நடுப்பக்கக் கட்டுரைகள்

வகுப்பறை சிறைச்சாலையல்ல!

கிருங்கை சேதுபதி

நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலை
முறையினரின் பயிற்சிக்கூடம். 
எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம்தான் வகுப்பறை.
கரும்பலகையில் வெண்சுண்ணக் கட்டி கொண்டு எண்ணையும், எழுத்தையும் இன்னபிற கோடுகளையும் வளைவுகளையும் புள்ளிகளையும் தீட்டிக்காட்டிப் புரியவைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாகப் பரிணாமம் பெற்றெழுகிறது!
கரும்பலகை வசதிகள்கூட இல்லாத இடங்களில் உச்சரிப்பின் மூலமாகவும், மெய்ப்பாடுகளின் வாயிலாகவும் தனி நடிப்பு எனத் தக்க வகையில், கற்போரின் கவனங்களை ஈர்த்து, கருத்துகளைச் செரித்துக் கொள்ளும் வகையில் ஊட்டிவிடுகிறதாய் ஒத்து உயர்கின்றனர், தனித்துவமிக்க ஆசான்கள்.
ஒரு சொல், கற்பிப்பவரின் இதழிலிருந்து உதிர்ந்து, கற்போரின் செவி சேர்கிறபோது எய்துகிற பரிமாணங்கள் பற்பல. சான்றாக, மரம் என்று அவர் சொல்வதை செவியேற்கும் நெஞ்சங்களில் விரியும் மரமும், கிளைகளும், மலர்களும் நிழலும் ஒற்றைத்தன்மை உடையது இல்லை.
எல்லார்க்கும் பொதுவான அனுபவத்திலிருந்து தொடங்கி, அவரவர்க்கான தனித்தனி அனுபவங்களுக்குள் ஆழ்த்தி, மீண்டும் பொதுவான அனுபவத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துகிற பாடம் எதுவாயினும் அது சுவாரஸ்யமானது; சமூகப் பயன்மிக்கது.
அதுபோல் ஒரு கருத்து, கற்பிப்போர் - கற்போர் ஆகிய இருதரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறபோது, அது ஜனநாயகத்தன்மை பெற்றுவிடுகிறது. தன் கருத்து இது என்று கற்பிப்பவர் சொல்வது
போலவே, கற்போரும் தத்தம் உளக் கருத்துகளை உரைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். பயம் களையப்படுகிற இடத்தில்தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது. 
"குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமையையும், அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியரை, ஆசானைக் காண்பேன்' என்கிறார், சோவியத் நாட்டுப் பேராசிரியரும் கல்வியாளருமாகிய ஷ. அமனஷ்வீலி. 
இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்து கொள்கிறோம். எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று; அதனதன் அறிவோடு, சூழலியல் தன்மையோடுதான் பள்ளிக்கு வருகிறது. அதன் செவியிலும் சிந்தையிலும் - வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தைத் திணித்தால் அது திமிறும்; மறுதலிக்கும்; எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அதற்குப் பதிலாக அதன் தன்மை இன்னதென அறிந்து தன் பாடத்தைத் தொடங்காமல், தன்பாட்டுக்குத் தொடங்குபவர்களிடமிருந்து விலகிப்போகிறது, கவனம்!
கவனத்தை ஈர்த்துத் தன்வசப்படுத்தியபின் வகுப்பறை ஒரு மாயாஜாலக் கூடமாகி விடுகிறது! எண்களும் எழுத்துகளும் நிறைந்து வாழ்வின் ருசிகரமான அனுபவங்களை உணர்த்திவிடுகிறபோது, கற்றல் சுகமாகிவிடுகிறது! அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி கைவரப்பெற்றவர்கள் நல்லாசிரியர்கள். அதற்குப் பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு; அவ்வளவே! அது வேதப்புத்தகம் அன்று. 
எந்தப் பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்துச் சொல்லி, அப்
பாடம் குறித்த சித்திரத்தைக் கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசான்கள், பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையைப் பிள்ளைகள் பெறுவது இந்தக் கணத்தில்தான்.
வறுமை சூழ்ந்த கிராமத்துப் பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாகப் பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். அப்படித்தான் நமது ஆசான்கள் பலரும் நமக்குக் கற்பித்தார்கள்; வாழ்ந்தும் காட்டினார்கள். 
துறைதோறும் சிறந்து விளங்கிய அறிஞர்களாக அவர்கள் உருவாக, முறையோடு எழுத்தறிவித்த கலைக்கோயில்கள் பள்ளிகளே! முக்கால உண்மைகளைத் தற்கால உணர்வுகலந்து தெளிவுபடுத்துகிற இடம் வகுப்பறை!
குழந்தைகள் கற்கும் எந்திரங்கள் அல்லர். கற்பவரும் கற்பிப்பவரும் இணைந்து பெறும் இனிய அமுது கல்வி. அது அறியாமையில் இருந்து அறிவிற்கும், மரணத்திலிருந்து மரணமற்ற பெருவாழ்விற்கும் இட்டுச் செல்லும் ஞானரதம். 
"வித்து முளைத்திடும் தன்மைபோல் கற்றது கைகொடுக்கும்' என்பதைப் பெற்றோரும் மற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். கற்றலில், சில மாதங்களில் பயன்தரும் கடலைச் செடியும் உண்டு; தலைமுறைக்கும் பயன் தருகிற ஆலமரமும் உண்டு.
"கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!' என்கிறார் எட்மண்ட்பர்க். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.
வாழ்வியல் விழுமியங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக, என்று நமது பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்றுதான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. 
தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளரத் துணைபுரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று; கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. கருதியது இயற்றக் கற்றுக்கொடுக்கும் தவச்சாலை; அதுவே மனிதப் பயிர் வளர்க்கும் இனிய நாற்றங்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT