லாபம் தரும் மாற்றுப் பயிர் விவசாயம்
மிகவும் ஆழமாக சிந்தித்தால், விவசாயம் என்பதை வாழ்வியலாக நோக்க வேண்டும் என்று இயற்கை விவசாயம் செய்வோர்களில் பலர் கூறுவது நியாயமாகத் தோன்றும்.
நடுப்பக்கக் கட்டுரைகள்லாபம் தரும் மாற்றுப் பயிர் விவசாயம்
மிகவும் ஆழமாக சிந்தித்தால், விவசாயம் என்பதை வாழ்வியலாக நோக்க வேண்டும் என்று இயற்கை விவசாயம் செய்வோர்களில் பலர் கூறுவது நியாயமாகத் தோன்றும்.
மிகவும் ஆழமாக சிந்தித்தால், விவசாயம் என்பதை வாழ்வியலாக நோக்க வேண்டும் என்று இயற்கை விவசாயம் செய்வோர்களில் பலர் கூறுவது நியாயமாகத் தோன்றும். பணப் பொருளாதாரம் இல்லாவிட்டால் விவசாயத்தில் வாழ்வியல் வாதம் வெற்றிதரும்.
நம்மைச் சுற்றிய உலகம் பணத்தையும், ஆடம்பரத்தையும், சொகுசையும் கொண்டு இயங்கும்போது, மிகவும் அடிப்படையான தேவையை பணத்தால் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற யதார்த்தம் உள்ளபோது, விவசாயி தன்னுடைய உற்பத்தியை அங்காடிக்குக் கொண்டு வருகிறான். தனது விளைபொருளின் சந்தைவிலை வீழ்ச்சியால் நஷ்டம் அடைகிறான். பொதுவாக உணவு தானிய உற்பத்தியிலும், பருத்தி, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியிலும் அறுவடை சமயத்தில் விலை சரியாமல் இருந்தால் விவசாயி பிழைத்துக் கொள்வான். கடன் அடைப்பான். இல்லாவிட்டால் அசலுடன் வட்டி எகிறும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மரணத்தையும் தழுவுகிறான்.
விவசாயம் லாபகரமாக இயங்க முதலாவதாக, விவசாயிக்கு தான் போட்ட முதலை எடுக்கும் அளவில் உற்பத்தி உயர்ந்து- விலையும் சரியாமல் இருப்பது அவசியம். விவசாயி லாபம் பெற வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள் மதிப்பானது ஜி.டி.பி. என்று சொல்லப்படும் தேசிய உற்பத்தி மதிப்பில் உயர்ந்த பங்கை வகிப்பது அவசியம். ஜி.டி.பி.யில் விவசாய உற்பத்தி மதிப்பு 50 முதல் 60% இருந்தவரை விவசாயம் மதிப்புள்ள தொழிலாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளாக விவசாய உற்பத்தி மதிப்பின் பங்கு சராசரியாக 20% கூடத் தேறவில்லை. அந்த அளவில் விலை வீழ்ச்சியும், பணவீக்கமும் விவசாயத்தை மிகவும் பாதித்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் விவசாயிகளின் கிளர்ச்சி ஓங்கிவிட்டது.
பிரதமர் என்கிற முறையில் நரேந்திர மோடி பங்கேற்ற நான்காவது சுதந்திர தின உரையில், இந்தியா 2022-ஐ நெருங்கும்போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்த பாடுபடப் போவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அசோக் தல்வயி தலைமையில் குழு ஒன்றை நியமித்துள்ளார். அக்குழு முதல் கட்டமாக விவசாயத்தில் முதலீட்டு வளர்ச்சியை முன்மொழிந்துள்ளது. 2022-ஐ நெருங்கும்போது மொத்த விவசாய முதலீடுகள் 1.02 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்ந்து, ஒவ்வொரு விவசாயியும் ஆண்டுக்கு 7% முதலீடுகளை உயர்த்த வேண்டுமென்றும் முன் மொழியப்பட்டுள்ளது.
2015-16 விலைவாசி அடிப்படையில் விவசாயிகள் சராசரி வருமானம் ரூ.96,703. பெரிய விவசாயிகளின் வருமானம், ரூ. 6,05,393. சிறு விவசாயிகள் வருமானம் ரூ. 76,229. விவசாயிகளுக்குள் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு ஒரு புறம். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியோடு ஒப்பிட்டால், விவசாயிகளின் வருமான வளர்ச்சி வீதம் குறைவு என்பதை நீதி ஆயோக் தெளிவுபடுத்தியுள்ள சூழ்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் திட்டங்கள் பற்றி யோசிக்கப்படுகிறது. அப்படி யோசிக்கும்போது இடுபொருள்களின் நேர்த்தியான பயன்பாடு, புதிய தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை, மூலிகைப் பயிர்கள், மதிப்புக் கூட்டிய விளைபொருள்களை சந்தைப்படுத்தும் திட்டம், கால்நடை உற்பத்தி விரிவாக்கம், பால் உற்பத்தி, மரக்கன்று வளர்ப்பு, மீன் வளர்ப்பு என்றெல்லாம் வேளாண்துறை விஸ்தீரிப்பது பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனினும் அடிப்படையான மாற்று சிந்தனை பற்றிய கவனம் தேவை.
விவசாயத்தை லாப நேக்கில் செயல்படுத்தித் தனிப்பட்ட முறையில் ஒரு விவசாயி, தான் உற்பத்தி செய்யும் விளைபொருள் கொண்டு உச்சத்தைத் தொட செக்குமாடு போல் மண்ணில் போட்டதையே போட்டு ஏதோ விளைந்தால் சரி என்ற மனோபாவத்தை மாற்றிச் கொண்டு துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறலாம். வறட்சி காரணமாகவும், கர்நாடகம் விட்டுத் தராததாலும் காவிரியில் நீர் வற்றிய சூழ்நிலையில் கூட சில விவசாயிகள் இருக்கும் நிலத்தடி நீர் கொண்டு பல மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்து வருவாய் ஈட்டியுள்ள செய்திகள் ஆக்கப்பூர்வமானவை. காய்கறி, பூ, புஞ்சை தானியங்கள், மரப்பயிர், மூலிகைத் தோட்டம், நெல்லிப் பழங்கள் போன்ற நல்ல விலையும் லாபமும் தரக்கூடிய நீர் சிக்கன சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனர். மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வோரும் உண்டு.
விவசாயத்தை மதிப்புள்ள தொழிலாக மாற்ற மூலிகை சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும். மூலிகை என்றால் "வேரில் மருந்து' என்று பொருள். வேர் மருந்து தண்டிலும், இலையிலும், பூவிலும், காயிலும், கனியிலும் பரவலாக உண்டு. வேர், விதை, பூ, காய், கனி எல்லாமே இயற்கை வழி மருந்துகளே. இந்தியாவில் மூலிகைச் செல்வம் கொட்டிக்கிடக்கிறது.
இப்போது உலகம் முழுவதுமே மூலிகை சார்ந்த ரசாயன மருந்தை விரும்பும் நிலை வந்துவிட்டது. மருந்து மட்டும் அல்ல. உடம்பில் பூசும் கிரீம், பற்பசை, குளியல் சோப்புகள், ஷாம்பூ எல்லாவற்றிலும் ஆலோவிரா (சோத்துக் கத்தாழை) வேம்பு, கருவேலம்பட்டை, கோந்து, மஞ்சள், சந்தனம், கிராம்பு போன்ற பல வாசனை எண்ணெய்களின் தேவை உள்ளது. உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் மூலிகை சார்ந்த ரசாயனங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. உலக சுகாதார நிறுவனமும் மூலிகை சார்ந்த மருந்துகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தவும் ஊக்கம் அளிக்கிறது. இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, மூலிகை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.
ஏற்றுமதியாகும் மூலிகைகளில் செங்காந்தள் மலர் என்று சொல்லப்படும் கார்த்திகைக் கிழங்கு, நித்யகல்யாணி, சர்ப்பகந்தி, சென்னா, மருந்துக் கூர்க்கன், அசுவகந்தா, பெருநெல்லி, சதாவரி, திப்பிலி, வசம்பு, நிலவேம்பு, வெட்டிவேர், தூதுவளை, ஓரிதழ்தாமரை, வெள்ளைமுசலி, சீனித்துளசி என்று நீளமான பட்டியல் உண்டு.
எனினும், அதிகம் விலைமதிப்பும் பயனும் உடைய அபினி, கஞ்சா இன்னமும் ஆயுர்வேத மூலிகையாக அங்கீகரிக்கப்படாமல் லாகிரியாக, அதாவது போதைப் பொருளாக மட்டுமே, எண்ணப்படுகிறது. அபினி என்பது போஸ்தக்காய். போஸ்தக்காயில் உள்ள திரவம் அபினியாகிறது. போஸ்தக்காயை முற்றவிட்டால் திரவத்திலுள்ள லாகிரி ஆவியாகிவிடும். கடுகைவிடப் பொடியான விதைகள் கிடைக்கும். அவைதான் கசகசா. கசகசாவில் போதை இருக்காது என்பதாலும், சமையலுக்குரிய நறுமணப் பொருள்களில் ஒன்று என்பதாலும், கசகசாவின் நன்மை கருதி, போதைப் பொருள் தடைச்சட்ட அடிப்படையில், போஸ்தக்காய் சாகுபடிக்கு உரிமம் உண்டு. ஆனால் பாரம்பரியமான பலவகை சித்த, ஆயுர்வேத மருந்துகளுக்கு அபினி தேவை. ஒரு காலத்தில் அபினி சாகுபடிக்கு ஒரு தடையுமில்லை. சீனாவுக்கு அபினி ஏற்றுமதி செய்து பெற்ற லாபமே இந்தியாவின் மாபெரும் தொழிலதிபரான டாடாவின் முன்னோர்களுக்குத் தொழில் முதலீடாகி உதவியது என்று வரலாறு கூறுகிறது. அலோபதி வைத்தியத்திற்குத் தேவையான மார்ஃபின், பெத்தடின், கோடின் போன்ற அனஸ்தீஷியா மயக்க மருந்துக்கு அபின் பயன்படுகிறது.
அபினியைவிட கஞ்சா மிகவும் அற்புதமான மூலிகை. கஞ்சா என்றும், பாங் என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகை பற்றிய குறிப்பு கி.மு.1500 அளவில் எழுதப்பட்ட அதர்வண வேதத்தில் ஐந்து புனித மூலிகைகளில் பாங் ஒன்று என்றும், பாங் தயாரிக்கும் வழிமுறையையும் கூறியுள்ளது. இமயமலைப் பகுதியில் கஞ்சா நிறைய விளைகிறது. அண்மைக்கால ஆய்வுப்படி கஞ்சாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டுரோணாபினால், நபிலோன் என்ற இரண்டு ரசாயனங்களும் புற்றுநோய் மருந்து பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் புற்றுநோய் மருத்துவமனைகளில் பயனாகிறது.
இந்தியாவில் கஞ்சா ஒரு அவசிய மருந்தாகப் பிரகடனம் ஆகாமல், இன்னமும் லாகிரி வஸ்து-போதைப் பொருள்- என்றே கருதப்படுகிறது. கஞ்சா சாகுபடி அனுமதிக்கப்படாததால், இந்தியாவில் உள்ள புற்றுநோய் மருத்துவர்கள் அதிக விலை கொடுத்து கஞ்சாவிலிருந்து கிடைக்கும் மேற்படி மருந்தை இறக்குமதி செய்கிறார்கள். புற்றுநோய் மட்டுமல்ல, வலிப்பு என்று கூறப்படுகிற நரம்பியல் நோய்க்கும் எய்ட்ஸ் நோய்களுக்கும் மருந்து. இதன் மருத்துவத் தேவை காரணமாக இந்தியா தவிர அனைத்து நாடுகளிலும் கஞ்சா சாகுபடிக்குரிய தடை நீக்கப்பட்டுவிட்டது.
போதைப் பொருள் லாகிரி வஸ்து தடைச்சட்டம் 1985-இன்படி, நம் நாட்டில் கஞ்சா, அபினி சாகுபடி குற்றச் செயல் ஆகும். எனினும் அபினிப் பயிரிலிருந்து கசகசா உற்பத்திக்காக அபினி சாகுபடி செய்வோர் உரிம அடிப்படையில் விளைவிக்கின்றனர். கஞ்சா சாகுபடி சட்டத்திற்குப் புறம்பாகவே நிகழ்ந்து வருகிறது. எனினும் கஞ்சா, அபினி சாகுபடிகளில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கும் உத்தேசம் உள்ளது. பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமனும், மேனகா காந்தியும் அபினி, கஞ்சா சாகுபடியில் உள்ள தடைகளை நீக்குவதில் ஆர்வமாயுள்ளனர். ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட சாதனங்கள் தயாரிக்கும் சில நிறுவனங்களும் அப்படிப்பட்ட தடை நீக்கம் செய்வதற்குக் காய் நகர்த்தி வருகின்றன. இந்தியாவின் மாபெரும் உணவுப்பொருள் நிறுவனமாகவும், மருந்து நிறுவனமாகவும் உயர்ந்துள்ள பதஞ்சலி, கஞ்சாவிலிருந்து உயிர் காக்கும் மருந்து உற்பத்தி ஆராய்ச்சியில் இறங்கி அமெரிக்கச் சந்தைக்கு சவால்விடும் நிலையில் உள்ளது.
விவசாய விளைபொருள்களின் மதிப்பு உயர வேண்டுமானால், மூலிகையை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும். விவசாயிகள் கணிசமாக லாபம் பெறும் மாற்றுப் பயிர் திட்டத்தில் மதிப்புக்குரிய மூலிகைகளாக கஞ்சா, அபினி இடம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்தியாவில் விவசாயம் லாபகரமாக இயங்க மாற்றுப் பயிர் மூலிகை சாகுபடி திட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம்.