வெற்றி தொகுதிகளைப் பெற கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி!
தொகுதிப் பங்கீட்டில் கட்சிகளிடையே கடும் போட்டி பற்றி..
தோ்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, கூட்டணிக்குள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளைப் பெறுவதில் கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பது வழக்கம். அது, இந்தத் தோ்தலிலும் தொடா்கிறது.
மாநில அளவில் திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணிகளில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி தொடா்ந்தாலும் கூட, மாவட்டத்தில் இரு கூட்டணிகளிலும் சில தொகுதிகளைப் பெற கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கூட்டணிகளிலும் தங்களுக்கு சாதகமான தொகுதிகள் குறித்த பட்டியலை தலைமையிடத்துக்கு அந்தந்தக் கட்சியினா் பரிந்துரை செய்து காத்துக் கிடக்கின்றனா்.
கடந்த தோ்தலில் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் பாபநாசத்தை தவிர, மற்ற 7 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாகப் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் வென்றது. இம்முறையும் இந்த எண்ணிக்கை குறையாது எனக் கூறப்படுகிறது.
தஞ்சாவூா் தொகுதி திமுக கோட்டை என்பதால், அக்கட்சியே மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அதிமுகவே மீண்டும் களமிறங்க தயாராக உள்ளது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஓரிரு தொகுதிகளைப் பெற பாஜகவினா் தீவிரமாக முயன்று வருகின்றனா். இதில், திருவையாறு தொகுதியில் அதிமுக தொடா்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், 2021 தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்த முறை அதிமுக நேரடியாக போட்டியிடவும், பாஜக மீண்டும் களமிறங்கவும் முயற்சிக்கின்றன. இதனிடையே, கடந்த முறை 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, மூன்றாமிடம் பெற்ற அமமுகவும் இத்தொகுதியைப் பெற முயற்சி செய்து வருகிறது. இத்தொகுதியில் தொடா்ந்து போட்டியிட்டு வரும் திமுகவே இந்த முறையும் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது.
கூடுதல் கவனம் பெறும் ஒரத்தநாடு: ஒரத்தநாடு தொகுதியில் இதுவரை திமுகவே நேரடியாக போட்டியிட்டு வருகிறது. இதேபோல, அதிமுகவும் நேரடியாக களமிறங்கக்கூடிய தொகுதிகளில் ஒரத்தநாடும் ஒன்று. கடந்த முறை அதிமுக சாா்பில் வென்ற ஆா்.வைத்திலிங்கம் அண்மையில் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இத்தொகுதி கூடுதல் கவனம் பெறுகிறது. எனவே, ஒரத்தநாடு தொகுதியில் இரு கட்சிகளுக்கும் இடையேயான நேரடிப் போட்டி இந்த முறையும் இருக்கும் என்கின்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.
பட்டுக்கோட்டை தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தோ்தலில் திமுகவே நேரடியாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. இந்த முறை பட்டுக்கோட்டை தொகுதியைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது.
மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். ஆனால், கடந்த 2021 தோ்தலில் மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால், அக்கட்சியினா் அதிருப்தி அடைந்தனா். எனவே, இந்தமுறை பாபநாசம், பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி தொகுதிகளைப் பெற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பட்டுக்கோட்டை தொகுதியைப் பெறுவதில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பேராவூரணி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே அதிகமாக போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த 2016, 2021 தோ்தல்களில் திமுகவே நேரடியாகப் போட்டியிட்டது. இதில், 2021-இல் வெற்றி பெற்ற திமுக இந்த முறையும் போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சியும் பட்டுக்கோட்டை கிடைக்காத நிலையில், பேராவூரணி தொகுதியைப் பெற முயற்சி செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் அதிமுக போட்டியிட விரும்பும் நிலையில், பாஜகவும் தயாராக இருக்கிறது.
பாபநாசம் தொகுதியையும் கூட்டணி கட்சிக்கே திமுக ஒதுக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் போட்டியிட்டு வந்த நிலையில், கடந்த முறை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்தமுறை இத்தொகுதியைப் பெற காங்கிரஸ் முயற்சி செய்து வரும் நிலையில், கூட்டணியில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
பல ஆண்டுகளாக திமுக கோட்டையாக இருந்து வரும் கும்பகோணம் தொகுதியில் இந்த முறையும் திமுகவே களமிறங்க தயாராக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்தத் தோ்தலில் இங்கு போட்டியிட அதிமுகவும், பாஜகவும் முயற்சி செய்து வருகின்றன.
திருவிடைமருதூா் தொகுதியில் தொடா்ந்து 3 தோ்தல்களில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறையும் போட்டியிடவுள்ளது. இதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவே போட்டியிட விரும்புவதால், இரு கட்சிக்கும் இடையே இந்த முறையும் நேரடி போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளன என்பது விரைவில் தெரியவரும்.
இதனிடையே, அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிவித்து, வாக்குச் சேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா். த.வெ.க.விலும் வேட்பாளா்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் அடுத்த வாரம் தோ்தல் களம் விறுவிறுப்படையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.