நடுப்பக்கக் கட்டுரைகள்

நடந்தாய் வாழி காவேரி!

நதி என்பது தேவைப்படுகின்றபொழுது, மனிதர்களுடைய தாகத்தைத் தணிக்கின்ற ஓர் உபாயம் அன்று; நாம் அறியாமலே சுவாசிக்கின்ற காற்றைப் போல, தண்ணீரும் நாம் அறியாமலே உள்ளே ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு

தி. இராசகோபாலன்

நதி என்பது தேவைப்படுகின்றபொழுது, மனிதர்களுடைய தாகத்தைத் தணிக்கின்ற ஓர் உபாயம் அன்று; நாம் அறியாமலே சுவாசிக்கின்ற காற்றைப் போல, தண்ணீரும் நாம் அறியாமலே உள்ளே ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு ஜீவன். பருகுகின்ற இனத்தின் ஒழுக்கத்தைக் கலாசாரத்தைச் செதுக்குகின்ற ஓர் ஊடகம். 
அதனால்தான் திருவள்ளுவர், "எப்படிப் பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழைநீர் இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்' என்றார். 
ஆறு என்ற சொல்லுக்கே ஒழுங்கு, ஒழுக்கம் எனும் பொருள்கள் உண்டு. ஒரு தெரு ஒழுங்குமுறையோடு அமைந்திருந்ததை நக்கீரர் நெடுநல்வாடையில் "ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெரு' என்பார்.
உலக வரலாற்றை எழுதப் புகுந்தவர்களே நதிக்கரையை வைத்துத்தான் நாகரிகத்தைப் பிரித்தனர். (1) சிந்துவெளி நாகரிகம், (2) யூப்ரடீஸ் டைகிரீஸ் நாகரிகம், (3) நைல் நதி நாகரிகம், (4) மஞ்சள் நதி நாகரிகம் என நதிக்கரைகளை வைத்தே. 
ராகுல சாங்கிருத்தியாயன் "வால்காவிலிருந்து கங்கை வரை எனும் வரலாற்று நூலை எழுதினார். நதி என்பது நம் ஊனோடும் உணர்வோடும் ஒன்றியது. 
கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும்போது, அவர்களுக்கு நேரப்போகின்ற துன்பத்தை உற்றறிந்த வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, "அவர்களுடைய துன்பத்தைக் காணமாட்டேன்' என்று மலர்களால் தன் கண்ணைப் பொத்திக் கொண்டு ஓடினாள் என இளங்கோவடிகள் தற்குறிப்பேற்றமாகப் பாடினார்.
ஒரு மானுடப் பெண்ணுக்கு நேரப் போகின்ற துன்பத்தை ஒரு தண்ணீர்ப் பெண்ணாகிய வையை கண்ணாரக் 
கண்டு உருகியதாலும், திருஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு இட்ட தமிழ் ஏடுகளைச் சுமந்ததாலும், மகாகவி பாரதி, "தமிழ்க் கண்டதோர் வையை பொருநை நதி' என அடைமொழி கொடுத்துப் பாராட்டினார்.
குடகு மலையிலிருந்து 765 கி.மீட்டர் பயணம் செய்து பூம்புகாரை வந்தடையும் காவிரிக் கரையில், ஒவ்வோர் ஆண்டும் புதுவெள்ளம் வருகின்றபோது ஆடவர் } பெண்டிருடைய ஆட்டமும் பாட்டமும் நிகழ்வுறும். நதிக்கரையிலே போட்டி போட்டுக் கொண்டு ஆடும் ஆடற்கலையைப் பார்ப்பதற்கென்றே பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். 
நம்முடைய பெண்கள் புதுப்புனல் ஆடி மகிழ்ந்த விதத்தைப் பாரதி, "அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே } தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந்நாடே' என வருணிப்பான்.
ஒருமுறை பூம்புகாரில் காவிரிக்கரையில் நிகழ்ந்த புதுப்புனல் விளையாட்டில் பங்கேற்பதற்காகச் சேர நாட்டு இளவரசன் ஆட்டனத்தி வருகின்றான். அவனுடைய ஆடற்கலையில் வசப்பட்ட சோழ இளவரசி ஆதிமந்தி, அவனுடன் போட்டி போட்டுக் கொண்டு, காவிரிக்கரையில் ஆடி மகிழ்கிறாள். 
