சா. கந்தசாமி 
நடுப்பக்கக் கட்டுரைகள்

அரசியல் குடும்பங்கள்

இந்தியா சுதந்திர நாடாகி எழுபதாண்டு முடிந்துவிட்டது. மூன்றாவது தலைமுறை வாக்காளர்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் முதல் தலைமுறையினர்அடிமையாக

சா.கந்தசாமி

இந்தியா சுதந்திர நாடாகி எழுபதாண்டு முடிந்துவிட்டது. மூன்றாவது தலைமுறை வாக்காளர்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் முதல் தலைமுறையினர்அடிமையாக இருந்த நாட்டில் பிறந்து சுதந்திரம் பெற்றவர்கள். பலர் சுதந்திரப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் சத்தியாகிரகம் என்று பலவற்றிலும் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள், தடியடி பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், தேச துரோகிகள் என்று தூக்கில் போடப்பட்டவர்களின் வாரிசுகள். பலர் வந்தே மாதரம் என்றும், ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று வீதிதோறும் முழங்கிக் கொண்டு சென்றவர்கள். அதோடு தேசாபிமானிகள், தொழிலாளர்கள், குடியானவர்கள், பெண்கள் என்று எல்லோரும் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவில் முதன் முதலாக 1952-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இருபத்தொரு வயது நிரம்பிய குடிமக்கள் வாக்களிக்கச் சென்றார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை 'வாக்காளப் பெருமக்களே' என்று மதிப்புடன் விளித்தன.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் களத்தில் இறங்கினார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதே நாடாள தகுதி என்று சிலர் கருதினார்கள். மக்களிடையே காங்கிரஸ் மீது மதிப்பும், மரியாதையும் இருந்தது. எனவே பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் தலைவர்கள் சிலர் மத்தியிலும், மாநிலங்களிலும் அமைச்சர்களானார்கள்.
போராட்டம், கிளர்ச்சி, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்றே பழக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் மிகுந்த அமைச்சர் பதவி கிடைத்தது. இதில் சிலர் மிரண்டு போய்விட்டார்கள். பலருக்குப் பதவி போதையூட்டியது. தன்னைச் சிறையில் அடைத்த அதிகாரிகள், அவமானப்படுத்திய அதிகாரிகள் தன்முன் பணிந்து நிற்பதைக் கண்டார்கள்.
'அரசாங்கம் என்பதே மனிதர்களின் தீய குணங்களில் இருந்து எழுந்தது' என்று அமெரிக்க சிந்தனையாளர் தாமஸ் பெயின் எழுதியிருக்கிறார். அதனைத் தெரிந்து கொண்டு பல ஞானிகள் அதிகாரத்தின் நிழல்கூட தன்மீது படாமல் ஒதுங்கி நின்று விடுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் இந்தியா சுதந்திரம் பெறக் காரணமாக இருந்த மகாத்மா காந்தி.
அவர் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ ஆக ஆசைப்படவே இல்லை. அவர் அரசு நிர்வாகம் என்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். அது மட்டும் இல்லை. தன் மகன்களையும் அவர் கட்சி, ஆட்சி என்று எதன் பக்கமும் கொண்டு வரவில்லை. சுதந்திரத்திற்குப் போராடுவது, அதன் வெற்றிக்குப் பிறகு, அரசு அதிகாரத்தைச் சுவைப்பதற்கானது இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. 
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் சேர்ந்து போராடியவர்களில் ஒருவர் முகமது அலி ஜின்னா. ஒரு காலத்தில் இந்திய தேசிய தலைவர்களோடு கருத்து முரண்பாடு கொண்டார். இந்து மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவில் சிறுபான்மையான முஸ்லிம் மக்கள் சேர்ந்து வாழ முடியாது. தனி நாடு வேண்டும். இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்று போராடினார். அவர் கொள்கை ஏற்கப்பட்டு முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான் ஏற்பட்டது. முகமது அலி ஜின்னா அதன் முதல் ஜனாதிபதியானார். ஜனாதிபதி என்றால் சகல அதிகாரங்களும் கொண்ட சர்வாதிகாரி. அவர் உயிரோடு இருந்தவரையில் பாகிஸ்தானின் ஒரே சர்வாதிகாரி அவர்தான். அவருக்குக் குடும்பம் சரியாக அமையவில்லை. எனவே பாகிஸ்தானில் குடும்ப ஆட்சி ஆரம்பத்தில் ஏற்படவில்லை. ஆனால் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜனநாயக நாடாகவே இருந்து வருகிறது. அதனால் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டத் தலைவர்களின் பரம்பரை ஆட்சி ஏற்பட்டுவிட்டது. அரசியல் கட்சிகளும் குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டன. அதில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என்ற வேறுபாடு கிடையாது.
பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சியும், ஆட்சியும் தங்கள் குடும்பத்தினர்கள் வசமே இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தங்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். தியாகத்தின் பலனை பெற உரிமை இருக்கிறது என்று கருதுகிறார்கள். இரண்டாவது காரணம் மற்ற எல்லா தொழில்களையும்விட பெயர் பெற, பணம் ஈட்ட, சமூகத்தில் அங்கீகாரம் பெற, பாதுகாப்புடன் வாழ நல்லதொரு தொழிலாக அரசியல் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். 
அரசியலில் நுழைவதற்கு அதிகம் படிக்க வேண்டியதில்லை. கடினமாக உழைக்கத் தேவையில்லை. தலைவரான தந்தையின் ஆசியும், கட்சி நிர்வாகிகள் உதவியும் இருந்தால் போதும். தொண்டர்கள் வந்து கூடிவிடுவார்கள். பிறந்தாள் விழா கொண்டாடுவார்கள். தெரு முழுவதும் பெரிய பெரிய பேனர் வைப்பார்கள். மலர் கிரீடம் சூட்டி தங்கச் சங்கிலி அணிவிப்பார்கள். ரூபாய் நோட்டு மாலை போடுவார்கள்.
சின்ன மனிதன் பெரிய மனிதனாகிவிடுகிறார். தந்தையின் நிழலில் செயல்படும் மகன், அரிதாக லஞ்ச, ஊழலில், அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கிக்க கொண்டு, அரசின் விசாரணைக்கு உட்பட்டால் தந்தை அலறி அடித்துக் கொண்டு மகனைக் காப்பாற்ற ஓடி வருகிறார்.
'என் மகன் தன் உழைப்பால் முன்னேற்றம் அடைந்தவன். அவன் மீது வீண்பழி சுமத்துவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எனக்காக என் மகனைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். தைரியம் இருந்தால் என்னைப் பிடித்து விசாரணை செய்யட்டும், சிறையில் அடைக்கட்டும். வழக்குப் போடட்டும்' என்று சவால் விடுகிறார்.
தந்தைக்கு மகன்தான் முக்கியம். மகனுக்காக எல்லாவிதமான அவமானங்களையும் பொறுத்துக்கொள்ளவும், உயிர் கொடுக்கவும்கூட தந்தை தயாராக இருக்கிறார். அதற்கு சரித்திரம் முழுவதிலும் நிறைய சான்றுகள் இருக்கின்றன.
மொகலாய மன்னர் பாபரின் மகன் ஹுமாயூன். அவன் சிறு வயதில் நோயுற்றுப் படுத்துவிட்டான். அரசாளப் பிறந்த முதல் மகன் இறந்துவிடுவானோ என்ற பயம் பாபருக்கு வந்துவிட்டது. அவரால் தாள முடியவில்லை.
அல்லாவிடம் இறஞ்சி வேண்டுகிறார். 'நிகரற்ற அல்லாவே என் உயிரை எடுத்துக்கொண்டு இளவரசன் உயிரைக் கொடுத்து விடு' என்று வேண்டினார். உயிர் என்பது பண்டமாற்று பொருள் இல்லை என்பது போர்களில் பல உயிர்களை வாங்கிய பாபருக்குத் தெரியவில்லை. புத்திர பாசம் மதியை மழுங்க வைத்துவிடுகிறது. அதற்கு மன்னர் ஆட்சிகாலம், ஜனநாயக ஆட்சி காலம் என்ற பேதமெல்லாம் கிடையாது. அதிகாரம் எப்பொழுதும் தன் குடும்பத்தின் வசமே இருக்க வேண்டும். தனக்குப் பின் மகன் அரசாள வேண்டும் என்பதுதான். 
ஆனால் எப்பொழுதும் மகன் தந்தையின் சொற்படி நடக்கிற ஆளாக இருப்பதில்லை. தனக்கென்று புது வழி இருக்கிறது. தந்தையின் காலம் முடிந்துவிட்டது. அவர் அது தெரியாமல் இருக்கிறார். அதனை அவருக்குத் தெரிய வைக்க வேண்டும் என்று அவர் சாகும் வரையில் சிறையில் அடைத்து, தான் ஆட்சி புரிந்தான்.
ஜனநாயக ஆட்சி காலத்தில் மகன் தந்தையை அரசியல் கட்சி தலைமையில் இருந்து நீக்குகிறான். சூழ்ச்சி செய்து அவர் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான். எந்த ஆட்சி முறையானாலும் அது ஒரு பரம்பரை ஆட்சியாக - குடும்பத்தின் ஆட்சியாகவே இருக்கிறது.
பரம்பரை ஆட்சி முறையின் முதல் கேடு, அந்தப் பரம்பரையில் பிறந்த ஆண் மகன் எப்போது வீரனாக, அறிவு கொண்டவனாக, செயலூக்கம் பெற்றவனாக இருப்பதில்லை. இருக்க முடியாது என்பது உளவியல் முறையில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கோழைகள், மந்தப் புத்தி கொண்டவர்கள் பல குடும்பங்களில் இருந்து வந்து விடுகிறார்கள். பல நூற்றாண்டுகளாகப் பரம்பரை ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்கள், மன்னர்களைப் பணிந்து இருந்த மக்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அடிமையானார்கள்.
இந்தியா சுதந்திரமடைந்ததும், நாட்டின் பல பகுதிகளிலும் பரம்பரையாக ஆட்சியுரிமை கொண்ட ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சிறிய சமஸ்தானங்கள் இருந்தன. அவர்கள் மகாராஜா என்று பட்டம் சூட்டிக்கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார்கள். சுதந்திர நாட்டில் மகாராஜாக்களுக்கு இடமில்லை என்று அவர்கள் வசமிருந்தப் பகுதிகளை இந்திய யூனியனோடு, சர்தார் வல்லபபாய் படேல் சேர்த்தார். ஆனால், சுதந்திர இந்தியாவில் பரம்பரை ஆட்சியில்லை என்று சொல்ல முடியாது.
இந்திய யூனியனில் இருக்கும் இருபத்தொன்பது மாநிலங்களிலும், ஏழு யூனியன் பிரதேசங்களிலும் பெரும்பாலும் பரம்பரை ஆட்சியே நடைபெறுகிறது. அரசியல் கட்சியும் அவர்கள் வசமே இருக்கிறது. எதிர்க்கட்சியில் இன்னொரு குடும்பம் இருக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் பலரும், மாநில சட்டப்பேரவைகளில் இடம் பிடித்துக்கொண்டு இருப்பவர்களில் பலரும் குடும்பப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள்தான். இசை, நடனம், ஓவியம், சிற்பம், நெசவு - என்று கலை மற்றும் கைத்தொழில்களிலும் பாரம்பரியம் இருக்கிறது. அது கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அது பணத்தால், அதிகாரத்தால் பெருமை பெறுவதில்லை. அதிகாரம் செலுத்துவது இல்லை - எல்லோருடைய மனத்திலும் இருக்கும் கலையுணர்வை அவர்களே அறியும்படி செய்கிறது. 
குடும்ப பாரம்பரியம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவானது. மிகவும் சிறந்ததொரு கட்டமைப்பு. சட்டத் திட்டங்கள் இல்லாமல் நீடித்து நிலைத்து இருப்பது. எத்தனைத்தான் குறைகள் சொன்னாலும் குடும்பப் பாரம்பரியத்தை அடியோடு வீழ்த்திவிட முடியாது. 
பெரும்பான்மையான மக்களுக்கு, தாங்கள் ஓர் அரசியல் கட்சித் தலைவரால் ஆளப்படுவது பாதுகாப்பானதாக - மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
குடும்பம் என்று ஒன்று இருக்கிற வரையில், தம் மக்கள் என்று சொந்தம் பாராட்டுவது, அவர்களை முதலிடத்திற்குக் கொண்டுவரப் பாடுபடுவது இவையெல்லாம் இருக்கவே செய்யும்.
எல்லாக் காலமும் போல வருங்காலமும் குடும்ப ஆட்சி காலந்தான். எந்தக் குடும்பம் முதல் இடத்திற்கு வருவது என்பதில் போட்டியிருக்கிறது. எந்தக் குடும்பம் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கிறதோ, எந்தக் குடும்பம் பெருமளவில் பணம் வைத்துக் கொண்டிருக்கிறதோ, தொண்டர்களைக் கொதி நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறதோ, ஊடகங்களைத் தன் வசத்தில் வைத்திருக்கிறதோ அந்தக் குடும்பம் முதல் குடும்பமாகிவிடும். அதன் வாரிசுகள் சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டு இருப்பார்கள். ஆட்சி புரிய அறிவு, நாணயம், ஒழுக்கம், தேவையில்லாமல் போய்விடும்.
வாக்காளர் பெருமக்கள் எப்பொழுதும் போல நிறைவேறாத ஆசைகளோடு, தங்கள் குடும்பத்தில் ஜனநாயக ஆட்சியின் ஒளி பாய்ந்து அறியாமையும் வறுமையும் ஒழிந்து விடுமென நம்பிக் கொண்டு வாக்களிக்கிறார்கள். ஆனால், சூரர்களான மகன்கள் வாக்குப் பெட்டியில் இருந்து பூதம்போல புறப்பட்டு வருகிறார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT