முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

உயர்த்த வேண்டிய பண மதிப்பு

இந்தியா விடுதலையாகி 70 வருடங்கள் கடந்து விட்டன. நாம் எதை ஏற்றுமதி செய்கிறோம், எப்படி இறக்குமதி செய்கிறோம் என்பதையெல்லாம் அறியாமலா வர்த்தக அமைச்சரகம் உள்ளது?

நடுப்பக்கக் கட்டுரைகள்

உயர்த்த வேண்டிய பண மதிப்பு

இந்தியா விடுதலையாகி 70 வருடங்கள் கடந்து விட்டன. நாம் எதை ஏற்றுமதி செய்கிறோம், எப்படி இறக்குமதி செய்கிறோம் என்பதையெல்லாம் அறியாமலா வர்த்தக அமைச்சரகம் உள்ளது?

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:

இந்தியா விடுதலையாகி 70 வருடங்கள் கடந்து விட்டன. நாம் எதை ஏற்றுமதி செய்கிறோம், எப்படி இறக்குமதி செய்கிறோம் என்பதையெல்லாம் அறியாமலா வர்த்தக அமைச்சரகம் உள்ளது? விவசாயத்தைப் பொருத்தவரை இன்னமும் வேளாண் விளைபொருள்களை கச்சாப் பொருள்களாகத்தான் ஏற்றுமதி செய்கிறோம். 
இப்போதுதான் ஞானக்கண் பெற்றதுபோல், வர்த்தக அமைச்சரகத்துச் செயலாளர் ரீடா தியோதியா, விளைபொருள்களை மதிப்புக் கூட்டிய வடிவில் ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று பேசியிருக்கிறார். யாருக்கு விஷயம் தெரியாவிட்டாலும் வர்த்தக அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வர்த்தகத் துறை அலுவலர்களுக்கும் கச்சா ஏற்றுமதி தெரிந்த உண்மை. 
பொதுவாக அமைச்சர்கள் பேசுவார்கள். இப்போது வர்த்தக அமைச்சராயுள்ள நிர்மலா சீதாராமன் நிறையவே பேசுகிறார். அதனால் மைய அரசுச் செயலாளரும் பேசுகிறார். ஆனால் செய்வார்களா? நிறையப் பேசுவதால் சிறிதாவது செய்ய வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் எவை? நாம் அரிசி ஏற்றுமதி செய்கிறோம். கோதுமை ஏற்றுமதி செய்கிறோம். பருப்பு இறக்குமதி செய்கிறோம். கச்சா பாமாயில் இறக்குமதி செய்கிறோம். கச்சாவுக்குக் கச்சா என்று இந்த விஷயத்தில் கணக்கு சரி. 
கோதுமையை சுத்தம் செய்து ஆட்டா, மைதா, ரவா, சேமியா என்று மதிப்புக் கூட்டும் உருட்டு ஆலைகள் ஏற்றமதியிலும் ஈடுபடுகின்றன. 
கோதுமை, மக்காச் சோளம், உப்பு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உற்பத்திக்கு நெஸ்லே அனுமதிக்கப்படுகிறது. உணவுப் பூங்காவில் நெஸ்லே, கோக், பெப்சி, மாக்மில்லன், ப்ராக்டர் அன்ட் கேம்பில், லிவர் பிரதர்ஸ் போன்ற அந்நிய நிறுவனங்களுக்கு இங்கு என்ன வேலை? ஒரு ரூபாய் அடக்க விலையுள்ள குளிர்பானங்களை கோக், பெப்சி நிறுவனங்கள் 20 ரூபாய் 30 ரூபாய் என்று விற்கிறார்களே. இந்த லாபம் இறுதியில் ஏற்றுமதியாகிறது. 
இப்படிப்பட்ட அவசர குளிர்பானங்களை 'ஜங்க்' என்று முத்திரையிட்டு தடை செய்துவிட்டாலே போதும். இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிடும். 
நெஸ்லேவுக்குப் போட்டியாக பதஞ்சலி ராம்தேவ் நுழைந்துள்ளதை வரவேற்கலாம். உணவு பதப்படுத்தும் தொழிலில் தேசிய நிறுவனங்கள் நுழைந்து போட்டியில் ஈடுபடுவது அவசியம். அப்போதுதான் நமது செல்வம் நம்மிடம் தங்கும். டாபர், ஹிமாலயாஸ் போன்ற தேசிய நிறுவனங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
உணவுக்கு அடுத்தபடியாக மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் மூலிகைகளில் கச்சா ஏற்றுமதி. காலம் காலமாக நிகழ்ந்து வரும் இக்கச்சா ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி மதிப்பூட்டப்பட்ட பொருள்களாக ஏற்றுமதி செய்தால் விவசாயத் துறை வருமானம் உயர்வதுடன், மூலிகை சாகுபடியும் மேன்மையுறும். தவிரவும் இத்தகைய கச்சா ஏற்றுமதியில் உள்ள ஏகபோகத்தையும் மாற்றலாம்.
இதய நோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றின் மூல ரசாயனம் சர்ப்பகந்தி என்ற மூலிகையில் உள்ளதை அறிந்த ஜெர்மானியத் தொழில்நுட்பம், சர்ப்பகந்தி மூலிகைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது. அதனால் சர்ப்பகந்தி மூலிகை அழிந்தே விட்டது. 
அதை ஈடு செய்ய நித்திய கல்யாணி என்ற சுடுகாட்டு சாமந்தியை 'சர்ப்பகந்தி' என்ற பெயரில் ஏற்றுமதி செய்தபோது... என்ன ஆச்சரியம்! சர்ப்பகந்தியில் உள்ள அதே ரசாயன மூலக்கூறு நித்திய கல்யாணியில் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட வேண்டிய கலப்படம், பாராட்டப்பட்டு போற்றப்பட்டது. 
சர்ப்பகந்தி, நித்திய கல்யாணிகளுக்கு மவுசு குறைந்து, இப்போது கொடி கட்டிப் பறப்பது கண் வலிக் கிழங்கு என்றும் கார்த்திகைக் கிழங்கு என்றும் அறியப்படும் ஒரு விஷக் கொடியினமே. இன்று விவசாயிகளில் சிலர் மாய்ந்து மாய்ந்து கண் வலிக் கிழங்கு சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். 
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தாண்டி, தாராபுரம் சாலையை ஒட்டிய பல கிராமங்களில் கண் வலிக் கிழங்கு சாகுபடி மிகுந்துவிட்டது. ஒப்பந்த முறை சாகுபடி என்பதால் இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை. இதேபோல் அவுரி. ஆங்கிலப் பெயர் சென்னா. நீல நிற சாயத்திற்கு உதவும் 'இண்டிகோ'வும் அவுரி என்று அழைக்கப்படுகிறது. 
செயற்கை சாயம் அறிமுகமான பின்பு 'இண்டிகோ அவுரி' ஏற்றுமதி இடத்தை 'சென்னா அவுரி' பிடித்துக் கொண்டுள்ளது. இதை சீமை அவுரி என்றும் சீமை நிலவாரை என்றும் கூறுவார்கள். இதில் உள்ள 'சென்னோ சைட்' என்ற ரசாயனம் மலச்சிக்கல் மருந்து. இதன் தேவை ஜப்பான், அமெரிக்காவில் அதிகம். 
இவைபோல் சோற்றுக் கற்றாழை (ஜெல் வடிவில்), மருந்துக் கூர்க்கன், சதாவெரி, வெள்ளை முசலி, நன்னாரி, வெட்டிவேர், அமுக்குரா, பச்செளலி வசம்பு, அதி மதுரம் - என்று ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். 
அந்தக் காலத்தில் 'வசம்பு' என்ற மூலிகையைப் 'பெயர் சொல்லாத' என்று வசம்பின் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். 'பெயர் சொன்னால் பயன் போய்விடும்' என்ற அச்சம் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட கிருமி நாசினி அது. 
பிறந்த குழந்தையின் நாக்கில் நீர் விட்டு அரைத்த விழுதை உரை மருந்தாக துளி தடவுவார்கள். அந்தக் காலத்தில் இதற்கு ஈடாக 'உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்' வழங்குவார்கள். அந்த கிரைப் வாட்டரில் அதிமதுரம், வசம்பு எசன்ஸ் அடக்கம்.
போதைப் பொருளாகப் பயன்படும் அபினியும் கஞ்சாவும் அற்புதமான இந்திய மூலிகைகள். நிறைய விளைந்து ஏராளமாக ஏற்றுமதி வருமானம் வழங்கக் கூடிய இம் மூலிகைகளின் சாகுபடிக்குள்ள 'தடை நீக்கம்' பற்றி எவ்வளவு நாள்தான் நிர்மலா சீதாராமன் யோசிப்பார் என்பது விளங்காத புதிராயுள்ளது.
அபினி ஓர் அற்புதமான ஆயுர்வேத சித்த வைத்திய மருந்து. ஏராளமான ஆயுர்வேத மருந்துக் கலவைகளில் அபினி சேர்க்கப்படுகிறது. அலோபதி வைத்தியத்திற்குரிய மூலப் பொருள்களான மார்ஃபின், பெத்தடின், கோடின் ஆகியவை அபினியிலிருந்து தயாராகின்றன.
அபினி என்பது போஸ்தக்காய் என்ற மூலிகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பூத்துக் காய்த்தவுடன் அக்காய்களில் ஒரு வகை திரவம் பிசின்போல் தேங்கியிருக்கும். பிஞ்சு விதைகளும் இருக்கும். அந்த திரவமே அபினி. காய் முற்றிவிட்டால் உள்ளே திரவம் வற்றி விதைகளும் முற்றி கசகசாவாக விளைகிறது. கசகசாவும் நல்ல மருந்து. 
வாசனை வழங்கும் மசாலா சாமான்களில் கசகசா ஒன்று. எனினும், அபினிக்கு அதிக விலை உண்டு. போஸ்தக்காய் சாகுபடி போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. 
ஆயினும் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு போஸ்தக்காய் சாகுபடிக்கு உரிமம் வழங்கி நெறிப்படுத்தப்பட்டுள்ளது. போஸ்தக்காய் சாகுபடிக்கு சுதந்திரம் வழங்கினால் விவசாயிகளுக்கு லாபம் உண்டு. 
அபினியைவிட அதிக மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது கஞ்சா. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கஞ்சா பயிரிடத் தடையில்லை. இந்தியாவில் உள்ள மலைப் பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுள்ள கஞ்சா மூலிகையை நெறிப்படுத்தி, மலைவாழ் விவசாயிகளுக்கு பயிரிட உரிமை வழங்கினால்கூட, பழங்குடி மற்றும் மலைவாழ் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்.
கஞ்சாவிலிருந்து துரோணோ பினால் (DRONO BINAL)  மற்றும் நபிலோன் (NABILON) ஆகிய ரசாயனம் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய் நிவாரணியாக அமெரிக்காவில் பயன்படுகிறது. நமது நாட்டில் கள்ளத்தனமாகப் பயிராகி இலங்கை, சவூதி, துபை போன்ற நாடுகளுக்கு போதைப் பொருளாகக் கடத்தப்பட்டு மாஃபியாக்களை மட்டும் வாழ வைக்கும் போக்கு இது. 
இந்தியாவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைகள் அதிக விலை கொடுத்து துரோணோ பினாலையும், நபிலோனையும் இறக்குமதி செய்கின்றன. கஞ்சா சாகுபடியை நெறிப்படுத்த சட்டப்படி அனுமதி கிடைக்குமானால், மலைவாழ் விவசாயிகள் நலம் பெறுவதுடன் புற்றுநோய் நிவாரணமும் மலிவாகும். துரோணோ பினாலையும் நபிலோனையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
கஞ்சா, அபினி போன்ற அரிய மூலிகைகளின் மருத்துவ சாரத்தை நாமே பிரித்தெடுத்து மதிப்புக் கூட்டி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கலாம். இந்தியாவில் உள்ள தேசிய மருந்து நிறுவனங்களுக்கு துரோணோ பினால், நபிலோன் உற்பத்திக்கு உரிமம் வழங்கலாம்.
கச்சாப் பொருள்களை மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்பங்களை ஸ்பைசஸ் போர்டு எனும் நறுமணப் பொருள் வாரியம் வழங்கி வருகிறது. 
மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள், சுக்கு, ஜாதிக்காய், திப்பிலி போன்ற பொருள்களின் சாரம் நல்ல விலைக்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்பனை ஆகிறது.
தமிழ்நாட்டில் மல்லிகை, ரோஜா, மரிக்கொழுந்து, மனோரஞ்சிதம் போன்ற மலர் சாகுபடி அதிகம். இந்த மலர்களிலிருந்து இயற்கை வடிவிலான சென்ட் உற்பத்தி செய்தால், பாரிஸிலிருந்து வந்து கொண்டிருக்கும் சென்ட் இறக்குமதியைக் குறைக்கலாம்.
மூலிகைகளில் பலவகை உண்டு. அவற்றை மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்தால் நமது வேளாண் உற்பத்தி மதிப்பு உயர்ந்து, மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் விவசாயப் பொருள்களின் பங்களிப்பு உயர்ந்து இந்திய தேசமே மணக்கும்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
 

முழு கட்டுரையைப் படிக்க →