நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்கள் மன்றம் தீர்மானிக்கும்!

முனைவர் அ.பிச்சை

'இந்திய மக்கள் தலைவனையே நம்புகிறார்கள்: தத்துவங்களை நம்புவதில்லை: சித்தாந்தங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை' என்கிறார் இங்கிலாந்து நாட்டின் அரசியல் விமர்சகர் ஒருவர். ஆழ்ந்து ஆய்வு செய்தால் இந்தக் கணிப்பு முழுக்கச் சரியானது என்றே கருதலாம். 
இந்திய தேசிய காங்கிரஸ் வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிப்பார்கள் ஆய்வாளர்கள். அவை: ஹியூம்ஸ் சகாப்தம், திலகர் சகாப்தம், காந்திஜி சகாப்தம் என்பவை ஆகும். அந்த இயக்கம் தோன்றியது, 1885-ஆம் ஆண்டில். 1885 முதல் 1915 வரை உள்ள 30 ஆண்டுகளில் முதலில் ஹியூம்ஸ் வழிகாட்டியாகவும், அதன் பின் திலகர் வழிகாட்டியாகவும் திகழ்ந்தனர். 
1915-இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர் களத்தில் இறங்கினார். அவர் லண்டனில் படித்ததும், பயின்றதும் ஆங்கிலமே; ஆனால் அவர்தாய் நாட்டில் பேசியது தன் தாய்மொழியில்; அவர் தனது முதல் நூலான இந்து சுயராஜ்-ஐத் தனது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். அவர் லண்டனில் அணிந்தது நவநாகரிக மேல் நாட்டு உடை; ஆனால், இந்தியாவில் அணிந்ததோ, ஏழை இந்தியனின் எட்டு முழ வேட்டியும், நான்கு முழத் "துண்டு'ம் மட்டுமே. 
இந்த மெலிந்த மனிதரைக் கண்ட ஒட்டு மொத்த இந்திய மக்கள், இவர் நம் மொழி பேசுகிறார். நம்மைப் போல் ஆடை அணிகிறார். இவர் நிச்சயம் நம் நலன் காப்பார். இவரே நம் "தலைவர்' என ஏற்றுக் கொண்டனர். அவர் சுட்டுவிரல் காட்டிய திசையில் ஒட்டு மொத்த இந்தியர்களும் நடந்தார்கள். அவர் உயிரோடு இருந்தவரை காங்கிரஸ் இயக்கம் அவரது கையில் இருந்தது. தேசமும் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
இவ்வாறு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் குரலே கொள்கையானது. அவரது சொல்லே மந்திரமானது. வெள்ளையன் வெளியேறுவது நிச்சயம்; அதற்கு முன்னால் உங்கள் மனத்திலிருந்து பயத்தையும் (Fear) தாழ்வு மனப்பான்மையையும் (Inferiority Complex) வெளியேற்றுங்கள் என்றார் மக்களைப் பார்த்து. அந்த மெலிந்த மனிதரின் உறுதிதான் ஆங்கிலேய ஆட்சியின் அஸ்திவாரத்தை அசைத்தது. பாரத தேச விடுதலையை நாம் பார்க்க முடிந்தது.
மகாத்மா 1948, ஜனவரி 30-இல் மறைந்தார். அவர் வாழும் போதே ஜவாஹர்லால்தான் என் அரசியல் வாரிசு. என் மறைவிற்கு பின் என் மொழியை அவர் பேசுவார். நான் நினைத்ததை அவரே நிறைவேற்றுவார் என்றார். நேருஜியின் தலைமையை மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். 
ஐந்தாண்டுத் திட்டங்கள், அணிசேரா வெளிநாட்டுக் கொள்கை, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி - என்று அவர் அறிவித்தத் திட்டங்களை மக்கள் அப்படியே ஏற்றனர். நேருஜியால் நட்பு நாடாகக் கொண்டாடப்பட்ட சீனா, பகை நாடாக மாறியது கண்டு, மக்கள் சீனா மீது சினம் கொண்டார்களே அன்றி, தங்கள் தலைவன் நேருஜியின் கணிப்பு பொய்த்து விட்டதே என்று குற்றம் சாட்டவில்லை.
மூன்றாவது ஆளுமையாக இந்தியாவில் உருவானது இந்திரா காந்தியின் தலைமை. இந்திய தேசத்தை அவர் தன் ஆளுகைக்குள் வைத்திருந்தது சுமார் 16 ஆண்டுகள். 1966 முதல் 1977 வரையிலான கால கட்டத்தில் அவர் அறிவித்த வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, நலிந்தோர் நலன் காக்கும் 20 அம்ச திட்டங்கள் ஆகியவற்றை மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் அறிவிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனத்தை மக்கள் ஏனோ ஏற்கவில்லை; ஆனால், தாங்கள் நேசித்த தலைவரையே தலைமைப் பீடத்திலிருந்து இறக்கினார்கள். 
இடைப்பட்ட இரண்டரை ஆண்டு காலத்தில் 1977 முதல் 1980 வரை இரண்டு பிரதமர்களின் பதவிச் சண்டையைப் பார்த்த மக்கள், அவரை மீண்டும் அரியணை ஏற்றினார்கள். அவசர நிலைப் பிரகடனத்தை ஏற்காத மக்கள், அதனை அமல்படுத்திய தலைமையை மறுபடியும் அதிகார பீடத்தில் அமர்த்தினார்கள். இங்கும் தலைமைதான் முன் நின்றது; தத்துவம் அல்ல. இந்திராவின் ஆளுமையின் மீது அவ்வளவு நம்பிக்கை மக்களுக்கு!
அவரது மறைவுக்குப் பின்பு மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைவராக எவரும் உருவாகவில்லை. தத்துவம் அல்ல; தலைமைதான் மக்களைக் கவர்ந்திழுக்கும் என்ற சூத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தால்தான், பாரதிய ஜனதா கட்சி, சொல்லாற்றலும், செயலாற்றலும், அரசியல் சாதுரியமும் மிக்க நரேந்திர மோடியை இப்பொழுது முன்னிறுத்தியிருக்கிறது. 
அத்தலைமையின் ஈர்ப்பு தேசம் முழுவதும் வேரூன்றுமா, நிலைக்குமா, நீடிக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். அதுவரை ஆய்வாளர்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை நீதிக்கட்சி ஆரம்ப காலத்தில் வேரூன்றியது உண்மையே! அக்கட்சியில் மக்கள் தலைவராக எவரும் உருவாகவில்லை! பெரியார் ஈ.வெ.ரா. மட்டுமே மக்கள் மனத்தில் இடம் பிடித்த தலைவராக நின்றார். அவரும் சமுதாய அவலங்களை எதிர்த்துப் போராடும் ஒரு "போராளியாகவே' வாழ்ந்து மறைந்தார். அண்ணல் காந்தியடிகளைப்போல் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படாதவராகவே வாழ்ந்தவர் அவர்.
தமிழ்நாடு காங்கிரûஸப் பொருத்தவரை திரு.வி.க., சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று பல தலைவர்கள் உருவானார்கள். ஆனால் அதிகம் படிக்காத ஒரு மனிதர், விருதுப்பட்டியிலிருந்து வெறுங்கையை வீசிக் கொண்டு சென்னை நோக்கி வந்தார். அவர் ஏழைகளின் மொழியில் பேசினார்; ஏழைகளைபோல் உடை அணிந்தார்; எல்லோரிடமும் பழகினார்; அவர்கள் இதயங்களில் இடம் பிடித்தார். அவர்தான் கர்மவீரர் என்ற காமராஜர். 
அவர் கையில்தான் காங்கிரஸ் கட்சி, அவர் சாகும் வரை - 1940 முதல் 1975 வரை சுமார் 35 ஆண்டுகள் - அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மக்களில் பெரும்பாலோர் அவரையே நம்பினார்கள். அவரையே தலைவராக ஏற்றார்கள். அவர் அறிவித்த ஜனநாயக சோஷலிசமே நம்மைக் காக்கும் என மக்கள் நம்பினார்கள். இங்கும் தலைமைதான் முன் நின்றது; தத்துவம் அல்ல.
காமராஜருக்குப் பின், மூப்பனாரின் கைக்கு வந்தது காங்கிரஸ். அவர் 1996-இல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததை ஆதரித்தனர் மக்கள். 2001-இல் எதிர்நிலை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்டார். அதையும் மக்கள் ஏற்றனர். இங்கும் தலைமைக்குத்தான் மக்கள் மதிப்பளித்தனர். கொள்கைக்கு அல்ல.
1949-இல் உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரின் பிரதான தளபதியான, அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை அதன் தலைவரானார். அவரது ஆழ்ந்த அறிவாற்றல், ஈடு இணையற்ற பேச்சாற்றல், எவரையும் கவரும் எழுத்தாற்றல், அரசியல் சாதுரியம், அரசியல் நாகரிகம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் - போன்ற பெரும்படை அவருக்குப் பின்னால் அணிவகுக்கத் தொடங்கியது.
அவர் திராவிடநாடு திராவிடருக்கே என்றால் ஆம் என்றார்கள். திராவிடநாடு கோரிக்கையை நான் தாற்காலிகமாக ஒத்தி வைக்கிறேன் என்றால், அதுவும் சரியே என்றார்கள். இங்கே தலைவர்தான் முன் நின்றாரே தவிர, தத்துவம் அல்ல!
அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணா நிதியின் ஆளுகைக்கு உட்பட்டது தி.மு.க. 1969 முதல் இன்று வரை இயக்கம் அவரது கரங்களில் முரண்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டாலும் மக்கள் அவர் பக்கம் நின்றார்கள். காரணம் தலைமையை நம்பினார்கள்; தலைவன் முடிவு சரியாக இருக்கும் என எண்ணினார்கள். கொள்கைகள் குறுக்கே நிற்கவில்லை.
எம்.ஜி.ஆர். 1972-இல் தி.மு.க.வை உடைத்துத் தனிக் கட்சி (அ.தி.மு.க) கண்டார். அவர் வாழும் காலம் வரை அவரிடமே இயக்கம் இருந்தது. அவருக்குப் பின்னால் மக்களும் நின்றார்கள். அவர் இருக்கும் வரை எவரும் அவரை அசைக்க முடியவில்லை. 1977-இல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் அவர்பக்கமே மக்கள் நின்றனர். இவற்றில் 1980-இல் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தல் மட்டுமே விதிவிலக்கு.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்பு ஜெயலலிதா என்ற ஆளுமை உருவானது. அவரது விவேகம், வேகம், துணிவு அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. இயக்கமோ அவர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நின்றது. 
இன்று தமிழகத்தில் ஓர் ஆளுமை மறைந்துவிட்டது; அடுத்த ஆளுமை மௌனமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லுகிறார்கள் சில ஆய்வாளர்கள். 
"உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது' - என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
"என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு' எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.
தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT