால் ஓர் உண்மை புலப்படும்.
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பிறகு, 19.89 கோடி "ஜன்தன்' வங்கிக் கணக்குகளில் ரூ.29,454 கோடி செலுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக வெறும் ரூ.1,559 தான் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றிருக்கும் என்று கூறுவது அபத்தமானது.
பிரதமர் கூறுவதுபோல, பணம் செலுத்தியவர்களைத் தண்டிப்பதையும், ஏழைகளை தண்டனையிலிருந்து விடுவிப்பதையும் நமது நாட்டு சட்டம் அனுமதிக்குமா?
மிகப் பெரிய அளவில் சேதாரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏழைகளின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள் மீண்டு வரப்போவதில்லை. புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வேண்டும் என்ற உந்துதலால், இது தொடர்பான மற்ற எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் நிலைமை மோசமாவதற்கு அனுமதிக்கக் கூடாது.
இதை நடந்து முடிந்த கதை என்று எடுத்துக் கொள்ளாமல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தேவையான அளவு புது ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், செல்லாது அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடுத்த ஓராண்டுக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
தோல்வியுற்ற இந்தப் பரிசோதனைக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வாபஸ் பெற வேண்டும். அது ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கு சாத்தியமான ஒரே தீர்வாகும்.
அரசுக்கு உண்மையிலேயே மன உறுதி இருக்குமானால், சாதாரண அப்பாவி மக்கள் அவதிப்படுவதைத் தவிர்த்து, கருப்புப் பணத்தை வெளிக்கொணர அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். உயர்நிலையில் இருந்து ஒவ்வொரு நிலையிலும் ஊழலைத் தடுக்க வேண்டும். அரசியல்வாதி - அதிகார வர்க்கம் - தொழிலதிபர்களின் முறையற்ற தொடர்பை முறிக்காமல் இது சாத்தியமாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.