அரசியலிலும், தொழில் துறையிலும், எழுத்தாற்றலிலும் எண்ணற்ற பிற துறைகளிலும் 60 வயதிற்கும் மேற்பட்ட பலர் சாதனைகள் படைத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அவர்களின் அனுபவங்களின் மூலமாக இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டவும், அவர்களை வழிநடத்திச் செல்லவும் முடிகிறது.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத்தலைவர் என வயதில் மூத்தோர் பலர் எழுச்சியோடு, உற்சாகமாகத் தங்கள் பணியினைப் பொறுப்புகளைத் திறம்படச் செய்து வருகின்றனர்.
வளர்ச்சி பெற்றுவரும் தனியார் தொழில் நிறுவனங்கள் பலவற்றில் அனுபவமும், திறனும் வாய்ந்த வயதில் மூத்த வல்லுநர்கள் நிறுவனங்களுக்கே மகுடமாய்த் திகழ்ந்து வருகின்றனர்.
முதுமை என்பது வயதைப் பொறுத்தது அல்ல. உடல் ஆரோக்கியத்தையும், மனவளத்தையும் பொறுத்ததே. சிலர் 50 வயதிற்குள்ளேயே உடல் நலிவுற்று மனம் சோர்வுற்று முதுமை அடைந்து விடுகின்றனர். சிலர் 70 வயதிற்கு மேலும் உடல் ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாகத் திகழ்கின்றனர்.
மாநில, மத்தியரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது 58, 60 என்றிருந்தாலும், பணி ஓய்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் நன்கு பணி செய்யும் ஆற்றலும், அனுபவமும் உடையவர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கிடைக்கும் நிறைவான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனங்களில் சென்று பணிபுரிய விருப்பமின்றி வீட்டில் முடங்கிக் போய் விடுகின்றனர்.
இவ்வாறு நம் நாட்டில் பல லட்சம் ஓய்வூதியர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தாம் பணியாற்றிய அதே துறையில் மீண்டும் பணிகள் தரப்பட்டால் சிறப்பாகப் பணியாற்றிடத் தயாராய் இருப்பர்.
மிகக்குறைந்த தொகையை கெளரவ ஊதியமாக வழங்கி அவர்களைப் பணியில் அமர்த்தலாம். இதனால் அரசு அலுவலகங்களில் உள்ள பணிச்சுமையைக் குறைத்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடித்திடலாம்.
எத்தனையோ அரசு அலுவலகங்கள் பலவற்றில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் பலவேலைகள் நிலுவையில் உள்ளதையும் கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும் காண முடிகிறது.
இதனை ஈடுகட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை, ஆசிரியர்களை பணியிலமர்த்தி அவர்களின் அனுபவத்தினை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து விடுபட்டுச் செல்லவும் வாய்ப்பளிக்கலாம். அரசு அவரது பணியில் திருப்தி இல்லை என்று நினைத்தாலும் அவரைப் பணியிலிருந்து விடுவிப்புச் செய்யலாம்.
இதன் மூலம் சில லட்சம் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், கைபேசியிலும் தங்களை முடக்கி விடாமல் பணிபுரிய ஆர்வத்துடன் சென்று வருவர். வீட்டில் சலிப்புடன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்கள் இளைஞர்களுக்கு முன் உதாரணமாய் பணிகளைச் செய்வர்.
வேலை இல்லா இளைஞர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை ஏனெனில் அரசுத்துறையில் வேலை வாய்ப்பென்பது மிகக்குறைவுதான், அதிகளவு வேலைவாய்ப்பினைத் தனியார் நிறுவனங்களே வழங்கி வருகின்றன. அதில் திறமையும், ஆற்றலும் வாய்ந்த இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
மேலும் தற்கால இளைஞர்களில் சிலர் தன்னம்பிக்கையுடன் சுயமாகத் தொழில்கள் செய்தும், வணிகத்தில் ஈடுபட்டும் தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டதோடு பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றனர்.
மகாத்மா காந்தி தனது இறுதி மூச்சு வரை வயதை ஒரு பொருட்டாகக் கருதாமல் இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக நாட்டு மக்களுக்காக உழைத்தார்.
தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராய் உயர்ந்து மக்கள் மனத்தில் நீங்காத இடம் பெற்ற அப்துல் கலாம் தனது பதவிக்காலம் முடிந்த பின்பும் முதுமை காரணமாக ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பாமல் நாட்டின் பல பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கெளரவப் பேராசிரியராக தனது இறுதிமூச்சுவரை எழுச்சியுரையாற்றினார்.
தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்த பின் முதுமை அடைந்த நிலையில் சோர்ந்து போய் விடாமல் அரசியலில் ஈடுபட்டுத் தென்னாப்பிரிக்காவின் அதிபராகி மக்களுக்காகத் தொண்டு செய்து உலக மக்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றார்.
அன்னை தெரசா தனது தள்ளாத முதுமைப் பருவத்திலும் தனது சேவையைத் தளராமல் செய்து உலக மக்களின் அன்பைப் பெற்றார்.
இவர்களெல்லாம் எதனையும் எதிர்பார்த்துச் செய்தவர்கள் அல்லர். தங்களது பணியை அறப்பணியாகவும் மக்கள் சேவையாகவும் நினைத்துச் செயலாற்றியவர்கள்.
ஓய்வூதியர்கள் தாங்கள் பெறும் ஓய்வூதியமே தங்களுக்குப் போதும் என நினைத்தால் ஊதியமின்றிப் பணியாற்றிடவும் முன்வரலாம். இதற்கு அரசு முன்னுரிமை வழங்கி அவர்களைப் பணியிலமர்த்தி அவர்களது பணிச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் ஓய்வூதியர்களில் ஒரு பகுதியினர் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் திகழவும், தங்களின் முதிர்ந்த பணி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வழி ஏற்படுவதோடு அரசுக்கும் மிகக்குறைந்த செலவில் பணிகள் நிறைவடையவும் வழி ஏற்படும்.
இவ்வாறு இருதரப்பினருக்கும் நற்பயன்களைத் தரவல்ல ஓய்வூதியர்களை மீண்டும் பணியிலமர்த்தும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.