அண்டை மாநிலமான கேரளத்தில், பாலக்காடு அருகே கஞ்சிக்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவரது வீடு கடந்த டிசம்பர் 28-இல் எரிக்கப்பட்டது. அதில் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுள் ஒருவர் சனிக்கிழமை (ஜனவரி 7) இறந்தார்.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சுஜித்தின் வீடு புகுந்து தாக்கிய மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரது பெற்றோரின் கண்ணெதிரிலேயே அவரைக் கொன்றனர்.
1999 டிசம்பரில் பாஜக யுவமோர்ச்சா மாநிலத் துணைத் தலைவராக இருந்த ஆசிரியர் ஜெயகிருஷ்ணனை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மார்க்சிஸ்டுகள் வெட்டிக் கொன்றனர்.
கேரள மக்களுக்கு இதுபோன்ற அரசியல் படுகொலைகள் புதியதல்ல. அங்கு ஆண்டுதோறும் மார்க்சிஸ்டுகள்- இந்து இயக்கத்தினர் இடையிலான மோதல்கள் வெடிக்கும். மாதம் இருவராவது கொல்லப்படுவது வாடிக்கை.
இந்த யுத்த களத்தில் பெரும்பாலும் மார்க்சிஸ்டுகளின் கரமே மேலோங்கி இருக்கிறது. இதற்குப் பதிலடியாகவும் பழிக்குப் பழியாகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.
கேரளத்தில் சங்க பரிவார்- மார்க்சிஸ்டுகளிடையிலான மோதல் மாநிலம் முழுவதும் காணப்பட்டாலும், கண்ணூர் மாவட்டம்தான் அதன் மையப்புள்ளியாக உள்ளது. அங்கு தொடங்கிய வெறுப்பு அரசியல் தற்போது மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது.
ஆங்கிலேயரை எதிர்த்து 1792 முதல் 1805 வரை கேரள மன்னர் பழசி ராஜா நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் மையம் கண்ணூர்தான். களறிப்பயட்டு போன்ற வீரக் கலைகளுக்கு கேரளம் பெயர் பெற்றிருந்தாலும், கண்ணூர் மாவட்டம் அதில் மிகவும் புகழ் பெற்றது.
எனவே அங்கு மன்னரின் போர்ப்படையில் சேரும் வீரர்கள் உருவானது இயல்பு. அதிலும் குறிப்பாக நாயர், தீயர் சமூகத்தினர் படைவீரர்களாக இருந்தனர். அவர்களின் ரத்தத்தில் போர்வெறி கலந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய படுகொலைகளையும் காணலாம்.
போர்க்கலை பயின்ற இளைஞர்கள் அரசியல் ரீதியாக அணி திரளும்போது அவர்களிடையிலான போராட்டம் குருதி சிந்தும் மோதலாக மாறுகிறது. இந்த மோதலின் துவக்கப்புள்ளி, 1969-இல் தலச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வடிக்கால் ராமகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதாகும்.
நிலச்சுவான்தாரர்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தால் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக மாறியிருந்த கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ். திடீரென அடைந்த வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணம். அதை ஜனநாயக முறைப்படி சந்திக்க முடியாத கம்யூனிஸ்டுகள், வர்க்கப் போராட்ட அணுகுமுறையுடன் எதிர்கொண்டனர்.
அதன் தொடர்ச்சி இன்றும் காணப்படுகிறது. கேரளத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் படுகொலைகளில் 60 சதவீதத்துக்கு மேல் கண்ணூரில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இவற்றால் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, பிற அமைப்பினரும் மார்க்சிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்களாகவும், பின்னாளில் மார்க்சிஸ்ட் தலைவர்களாகவும் உருவெடுத்த ஏ.கே.கோபாலன், இ.கே.நாயனார், பினராயி விஜயன் ஆகியோரின் சொந்த ஊர் கண்ணூர். எனவே இங்கு மாற்று அரசியல் வளர்வதே மார்க்சிஸ்டுகளுக்கு கெளரவப் பிரச்னையானது. அதன் விளைவே படுகொலைகளும் பழி தீர்க்கும் படலங்களும்.
தவிர, மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து பிற இயக்கங்களுக்கு தொண்டர்கள் மாறுவதும்கூட, படுகொலைகளுக்குக் காரணமாகிறது. இது முற்றிலும் மிரட்டல் அரசியலே. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவக்கிய டி.பி.சந்திரசேகரன் 2012 மே மாதம் கோழிக்கோட்டில் கொல்லப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.
இதுவரை இவ்விரு தரப்பினரிடையிலான மோதலில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் ஊனமுற்றுள்ளனர். இவர்களுள் ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்பினரின் எண்ணிக்கையே 300-க்கு மேல். இந்தக் கொலை வழக்குகள் தொடர்பாக சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 500-க்கு மேல்.
தமிழகத்திலும் இந்து இயக்க நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், வன்முறையும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்தக் கொலைகளையும், வன்முறைகளையும் பொது சமூகம் கண்டித்து வந்திருக்கிறது. கேரளத்தில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை என்பதே கவலை அளிக்கிறது.
இதில் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம், கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் இளம் வயதினர். சாதிக்க வேண்டிய வயதில் அவர்கள் அரசியல் கொள்கைகளுக்காக ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்திருக்கின்றனர்.
1969-இல் கேரளத்தில் தொடங்கிய குருதி சிந்தும் மோதல்கள் இன்னமும் தொடர்வது வேதனை அளிக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய பெரும் கடமை, மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே உள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும் துணை புரிய வேண்டும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் படுகொலைகளே அக்கட்சியை மாநில மக்கள் வெறுக்கக் காரணமாயின என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாக அதே மார்க்சிஸ்டுகள் புலம்பும் நிலை ஏற்பட்டிருப்பதும் வரலாற்றின் மறு பக்கமே.
ஜனநாயகம் என்பது கருத்துகளின் மோதலில் விளையும் வெற்றி- தோல்விகளுக்கான களமே தவிர, குருதி சிந்துவதற்கான களமல்ல. இனிவரும் நாள்களிலேனும் இளைஞர்களின் உயிர்ப்பலியைத் தவிர்க்க மாநில முதல்வர் விஜயனும் பிரதமர் மோடியும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.