நடுப்பக்கக் கட்டுரைகள்

நிலம் என்னும் நல்லாள்!

மனிதன் பூமியில்தான் பிறக்கிறான்; பூமியில்தான் வாழ்கிறான்; பூமியில்தான் மரிக்கிறான்; மக்கி மண்ணோடு மண்ணாக இரண்டறக் கலந்து விடுகிறான்.

உதயை மு. வீரையன்

மனிதன் பூமியில்தான் பிறக்கிறான்; பூமியில்தான் வாழ்கிறான்; பூமியில்தான் மரிக்கிறான்; மக்கி மண்ணோடு மண்ணாக இரண்டறக் கலந்து விடுகிறான். அவனுக்கு இந்த மண்ணோடு கொண்ட உறவு எப்போதும் மாறாது. அதிலிருந்து அவனைப் பிரிக்க இயலாது.
அதனால்தான் தாய்நாட்டை தாய்மண் என்கிறோம். தாய்நாட்டுப் பற்று என்பதும் அப்படிப்பட்டதுதான். ஒவ்வொரு மனிதனும் அவரவர் மண்ணை விரும்புவது இயற்கை.
நாம் இந்த மண்ணில் பிறந்ததனால் இந்த நாட்டை நேசிக்கிறோம். நாமே வேறொரு நாட்டில் பிறந்திருந்தால், அந்த நாட்டைத்தானே நேசிப்போம். அதனால்தான் துறவிகளும் ஞானியரும் உலகளாவிய பார்வை கொண்டிருந்தனர். இதனையே "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சங்க இலக்கியம் பாடியது.
ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணை பூமாதேவி என்றே வணங்குகிறான் விவசாயிகளுக்குச் சொத்து, சுகம், சொந்தம் எல்லாம் அதுதான். அரசாங்கமாக இருந்தாலும் அயலவர்களாக இருந்தாலும் அதிகாரத்தோடு பறிக்கவோ, ஆசைகாட்டி விற்பனைக்கோ விட்டுக் கொடுக்க அவர்கள் முன்வருவதில்லை.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை
செய்வோம்'
-என்று பாரதி பாடினார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உழவும் வேண்டும் தொழிலும் வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கியே தொழில் தொடங்குவோம் என்பது என்ன நியாயம்?
விவசாயி ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளாக விவசாயத்தை விட்டுவிடாமலிருப்பதற்கான காரணம் என்ன? அது லாபகரமான தொழில் என்பதற்காகவா? இல்லை வங்கியில் வாங்கிய கடனையே கட்ட முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகித் தற்கொலைக்கு இட்டுச் செல்லப்படுகிறான்.
மனித சமுதாயம் பெருகப் பெருக மக்கள் வாழ இடம் போதாது என்கிற நிலை உருவாகி வருகிறது. வயல்வெளிகள் மட்டுமன்றி நீர் நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கினால் கட்டடங்கள் மிதக்கின்றன. உயிர்ச்சேதம், பயிர்ச்சேதம், பொருட்சேதம் என சொல்ல முடியாத பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இவற்றையெல்லாம் அறிந்துதான் அரசாங்கம் பல்வேறு சட்டங்களைப் பிறப்பித்துள்ளன. ஆனாலும் அத்தனை சட்டங்களும் மீறப்படுகின்றன என்பதுதான் வேதனை.
அரசியல் கட்சியினரே இந்த ஆக்கிரமிப்புகளை முன்னின்று நடத்துகின்றனர். அதிகாரிகளும் காவல்துறையினரும் இதற்கு வெகுவாகத் துணை போகின்றனர். பெரிய அளவில் பிரச்னைகள் முட்டி மோதும் போதுதான் வழக்குகள் போடப்படுகின்றன. அதுகூட கொந்தளித்து எழும் மக்களை அமைதிப்படுத்தி, அவர்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே.
தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்ததாக தமிழக பாசன வரலாறு கூறுகின்றது. ஆனால், உண்மையில் ஏரிகளாக இப்போது இருப்பவை எத்தனையென்று உறுதியாகக் கூற முடியாது. இருக்கும் ஏரிகளின் கொள்ளளவும் குறைந்து கொண்டே வருகிறது.
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'
"சுற்றிவரும் உலகம் உழவுத் தொழிலின் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவுதான் துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்ததாகும்' என்று திருக்குறள் கூறுகிறது.
ஆனால், தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமைகூட அவர்களுக்கு இல்லை. அதுதான் கொடுமையிலும் கொடுமை.
விவசாயிகள் உற்பத்தி செய்வது அவர்களது பயன்பாட்டிற்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்பதால்தான் அவர்கள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை விடுகின்றனர். அதனை மத்திய, மாநில அரசுகள் ஏற்பதில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹுக்ளி மாவட்டம் சிங்கூர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. டாடாவின் நானோ கார் ஆலை அமைக்க அப்போதைய மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா தலைமையிலான அரசு, 997 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இது நடந்தது 2006-ஆம் ஆண்டுடில்.
விவசாய நிலத்தை தொழிற்சாலை கட்டுவதற்கு ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. மம்தா பானர்ஜி 26 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த ஆலைப் பணிகள் 70 விழுக்காடு முடிந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இதனால் 2008, அக்டோபர், 3 அன்று சிங்கூர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் அந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
சிங்கூரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறிய போதிலும் நிலம் மட்டும் டாடா வசமே இருந்தது. நிலத்தைத் திருப்பித் தரவேண்டுமென மாநில அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அந்த நிலமானது தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இழுபறியில் இருந்துவந்த இந்த வழக்கு 2016 ஆகஸ்ட், 31 அன்று முடிவுக்கு வந்தது. நிலத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும் இனிமேல் தாம் மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மகிழ்ச்சியோடு இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இடதுசாரி இயக்கத்தின் 34 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதற்கும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கும் சிங்கூர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்திய நிகழ்வே காரணமாக அமைந்தது.
விவசாய நிலங்களை அரசாங்கம் கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்கூர் விவசாய நிலம் கையகப்படுத்திய விவகாரம் சிறந்த பாடமாகும். அத்துடன் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.
சிங்கூர் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக இந்திய அளவில் நிலம் கையகப்படுத்தல் பற்றி பெரும் விவாதம் எழுந்துள்ளது. இந்தப் பின்னணியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்த்தல் மறுவாழ்வு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
இது 2014 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தில் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத் தன்மைக்கும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இது சிங்கூர் விவசாயிகளின் போராட்டத்தால் விளைந்த சாதனை என்றே கூறலாம்.
"இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் காந்தியண்ணல். அந்த கிராமங்கள் விவசாயத்தால்தான் இதுநாள்வரை வாழ்ந்து வருகிறது. அந்த விவசாயம் அழிவதால் கிராமங்களும் அங்குள்ள பண்பாடுகளும் அழிந்து கொண்டு வருகின்றன.
"சோழநாடு சோறுடைத்து' என்னும் வழிவழி பெருமைக்குச் சொந்தக்காரர்கள் காவிரி நீருக்காகக் கையேந்தி நிற்கின்றனர். அவர்கள், வேறு பயிர் செய்யவும் வேறு தொழில் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். "உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்கிற முழக்கம் எல்லாம் ஆட்சியைப் பிடிப்பதற்கு மட்டும்தானா?
விவசாயிகளின் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கூறுபோட்டு விற்கும் மனை வணிகர்கள் பெருகிவிட்டனர். நகரப்புறங்கள் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் இது தொடர்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் விவசாயம் செய்ய நிலமே இல்லாமல் போய்விடும்.
நாடு வல்லரசாக வேண்டுமென்று கனவு காண்பவர்கள் உணவுக்கு எங்கே போவார்கள்? பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது இவர்களுக்குத் தெரியாதா? உணவில் தன்னிறைவு அடையாத நாடு முன்னேற்றம் காண முடியுமா? உணவு இறக்குமதி செய்யும் நாடு பொருளாதார நெருக்கடியில்தான் சிக்கித் தவிக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
விளை நிலங்களை அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளாக மாற்றி பத்திரம் பதிவு செய்ய இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளான்கள்போல பெருகிவிட்ட அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் பதிவு செய்வதைத் தடுப்பதற்காக அரச சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி. நிலம் இருந்தால்தான் விவசாயிகள் இருக்க முடியும். நிலத்தை நம்பியிருக்கும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் நாட்டில் யாருக்கும் உணவு இல்லாமல் போகும்.
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்பவர்கள்கூட பசியைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பசித்த மக்களை யாராலும் கட்டுப்படுத்திவிட முடியாது. விளை நிலங்கள் விலை நிலங்களாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் நல அரசின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT