முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

காலம் பதில் சொல்லும்!

இந்தியாவில் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின்படி பல பொதுத்துறைகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டன. அதில் மாபெரும் புரட்சி செய்தது செல்லிடப்பேசி ஆகும்.

பகிர்:

இந்தியாவில் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கையின்படி பல பொதுத்துறைகள் தனியாருக்கு திறந்து விடப்பட்டன. அதில் மாபெரும் புரட்சி செய்தது செல்லிடப்பேசி ஆகும். இந்தியர்கள் மத்திய அரசு சார் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு இணைப்புக்காகவும், கிடைத்த தொலைபேசியின் பழுதை நீக்கவும் கால் கடுக்க நின்ற காலங்கள் போய் இன்று செல்லிடப்பேசி நிறுவனங்கள் ஒரு போன் வாங்க நம்மை விடாது கருப்பாக துரத்துகின்றன.
ஒரு சராசரி இந்தியனிடம் இரண்டு செல்லிடப்பேசி இணைப்புகளும் ஒரு குடும்பத்திற்கு 5 முதல் 10 இணைப்புகளும் இருக்கின்றன. இந்திய தனியார் தொலைபேசி கம்பெனிகள் சிறப்பாக செயல்பட தொடங்கியதால் கும்பகர்ணனாக தூங்கிக் கொண்டிருந்த இந்திய தொலைபேசித்துறை தன்னை பி.எஸ்.என்.எல். என பெயர் மாற்றம் செய்து கருமாரி உருமாரி இன்று தனியார் அலைபேசி கம்பெனிகளுக்கு "சபாஷ் சரியான போட்டி' என்று சொல்லும் விதமாக செயல்படுகிறது.
இதற்கு நடுவே அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) வந்து வாழ்வின் நடைமுறையையே மாற்றி விட்டது. இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த முகேஷ் அம்பானி தம்பியுடன் போட்டி வியாபாரம் செய்வதில்லை என்ற குடும்ப ஏற்பாட்டை மதித்து(!) செல்லிடப்பேசி உரிமம் என கேட்காமல், இணையதள உரிமம் என வாங்கி யாருக்கும் தெரியாமல் மார்க்கெட்டுக்குள் புகுந்தார்.
ரிலையன்ஸின் ஜியோ மார்க்கெட்டில் வந்து இறங்கி சதிராட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிரடியாக செப்டம்பர் மாதம் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் "எல்லாம் இலவச மயம் ஜகத்' என்ற மந்திரத்தால் தம்பி ரிலையன்ஸ் உட்பட எந்த கம்பெனியும் அடைய முடியாத வளர்ச்சியை மூன்றே மாதங்களில் அடைந்தார்.
பிற நிறுவனங்கள் 5 கோடி வாடிக்கையாளரை பெற 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டபோது இவர் இலவசம் என்று சொல்லி 3 மாதத்தில் 5 கோடிக்கு மேல் வாடிக்கையாளரை அள்ளிவிட்டார். நம் எல்லாருக்கும் செல்லிடப்பேசி இல்லாமல் இருக்க முடியாது என்றாகி விட்டது.
ஏற்கெனவே செல்லிடப்பேசி வந்தபோது வெளியே செல்லும் அழைப்புக்கு நிமிஷத்துக்கு ரூ.16 என்றும் உள்வரும் அழைப்புக்கு ரூ.8-ம் என கட்டணம் இருந்தது. உள்வரும் அழைப்புகள் இனாம் என்றும் வெளியெ செல்லும் அழைப்புக்கு நிமிஷத்துக்கு ரூ.1 என்றும் செல்லிடப்பேசி நிறுவனங்கள் அறிவிக்க செல்லிடப்பேசி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இந்தியாவில் எங்கு பேசினாலும் ஒரு நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் என மாறி அது 60 பைசாவாக குறைந்து, விலைவாசி ஏற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவில் தொலைபேசி கட்டணங்கள் விரைவாக குறைய ஆரம்பித்தன. இன்று நாடெங்கிலும் பேசினாலும் நிமிடத்துக்கு 30 பைசா என்றும் மாநிலத்துக்குள் எங்கள் நிறுவன போனையே அழைத்தால் நிமிஷத்துக்கு பத்து பைசா என குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணம் ஜியோ தொலைபேசி என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கட்டணங்கள் குறைந்தாலும் இலவச எஸ்.எம்.எஸ்.கள் இருந்தாலும் பண்டிகை நாட்களான புதுவருடம், பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களுக்கு கட்டண சலுகை பொருந்தாது என நுகர்வோர் விரோத அறிவிப்புகளால் தொலைபேசி கம்பெனிகள் காசை அள்ளின. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை அப்பட்டமாக மீறின.
குறைந்த கட்டணம் என்ற மாயையில் இருந்த சராசரி இந்தியன் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. உள்ளூர் அழைப்புக்கு 40 பைசாவில் இருந்து 50 பைசா என இந்திய தொலைபேசி கட்டண உயர்வு செய்தது அக்கிரமம் என வழக்காடிய ஓய்வு பெற்ற அதிகாரி நாராயண அய்யர் கால வெள்ளத்தால் கரைந்து போனார்.
இந்த சூழ்நிலையில்தான் அதிரடியாக உள்ளே நுழைந்த ஜியோ டிசம்பர் 31 வரை மூன்று மாதம் எல்லாம் இலவசம் என சொல்லி, இப்போது இலவசத்தை ஆறு மாதத்திற்கு (மார்ச் 31 வரை) நீட்டித்ததோடு மட்டுமல்லாமல் ரோமிங் ப்ரீ, விசேஷ நாட்களுக்கு கூடுதல் கட்டணமில்லை என்று பவுன்சர்களை வீசி முகேஷ் அம்பானி தன்னுடைய போட்டி நிறுவனங்களை ஐயோ என அலற விட்டுள்ளார்.
இலவசம் மூலமாக ஆள் பிடிப்பு வேலையை அம்பானி செய்ய, பதறிப்போன போட்டி கம்பெனிகளெல்லாம் ஒரு சிம் இருந்தால் இன்னொரு சிம் இலவசம், அவற்றிற்கு அழைப்புகள் இனாம், ரோமிங் கட்டணம் கிடையாது, இன்டர்நெட் கட்டணம் குறைப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றன.
குறைந்து வரும் சந்தாதாரர் எண்ணிக்கைக்கு தக்கபடி சலுகைகளை அறிவித்து, சந்தையில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மூன்று மாத இலவச அனுமதியை எப்படி ஆறு மாதம் என நீட்டிக்கலாம் என்று போட்டி கம்பெனிகள் வழக்குத் தொடுத்தபோது "அது ஆரம்பகால சலுகை, இது புத்தாண்டு சலுகை' என தடாலடியாக ஜியோ சொல்ல, "சரிதானே' என தலையாட்டியது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
தனியார் நிறுவனங்களுக்கு நிகராக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. சரி இலவசம் எவ்வளவு நாள் கொடுக்க முடியும்? எல்லோரும் விலையை குறைக்கும் பட்சத்தில் யார் கை ஓங்கும்? எந்த நிறுவனம் நிலைத்திருக்கும்? இன்று ஓசிக்கு ஓஹோ போடும் வாடிக்கையாளர்கள் நிலைமை நாளைக்கு என்ன ஆகும்?
இன்டர்நெட் கம்பெனி என்ற போர்வையில் ஜியோ மார்க்கெட்டுக்குள் நுழைந்தது. ஆனால் இலவச அழைப்புகள் என தன்னுடைய லைசன்ஸுக்கு விரோதமாக அறிவித்தது. இதைக் கண்டு பதறிப்போன போட்டி நிறுவனங்கள் அலறின. ஆனால் காலம் மாறியதையும் தொழில்நுட்ப மாற்றத்தையும் அவை கவனிக்க தவறிவிட்டன.
தொலைபேசி கம்பிகள் மூலம் பேசுவது, செய்திகளை நேரடியாக அனுப்புவதுபோல், கம்பியூட்டர் மூலம் பேச்சுகளையும் ஏன் அனுப்ப கூடாது என்ற சிந்தனையின் விளைவு தான் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோட்டோகால் (VOIP).
எழுத்துகளை அனலாக் வடிவங்களாக மாற்றி கம்பிகள் மூலமாக அனுப்பிய கணிணிகள், பேச்சுகளையும் அவ்வாறு அனுப்ப முடியும் என சொல்லவே ஒரே நாளில் எல்லாம் மாறி விட்டது.
வீட்டில் இருந்தபடியே அமெரிக்காவில் இருக்கும் மகள் குடும்பத்துடன் நேரடியாக பேச முடிந்தது. இதற்கு முன்னால் அவர்களை தொலைபேசியில் அழைப்பது ஒரு பயங்கர அனுபவம். காரணம் இங்கு இருந்து அழைத்தால் ஒரு நிமிடத்திற்கு ஆகும் கட்டணம் ரூ.90.
இதுவே அவர்கள் அமெரிக்காவில் இருந்து அழைத்தால் கட்டணம் மிகக் குறைவு. இந்தியாவில் இருந்துMissed call  போய் அமெரிக்காவில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அமெரிக்கா கம்பெனிகள் இணைப்பு (Last Mile) என்பதற்காக தங்களுடைய வருமானத்தை இந்திய தொலைபேசி கம்பெனிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்தியாவிற்கு அமெரிக்க கம்பெனியில் இருந்து வந்த பணம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடிக்கு மேல். இந்த மிஸ்டு கால்களால் மிரண்டு போன அமெரிக்கா, இந்தியாவின் தொலைபேசி கட்டணங்கள் குறைக்க வேண்டும் என வற்புறுத்தி வெற்றி கண்ட சில ஆண்டுகளில் அறிதிறன்பேசிகள் வந்து அமெரிக்க ஆசையை மீண்டும் தகர்த்து விட்டன.
இந்த சூழ்நிலையில் இந்தியா முழுவதும் சத்தம் போடாமல் கண்ணாடி இழைகளை (Fibre optical) கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து முகேஷ் அம்பானி பதிக்கும்பொழுது தூங்கிக் கொண்டிருந்த போட்டிக் கம்பெனிகள் இலவச அறிவிப்புகளால் அரண்டு போயிருப்பது உண்மை.
ஜியோ அழைப்புகளை இணைப்பதில் போட்டி நிறுவனங்கள் சுணக்கம் காட்டுகின்றன. காலை 8 முதல் இரவு 8 மணி வரை இணைப்புக்கள் பெறுவது கஷ்டமாக உள்ளது.
இலவசத்தால் எப்படி நிறுவனத்தை நடத்த முடியும்? லட்சம் கோடி முதலீடு செய்துள்ள அம்பானி எப்படி போட்ட பணத்தையும் எடுத்து லாபம் சம்பாதிக்க முடியும்? அங்கே தான் இருக்கிறது வியாபார தந்திரம்.
இன்டர்நெட் மூலமாக பேசுவதற்கு ஸ்கைப்(Skype) போன்ற கம்பெனிகள் வந்தன. உலகளாவிய தொலைபேசி அழைப்புகளின் கட்டணத்தை இவர்கள் குறைத்தனர்.
முகேஷ் அம்பானி இணையதளத்துக்கு உரிமம் வாங்கி அதன் மூலமாக டேட்டாவுடன் பேச்சுகளையும் அனுப்பும் வசதியை அமல்படுத்தி போட்டியாளர்களை அலற வைத்துள்ளார்.
மாதம் குறைந்த பட்சம் ரூ.500 பில் வந்தால் 5 கோடி பேர் கட்ட வேண்டிய மாத கட்டணம் ரூ.2,500 கோடி ரூபாய். இது உபயோகத்திற்கு தக்கபடி கூடும் அல்லது குறையும். மாத வருமானம் ரூ.2,500 கோடி என்றால் ஆண்டுக்கு வருமானம் ரூ.30,000 கோடி ரூபாய். ஒரு லட்சம் கோடி முதலீடு என்றால் அது மூன்றாண்டில் திரும்பி வரும். மூன்றரை ஆண்டுக்குப் பின் அள்ளுவதெல்லாம் பணம்.
அப்பொழுது அம்பானி உயர்த்தும் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் ஓஹோ என பாராட்ட போகிறார்களா, ஐயோ என அலறப் போகிறார்களா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.