நடுப்பக்கக் கட்டுரைகள்

மண்ணுக்கேற்ற மரங்கள்

புவிவெப்பமயமாவதற்கு முக்கியப் பங்கு வகிக்கும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மரம் வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

என்.எஸ். சுகுமார்

புவிவெப்பமயமாவதற்கு முக்கியப் பங்கு வகிக்கும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மரம் வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வர்தா புயுலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரங்கள் மழை பெய்யவும், மண்ணரிப்பைத் தடுக்கவும் உதவுகின்றன. அவற்றின் வேர் மண்ணை இறுகப் பற்றிக்கொள்வதால் காற்றாலும், நீராலும் மண் அரித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது.
மனிதர்களுக்கும், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான ஆக்ஸிஜனை அளித்து உதவுகிறது.
மேலும் பறவை இனங்களின் வாழ்விடமாகவும் மரங்கள் விளங்குகின்றன. மரங்களில் பறவைகள் கூடு கட்டி வாழ்வதுடன், இனப்பெருக்கமும் செய்கின்றன. மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பறவையினங்கள் அழியவும், இடம் பெயரவும் நேரிடும் என்பதால் மரம் வளர்ப்பு அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
பறவையினங்கள் பூச்சிகளை உணவாக தின்று வருகின்றன. மனிதர்களுக்குத் தீங்கு தரும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்த பறவையினங்களே மனிதர்களுக்கு உதவுகின்றன. எனவே மரங்கள் வளர்ப்பின் மூலமாக பறவையினங்களைக் காக்க வேண்டியதும் அவசியம். நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகள் காரணமாக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன.
இதனால் பறவைகள் இடம் பெயர்கின்றன. மேலும் வாகனங்கள் வெளியிடும் புகை, அவற்றின் சப்தம் காரணமாகவும் பறவைகள் இடம்பெயரத் தொடங்கின.
சில ஆண்டுகளுக்கு முன் நகர பகுதிகளில் காணப்பட்ட சிட்டுக்குருவி, குயில், மரங்கொத்தி, மைனா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவையினங்களைத் தற்போது காண்பது அரிதாகி விட்டது.
இந்நிலையில் புயல் காரணமாக பெருமளவு மரங்கள் சாய்ந்துவிட்டதால் பறவைகளின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.
பெருமளவு மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டதால், சென்னை உள்ளிட்ட வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
வர்தா புயலைத் தொடர்ந்து, இழந்த மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
வர்தா புயலையடுத்து போக்குவரத்து சீரமைப்புக்காக மரங்களை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்த மரங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. போர்க்கால சீரமைப்புப் பணியாக இவை மேற்கொள்ளப்பட்டபோதிலும், மரங்களின் தேவை குறித்த தொலைநோக்குப் பார்வை இதில் மேற்கொள்ளப்படவில்லை.
வேரோடு சாய்ந்த மரங்களை ஆய்வு செய்து, அவற்றில் வளரும் தன்மை கொண்ட மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மற்றொரு இடத்தில் வேருடன் கொண்டு சென்று நட்டு வைத்திருக்
கலாம்.
இதனால் சில மாதங்களிலேயே மரங்கள் மீண்டும் இயல்பான வளர்ச்சியைத் தொடங்கியிருக்கும். சாலை விரிவாக்கத்தின்போதுகூட ஒருசில மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு பிற இடங்களில் நடப்பட்டு வரப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின்படி, சாய்ந்த மரத்தின் இலைகளும், சில கிளைகளும் வெட்டப்படுகின்றன. பின்னர், வெட்டப்பட்ட இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மரங்கள் பட்டுப்போகாமல் இருக்க இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பலத்த காற்றை தாங்கி நிற்கக்கூடிய மரங்களை வளர்த்திருந்தால் இதுபோன்ற இழப்புகளை தவிர்த்திருக்கலாம். அயல்நாட்டு வகை மரங்களாலேயே இதுபோன்ற இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் அமெரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த காப்பர் பாட், குல்மோகர், ரெய்ன் ட்ரீ உள்ளிட்ட அயல்நாடுகளைச் சேர்ந்த மரங்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.
வெறும் நிழலுக்காகவும், அழகுக்காகவும் மட்டுமே வளர்க்கப்பட்டும் இத்தகைய மரங்கள், குறுகலான வேர்ப்பரப்பும், அகன்ற கிளைப்பரப்பும் கொண்டவை.
இவை பலத்த காற்றை தாங்கும் தன்மையின்றி வேரோடு சாய்ந்தன. நமது பாரம்பரிய மரங்களைப் போல் வேர்ப்பரப்பு அகன்று படர்ந்திருந்தால், இந்த மரங்கள் பலத்த காற்றை தாங்கி நின்றிருக்கும்.
மேலும் இவற்றுக்கு நமது பாரம்பரிய மரங்களைக் காட்டிலும் கரியமில வாயுவை உட்கிரகிக்கும் தன்மையும் குறைவு. மேலும் அயல்வகை மரங்களில் பறவைகள் அதிகம் வசிப்பதில்லை.
இனிவரும் காலங்களில் நமது பாரம்பரிய மரங்களான வாகை, புங்கன், மருது, பலா, வேம்பு, அரசு, கடம்பு, புளி உள்ளிட்டவற்றை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அகலமான வேர்ப்பரப்பு கொண்டதால், பலத்த காற்றையும் தாங்கி நிற்கும் தன்மை கொண்டவை.
மேலும் அதிகளவு கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT