குற்றமற வாழ்ந்து குன்றாக உயர்வோம்
ஒருவரின் வயிற்றுப் பசியைப் போக்க ஒரு பிடி சோறு ஓரளவு போதும். ஆனால், மனிதனின் சிந்தனையைத் தூண்டும் ஒரு நல்ல வாழ்வியல் கருத்தோ,
ஒருவரின் வயிற்றுப் பசியைப் போக்க ஒரு பிடி சோறு ஓரளவு போதும். ஆனால், மனிதனின் சிந்தனையைத் தூண்டும் ஒரு நல்ல வாழ்வியல் கருத்தோ, பல கோடி மக்களின் அறிவுப் பசியை அகற்றிடும் அரிய சக்தி தரும் மாமருந்தாகும்.
நாட்டு மக்களின் பண்பினை, அந்த நாட்டில் உற்பத்தியாகும் உணவைக் கொண்
டோ, செல்வந்தர்களைக் கொண்டோ சீர்தூக்கிப் பார்க்க இயலாது. நாட்டில் மக்கள் ஒருமைப்பாட்டுச் சிந்தனையுடன் பொறாமை, ஆசை, சினம் போன்ற அக அழுக்குகளை அகற்ற வேண்டும். அன்பும், நல்லொழுக்கமும் பூண்டு வாழ்வதைக் கொண்டே நாட்டு மக்களின் நாகரிக வளர்ச்சியினைக் கணக்கிட முடியும்.
நல்லாட்சிக்கு ஊறு விளைவிக்கும் கயவர்கள் இருப்பது நாடல்ல. ஒருவருக்கொருவர் கொள்ளும் பகையுணர்வும், தீவழியிற் சென்று பொருள் சேர்த்தலும், மனத்தை மயக்கி மரணக்குழியில் தள்ளிவிடும் மதுப்பழக்கமும், வேண்டாத காம இச்சைகளும், ஓருயிரைக் கொல்வதற்குக் காரணமாகி விடுகின்றன. இதை நாளும் கண்டும், கேட்டும், நாளிதழ்களின் வழி அறிந்தும் தாங்கொணாத் துயரத்தால் வருந்துகிறோம்.
இது போன்ற தீயப் பண்புகளால் பாழாவது ஒரு குடும்பம் மட்டுமன்று. ஒட்டு மொத்த நாடே அல்லவா. ஒவ்வொரு வீடும் நாட்டின் ஓர் அங்கம். அண்மையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இரு மகளிருக்கான காழ்ப்புணர்வில் நான்கு வயது சிறுமியை, அண்டை வீட்டுக்காரப் பெண்ணே தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்று சடலத்தைக் குப்பை போல புதரில் வீசி எறிந்த செய்தி குடலைப் புரட்டும் செய்தியாகும்.
குன்றத்தூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தகாத தொடர்பில் பிறக்கவிருக்கும் தன் வாரிசுக்குச் சொத்து சேர வேண்டும் என்று நினைத்து தன் காதலனின் முதல் மனைவியின் நான்கு வயதுக் குழந்தையைத் தண்ணீர் நிறைந்த வாளிக்குள் மூழ்கடித்துக் கொன்றதைச் செவியுற்றோம்.
விலங்கினங்கள் கூட தாய்மையுணர்வுடன், தன் குட்டிகளைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுகின்றன. ஆறு அறிவுடைய மனிதனோ, கொடிய அச்சுறுத்தும் விலங்கிற்கும் கீழாக நடந்து கொள்வதை நினைக்கவே உடல் சிலிர்க்கிறது.
உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும், உழைப்பிற்கும் சரியான மதிப்பு அளிக்கப் பெறாமையே இன்றைய சமுதாயத்தின் நலிவுக்கு முக்கிய காரணம். அக்குற்றங்கள் பல தலைமுறையினரைத் துரத்தும் என்பது உறுதி. காழ்ப்புணர்வு இல்லாமல், தீய வழியில் வரும் பொருள் மீது நாட்டம் இல்லாமல், கற்புத் திறத்துடன் இருந்திருந்தால், இத்தகு கொடுமைகள் நேர்ந்திருக்காது. துணி வெளுக்க மண்ணுண்டு, மனம் வெளுக்க மார்க்கம் இல்லையே என்று ஏங்கித் துடிக்கிறார் மகாகவி.
அண்மையில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வில் மது போதையில் காரைச் செலுத்திய சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்டோவில் மோதியதில், ஆட்டோ ஓட்டுநர் உயிர் நீத்தார் என்ற செய்தி உளம் உருக்கும் செய்தி.
இன்றைய இளைஞர்கள் வருங்கால பாரதத்தை உருவாக்கும் சமுதாயச் சிற்பிகள் என்றார் பண்டித ஜவாஹர்லால் நேரு. அவர்கள் கைகளில்தான் நம் எதிர்காலமே உள்ளது என்று பேசிப் பேசி நாளும் உரமூட்டி அறிவுறுத்துகின்றனர் ஆன்றோர்கள். ஆனால் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகி விடுகிறது.
மனத்தை மயக்கிக் காரிருளில் படுகுழியில் வீழ்த்தும் மது என்ற நச்சுப் பொருளின் கொடுமை தெரியாமல் கல்வி கற்று, தன் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் நேரத்தில் இளைஞர்கள் இந்த இழிச் செயலைச் செய்து தமக்குத் தாமே சேற்றை வாரிப் பூசிக் கொள்கின்றனர்.
மதுப்பழக்கத்தால் தாமும் அழிந்து, மற்றொரு உயிரையும் அழிப்பதுதான் அவர்கள் கண்ட பலன். பெற்றோர்கள் தம் பிள்ளைகட்கு முன் மாதிரியாக இருந்து, அவர்கள் நல்வழியில் ஆற்றுப்படுத்த முயலலாம். ஆசிரியப் பெருமக்கள் தங்களால் இயன்ற அறிவுரைகளை இனிமையாக எடுத்துரைக்கலாம். அரசும் மதுக்கடைகளை அறவே ஒழிக்க வழி வகைகளை ஆராயலாம்.
இளைஞர்கள் என்றாலே மாணவர்களைப் பற்றித்தான் நினைக்கிறோம். மாணாக்கர் என்ற சொல் சிறந்த பொருள் நயம் உடையது.
வாழ்க்கைக்கு வேண்டப்படும் மாண்பொருளை ஆக்குவதற்கு ஒழுக்க நெறி நிற்போர் மாணாக்கர் என்று விளக்கம் தருகிறார் திரு.வி.க. சிறந்த ஒழுக்கமே கல்விக்கு அடிப்படையாக அமைய முடியும். புத்தர், காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் முதலிய சான்றோர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் மாணவர்கள் வாழ்வு சிறக்கும்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு இதமாக, நெருக்கமாக, ஆரோக்கியமாக இருந்தால், தீங்குகள் குறைய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு மாணவனும் தங்கள் எதிர்கால இலக்குகள், தாம் வாழ்வில் கொள்ள வேண்டிய - தள்ள வேண்டியன இவற்றைப் படித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியிலேயே மாணவர்களைக் கொண்டு நீதி நெறி, வாழ்க்கைப்பாடம் முதலியன நாளும் எடுக்கச் சொல்லுதல் நன்று.
மாணவர்களைக் கொண்டே ஆசிரியர்கள் பார்வையில் கலந்துரையாடல் மேற்கொள்ளச் செய்யலாம். ஒரு பெண்ணோ ஆணோ தன் கற்பொழுக்கத்தில் இருந்து வழுவாமல் மனத்தைக் கட்டிப் போட வேண்டும்.
இந்தியப் பண்பாட்டிற்கேற்ப தொடர்களும், நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் இடம் பெறுவதில்லை. தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் செயற்பாட்டில் ஊடகங்கட்கும் பெரும் பெரும்பங்கு உண்டு .
நல்லன சிந்தித்து, நல்லன செய்வோம் என்ற உறுதி மொழியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டால், சிறைப்பறவையாய் இருப்பவர்கள் சிறகடித்துப் பறக்கலாம். குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நாம் நாமாக இருப்போம்.