முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

எது வேண்டும்? சொல் மனமே!

மக்கள் குரல் என்ற பெயரில் இன்று தமிழ்நாட்டில் இந்திய ஒருமைப்பாடு என்ற அரசியல் ஒழுக்கத்திற்கு எதிராகக் குரல் ஒலி எழுப்பப்படுகிறது.

நடுப்பக்கக் கட்டுரைகள்

எது வேண்டும்? சொல் மனமே!

மக்கள் குரல் என்ற பெயரில் இன்று தமிழ்நாட்டில் இந்திய ஒருமைப்பாடு என்ற அரசியல் ஒழுக்கத்திற்கு எதிராகக் குரல் ஒலி எழுப்பப்படுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

மக்கள் குரல் என்ற பெயரில் இன்று தமிழ்நாட்டில் இந்திய ஒருமைப்பாடு என்ற அரசியல் ஒழுக்கத்திற்கு எதிராகக் குரல் ஒலி எழுப்பப்படுகிறது. ஆனால் அக்குரல் உண்மையான மக்கள் பெரும்பான்மையினரின் மனநிலையைப் பிரதிபலிப்பதாயில்லை. தமிழ் என்ற உணர்வைப் பூதாகரமாக்கி, அறிவை மயக்கும் அரசியல் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. 
தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் வெற்றிடம் தோன்றியுள்ளதைப் பயன்படுத்திப் பல்வேறு சுயநலக் கும்பல்கள், தமிழ் உணர்வைத் தூண்டிவிட்டு 'எதுவுமே வேண்டாம்... எல்லாமே தவறு...' என்ற அழிவுப் பாதைகளுக்கு வழிகாட்டுகின்றன. உண்மை நிலையையும், உலக நிலையையும் உரசிப் பார்க்காமல் கனவுலகத்தில் வாழ்கின்றனர். 
மறைவாக நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதால் ஆகப் போவது எதுவும் இல்லை. இன்றைய யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, வாழ்வாங்கு வாழ்தல் நலம். ஒரே மண். ஒரே உலகம் என்று வழங்கப்பட்டது புவியியல் விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படும் உண்மைதான். அது லெமூரியாவோ அட்லாண்டிசோ அல்ல. 
அட்லாண்டிஸ் என்பதும் கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட பொன்னுலகம், அட்லாண்டிக் சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதாக நம்பப்படும் நல்ல கற்பனை. இவ்வாறே லெமூரியா இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதாகப் பழந்தமிழ்க் குறிப்பு உள்ளது.
இந்த இரண்டு கனவு உலகங்களையும், புவியியல் விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் 'உலகம் முழுவதும் ஒரே மண் - ஒரே உலகம், ஒரே கண்டம்' என்ற கூற்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 
அப்படிப்பட்ட 'ஒரே மண்' 'பேன்ஜியா' (PANGEA) என்ற சொல்லால் குறியிடப்பட்டுள்ளது. எனினும், அப்படிப்பட்ட பேன்ஜியா, 19 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு உலகமாக மாறியது. ஒன்று வட துருவத்தை நோக்கும் லாராசியா (LAURASIA) மற்றொன்று கோண்ட்வானா (GONDWANA).  இது தென் துருவத்தை நோக்கி நகர்ந்தது.
லாராசியக் கண்டத்தில் லாரன்சியா, பால்ட்டிகா, காஜகஸ்தானியா, சைபீரியா, சீனா (மேற்குப் பகுதி நீங்கலாக), ஆசியா (இந்தியா நீங்கலாக) ஐரோப்பாவின் ஒரு பகுதி, வட அமெரிக்கா அடங்கியது.
கோண்ட்வானா கண்டத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அராபியத் தீபகற்பம் அடங்கின. புவியியல் விஞ்ஞான அடிப்படையில் நிகழ்ந்த இரு கண்டங்களின் பிரிவில் ஒரு கண்கூடான உண்மை, பயிர்த் தோற்றங்களில் காணப்படும் ஒற்றுமை. அறிமுகமான புதிய பயிர்களை ஏற்கும் திறன், தட்பவெப்பம் ஆகியவற்றைக் கூறலாம். 
ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி, காங்கோ நதி, இந்தியாவின் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா - தென் அமெரிக்காவின் அமேசான் - நதிப்புறங்களின் உள்ள மரங்கள், தாவரங்கள், மிருகங்களின் ஒற்றுமை அடிப்படையிலும், பல்லுயிர்ப் பெருக்கச் சூழலியல் அடிப்படையிலும் கோண்ட்வானா ஒற்றுமையை விண்டுரைக்கலாம். 
கோண்ட்வானா தென் மண்டலக் கண்டப் பிரிவினையில் உள்ள 'கோண்ட்' என்ற சொல் இந்தியாவில் இன்னமும் பழங்குடிகளாக வாழும் கோண்டர்கள் ஒடிஸா, ஆந்திரம், மத்தியப் பிரதேசம் இணைந்த எல்லைப் பகுதிக் காடுகளில் உள்ளனர். 
முறையான ANTHROPOLOGY - ANTHROPOMETRY - ஆராய்ச்சிகள் - அதாவது பழங்குடி மனிதர்களை நாகரிக மக்கள் இனத்துடன் தொடர்பு செய்து உடற்கூறு, மண்டை ஓடு அமைப்பு, பழக்க வழக்கங்கள், உணவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். எனினும் இந்தியாவின் கோண்ட் பழங்குடிகள் கோண்ட்வானாவின் பழைய கற்கால மனிதர்களாகக் கருத இடம் உண்டு. 
லெமூரியா என்பதைப் போல் கோண்ட்வானா பெருமையினால் ஆகப் போவது எதுவும் இல்லை. ஆக வேண்டிய செய்தி பயிர்த் தோற்றம், பரவல், புதிய தட்பவெப்பத்தைத் தாங்கும் தகுதி பற்றி அறிவது பயனுடையது.
இன்று உலகமே, மாறும் தட்பவெப்பம் - அதாவது Climate change  பற்றிப் பேசுகிறது. காலநிலை மாற்றம் என்று சொல்வதற்கும் மாறும் தட்பவெப்பம் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் என்பது இயல்பானது. பூமி தட்டையல்ல. பூமி உருண்டை என்றும் அறிந்து கொண்டதைத் தொடர்ந்து கிரகங்களின் சுழற்சி காரணமாகவும், பூமியின் நகருந் தன்மை காரணமாகவும் தோன்றுவது காலநிலை மாற்றம். 
உதாரணமாக, 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்ட்டிகா, ஆர்ட்டிகா தோன்றாதபோது உலகமே பனிக்கட்டியால் உறைந்து கிடந்தது. இப்படித் தோன்றிய பனிக்கட்டிக் காலம் இயல்பான காலநிலை மாற்றம் என்போம். இன்று ஏற்படும் காலநிலை மாற்றம் மனிதனால் ஏற்பட்டது. மாசுகளால் உருவானது. 
குளிர்ந்த பூமியை மாசுகளால் சூடேற்றுவதால் இயல்பான காலநிலை மாற்றத்தில் ஏற்படும் தட்பவெப்பம் தடுமாறுகிறது. ஆகவே இன்றைய காலநிலை மாற்றத்தைத் 'மாறும் தட்பவெப்பம்' என்றே புரிந்து கொள்வோம்.
இவ்வாறு உலகத்தைச் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நகர்ந்து வட துருவம் என்ற ஆர்க்டிக் பனி சமுத்திரமும், தென் துருவம் என்ற அண்டார்ட்டிக் பனி சமுத்திரமாகவும் உருவானது. 
இவ்வாறு பனிக்கட்டிகள் விலகிய பின்னர்தான் உலகில் விவசாயம் தொடங்கியது என்றும் முறைப்படியான விவசாயம் கி.மு.7000 என்றும் புவியியல் விஞ்ஞானிகள் பகுத்துரைத்ததற்கும், எகிப்து, மெசப்பட்டோமியா, சிந்து சமவெளி, சீனாவின் மஞ்சளாறு தென் அமெரிக்காவின் மாயா நாகரிகம் (அண்டஸ்) எல்லாம் சம காலத்தவை என்பதற்கும் உள்ள நெருக்கத்தை கவனிக்க வேண்டும். 
இப்படிப்பட்ட விஞ்ஞான உண்மைக்கு மாறாக ஒரு சாரார் தமிழ்ப் பெருமை பேசுவது போல், மற்றொரு சாரார் தொல் சிறப்பை எடுத்துக்காட்ட சமஸ்கிருதப் பெருமை பேசுகிறார்கள். இரண்டுமே தவறு. உலகம் உய்ய உணவு உற்பத்திக்கான இயற்கை சூழ்நிலை பனிக்கட்டிக் காலம் முழுமையாக மறைந்த கி.மு. 7000-ல்தான் ஏற்பட்டது என்று கூறுவதைவிட, ஏற்பட்டிருக்க முடியும் என்று கூறுவதுதான் சரி. 
கோண்ட்வானா பகுதியில் உணவுப் பயிர்த் தோற்றம் ஏற்பட்டதற்கு காரணம் நெல், கோதுமை, உருளைக்கிழங்கு, மக்காசோளம் மற்றும் பல்வேறு காய்கறிப் பயிர் வளர்ச்சியில் உள்ள ஒற்றுமை, அறிமுகப் பயிர்களை ஏற்கும் திறன் வைத்து உய்த்துணரலாம். இங்கிலாந்தில் தொழில் புரட்சி நிகழ்ந்த 19-ஆம் நூற்றாண்டிலிருந்து மாசுகளின் உற்பத்தி தொடங்கியது. மாசுகளின் உச்சகட்டம் 21-ஆம் நூற்றாண்டு. 
முப்பதாயிரம் ஆண்டுகளில் ஏற்பட வேண்டிய காலநிலை மாற்றம் முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். உலக நாடுகள் மாசுகளைக் கட்டுப்படுத்துவதை செயல்திட்ட வரைவுடன் திட்டமிட்டுச் செயல்படும் வழிமுறைகளை ஐ.நா.வின் சுற்றுச்சூழல் துறை வகுத்து வழங்கியுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டில் உள்ள அடிப்படையான பிரச்னைகளில் வளர்ச்சிக்கும் வளப் பாதுகாப்புக்கும் உள்ள முரணியல்புகள் முக்கியமானவை. வளங்களைச் சுரண்டாமல் வளர்ச்சி பெறமுடியாது. வளங்களைச் சுரண்டும் போதுதான் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். 
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் போதுதான் வறுமை அகல்கிறது. வளங்களைச் சுரண்டுவதில் கட்டுப்பாடுகளை வளர்க்க வேண்டும் என்பதுதான் பொருளே தவிர, வளர்ச்சி இல்லாமல் வாழ்வு சாத்தியமில்லை. வளங்களைச் சுரண்டுவதில்லை என்ற வைராக்கியம் போலியானதாகப் படுகிறது!
குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தை எடுத்துக் கொண்டால்கூட குறைந்தபட்சம் ஒரு டி.வி.எஸ். எக்சல் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. இதுதவிர மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பஸ்கள், ரயில்கள், லாரிகள், அமெரிக்காவைப் போல் இங்கும் நெரிசலான போக்குவரத்துகள், தேசிய நெடுஞ்சாலைகள் இவையெல்லாம் வளர்ச்சியின் எடுத்துக்காட்டுகள். 
வளங்களைச் சுரண்டிப் பெற்ற இந்த இன்ப உலகத்தால்தான் ஏழ்மை, வறுமை வெல்லப்பட்டுள்ளது. இந்த இன்ப உலகம் இயங்க நாம் கச்சா எண்ணெயை எவ்வளவு விலை கொடுத்து இறக்குமதி செய்வது? ஐ.நா. சுற்றுச்சூழல் அறிக்கை வளர்ச்சியைக் கட்டுப்படுத்து என்று போதிக்கிறதே தவிர, வாழ்வாதாரங்களை உயர்த்தும் வளர்ச்சியை முற்றிலும் புறக்கணிக்கச் சொல்லவில்லை. 
இதைக் காரணம் காட்டி நம் தமிழர்கள், 'எண்ணெய்க் கிணறு வேண்டாம், ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம். எரிவாயு ஆய்வு வேண்டாம். குளச்சல் துறைமுகம் வேண்டாம். கூடங்குளம் வேண்டாம். கல்பாக்கம் வேண்டாம். நதிநீர் இணைப்பு வேண்டாம். ஹிந்தி வேண்டாம். நீட் என்று நீட்ட நீட்ட வேண்டாம். நவோதயா பள்ளி வேண்டாம் என்று ஓலமிடுகிறார்கள். இங்குள்ள கம்யூனிஸ்டுகளும் வளர்ச்சி வேண்டாம் என்கிறார்கள்! ஆனால் சீனாவிலும், ரஷியாவிலும் அமெரிக்காவைப் பின்பற்றி எரிவாயுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறார்களே! அது இவர்களுக்குத் தெரியாதா?
இன்றைய அமெரிக்கா ஷேல் கேஸ் உற்பத்தியில் வெற்றிக் கொடி நாட்டி, வளைகுடா எண்ணெய் இறக்குமதியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதே! ஷேல் கேஸ் கிணறுகள் மிகுந்த பென்சில்வேனியாவில் விவசாயம் அழிந்துவிடவில்லையே! எரிவாயுக் கட்டமைப்புகளால் 100 ஏக்கர் விளைநிலம் பாதிப்புறலாம். 32 கோடி ஹெக்டேர் நிலப்பரப்புடைய இந்தியாவில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புள்ள விளைநிலம் பாதிப்புற்றால், விவசாயமே அழிந்துவிட்டது என்ற புலம்பல் பகுத்தறிவுக்கு முரணானது. 
நம் தமிழர்களுக்கு வேண்டுவதெல்லாம், 'நான் தமிழன்டா' என்று உரக்கக் கத்த வேண்டும். இந்து மகா சமுத்திரத்தில் குதித்து இல்லாத லெமூரியாவைக் கண்டுபிடித்துப் பூரித்துப் போக வேண்டும். கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் தொடர வேண்டும். நம்மிடம் மாடுகள் உண்டு. சாண எரிவாயு போதும் என்று குரல் எழுப்பிவிட்டு, மாட்டுக்கறி வேண்டும் என்று முரண்டு பிடிக்க வேண்டும். சைக்கிளில் போக வேண்டும். 
பெட்ரோல் வேண்டாம். கேஸ் வேண்டாம். விறகு அடுப்பில் சமையல் வேண்டும். காளை மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் வேண்டும். புதுமைகளையும் விஞ்ஞான வளர்ச்சியையும் மறந்து, கார்ப்பரேட்டுகளால் வளர்ந்து வருமானம் பெற்று சொத்து சுகம் வாங்கிய பின், 'கார்ப்பரேட் ஒழிக' என்று கோஷம் போட வேண்டும். 
தமிழா, சரியாக யோசித்துச் சொல். உனக்கு என்ன வேண்டும்? கனவுகளும் கற்பனைகளும் வாழ்வைத் தராது. எது வேண்டும்? சொல் மனமே!

முழு கட்டுரையைப் படிக்க →