நீர் விளையாட்டில் ஆழந்தெரியாமல் இறங்கிய ஆட்டனத்தியை அலைகள் ஆழத்திற்குக் கொண்டுசென்றன. காதலனைக் காணாமல் ஆதிமந்தி காவிரி முகத்துவாரம் வரையில் ஓடுகிறாள். 
"காவிரித்தாயே என் காதலனை மீட்டுத்தாயேன்' எனக் கூக்குரலிட்டு ஓடினாள். அவளுடைய அவலக்குரலைக் கேட்டு காவிரித் தாயும், உயிரற்ற சடலத்தை ஆதிமந்தியிடம் ஒப்படைக்கின்றாள்.
நதி நம் உணர்வோடு ஒன்றியது. விடுதலைப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா வாராணசியிலிருந்து தில்லி செல்லும் போதெல்லாம், பருகுவதற்குரிய நீரைக் கங்கைக்கரையிலிருந்து மொண்டு போவாராம். 
அதேபோல் ரஷியாவிலிருந்து இந்தியா வந்த அதிபர் கோஸிஜன், தாம் பருகுவதற்குரிய நீரை, வால்காவிலிருந்து கொண்டு வந்தாராம். சமீபகாலத்தில் அமரத்துவம் அடைந்த ஷெனாய் மாஸ்ட்ரோ பிஸ்மில்லாகானின் வாழ்க்கையில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. 
அவருடைய ஷெனாய் இசையைக் கேட்டுக் கிறங்கிய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அவரை நிரந்தரமாக நியூயார்க்கில் தங்கி, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து வாசிக்கும்படி வேண்டினார். அவருக்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் அங்கேயே செய்து தருவதாகவும் கூறினார். 
அதற்கு மாஸ்ட்ரோ பிஸ்மில்லாகான் "காசியில் இருக்கக்கூடிய கங்கையையும் காசி விசுவநாதரையும் இங்கே பெயர்த்து வைக்க முடியுமென்றால், நான் இங்கே தங்க முடியும். தினமும் கங்கையில் நீராடாமல் என்னால் வாழ முடியாது என்றார். அந்த அளவுக்குக் கங்கை அவருக்கு உணர்வுப் பொருளாகவும் உரிமைப் பொருளாகவும் இருந்தது.
ஒருமுறை கண்வ மகரிஷியிடம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் பெண் வடிவமெடுத்து வந்து ஒரு வேண்டுகோளை வைத்தன. "இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பாவமூட்டைகளைச் சுமந்து வந்து எங்களிடம் மூழ்கிக் கரைத்துப் போகின்றனர். 
அதனால் நாங்கள் கருமை அடைந்துவிட்டோம். எங்கள் பாவங்கள் போக வழி செய்ய வேண்டும்' என முறையிட்டனராம். அதற்குக் கண்வ முனிவர் "ஐப்பசி மாதம் மயிலாடுதுறைக் காவிரியில் துலாக்கட்டத்தில் நீராடினால், பரிகாரம் கிடைக்கும் என்றாராம். இதுவொரு தொன்மச் செய்தி.
காவிரி கங்கையிற் புனிதமானது என்ற கருத்துத் தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் உண்டு. அதனால், "கங்கையிற் புனிதமான காவிரி நடுவுப்பாட்டு' (பாடல் 894) என அருளிச் செய்கிறார். கம்பருக்கும் இக்கருத்தில் உடன்பாடு இருந்திருக்கிறது. 
இராமன் காட்டிற்குப் போய்விட்டான் என்ற செய்தி அறிந்த பரதன், இராமனை அழைத்து வருவதற்காகக் கோசலை நாட்டைவிட்டுப் புறப்படுகின்றான். அப்பொழுது கம்பர் "பரதன் காவிரி நாட்டைப் போன்ற கோசலை நாட்டைவிட்டுப் புறப்பட்டான்' எனப் பாடுவார் ("காவிரி நாடன்ன கழனி நாடு ஒரீஇ'). கம்பரும் காவிரித் தண்ணீர் குடித்து வளர்ந்தவர் அல்லவா?
கடியலூர் உருத்திரங் கண்ணனார், "வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி' என்றார், பட்டினப்பாலையில். "மகப்பேற்றுக் காலத்தில் ஒரு தாய் தன் தாய்ப்பாலால் குழந்தையை ஊட்டிக் காப்பாற்றுவது போலக் காவிரித் தாய் தன் மக்களை ஊட்டி வளர்ப்பாள்' என்றார் கோவூர் கிழார் புறநானூற்றில் (பாடல் 68). 
இளங்கோவடிகள் "வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி' என்றார், சிலப்பதிகாரத்தில். மேலும், "கோள்நிலை திரிந்து கோடை நீடிலும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப்பாவை' என்றார் மணிமேகலைக்காரர். 
இதனையே "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும், ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' என்று ஒரு புலவர் கூறுவார். "காவிரிப் பூமிமாதுவின் மார்பில் கிடக்கும் முத்துமாலை போன்று திகழ்கின்றது என்றும், அது வையத்து மக்கட்கு ஒரு செவிலித்தாய்' என்றும் பாடினார், தெய்வச் சேக்கிழார்.
காவிரியாறு கடலுக்குள் புகுந்து கடலின் வயிற்றை நிரப்பாமல், தான் பாயும் நாட்டிலுள்ள மக்களுடைய வயிற்றை நிரப்பும் என்பதைத் தெய்வச் சேக்கிழார், "கடல் வயிறு நிறையாத காவிரி' எனப் பாடுவார். 
மேலும் இன்றைக்குக் காவிரிக்கு ஏற்பட்டிருக்கும் மகத்துவத்தை அன்றைக்கே தெய்வச் சேக்கிழார், "காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி, ஆவின் அருங்கன்று உறையும் ஆவடுதண் துறை அணைந்து' எனப் பாடியிருக்கின்றார். 
காவிரி நீர் என்று சொல்லாமல் சேக்கிழார் "தீர்த்தம்' என்று சொல்லுவதற்குக் காரணம், "தீர்த்தம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவது; நீர் உடலைத் தூய்மைப்படுத்துவது' என்பதால் ஆகும்.
காவிரி தன்னுடைய இரு கரைகளிலும் இயல், இசை, நடனம் ஆகிய முத்தமிழையும் நிகழ்த்திச் செல்வதைத் திருஞானசம்பந்தர், "இன்குரல் இசைகெழும் யாழ்முரலத் தன்கரம் மருவிய சதுரன் நகர் பொன்கரை பொரு}பழங்காவிரி' என்பதன் மூலம் இயம்புகின்றார். 
திருவரங்கத்துள் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுடைய இரண்டு திருவடிகளையும் காவிரி ஆறு வருடிச் செல்வதால், பெருமாள் அறிதுயிலிலிருந்து அனந்தசயனத்திற்கே செல்வதாகக் குலசேகர ஆழ்வார் பாடுகிறார். யானையினுடைய தந்தங்களையும், அகிற்கட்டைகளையும் ஏந்திக் காவிரித் திருவரங்கத்தில் பாய்வதால், அதனைச் "செல்வக்காவேரி' என அருளிச் செய்கிறார் திருமங்கையாழ்வார். 
ஆறுகள் பல இருந்தாலும் தமிழர்களுக்குக் காவிரியால்தான் பெருமை என்பதைப் பாவேந்தர் பாரதிதாசன், "வானுக்குச் செங்கதிர் ஒன்று } புனல் வண்மைக்குக் காவிரி ஒன்று' எனப் பாடிச் செல்கிறார்.
ஐம்பூதங்களில் நீர் நெருப்பை அணைக்கும்; நிலத்தையும் பல சமயங்களில் அணைக்கும்; சில சமயங்களில் அறுக்கும். நீர் வானத்தை அளக்கும்; காற்றைச் சுமக்கும். உற்பத்தி ஸ்தானத்தில் இருப்போர் அடிக்கடிக் காவிரிக்குக் கருத்தடை செய்ய நினைத்தாலும் அறுவைச் சிகிச்சையை அறுத்தெறிந்து விட்டுப் பெருக்கெடுத்துவரும் குணவதியவள். 
தமிழர்கள் காவிரியைச் சில நேரங்களில் அடக்கிப் பார்த்தார்கள்; பல நேரங்களில் அடங்கிப் போனார்கள்; என்றாலும் ஒரு நாளும் அதட்டிப் பார்த்ததில்லை.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT