தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் இரசாயனக் கலப்படம் உள்ளது. இப்பாலை அருந்துவோருக்கு கொடிய தொற்று வியாதிகள் ஏற்படும். பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் தனியார் பால் நிறுவனங்களின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
இதேபோல தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் உள்ளது என்கிற குற்றச்சாட்டும் பலமாக எழுந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து கொள்ளை லாபம் அடிப்பது என்பது கொடிய பாவச் செயலாகும்.
கலப்படம் செய்து கொள்ளை லாபம் அடிக்கும் கள்ள வியாபாரிகள் பன்னெடுங்காலமாகவே உள்ளனர். மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்கப்பட்டது. பாலில் தண்ணீர் கலந்து அளவை அதிகமாக்கி விற்று லாபம் சம்பாதிப்பது, அந்த காலத்துக் கலப்படம்.
தற்போது பாலின் கெட்டித்தன்மை அதிகரிக்கவும் நிறம் மற்றும் சுவை கூட்டவும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும், பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. காலத்திற்கேற்ப கலப்படங்களும் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற்காகத்தான் "உணவுக் கலப்பட தடைச் சட்டம் 1954' என்பது மாற்றியமைக்கப்பட்டு "உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006' என்பது உருவாக்கப்பட்டு 2011 முதல் இச்சட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
2013-2014 ஆண்டில் பாரத நாடு முழுவதும் உத்தேசமாக 72,200 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 13,571 பொருட்கள் கலப்படமானவை என உறுதி செய்யப்பட்டது. கலப்படம் செய்த குற்றத்திற்காக சில வணிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குகளின் முடிவில் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலருக்கு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் வைத்தியநாதன் என்பவர் பாலில் கலப்படம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கோகோ கோலா குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்து சில இடங்களில் அது தடை செய்யப்பட்டது.
இதேபோல மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவு வகைகளில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலக்கப்பட்டதால் அவற்றை தடை செய்தார்கள். மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த காரணத்தினால் அமிதாபச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தா ஜிந்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த விளம்பரங்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் செய்யும் இந்திய அரசின் அமைப்பு (ஊநநஅஐ - ஊர்ர்க் நஹச்ங்ற்ஹ் அய்க் நற்ஹய்க்ஹழ்க்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ), உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட அமைப்பு, உணவுப் பொருட்களின் மாதிரிகளில் கலப்படத்தின் அளவு அதிகரித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது. 2011-12-ஆம் ஆண்டில் 64,593 மாதிரிகளை சோதித்த போது, 8,247 மாதிரிகளில் கலப்படம் இருந்திருக்கிறது. இது 12.8%. 2012-13 ஆண்டில் இது 14.8% ஆக உயர்ந்திருக்கிறது. 2013-14-இல் 18.8% ஆக உயர்ந்திருக்கிறது. 2015-16-இல் 26.3% ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி ஆண்டுக்காண்டு கலப்படத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது.
உணவில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை. தமிழகத்தில் ஊநநஅஐ அமைப்பின் அங்கீகாரம் பெற்ற உணவுப் பரிசோதனை ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை ஏழு. இவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-இன் பிரிவு 47-இன் படி உணவு தயாரிப்பின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யலாம்.
தமிழகத்தில் 2011-12-ஆம் ஆண்டு வாக்கில் ஆய்வு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் 7,394. இதில் 624 மாதிரிகளில் கலப்படம் இருந்துள்ளது. கலப்படம் செய்த நிறுவனங்களின்மீது எந்த ஒரு சிவில் வழக்கோ கிரிமினல் வழக்கோ பதிவு செய்யப்படவில்லை.
2012-13ஆம் ஆண்டில் 474 பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 78 தயாரிப்புகளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. 2013-14இல் 658 உணவு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.
இவற்றில் 261-இல் கலப்படம் இருப்பது உறுதிசெய்யப்பட்டு எட்டு கிரிமினல் வழக்குகளும் 40 சிவில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இதில் 16 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு 6,59,800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2014 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1,207 உணவு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இவற்றில் 487-இல் கலப்படம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 11 கிரிமினல் வழக்கும் 177 சிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 47 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. 13,43,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
2015 செப்டம்பர் முதல் 2016 வரை 2,939 உணவு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 1,047 உணவு மாதிரிகளில் கலப்படம்இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 64 கிரிமினல் வழக்கு, 456 சிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 203 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. 34,99,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆண்டு தோறும் உணவு கலப்படம் பெருகிவருவதையே இவை காட்டுகின்றன.
உணவுப் பொருளில் கலப்படம் என்பது இரண்டு வகையானது. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சக்தி கொடுக்கும் பொருட்களை கலந்து உணவு வகைகளை மேம்படுத்துவது ஒன்று. இது மனித குலத்திற்கு நன்மையானது. மற்றொன்று உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோய்களை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை கலந்து கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்துடன் கலப்படம் செய்வது.
அரிசியில் கல், கோதுமையில் ஊமத்தை விதை, கேழ்வரகில் மணல், குழந்தைகள் உன்ணும் உணவுகளில் கவர்ச்சிக்காக செயற்கை நிறங்கள் சேர்த்தல், கோதுமை, அரிசி மாவுகளில் கிழங்குமாவு கலக்குதல், தேயிலை தூளில் புளியங்கொட்டை தூள் மற்றும் சாயம் கலப்பது, பாலில் யூரியா மற்றும் சோப்புத்தூள், பருப்பில் நிறம் வர மெலட்டின், நெய்யில் டால்டா, டீசலில் மண்ணெண்ணெய், ஏன் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அந்நிய மதுபான வகைகளில் பெரும்பாலும் கலப்படம் செய்யப்பட்ட சரக்கு தான் என்பது குடிமக்களின் குற்றச்சாட்டு.
கலப்பட உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து, கலப்பட பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் எப்போதாவது ஒருமுறை கலப்பட பொருட்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து நாங்கள் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்கிறார்களே தவிர, இவர்கள் முழுமூச்சாய் தங்கள் கடமையை செய்வது இல்லை.
பழங்கள் சீசன் தோறும் வருகின்றன. இதில் மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகின்றது. ஆப்பிள் பழம் பளப்பளப்பாய் இருக்க மெழுகு தடவப்படுகிறது. தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறத்திற்காக ரசாயனம் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றது. காலையில் நாம் அருந்தும் தேநீர் துவங்கி இரவு உணவு வரை நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் கலப்படம். ஏன், உயிர்காக்கும் மருந்துகளிலும்கூட கலப்படம் செய்யப்படுகிறது.
இத்தகைய தரமற்ற உணவுப்பொருட்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கல்லீரல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் நுரையீரல், இதயம் நரம்பு மண்டலம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. நாம் சமையல் அறையில் உணவுக்காகப் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள் 90 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவையே. மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலில், கலப்படம் என்பது கொடிய குற்றமாகும்.
"கலப்படத் தடைச் சட்டம்' மற்றும் "உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டுச் சட்டம்' மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மத்திய - மாநில அரசுகளின் பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப கலப்பட தடைச்சட்டத்தை வகுத்து நடைமுறை படுத்திக்கொள்ளலாம். தமிழக அரசே கலப்படக்காரர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
கலப்படக் குற்றத்திற்கு சொத்துகளை பறிமுதல் செய்தல், மரண தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனைகள் வழங்கக்கூடிய வகையில் தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். உணவு கலப்படத் தடுப்புப் பிரிவு காவல்துறையில் உருவாக்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மக்களுக்கு கலப்படமற்ற பாதுகாப்பான தரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும்.
கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.