நடுப்பக்கக் கட்டுரைகள்

கெடுப்பார் இன்றியே கெடவிடலாகுமா?

உரமும் நீரும் ஊட்டமும் அளித்துப் பயிரைப் பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாத பணியோ, அவ்வளவு இன்றியமையாதது வேலியிடுதல். இது பயிருக்கு மட்டுமல்ல, மானுட உயிருக்கும் மிகமிகத்

கிருங்கை சேதுபதி

உரமும் நீரும் ஊட்டமும் அளித்துப் பயிரைப் பாதுகாப்பது எவ்வளவு இன்றியமையாத பணியோ, அவ்வளவு இன்றியமையாதது வேலியிடுதல். இது பயிருக்கு மட்டுமல்ல, மானுட உயிருக்கும் மிகமிகத் தேவை. அதிலும் நாற்றங்கால் ஒத்த நல்லிளம்பருவத்தில், ஒழுக்க வேலி இடப்படாவிடில் விளைவு விபரீதமாகும் என்பதை அன்றாட வாழ்வில் அரங்கேறும் நிகழ்வுகளைக் கொண்டு கண்டு தெளியலாம். 
அன்பும் அரவணைப்பும் காட்டிப் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமை. எதற்கும் மறுப்போ எதிர்ப்போ இல்லாத நிலையில் வளர்கிற சூழல் தற்கால இளந்தலைமுறையினருக்கு வாய்த்துவிடுகிறது. இது வரமாக வளர்வதற்குப் பதிலாக சாபமாக முடிந்துவிடுகிற அவலத்தை நிகழ்த்திவிடுகிறது.
தோட்டப்பயிராக வளரும் புடலங்காய், பிஞ்சுவிடுகிற காலத்திலேயே அதன் நுனியில் ஒரு சிறு கல்லைக் கயிற்றொடு கட்டித் தொங்கவிடுவார்கள். அது சுமைதான். அவ்வாறு செய்யத் தவறினால், அது நேருற வளராது சுருண்டு வளர்ந்து எதற்கும் பயன்படாது வீணாகும். அப்படித்தான் பிஞ்சு நெஞ்சங்களில் சில பொறுப்புகளை உள்ளமைத்துத் தருவதும்.
பெற்றோருக்கும் மற்றோருக்கும் உதவியாகச் சிற்சில இல்லக் கடமைகளை, சமுதாயக் கடமைகளை ஆற்றப் பிள்ளைகளுக்குப் பழக்கிக் கொடுப்பது முன்னர் இருந்தது. இப்போதோ, பல் முளைக்கும் முன்னரே பள்ளிக்கு அனுப்புவது என்கிற நிலை வந்துவிட்டது. எது சொன்னாலும், செய்தாலும் படிப்புக் கெடும் என்பதாகச் சொல்லி, பள்ளி தொடங்கி பல்கலைக்கழகக் கல்விக் காலம் வரை, வீட்டுப் பணிகளிலும், இன்றியமையாத பல நாட்டுப் பணிகளிலும் நாட்டமில்லாதவர்களாக நம் பிள்ளைகளை ஆக்கி வளர்க்கிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. 
இன்றைக்கு ஆணும் பெண்ணும் வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.
இல்லற வாழ்வை ஏற்கும் இவர்கள் தங்கள் வாரிசாக, ஆணோ, பெண்ணோ ஒன்று போதும் என்று நிறுத்திவிடுவது பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது. முன்னைப்போல் ஓடி விளையாடக் களமோ, கூடி விளையாட சக தோழமையோ பெரிதும் வாய்க்காத சூழல் தற்போது. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, கைபேசி உள்ளிட்ட கருவிகள் மிகுந்து கவனத்தை ஈர்த்து வசப்படுத்தியுள்ள நிலையில், மரபார்ந்த விளையாட்டுப்பொருள்கள் தற்காலப் பிள்ளைகளிடமிருந்து பெரிதும் விடைபெற்றுக் கொண்டுவிட்டன.
ஓடி விளையாட வேண்டிய பிள்ளைகள் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கிறார்கள். கைபேசியில் என்னென்னவோ விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். மெல்லிய இசையையோ, நுண்ணிய அன்புணர்வையோ வெளிப்படுத்தும் சாதனங்களுக்கு இன்றைக்கு இடமில்லை. 
ஒரு வகையில், அழாமல், அடம் பண்ணாமல், அது இது என்று நச்சரித்துத் தன் வேலைகளைக் கெடுத்துவிடாமல் இவ்வாறு இருக்கும் இளம்பிள்ளைகள் சமர்த்தர்கள் என்றும் பெயர் பெற்றுவிடுகிறார்கள். பிற்காலத்தில் இதுவே ஒரு பிரச்னையாக வளர்வதை மிகவும் தாமதமாகத்தான் பெற்றோர்கள் உணர்கிறார்கள். கவனிப்புத் தவறிய நிலையில் கண்டிப்புச் செய்ய முடியாத நிலை.
இன்றையச் சூழலில் பெற்றோர்களாலும் கண்டிக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் அடக்க முடியாத நிலை. 'அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்' என்பது பழமொழி. இன்று அதுவே நடைமுறை. அதற்காக அடித்தே நொறுக்கிவிடுதல் என்கிற அடக்குமுறையைச் செயல்படுத்துதல் என்று பொருள் கொள்ளல் தகாது. 
முன்பெல்லாம் சின்னஞ்சிறு தவறுகளைத் திருத்த, 'அந்தக் குச்சியை எடு' என்று அதட்டுவார்கள். அப்படி ஒரு கோல் எல்லாரது வீடுகளிலும் இருக்கும். அது இருக்குமே ஒழியப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. பயன்படுத்தாமலேயே, பயப்படுத்துவதுபோல நயப்படுத்துவதில் பழங்காலத்துப் பெரியோர் சமர்த்தர்களாகியிருந்தார்கள். 
பாலும் தேனும் கலந்த பொற்கிண்ணத்தை ஒரு கையிலும் பூச்சுற்றிய கோலை மறு கையிலும் ஏந்திக்கொண்டு, உண்ண மறுக்கும் பிள்ளைக்குச் செவிலித்தாய் ஊட்ட முயன்ற ஒரு காட்சியை நற்றிணை 110-ஆவது பாடல் சித்திரிக்கிறது. அந்தப் பிள்ளைதான், பின்னர் பெரியவள் ஆனதும், தான் புகுந்த இல்லத்தின் வறுமைக்கு ஏற்பத் தன் வாழ்வைச் செம்மையுற ஆக்கிக் கொண்டாள் என்றும் பெருமையுறப் பேசுகிறது அப்பாடல்.
'அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்' என்று பிள்ளையை வியக்கும் அப்பெற்றோரின் இல்லத்தில் பூச்சுற்றிய சிறு கோல் நிரந்தரமாக இருந்திருக்கிறது. 'பூந்தலைச் சிறுகோல்' என்றே அதற்குப் பெயர். பிற்காலத்தில், அது விசிறி மட்டையாகவும், ஸ்கேல் ஆகவும் உருமாறியது. இன்றைக்கு அவையாவும் பொய்யாகிப்போயின. 
'உனக்கு அது வாங்கித் தருவேன்', 'இது வாங்கித் தருவேன்', அங்கே அழைத்துப் போகிறேன்', 'இங்கே அழைத்துப் போகிறேன்' என்று ஆசை காட்டி ஆளை மயக்கும் போக்கு மிகுந்திருக்கிறது. இப்படித்தான் பிஞ்சு வயதில் லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும் பதிவாகி வளர்கிறது. 
காலப்போக்கில், அதுவே நிலையாகிவிடுகிறது. கிடைக்கிறபோது ஏற்படுகிற மகிழ்ச்சியும் களிப்பும் காலாவதியாகி, கிடைக்காதபோது எழுகிற கோபமும் ஆத்திரமும் அவர்களை வன்முறையாளர்களாக வளர்த்தெடுத்துவிடுகிறது. அதைவிட ஆபத்து, தன்னைத்தானே வதைத்துக் கொள்ள முயல்வதுதான்.
பல வீடுகளில், 'வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன்' என்றும், 'தற்கொலை செய்துகொள்வேன்' என்றும் மிரட்டுவது இளம்பருவத்தினருக்கு இயல்பான செயல்பாடாகிப் போய்விட்டது. வெளியில் சொல்ல முடியாது குமைகிற பெற்றோர்களும், கண்டிக்க முடியாத உற்றோர்களும் தங்களுக்குள்ளேயே நொந்துகொள்கிறார்கள்.
எளிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூட, இத்தகு மிரட்டல்களைப் பயன்படுத்தும் இளைய தலைமுறை, விடலைப்பருவம் எய்திய காலத்தில், விளைவறியாது செய்யும் விபரீத நடவடிக்கைகளால் சமூகக் குற்றங்கள் பெருகி வளர்கின்றன.
கல்வி நிலையங்களைக் கேலிக்குள்ளாக்கி எடுக்கப்படும் காட்சிகள், காதல் அரங்கேறும் களங்களாக அவற்றை ஆக்கிக் கிண்டல் செய்யும் போக்குகள், பாலியல் சீண்டல்கள் இவை யாவும் அங்கு இயல்பானது என்கிற பிம்பத்தை இளமனங்களில் உருவாக்கிவிடுகின்றன; அதையே நிலைநிறுத்தவும் செய்கின்றன. இனி வருங்காலத்தில் வளரும் தலைமுறை என்னாகுமோ என்கிற கவலை நல்ல உள்ளங்களை வாட்டி எடுக்கிறது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் 
என்று வள்ளுவர் சொன்னது மன்னருக்கு மட்டுமா? மக்களுக்கும் பொருந்தும்; அதிலும் சிறப்பாக, இளந்தலைமுறையினருக்குப் பொருந்தும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT