நடுப்பக்கக் கட்டுரைகள்

முற்றுப்புள்ளி வைப்போம்

ஐவி.நாகராஜன்

தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தலின்போது அ.தி.மு.க. உட்பட பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து இடம் பெற்றிருந்தது. கல்விக்கடனை திரும்பச் செலுத்தும் எண்ணமே இல்லாத நிலை உருவாகிவிட்ட நிலையில், வங்கிகள் எவ்வாறு கல்விக் கடன் வழங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவேதான் வங்கிகள் கல்விக்கடன் வழங்க இழுத்தடிக்கின்றன. 
மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளின் தரம், ஆவர்கள் தேர்வு செய்துள்ள படிப்பைப் பொறுத்து கடன் கொடுப்பதா, வேண்டாமா என்று தீர்மானியுங்கள் என்று வங்கித் தலைமைகள் அந்தந்த வங்கிக் கிளை மேலாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளன. சொத்து, பிணை வைப்பு இருந்தால் கடன் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு அடுத்த நிலையில் கேரளம் உள்ளது. அங்கே நான்கு லட்சம் மாணவர்கள் ரூ.10 ஆயிரத்து 487 கோடி கல்விக்கடன் பெற்றுள்ளனர். அதனால் வாராக்கடன் அளவு 40%-க்கு உயர்ந்தபோது, இந்தக் கடனை வசூலிக்கும் உரிமை தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் மிரட்டத் தொடங்கினார்கள். இந்தப் பிரச்னை பெரிதான பிறகு, குடும்ப வருவாய் 7.6 லட்சத்துக்குக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவிட ரூ.900 கோடியை ஒதுக்கியது கேரள அரசு.
அவர்கள் இந்த நிதியைக் கொண்டு எவ்வாறு மாணவர்களின் கல்விக்கடனை அடைப்பது என்று ஒரு நெறிமுறை வகுத்துள்ளார்கள். ரூ.4 லட்சத்துக்கு குறைவான கல்விக் கடன் வராக்கடனாக இருந்தால், அதன் வட்டியை ரத்து செய்ய வங்கி முன் வந்தால் 60%-ஐ அரசும் 40% தொகையை கடன் பெற்றவரும் செலுத்தி கணக்கை முடிக்க வேண்டும். 
ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து, அதற்கான தொகையை அந்தக் கடன்தாரர் செலுத்தி வந்திருக்கும் பட்சத்தில், முதல் ஆண்டுக்கான தொகையில் 90%, மூன்றாம் ஆண்டுக்கான தொகையில் 50%, நான்காவது ஆண்டுக்கான தொகையில் 25% அரசு வழங்கும்.
கல்விக் கடன் ரத்து என்பதைக் காட்டிலும், ஏழை மாணவர்களுக்கு அரசு இத்தகைய உதவியைத் தருவது நல்லதே. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் வேலையில் சேர்ந்துள்ளார்களா? இவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற விவரங்களையும் அறிந்து, அதற்கேற்ப அரசும் உதவி செய்தால், மேலும் சிறப்பாக அமையும்.
மத்திய நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியா முழுவதிலும் வழங்கப்பட்டுள்ள கல்விக்கடன் ரூ.70,475 கோடி என்றால், இதில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.61 ஆயிரம் கோடி. 
அதாவது, தனியார் வங்கிகள் கல்விக்கடன் அளிப்பது மிகமிகக் குறைவு. அப்படியே அளித்தாலும், பிணை இல்லாமல் வழங்குவதில்லை. கல்லூரியின் தரம், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டுதான் அளிக்கிறார்கள்.
'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார் அதிவீரராம பாண்டியன் (நறுந்தொகை). ஆனால், எல்லாரும் ஏழைகள் போல நடித்து, வங்கிக்கடன் வாங்கி ஏமாற்ற நினைக்கும்போது, உண்மையான ஏழை கல்விக்கடன் பெறுவது இயலாத ஒன்றாகிறது. 
இன்னொருபுறம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்தொகையை வசூலிப்பதில் வங்கிகள் பெரும் கெடுபிடிகளைச் செய்கிறன்றன. இதனால் உயிரிழப்புகள் தொடர்கிறது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம், போந்தை கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயி, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக ரூ.6 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில், ரூ.3.50 லட்சம் வரை திரும்பிச் செலுத்தியுள்ளார். 
கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி, விவசாய பாதிப்பால் கடன் தொகையை முழுமையாக செலுத்தமுடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வங்கியின் சார்பில் கடன் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஞானசேகரனை கடனை கட்டச்சொல்லி மிரட்டியுள்ளனர். 
கடன் தொகையைச் செலுத்தவில்லை என்றால், டிராக்டரை ஜப்தி செய்துவிடுவோம் என்று கெடுபிடி செய்துள்ளனர். ஞானசேகரன், வங்கி மேலாளரிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறியும், இதனை ஏற்கமறுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் தகராறு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 
ஞானசேகரனைக் கடுமையாகத் தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கும், பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 
கடும் தாக்குதலுக்குள்ளான ஞானசேகரன் சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிர் இழந்துள்ளார். இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளன. வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் கெடுபிடியால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாய் மாறிவருகிறது. 
விவசாயிகளின் வங்கிக் கடனாக இருந்தாலும், ஏழை மாணவர்களின் கல்விக் கடனாக இருந்தாலும் கேரளாவைப் போன்று புதிய நடைமுறையை வகுத்து, உரிய கடன்களை வழங்குவதற்கும், உரிய முறையில் திரும்பி கட்டவைப்பதற்கும் அரசு முறைபடுத்திட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கசப்பான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT