முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆசிரியரின்றி அகிலமேது?

ஒவ்வோராண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அறிவிக்கப் பெறுகின்றன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:09 AM
பகிர்:

ஒவ்வோராண்டும் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அறிவிக்கப் பெறுகின்றன. அவர்களும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் உடனிருந்து இனிப்புகளோடு அந்த வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். முகத்தில் மலர்ச்சி பொங்க, இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லித் தம்மை வார்த்த ஆசிரியப் பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள். ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்கிறார்கள். உண்மைதான்.
ஆனால், அடுத்ததாகத் தாங்கள் எதிர்காலத்தில் எந்தத் துறைக்குப் போகப் போகிறோம் என்பது பற்றிக் கூறும்போது மருத்துவர் என்றும் பொறிஞர் என்றும் எந்தெந்தத் துறைகளையோ முன்மொழிகின்றனர்.
அவர்கள் ஏன் தாங்கள் இந்த வெற்றியை அடைவதற்குக் காரணமாக இருந்ததாக - முன்னர் நன்றியோடு குறிப்பிட்ட - ஆசிரியர் என்னும் துறையை மட்டும் குறிப்பிடுவதே இல்லை. இதிலிருந்தே ஆசிரியப் பணி எத்தனை கடுமையானதாக இருக்கும் என்பதை உணரலாம்.
இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய கல்விச் சூழலில் ஆசிரியர்களுடைய நிலை மிகவும் மோசமாகவும் கவலைக்குரியதாகவும் இருக்கிறது.
மாணவனைத் திட்டவோ அடிக்கவோ கூடாது. அவனுடைய மனம் புண்படும்படி நடக்கக் கூடாது. அவனைப் படிக்குமாறு வற்புறுத்தினாலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடக்கூடாது.
ஆனால் மதிப்பெண்கள் நிறையப் பெற்றுத் தரச் செய்ய வேண்டிய இயந்திரமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். உண்மையில் வருமானத்தை நோக்கிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம்கூட ஆசிரியருக்கில்லை.
எட்டாம் வகுப்புவரை அனைவருமே தேர்ச்சி என்பது மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்காகவே தவிர பாடங்களையே படிக்க வேண்டாம் என்பதற்கில்லை.
வகுப்பறையில் ஏற்படுகிற சிறு சலனம் கூட பாடத்தைக் கெடுத்து விடும். ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் யோகப் பயிற்சிபோலத்தான் கற்றல் என்பது.
ஆனால் இன்றைய ஊடகங்களில் வகுப்பறை என்பது கேலிக்குரியதாகவும் ஆபாசம் நிறைந்ததாகவும் காட்டப் பெறுவது எத்தனை கொடுமை?
மக்கள் இருவரின் கரங்களில் பிரம்பினைத் தந்து தண்டிக்கும் உரிமையை வழங்கியிருக்கிறார்கள். முதலாமவராகிய காவலர் குற்றம் செய்த பின்னால் குற்றவாளிகளைத் தண்டித்துத் திருத்த வேண்டித் தடியைக் கையில் எடுக்கிறார்.
இரண்டாமவர் பிழை செய்யும் பிள்ளைகள் குற்றவாளிகள் ஆகிவிடக் கூடாதே என்று குற்றம் செய்வதற்கு முன்பாகவே கண்டிப்பதற்காகத் தடியைக் கையிலெடுக்கிறார்.
முன்னது தண்டிப்பு என்றால் பின்னது கண்டிப்பு. முன்னது சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவே. பின்னது சமூக ஒழுக்கத்தையும் பண்பாட்டு மரபையும் காப்பாற்றுவதற்கு. ஆனால் இப்போது ஆசிரியரின் நிலையே வேறு.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பன வரிசை முறையல்ல. குருவே மாதாவாகவும் பிதாவாகவும் விளங்கித் தெய்வமாகவும் திகழ்கின்றார் என்பதே அது.
தாயிற் சிறந்த தெய்வமுமில்லை எனச் சொல்லவில்லை தமிழ் மரபு. தெய்வத்தையும் தனது கருவறையில் வைத்துக் காக்கும் பேறுடையது தாய்மையும் கோயிலும் அதற்கிணையான ஆசிரியப் பணியும்.
பாடம் வேறு, வாழ்க்கை வேறு என்றான சூழலில் அறஞ்செய விரும்பக் கற்றுத் தருவது அத்தனை எளிதானதா? பொய் சொல்லக் கூடாது என்பதைக் கற்பிக்க ஆசிரியன் எத்தகு வாய்மையையும் நேர்மையையும் தன்னுள் நிறைத்திருக்க வேண்டும்? அடித்து மிரட்டியா அகிம்சையைக் கற்றுத் தர முடியும்?
எதையும் கற்பிக்க முயலுவதற்கு முன்னால், தானே அவ்வொழுக்கத்தில் முன்னின்று காட்ட வேண்டிய பொறுப்பு ஏனைய துறைகளைவிட ஆசிரியத் துறைக்கே அதிகம் உள்ளது.
இந்தப் பொறுப்புணர்வு குன்றுகிற காரணத்தினாலேயே பலர் ஆசிரியர்களாக முயன்று பின்னர் சமூகக் குற்றவாளியாகின்றனர்.
அறமல்லாத செயல்கள் தமிழ் மரபில் இல்லை. கொலைத் தொழிலாக விளங்கும் போரும்கூட அறத்தோடு நிகழ்வதுதான்.
வகுப்பறையில் நின்று கொண்டு நூலையும் எழுதுகோலையும் தனக்கான கருவிகளாகக் கொண்டு தனக்கு எதிராக அமர்ந்திருக்கக் கூடியவர்களின் அறியாமைகளையும் இகழ்ச்சிகளையும் கேலிகளையும் தன்மீது செலுத்தப்படுகிற அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு அவன் மனம் பாதித்துவிடாமல் இனிய சொற்களால் அவனுக்கு அறிவுரை கூறிப் பாடத்தையும் நடத்தி அவனைத் நன்மாணாக்கன்
ஆக்கும் ஆசிரியனும் ஒரு போர் வீரன் அல்லவா?
குரு இல்லா வித்தை பாழ் என்கிறது தமிழ் மரபு. திருமந்திரம் குருவே உலகம் என்கிறது. உலகம் போற்ற வாழ்ந்த மாமேதைகள் யாவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களைப் போற்றியவர்களே. இன்னும் பல மேதைகள் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டவர்களே.
நாளைய சமுதாயம் நன்றாக உருவாக நல்லாசிரியர் உருவாக வேண்டும். மதிப்பெண்களைப் பெற்றுத் தள்ளும் மாணவப் பொம்மைகளை உருவாக்கும் எந்திரத் தொழிலில் அவர்களை உட்படுத்தினால் மரபுக்கே பங்கம் விளையும்.
இதை உணர வேண்டியது முதலில் மாணவர்களும் ஆசிரியர்களும்தான். புனிதமானது ஆசிரியர் } மாணவர் உறவு.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே. வளர்ப்பது என்பதுதான் கல்விமுறை. ஆதலால் ஆசிரியரே தாயாக இருக்க, மாணவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அவர்கள் பொறுப்புடையதாகிறது.
தனிமனிதன், குடும்பம், சமூகம், தேசம், உலகம் எல்லாவற்றுக்குமே அடிப்படை ஆசிரியர்களே. ஆசிரியரின்றி அறிவேது அகிலமேது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.