நடுப்பக்கக் கட்டுரைகள்

கொலைவெறி உன் குலவெறியா?

அமெரிக்க தேசம் ஒரு கனவுப் பிரதேசம், அதுவொரு சொர்க்கப் பூமி என எண்ணியிருந்த இந்திய இளைஞர்களுக்கு, இன்று அதுவொரு மயானபூமியாக மாறியிருக்கிறது.

தி. இராசகோபாலன்

அமெரிக்க தேசம் ஒரு கனவுப் பிரதேசம், அதுவொரு சொர்க்கப் பூமி என எண்ணியிருந்த இந்திய இளைஞர்களுக்கு, இன்று அதுவொரு மயானபூமியாக மாறியிருக்கிறது. இன்று ஓர் அமெரிக்க இந்தியன், கழுத்திலே ஸ்டெதஸ்கோப்பை மாட்டுவதற்கு முன்னர், அவன் மனைவியின் கழுத்திலேயுள்ள தாலிச்சரடு ஆடுகிறது. ஓர் அமெரிக்க இந்தியப் பொறியாளர், டி ஸ்கொயர் ஸ்கேலைக் கையிலே எடுப்பதற்கு முன்னர், அவனுடைய பெற்றோருடைய தண்டுவடம் நசுக்கப்படுகின்றது.
"வெள்ளை வெளேரென்று நயாகரா அருவி கொட்டுவதற்குக் காரணம், கறுப்பர்கள் மேலுள்ள நிறவெறி பெருக்கெடுத்து ஓடுகின்றது' எனவொரு தமிழ்க்கவிஞன் பாடினான். கான்சாஸ் மாநிலத்தில் சீனிவாஸ் குச்சிபோட்லா எனும் இந்தியப் பொறியாளரும் - ஆலோக் மதசானி என்ற இந்தியப் பொறியாளரும் சுடப்
பட்டபோது, அக்கவிஞனின் வாக்கு சத்திய வாக்கு ஆயிற்று. நல்லூழின் காரணமாக, ஆலோக் மதசானி பிழைத்துக் கொண்டார்.
இந்திய நாட்டிலுள்ள சாதிவெறியின் நச்சுத்தன்மை இறங்கிக்கொண்டே வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள மதவெறி, கூட்டலும் குறைச்சலும் இல்லாத அதே நீட்சியில் நீடிக்கின்றது. ஆனால், அமெரிக்கரின் நிறவெறி கட்டை விரலிலிருந்து மொட்டைத் தலைவரை வளர்ந்து கொண்டே போகிறது.
ஐதராபாத்தில் பிறந்த சீனிவாஸ் குச்சிபோட்லா, ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பட்டம் பெற்றபின், அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாநிலத்திலுள்ள எல் பாசொ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, அங்கேயே ஆறு ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றினார்.
சீனிவாசுடன் சுடப்பட்ட ஆலோக் மதசானி, ஆந்திராவைச் சேர்ந்தவர். வாசவி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அமெரிக்காவிலுள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறச் சென்றார். சீனிவாஸ், மதசானி இருவரும் கான்சாஸ் நகரத்திலுள்ள தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரிக்கும் காரிமன் நிறுவனத்தில் பணியாற்று
கின்றனர்.
இருவரும் தங்களுடைய பணி நேரம் முடிந்தவுடன், ஓலத் நகரத்திலுள்ள உணவு விடுதிக்கு (மதுச்சாலை சார்ந்த விடுதி) காரில் செல்வது வழக்கம். அவ்விடுதி, சீனிவாசும் மதசானியும் வாரத்தில் ஒருமுறை, குடும்பத்தோடு வந்து உண்டு மகிழ்ந்து செல்கின்ற இடம். 24.02.2017 அன்று சீனிவாசும் மதசானியும் பணிமுடித்து, அவ்விடுதிக்கு உணவருந்த வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து அங்கு எமன் வடிவில் வந்த ஆடம் புரின்டன் எனும் நிறவெறி பிடித்த அமெரிக்கன், 51 வயது கடற்படை வீரன், "நீங்கள் இரண்டு பேரும் கீழ்த்திசையைச் சேர்ந்தவர்கள், எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்' எனப் பைத்தியம் பிடித்தவன்போல் கத்தி
னான். நண்பர்கள் இருவரும் அந்த வெறிப்பிடித்தவனோடு பேச்சு கொடுக்காமல் நின்றனர்.
உடன் அந்த நிறவெறியன், ஆடம் புரின்டன், தன் பையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, சீனிவாசையும், ஆலோக் மதசானியையும் சுடத் தொடங்கினான். நான்கைந்து குண்டுகள் பாய்ந்தவுடன், சீனிவாஸ் உணர்விழந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
மதசானியின் மேல் குண்டுகள் பாய்கின்றபோது, அங்குத் தற்செயலாக வந்த ஐஆன் கிரில்லாட் என்ற 24 வயதுடைய அமெரிக்க இளைஞன், குறுக்கே பாய்ந்து, அந்த வெறியனைத் தடுத்து நிறுத்த முயன்றான். என்றாலும், கிரில்லாட்டினுடைய மார்பிலும் ஒரு குண்டு பாய்ந்து, அவரும் கீழே விழுந்தார்.
மதசானி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று குணமடைந்து வருகிறார். உணவு விடுதிக்காரர் ஓலமிடவே, அந்த நிற வெறியன், உணவு விடுதிக்காரனின் பையனையும் ஒருதரம் சுட்டுவிட்டு ஓடிவிட்டான்.
சிப்பிக்குள் முத்தாக வந்த ஐஆன் கிரில்லாட், சொன்ன ஒரு வாக்கியம் மந்திரம்போல் போற்றப்பட வேண்டியதாகும். "எப்படி அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது' எனக் "கான்சாஸ் சிட்டி' பத்திரிகை நிருபர் கேட்டபோது, "யாரும் செய்யக் கூடியதைத்தான் நானும் செய்திருக்கிறேன். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமன்று நாம் அனைவரும் மனிதர்கள் என்பதே முக்கியம்' எனச் சொன்னது, பிரகலாதன் பேசியது போன்றதாகும்.
டொனால்ட் டிரம்ப் "அமெரிக்கர்களுக்குத்தான் முதலிடம்' எனச் சொல்லியதற்கு பிறகு, பதவியேற்ற 34 நாட்களுக்குள் 1,094 வெறியாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஐஆன் கிரில்லாட் என்ற நல்லிளைஞன் மார்பில் பாய்ந்த குண்டு, இன்னும் அரை அங்குலம் ஆழப் பதிந்திருக்குமானால், அவரும் மாய்ந்திருப்பார்.
சென்ற வாரம், ஆந்திராவில் வாரங்கல்லைச் சேர்ந்த வம்சிரெட்டி என்ற இந்திய இளைஞன், கலிபோர்னியாவில் ஒரு நிறவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டான். அமெரிக்காவில் மூன்று மில்லியன் அமெரிக்க இந்தியர்கள் வாழ்கின்றார்கள். என்றாலும், சீனிவாஸ் குச்சிபோட்லா மரணத்திற்குப் பின், அனைவர் மத்தியிலும் ஓர் உயிரச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஐ.நா.வின் கொடி பறக்கின்ற கண்டத்திலே வாழ்கின்ற மக்கள், வெளிநடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நால்வருணத்தைக் காட்டிலும், தோல் வருணத்தின்மேல் படிந்திருக்கின்ற அகங்காரம் - ஆங்காரம் கொடிதினும் கொடியதாகும்.
இச்சூழ்நிலையிலும் மனத்திற்கு நெகிழ்ச்சியைத் தருகின்ற செய்தி ஒன்று உண்டு. இந்திய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு அதிகாரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி, சீனிவாசின் புகழுடம்பை இந்தியாவிற்குக் கொண்டுவரச் செய்து, ஐதராபாத்திலிருக்கும் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார். குடும்பத்தாருக்கும் தொலைபேசியில் ஆறுதல் வார்த்தைகளை மொழிந்திருக்கிறார்.
மேலும், அமெரிக்க அதிபரின் நேரடிப் பிரதிநிதியாகிய சீன் ஸ்பைசர், "அமெரிக்கர்களுக்கு முதலிடம் என அதிபர் சொன்னதற்கும், இந்த வன்முறைக்கும் தொடர்பு இல்லை. எந்தவிதத்திலும் அமெரிக்கா உயிரிழப்பிற்கு இடம் தராது' எனக் கூறியிருப்பது ஆறுதலான ஒரு செய்தியாகும்.
நிறவெறியை முதன் முதலில் எல்லா நாடுகளிலும் இறக்குமதி செய்த நாடு, கிரேட் பிரிட்டன். ஆனால், இன்றைக்கு அவர்களுடைய நாட்டிலே சரிக்குச் சரியாக ஆப்பிரிக்கர்கள் பணியாற்றுகிறார்கள். எந்தவித வன்முறைக் கலாசாரமும் இன்று அங்கு இல்லை. ஆனால், அவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட மக்கள், அமெரிக்க வாழ் மக்கள் அந்த அமெரிக்கர்களிடம் நிறவெறி பித்துப்பிடித்துத் திரிவது, சகிக்க முடியாத ஒன்றாகும்.
சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் முடித்திருக்கின்ற அவருடைய இளம் மனைவி சுநாயனா துமுலாவிற்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்? இழந்த வாழ்க்கையை யார் திருப்பித் தர முடியும்? சீனிவாசினுடைய பெற்றோருக்கு யார் ஒரு பிள்ளையைத் தர முடியும்?
நிறவெறியின் காரணமாகக் காலங்காலமாக அமெரிக்கர்கள் இழைத்துவரும் கொடுமையினைப் பட்டியலிட்டு, புக்கர் தி வாஷிங்டன் எனும் கறுப்பின அறிஞர் 'மல் ச்ழ்ர்ம் நப்ஹஸ்ங்ழ்ஹ்' எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். அவருடைய சொந்த வாழ்க்கையில், அவருடைய மனைவி பிரசவ வேதனையில் துடிக்கும்போது, அவசரமாக ஒரு டாக்சியை அழைக்கிறார்.
டாக்சிக்கார அமெரிக்கர், அழைத்தது ஒரு கறுப்பினத்தவர் எனத் தெரிந்தவுடன், "உனக்கு வண்டி ஓட்ட முடியாது' என மறுப்புச் சொல்கிறார். உடன் புக்கர் தி வாஷிங்டன் சாதுர்யமாக, "நீ வெள்ளை - நான் கறுப்பன். என்னை வைத்துத்தான் நீ ஓட்டக்கூடாது. ஆனால், உன்னை உட்கார வைத்து நான் ஓட்டலாமல்லவா' எனச் சொல்லி, அவனைச் சம்மதிக்க வைத்து, மனைவியை மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றார். அதிலிருந்தாவது அமெரிக்கர்கள் நிறவெறிக்கு ஒரு முழுக்குப் போடக்கூடாதா?
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த டாக்டர் மார்டின் லூதர் கிங்கை நிறவெறியால் சுட்டுக் கொன்றார்கள். ஆம்ஸ்டிராங், சந்திர மண்டலத்தில் காலடி வைத்தவுடன், டாக்டர் மார்டின் லூதர் கிங் துள்ளி எழுந்து, ஒரு குன்றில் மேல் ஏறி நின்று, "இனி அமெரிக்கர்கள் சந்திரனுக்குக் குடியேறிவிடுவார்கள். அப்பொழுது அமெரிக்கா காலியாகக் கிடக்கும். அதனால், இனிமேல் அமெரிக்கா நமக்குச் சொந்தம்' என ஓங்கி முழங்கினார்.
அந்த மனித நேய சமத்துவவாதி, "நான் ஒரு கனவு வைத்திருக்கிறேன். அதன்படி அமெரிக்கர்களும், கறுப்பர்களும் ஒரே வரிசையில் இருந்து தேவாலயத்தில் தொழுவார்கள். ஒரே வரிசையில் அமர்ந்து உணவு உண்ணுவார்கள்'
என்றார். ஆனால், நிறவெறியர்கள், கண்ணிருந்தால் தானே கனவு காணுவாய் என்று அந்த அறிவுஜீவியைச் சுட்டுக் கொன்றார்கள்.
நிறவெறியர்கள் திருந்துவதற்கு அவர்களுடைய நாட்டிலே பாடங்கள் இல்லை என்றால், நம்முடைய நாட்டிலே மகாகவி பாரதியார் எழுதி வைத்திருக்கின்ற பாடங்களையும், பாடல்களையும் அவர்கள் படிக்க வேண்டும்.
நாங்கள் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, காக்கைகளிடத்திலுள்ள கரிய நிறத்தில்கூடக் கடவுளைப் பார்ப்பவர்கள் என்பதை உணர்த்துவதற்காகக் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா' எனப் பாரதியார் பாடி வைத்தார்.
மேலும், பாரதியார் "ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்' எனுந் தலைப்பில் பாடிய கவிதை அப்படியே அமெரிக்கச் சூழலுக்காக எழுதப்பட்ட கவிதைபோல் தோன்றுகிறது.
"வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர், பிள்ளைகள் பெற்றது அப்பூனை - அவை பேருக்கு ஒரு நிறமாகும். சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி, வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி, எந்த நிறமிருந்தாலும் - அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிதென்றும், இது ஏற்றமென்றும் சொல்லலாமோ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால், அதில் மானுடர் வேற்றுமையில்லை, எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றாதல் காணீர்' எனும் பாடலை ஒவ்வோர் அமெரிக்கரும் தம் நெற்றியிலே எழுதி ஒட்டிக்கொண்டு போக வேண்டும்.
அமெரிக்காவின் சிறுவர்கள் பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகம் வரை, இந்தப் பாடலைப் பால பாடமாகவும், வாழ்வுப் பாடமாகவும் கற்க வேண்டும் கற்பிக்க வேண்டும்.
மரஞ்செடிகொடிகளைப் பேணி வளர்க்கும் அமெரிக்கர்கள் கொஞ்சம் மனித சாதியையும் சேர்த்து வளர்க்கக்கூடாதா? உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு இனியும் ஓர் ஏசுநாதர் வர வேண்டுமா? டாக்டர் மார்டின் லூதர் கிங்கினுடைய இரத்தத்தில் கழுவுங்கள்! சீனிவாஸ் குச்சிபோட்லாவின் குருதியில் கழுவுங்கள்!

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT