தொடரும் போராட்டங்கள்...
சமீபகாலங்களில் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி இளைஞர்களும், பெண்களும் பொதுமக்களும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுவதை பார்க்க முடிகிறது.
சமீபகாலங்களில் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி இளைஞர்களும், பெண்களும் பொதுமக்களும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுவதை பார்க்க முடிகிறது.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரமாக விவசாயம் இருக்கிறது. விவசாயிகளை விவசாயத்திலிருந்து வேறு பிழைப்புக்கு மாற்றுவதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதுபோல ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றாற்போல மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா என்றால் இல்லை. அதுதான் இன்றைய போராட்டங்களுக்கே காரணம்.
மழை பொய்த்துப் போனதாலும் தமிழகத்தில் முறையான நீர் மேலாண்மை இல்லாததாலும் விவசாயிகளால் தொடர்ந்து வேளாண்மை செய்ய முடியவில்லை. வேறு வழியில்லாமல் தங்களது சிறு பகுதி நிலத்தை விற்றுவிட்டு பட்டணத்திற்கு பிழைப்பு தேடிச் செல்லும் விவசாயிகள் அங்கேயும் வேலை கிடைக்காத நிலையில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 80 விழுக்காடு நெல் பயிரிடும் நிலங்களாகத்தான் இருக்கின்றன. விவசாயிகள் நெல்லை பயிரிடவும், அவர்களது விளைநெல்லை பாதுகாத்து விநியோகம் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்கும், உற்பத்திக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிப்பதற்கும் மத்திய - மாநில அரசுகள் உதவ முன்வந்திருந்தால் விவசாயிகள் தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டிருக்காது.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
இந்நிலையில் காவிரியிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் நெல் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிட்டது. இன்று குடும்பங்கள், ஆடு மாடுகள் புழங்குவதற்குக்கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு 1 லட்சத்து 11ஆயிரம் டன் மட்டுமே நெல் உற்பத்தி ஆகியுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3 லட்சத்து 16 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தாண்டு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெறும் 16 ஆயிரத்து 235 டன் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.
அதேபோல தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 72 ஆயிரத்து 756 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நாகையில்தான் நெல் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ்நாட்டு பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு விளையாட்டு உரிமையை பாதுகாக்க கோரி சென்னை மெரினாவில் கடந்த ஜனவரியில் இளைஞர், மாணவர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு நடத்திய போராட்டம்; தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி நடத்திய போராட்டம்; தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலையை விரிவாக்க வேண்டுமென்று மாநிலம் முழுவதும் நடத்திய முற்றுகைப் போராட்டம் என லட்சக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கும் போராட்டக்களமாக தமிழகம் மாறி வருகிறது.
மதுக்கடைகளை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் பெண்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டு விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் வாழ்விழந்து துயரத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் கும்பகோணம் அருகிலுள்ள கதிராமங்கலம் கடைவீதி பகுதியில் கிரேன்களுடன் புதிய பைப்புகள் எடுத்து வந்தபோது மீத்தேன் திட்டத்திற்கான பணிகளை ஓ.என்.சி.ஜி. தொடங்க உள்ளது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தினர்.
நெடுவாசல் கிராமத்தில் புதிய வடிவத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயத்தை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் நடத்தும் தொடர் போராட்டம் 100 நாட்களை எட்டவுள்ளது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து டெல்டா பகுதிகளில் பல்வேறு இடங்களில் மாடுகளுடன் போராட்டம் நடத்தி காவல்துறையை திகைக்க வைத்தனர் பொதுமக்கள்.
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம், ரேஷன் பொருள் தட்டுப்பாடு, 100 நாள் வேலை திட்ட முறைகேடு, விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற அதிகளவிலான தன்னெழுச்சியான போராட்டங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளதை இப்போதுதான் பார்க்க முடிகிறது.
ஏழை, எளிய விவசாயத் தொழிலாளிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்கைக்கு வெளிச்சம் பாய்ச்சும் போராட்டம் இது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும் போராட்டமாக மாறியுள்ளது.
முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்கை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பே இல்லாமல் 100 நாள் வேலையை மட்டுமே நம்பியிருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அதுவும் கானல் நீராகிவிட்டது. விவசாயிகளின் பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தி தீர்வு காண இதுவே சரியான தருணம்.