முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

காப்பீட்டுத் திட்டம் அறிவோம்

அரசு மருத்துவமனைகளும் இன்று உரிய சிகிச்சை அளித்தாலும், பலரும் அங்கு செல்ல விரும்புவதில்லை. நடுத்தரப் பிரிவினர் பெரும்பாலும் தனியார்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

அரசு மருத்துவமனைகளும் இன்று உரிய சிகிச்சை அளித்தாலும், பலரும் அங்கு செல்ல விரும்புவதில்லை. நடுத்தரப் பிரிவினர் பெரும்பாலும் தனியார்
மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். அதற்குக் காரணங்கள் பல. மருத்துவரின் நேரடியான கண்காணிப்பு, வீட்டிற்கு அருகில் மருத்துமனை இருத்தல் போன்றவை. 
காய்ச்சலின் வகையைக் கண்டுபிடிக்க ஆகும் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே (X-Ray) இவையெல்லாம் முடிந்தபின் இறுதியில் சாதாரண காய்ச்சல் என்று தெரிந்தாலும், அதற்கான செலவை ஒரு நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மனிதனால் சமாளிக்க இயலாது. மருத்துவர்கள் தெய்வமாக தெரிந்தாலும், மருத்துவச் செலவு என்ற நிலையில் சில நிறுவனங்கள் அதிக வசூல் செய்வது கண்கூடு. 
நாளிதழில் நாளும் வெளிவரும் உயிர்க்கொல்லிக் காய்ச்சல்களைக் கண்டு அஞ்சி அந்த நேரத்தில் சிந்திக்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார்கள். ஐந்து நாட்கள் கழித்து குணமாகி மருத்துவமனைக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கட்டும்போது அவர்கள்படும் மனஉளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. 
எனக்குத் தெரிந்த ஒருவர், மருத்துவமனைக்குக் கட்ட பணமின்றி கடன் வாங்க வழியின்றி மனவேதனையுடன் தனது நோயாளிப் பெண்ணின் காதணியை விற்று மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய நிலையைப் பார்த்து அடைந்த மனத்துயரம் சொல்லொணா. இத்துயரம் நீங்க வழிவகைகள் பலருக்குத் தெரியவில்லை. 
மருத்துவச் செலவைச் சமாளிக்க நலமாக இருக்கும்போதே மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி (Mediclaim Insurance Policy) ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 
மருத்துவக் காப்பீடு என்ற ஒன்று இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டு, இறந்த பின்பு வரும் தொகைக்கு நான் ஏன் பாலிசி எடுக்க வேண்டும் என்ற அறியா வினாவைக் கேட்டும்போது, நமக்கு ஒன்று புலனாகிறது.
பாலிசி வழங்குதல் மற்றும் மருத்துவக் காப்பீட்டு உரிமைத் தொகை (Settlement of Claims) அளித்தலில் இந்திய அரசின் பொதுக் காப்பீட்டுத் துறை உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் சிறந்த முறையில் செயற்பட்டு மக்கள் மருத்துச் செலவை ஈடுகட்ட முன்வருகிறது என்பது நூற்றுக்கு எண்பது பேர் அறியாத செய்தி. 
அரசாங்கமே மருத்துவக் காப்பீட்டில் ஒரு லட்சம் வரை ஆகும் செலவை ஈடுகட்ட வழி செய்துள்ளது. இத்தொகை பெரும்பிணிகட்கு சிகிச்சை அளிக்கப்போதுமானதாக இல்லைதான். அனைத்துத்தர மக்கட்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. 
கிராமப்புற மக்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்கட்கும் மருத்துவக் காப்பீட்டுப் பாலிஸியின் பயன்பாட்டை விளக்க, விழிப்புணர்வு ஏற்பட சில செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். 
அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசையிலும் ஊடகங்கள் மூலமாகவும் மருத்துவக் காப்பீடு உரிமைத் தொகை உள்ளிட்ட பல நிலைகளையும் விவரிக்கலாம். 
அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இவற்றில் இதன் இன்றியமையாமையை விளக்கக் கருத்தரங்கங்கள் நடத்தி குறைந்த பிரீமியத் தொகையை மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்துக் கொள்ளலாம். 
பள்ளி, கல்லூரி பாடங்களில் காப்பீடு தொடர்பான விளக்கப் படங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்க்கப்பட வேண்டும். 
ஒவ்வொரு குடும்பத்திலும் அனைத்து உறுப்பினருக்கும் இளம் வயதிலேயே மருத்துவப் பாலிசி எடுத்துக்கொண்டால், வருங்காலத்தில் ஏற்படும் பெரும்பிணிகள், பேரிடர்களை அச்சமின்றி எதிர்கொள்ளலாம் என்பதை உணர்த்த வேண்டும். 
பாலிஸி (Policy)  எடுக்கும்போதே காப்பீட்டிறுதித் தொகை (Sum Insurance) ரூபாய் இரண்டு லட்சத்திற்கு (ஆண்டுக்கு) எடுத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதைக் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்கள் மற்றும் துறை வல்லுநர்களைக் கொண்டு அறியச் செய்ய வேண்டும்.
நான்கு பேர் கொண்ட குடும்பமென்றால் பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ.20,000-க்குக் குறையாமல் கட்ட வேண்டியிருக்கும். 
குடும்பத்தின் இன்றியமையாச் செலவுகளோடு பிரீமியம் (Premium) கட்டுதலும் ஒன்றாகக் கொண்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓரண்டிற்கு வங்கியில் செலுத்தினால் காப்பீட்டுத் தொகை கட்ட அல்லலுற வேண்டியதில்லை. சேமிப்பு மட்டுமன்று. இஃது ஒரு முதலீடும்தான்.
இதைத்தவிர பேரிடர்கள், இயற்கைச் சீற்றம் இவற்றால் ஏற்படும் பயிர்ச்சேத காப்பீடு, பழுதடைந்த மின்சார உபகரணங்கட்கு இழப்பீடு, வாகனக் காப்பீடு என்ற அனைத்து நிலைகள் குறித்தும் காப்பீட்டு விழிப்புணர்வு ஏற்படச் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு உரிமைத் தொகை அளிப்பதில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.
காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான நடைமுறை அனுபவங்கள் பற்றி அறிவுறுத்த வேண்டும். குறைபாடுகளுக்குச் சட்டரீதியான நிவாரணம் பெறுவது பற்றியும் தெரிவிக்கலாம்.
மக்கள் மருத்துவக் காப்பீடு பற்றிய செய்திகள் அறிந்துகொள்ள நாளிதழ்கள் உறுதுணை புரிகின்றன. இருப்பினும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் நாளிதழ்கள் படிப்பது இல்லை. அதனால் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் குறும்படங்களாக அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அனைவரும் அறிந்துகொள்வார்கள். 
காப்பீட்டுத் திட்டம் குறித்து நன்கு அறிந்தவர்கள் பெரும்பயன் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.