எத்தனைதான் நாம் அறிவியல் வளர்ச்சியில் மேன்மையடைந்திருந்தாலும் அதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் அது கேள்விக்குரியதுதான். எதனையும் பயன்படுத்துவதோடு நமது தேவை தீர்ந்து விடுகிறது. அதனை மறுசுழற்சி செய்யும் பொறுப்பு நமக்கு இருப்பதில்லை.
ஒரு காலத்தில் குப்பைகள் அவற்றிற்குரிய குழிகளில் இடப்பட்டன. அவை பெரும்பாலும் வேளாண்மைக்கு உதவுகின்ற தாவரக் கழிவுகளாக இருந்தன. ஆதலால், அவை அந்தக் குழியில் மட்கி எருவாகி மீண்டும் வேளாண் நிலத்திற்கே சென்று விட்டன.
ஆனால், இன்றைய நவீனச் சூழலில் குப்பை மேடுகளாக மட்டுமல்லாது மலைகளைப் போல உருவெடுத்து நம்முடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றன. அதிலும் மட்கும் குப்பை என்றும் மட்காத குப்பை என்றும் இருவகை வேறு.
மட்கும் குப்பையையும் கூடத் திரும்பப் பயன்படுத்துவதற்கு நிலங்கள் இல்லாதபோது மட்காத குப்பைகளாகிய மின்னணு எந்திரங்களின் உதிரிப் பாகங்களையும் நெகிழிக் குவியல்களையும் எப்படிப் பராமரிக்க முடியும்?
வீடுகளில் இருந்து வெளியேறுகிற இந்தக் குப்பைகள் தெரு முழுதும் நிறைந்து, பின்னர் சாக்கடைகளில் கலந்து நீர்நிலைகளாகிய குளம், குட்டை, ஏரி என்று எல்லாவற்றையும் நிரப்பி, பின்னர் ஆறுகளோடு சேர்ந்து பயணித்துக் கடலையும் நிறைத்துக் கொண்டிருக்கின்றன.
சுற்றுலாத் தலங்களாக விளங்கும் மலையுச்சிகளையும் குப்பைகள் விட்டு வைக்கவில்லை. உணவுக் கழிவுகள் தொடங்கி பலவிதமான குப்பைகளும் அங்கு நிறைந்து, சூழலை மாசுபடுத்து
கின்றன.
மண்ணில்தான் குப்பைகள் என்றில்லை. விண்பரப்பில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் பயன்முடிந்து போன செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. அவை பெரும்பாலும் இனி பயன்படப் போவதில்லை ஆதலால் அவையும் குப்பைகளே.
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான வளிமண்டலப் பகுதியில் ஏற்பட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத மாசுப் படலங்களைக் கண்டறிய தனியாக ஒரு நுண்ணோக்கி நமக்குத் தேவைப்படும்.
திட, திரவ, வாயு என்னும் மூன்று நிலைகளிலும் இன்றைக்குக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன.
முந்தைய காலங்களில் திடக் கழிவுகளைச் சேகரிக்கும் வியாபாரி ஒரு பழைய மிதிவண்டியில் இருபுறமும் கோணிச்சாக்குகளைக் கட்டிக் கொண்டு கூவிக் கூவிக் குப்பைகளைச் சேகரித்தார்.
இப்போது நிலை வேறு. சரக்குந்துகளில் ஒலிபெருக்கியோடு கூடிய அறிவிப்புடன் அவர் குப்பைகளை அள்ளிச் செல்கிறார்.
திரவக் கழிவுகளை வெகு எளிதாகத் தரையிலோ, அல்லது சாக்கடைக் கழிவிலோ கலந்துவிடுகிற முறை இயல்
பாகவே உள்ளது.
அவை எல்லாவற்றிலும் ரசாயனக் கலவை இருப்பதை யாரும் அறிவதில்லை. அவற்றின் வாசம்பட்டாலே தாவரங்கள் கருகி விடும். அப்படியிருக்கும்போது அவை வேரில் கலந்தால் அது என்னவாகும்? குப்பைகளை உணவாக்கிப் பச்சையம் தயாரித்த தாவரங்கள் குப்பைகளாலேயே மடிவது கொடுமையிலும் கொடுமை.
தார்ச்சாலைகள் தொடங்கி தொழிற்சாலைகள் வரைக்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன வாயுக் கழிவுகள். இவை நிறைந்து பின்னர் இடம்போதாமல்தான் நம்முடைய காற்றுப் பைககளிலும் தஞ்சம் புகுகின்றன.
புறத்தில் தொடங்கி அகம் முழுதும் நிறைகின்ற இந்தக் குப்பைகளை நாம் எப்படிச் சீராக்கி, பூமியை எப்போது சுத்தப்படுத்தப் போகிறோம்?
புதியன புக வேண்டுமாயின் பழையன கழிதல் அவசியம்தான். ஆனால், பழையன மலையெனக் குவிந்துகொண்டே சென்றால் புதியன எப்படிப் புக முடியும்? உடல் தொடங்கிப் பிரபஞ்சம் வரைக்கும் இதுதான் நியதி.
உடலில் தேங்கிய குப்பைகள் மலச்சிக்கலை உண்டு செய்வது போல, உலகில் தேங்கிய குப்பைகள் யுகச் சிக்கலை ஏற்படுத்தப் போகின்றன.
நாடு விடுதலை அடையுமுன்னே, விடுதலையை எப்படிப் பேணிக் காப்பது என்று தீர்க்கதரிசனமாகக் காட்டிய பாரதியார்,
புதிய பாரத நாட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என ஒரு பெரிய பட்டியல் இடுகிறார். அவர் காலத்திலேயே அறிவியல் தொழில்நுட்பங்கள் பெருகியிருந்ததால், வானை அளவிடுவதையும் கடல்மீனை அளவிடுவதையும் குறிப்பிட்டதோடு சந்திர மண்டலத்து இயலாகிய விண்ணகத் தொழில் நுட்பத்தையும் அவர் குறித்துக் காட்டுகிறார்.
அந்தப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத் தக்கது குப்பைதான். வீதிக்கு வீதி குவியப் போகிற அந்தக் குப்பைகளைப் பெருக்கியெடுப்பது ஒரு பெரிய சாத்திரமாகவே அவருக்குத் தோன்றியிருப்பதால் இப்படிப் பாடியிருக்கிறார்.
"மந்திரம் கற்போம்வினைத்
தந்திரங் கற்போம்
வானை யளப்போம்
கடல்மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல்
கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்'.
எத்தனை அறிவியல் தொழில்நுட்பங்களில் நாம் மேன்மையடைந்தபோதும் நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சூழலைத் தூய்மை செய்து பேணாதவரை நாம் நல்லறிவுடையவர்கள் அல்லர் என்பதைக் கருதித்தான் பாரதியார் சந்தி தெருப்
பெருக்குவதைச் சாத்திரம் என்று குறிப்பிட்டு, அதைக் கற்போம் என்று அழுத்திக் கூறினார் போலும்.
நாம் எப்போது அந்தச் சாத்திரத்தை முழுமையகக் கற்றுத்தெளியப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.