முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆயுர் வேதமும் - பாட்டி வைத்தியமும்

இன்றுள்ள அவசர யுகத்தில் மருத்துவம் என்றால் அலோபதிதான் என்பது சற்று முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவசர சிகிச்சை என்றால் அதுதான்.

நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆயுர் வேதமும் - பாட்டி வைத்தியமும்

இன்றுள்ள அவசர யுகத்தில் மருத்துவம் என்றால் அலோபதிதான் என்பது சற்று முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவசர சிகிச்சை என்றால் அதுதான்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

இன்றுள்ள அவசர யுகத்தில் மருத்துவம் என்றால் அலோபதிதான் என்பது சற்று முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவசர சிகிச்சை என்றால் அதுதான். சாதாரண ஜுரம், வயிற்று வலி, வாந்தி, கழிச்சல் என்றால் கூட அலோபதி மருத்துவர்களிடமே மக்கள் தஞ்சமடைகிறார்கள். டாக்டர் தொழிலில் கொழிக்கும் பணத்திற்கு அளவே இல்லை. ஆகவே, எவ்வளவு பணம் செலவழித்தாவது தான் பெற்ற பிள்ளைகளை மருத்துவப் பட்டம் பெற பல லட்சக் கணக்கில் பணம் செலவழிக்கவும் மக்கள் தயாராயுள்ளனர். ஒரு சிறிய பிரச்னை, ஜுரம் என்றாலும் கூட டாக்டர்கள் பல விதமான சோதனைகள்; ஏராளமான சந்தேகங்கள்; ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று 500-1000 என்று சமயங்களில் தீட்டிவிடுபவர்களும் உண்டு.
முன்பெல்லாம் சுக்கு கஷாயம், திப்பிலி கஷாயம், சதகுப்பை கஷாயம் என்று பாட்டி வைத்தியம் செலவு இல்லாமல் நிகழ்ந்தது. சாதாரண ஜுரம், வயிற்று வலி, பேதி இதற்கெல்லாம் அலோபதி இல்லாமல் குணமானது; மிளகு, சீரகம், ஓமம், கண்டதிப்பிலி தீர்த்து வைத்தது. பல சுவாச கோச கோளாறுகளை ஏலம், கிராம்பு தீர்த்து வைக்கும்.
சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய அளவில் நோய்களும் இல்லை. அன்று இத்தனை அலோபதி வைத்தியர்களும் மருத்துவமனைகளும் இல்லை. அஞ்சறைப் பெட்டியில் உள்ள பல்வேறு நறுமணப் பொருள்களுடன் வெந்தயம், கொத்தமல்லி விதை, இஞ்சி, பெருங்காயம், மஞ்சள், வசம்பு, அதிமதுரம் கொண்டே வீட்டில் உள்ள பாட்டிமார்கள் மருந்து தயாரித்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு அழைத்துக் கொண்டு போவார்கள். 
நான் சென்னையில் கல்லூரிப் படிப்புக்கு வந்த காலத்தில் மயிலாப்பூர் வெங்கட்ரமணா ஆயுர் வேத வைத்தியசாலையின் ஆடா தொடைக் கஷாயம் பல பிரச்னைகளுக்குத் தீர்வாயிருந்தது. பாட்டி வைத்தியமோஆயுர் வேத மருந்துகளோ அலோபதி மருந்துகளைப் போல் பக்க விளைவு ஏற்படுத்தாததால் அது பற்றி சமீப காலமாகப் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 
பாட்டி வைத்தியம், ஆயுர் வேதம், இயற்கைவைத்தியம், பச்சிலை வைத்தியம் பற்றிய அக்கறை வந்துள்ளது. இன்னும் செல்தெரபி, அக்குபஞ்சர் என்று பல இருப்பினும், ஆயுர் வேதம் என்பது ஒரு முறையான, முழுமையான வைத்திய முறையாக இருக்கிறது.
ஆயுர்வேத வைத்திய முறையில், ஒரு மனிதன் நோயுறுவதன் காரணம் மூன்று தோஷங்களினால் என்கிறது. 
அவை முறையே, வாயு, பித்தம், கபம் என்று பகுக்கப்பட்டுள்ளது. நோய்க்குறி எந்த தோஷம் என்று கண்டறிந்து சிகிச்சை வழங்குதல் என்பது சரக சம்ஹிதை என்ற மருத்துவ நூல் எழுதப்பட்ட காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே ஆயுர்வேத வைத்திய முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
ஆயுர்வேதத்தை மேலோட்டமாக அறிந்தவர்கள் வாயு என்றால் வயிற்றில் தோன்றும் காற்று, பித்தம் என்றால் கல்லீரல், கபம் என்றால் சளி என்று மட்டுமே புரிந்து கொண்டுள்ளனர். அது அப்படி அல்ல.
வாயு என்றால் மூளை உள்பட மனித உடலில் உள்ள அனைத்து நரம்புகளிள் இயக்கத்தில் தோன்றும் கோளாறுகள் என்று அறிந்து வைத்தியம் செய்வார்கள்.
பித்தம் என்றால் பித்த நாடி அறிந்து உடலில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல் தோன்றி தசைகளின் இயக்கம் பழுதாகும் கோளாறு என்று வைத்தியம் செய்வார்கள். 
வாந்தி, உடல் அசதி, ரத்த ஓட்டம், உடலில் சுரக்கும் பல்வேறு அமிலங்களின் நிலை, மலம், மூத்திரம், வியர்வை வெளியேறும் நிலையில் உள்ள சிக்கல் என்று பலவும் பித்த தோஷமாகக் கொள்ளப்படுகிறது. 
கபம் என்பது பித்த தோஷத்தை ஒட்டி ஏற்படும் சளியின் சீரற்ற நிலை. தொண்டையிலிருந்து ஆசனவாய் வரையில் ஒரு வழுவழுப்பான திரவம் படிந்து உடலுக்குள் உணவுப் பாதையை சமனான வாயுவும் சேர்ந்து ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிமானத்திற்கும், செரிமானமாகாமல் எஞ்சிய கசடு மலமாக வெளியேறவும் கப நிலை சீராக செயல்பட வேண்டும்.
கப தோஷம் பார்க்கும்போது, கபம் மிகுந்துவிட்டாலும் கஷ்டம். குறைந்துவிட்டாலும் கஷ்டம். கபம், பித்த வாயு தோஷத்துடன் சேர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும். ஆகவே, திரிதாது என்று சொல்லப்படும் தோஷங்களை வைத்தியர்கள் நாடி பிடித்துப் பார்த்துக் கண்டுபிடிப்பார்கள். இப்படி தோஷங்களை அனுமானித்து, வாய் வழியே உடலுக்குள் வழங்கும் மருந்துகள் கஷாயம், சூர்ணம், லேகியம் வடிவில் வழங்கப்படும்.
ஆயுர்வேத முறையில் உடல் பூச்சு வைத்தியமும் உண்டு. ஆவி பிடித்தல், ஆவி குளித்தல், பிழிச்சல் என்னும் மசாஜ் போன்ற எண்ணெய் தேய்ப்பு என்று பல வழிமுறைகள். இப்படிப்பட்ட வேறு சில வெளிப்புற சிகிச்சைகளும் உண்டு. 
வஸ்தி கர்மா என்கிற முறையில், பெருங்குடல், குதவாய், குறிகள், மூத்திரப் பாதைகளுக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றுதல்; தலை உள்பட உடலில் களிமண் பூச்சு - இதன் மூலம் உள்ளுறுப்புகள் வெப்பமுற்று துர்நீர் வெளியேறும்.
நேத்ர கர்மா என்னும் கண் சிகிச்சை; நஸ்ய கர்மா என்கிற மூக்கின் உட்பகுதி சிகிச்சை முறை; கவலம் என்கிற வாயில் மருத்துவக் குடிநீர் மூலம் கொப்பளித்தல்; தூமபானம் என்னும் ஆவி பிடித்தல்; தூபனம் என்கிற மருந்துப் புகை மூட்டம், சாம்பிராணி புகை பிடிக்கும் முறை; வமனம் என்கிற வாய் வழியே நச்சு வெளியேற வாந்தி எடுக்க வைத்தல்; விரேசனம் என்பது, பேதியை ஏற்படுத்தி நச்சை வெளியேற்றும் முறையாகும்.
அனுவாசன முறையில் ஆசனவாய் வழியே மருந்து எண்ணெய் ஊற்றி குடல் சுத்தி செய்யும் 'எனிமா' முறை பின்பற்றப்படுகிறது. 
நிரூஹணம் என்கிற முறையானது, எண்ணெய் இல்லாமல் உலர் பொருள் கொண்டு குடல் சுத்திக்கு 'எனிமா' கொடுத்தலாகும்.
சிரோ விரேசனம் என்பது தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கு, வாய், கண், காது போன்ற அவயவங்களில் ஏற்படும் கழிவு நீக்கம், தலைப்பகுதி நரம்புகளைப் புத்துணர்வு செய்யும் வழியில் மிதமான அழுத்தத்தில் தடவிக் கொடுப்பது.
ஆயுர்வேதத்தில் உள்ளுக்குத் தரப்படும் மருந்துகள் ரசம், குணம், வீரியம், விபாகம், பிரபாவம் என்று வகைப்படுத்தப்பட்டு தோஷங்களை நிவர்த்தி செய்கின்றன.
ரசம் என்பது ஆறு சுவைகள். ஆறு சுவைகளில் இனிப்பு கபத்தை ஏற்படுத்தும். உப்பு கபத்துடன் பித்தத்தை ஏற்படுத்தும். பித்தம், வாயுவுக்கு காரம் அடிப்படை. துவர்ப்பும் கசப்பும் வாயு மட்டுமே, கபத்தையும் கட்டுப்படுத்தும். ரசத்துடன் குணம், வீரியம், விபாகம், பிரபாவம் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மூலிகைகளில் மருத்துவ ரசாயனமுள்ள பாகங்களை உலர்நிலையில் பதப்படுத்தியும், தூய்மைப்படுத்தியும், பின்னர், உகந்தவாறு இந்துப்பு, நெய், தேன், கரும்பு வெல்லம், பனைவெல்லம், சீனி ஆகியவற்றைக் தக்க அளவில் சேர்த்து சூர்ணம், மாத்திரை, லேகியம், க்ருதம் (நெய்), அரிஷ்டம் (கஷாயம்) தயாராகின்றன.
ஆயுர்வேத மருந்துகளுக்கு அடிப்படையான மருத்துவ செய்முறை பக்குவங்களுக்கு ஆதாரமாயுள்ள நூல்கள், சுவடிகளில் வாக்படரின் அஷ்டாங்க ஹ்ருதயம், அஷ்டாங்க சங்கிரகம், சரக சம்ஹிதை, சுஷ்ருத சம்ஹிதை, அகத்தியம், தேரையர் நிகண்டு என்று பற்பல உண்டு.
இந்தியாவில் ஆயுர்வேத வைத்திய பாரம்பரியத்தை கேரள மாநிலத்தில் நம்பூதிரி, வாரியர் குடும்பங்கள் மிகச் சிறப்புடன் காப்பாற்றி வந்துள்ளன. வட நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் ஏராளமான வைத்திய நிபுணர்கள் இந்தப் பாரம்பரியத்தை இன்றளவும் காப்பாற்றுகின்றனர். 
இப்படிப்பட்ட முறையான ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்களில் இன்று சில நிறுவனங்களும் பிரபலமாகிவிட்டன. 
சென்னை அடையாறில் உள்ள இம்ப்காப்ஸ், காந்திகிராமத்தில் உள்ள லட்சுமி சேவா சங்கம் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் இம்காப்ஸின் பின்புலப் பெருமை மறைந்த மேதை டாக்டர் ஓய் கொண்டல்ராவ் அவர்களைச் சாரும். காந்திகிராமத்தில் லட்சுமி சேவா சங்கத்திற்கும் வடிவம் அமைத்துத் தந்தவர் அவரே.
இந்தியாவில் ஆயுர்வேதம் பல்கலைக் கழக அளவிலும், மருத்துவத்தின் அங்கமாகப் பொது மருத்துவ மனைகளில் ஒரு பிரிவாகவும் செயலாற்றி வருகிறது. 
இந்தியாவின் பெருமைக்குரிய பாரம்பரியம் மீண்டும் புத்துணர்வுடன் செயலாற்ற வேண்டிய சூழ்நிலை இன்று நிலவி வருவதை எண்ணி நிறைவு கொள்வோம்.

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்
 

முழு கட்டுரையைப் படிக்க →