உலகம் தோன்றிய காலத்தை 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று தோராயமாக வரையறுக்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்தக் கணக்கில் ஏனைய உயிர்களும் மனித உயிர்களும் தோன்றியது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்பப் பரிணாம நோக்கில் அளவிடப்பட்டே வந்துள்ளது. இந்த அளவீட்டில் அறிவியல் முறையும் உண்டு. தொன்மங்களின் ஊகங்களும் உண்டு.
காலத்தின் வகையை நான்காகப் பகுத்து யுகம் என்ற பெயரில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என தொன்மங்கள் வகைப்படுத்துகின்றன. இந்த யுகங்களும் அனுமானமாக காலக் கணக்கில் அடங்குகின்றன. இந்த யுகங்களில் கலியுகமே கொடுமையானதாகக் குறிப்பிடப்படுகிறது. அதற்கு இருண்ட காலத்தின் இறுதி என்று மற்றொரு பெயரும் உண்டு.
இன்றும் கிராம வழக்கில் தாங்க முடியாத கொடுமையைக் குறிப்பிடுவதற்கு, கலி "காலம்டா சாமி!' என்று முதியவர்கள் அங்கலாய்ப்பதைக் கேட்க முடியும். கலி காலத்தில் அப்படியென்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதையும் தொன்மங்கள் பட்டியலிட்டிருக்கின்றன.
மக்களைக் காக்க வேண்டிய அரசு கொடுங்கோன்மையையே பின்பற்றும். திருடர்கள் அரசராவர் அல்லது அரசர்கள் திருடராவர். அவர்களது ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் மலிந்திருக்கும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு வரிகளின் மூலமாக அவர்களுடைய செல்வங்களைப் பறித்துக் கொள்ளும். குடிப்பதற்கும் நீரில்லா நிலை உருவாகும்.
நம்பிக்கையோ அறமோ எங்கும் இருக்காது. பஞ்சத்தின் காரணமாக மக்கள் இடம்பெயர்வதும் அகதிகளாவதும் நிகழும். மக்களிடையே ஒழுக்கத்தின் மீதுள்ள பற்றுக் குறைந்து விடும். பொறாமையும் வஞ்சமும் தலைவிரித்தாடும். சிறு பாவங்கள் மட்டுமின்றி கொலைகூடப் பெரிய குற்றவுணர்ச்சியாகக் கருதப்பட மாட்டாது. காம, பாலியல் குற்றங்கள் பெருகி நிறைந்திருக்கும். ஒழுக்கமின்மையே நிரந்தரமாகும். குழந்தைகளும் பெண்களும் கடுந்துன்பத்துக்கு ஆளாவார்கள். குறிப்பாகத் தாயின் கருவிலேயே குழந்தைகள் கொலை செய்யப்படுவார்கள். இளம்பெண்கள் கற்பினை விற்கவும் இழக்கவும் நேரிடும்.
வாழ்வியல் அனுபவங்களைப் போதிக்கிற குருவுக்கு மதிப்பு இருக்காது. மாறாக சீடர்களின் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடும். கல்வியறிவு இல்லாதவர்களே ஞானிகளாகப் போற்றப்படுவார்கள் என்று இப்படியாக நீள்கிறது அப்பட்டியல்.
பொதுவாகத் தொன்மங்கள் மிகுந்த கற்பனையிலேயே இயற்றப்பட்டவை, ஆதலால் அவற்றை நம்ப முடியாது என்பதுதான் பொதுக் கருத்து. ஆனால் மேற்சுட்டியவை எல்லாம் கண்முன்னே காட்சிகளாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், அத்தனை எளிதாய் இதனைப் புறந்தள்ளிவிட முடியவில்லை. காரணம், மேற்குறித்த சான்றுகள் சிலவே ஆயினும் அந்த அளவீட்டையும் தாண்டிய கொடுமைகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்றின் கண்ணாடியாகிய- இலக்கியங்கள் உணர்த்துகிற- அழகிய வாழ்வியலையே உயர்ந்ததென நம்பிக் கொண்டிருக்கிற இந்திய மக்களுக்குக் கலி காலத்தின் இயல்புகளெல்லாம் பெருங்கொடுமைகளாகத்தான் தெரிகின்றன. ஆனால் இந்தக் கொடுமைகள் இன்றைக்கு மிக இயல்பாக மாறிக் கொண்டிருப்பதுதான் விந்தை. இந்தக் கொடும் பண்புகளே செய்திகளாக அன்றாடம் ஊடகங்களில் விளக்கமாக வாசிக்கப் பெறுகின்றன.
இதில் மிகவும் கொடுமையான கலிகாலத்தின் இயல்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கலி காலத்தில் வாழும் மக்கள் கடுமையும் கொடுமையும் நிறைந்த தரமற்ற மொழிகளைப் பயன்படுத்துவார்கள். ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வார்கள். வசைபாடிக் கொள்வார்கள் என்பதே அது.
இந்த இழிநிலைகளெல்லாம் ஒரு காலத்தில் வந்துவிடக் கூடும் என்று கருதித்தான் அற இலக்கியங்கள் தோன்றி வாழ்வியலைச் செதுக்கி வைத்திருக்கின்றன. தனிமனித, குடும்ப, சமூக, தேசிய ஒழுக்கங்களை அவை முறைப்படுத்துகின்றன. அவற்றில் முதலாகச் சுட்டப் பெறுவது சொல்தான். அதனாலேயே "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை' என மனிதர்களுக்கே உரிய பொதுமை குணமாக வாய்மையை இலக்கியங்கள் முன்னிறுத்தியது. இன்றைக்கு அந்தக் கற்பு நிலை பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதனை ஊடகங்கள் வழியாகத் தம் உள்ளத்து விகாரங்களைக் கொப்புளிக்கிற பெரிய மனிதர்களின் உரைகளிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. ஓ! இதுவும் கலி காலத்தின் இயல்புதான் போலும்.
ஏனைய ஒழுக்கங்களெல்லாம் கலி யுகத்தில் குன்றிவிடும் என்று கருதித்தான் மனிதர்கள் தங்களைக் காத்துக் கொள்ள ஒரேயொரு சொல்லை மந்திரம் போலத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் (யாகாவாராயினும்) "நா காக்க' என்று குறிப்பிடுகிறார்.
இனியவை கூறல் என்று சொல்லின் பெருமையைக் குறிப்பிட்டுப் போற்றிய அவர்தான், "பயனில சொல்லாமை' என்று சொல்லுக்கு நேரும் அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறார். நெல்லோடு இணைந்திருக்கும் பதரினைப் போல, பயனிலாத சொற்களைப் பேசுபவரை மக்களில் பதடி எனவும் சுட்டுகிறார்.
எந்த ஒழுக்கத்தையும் காத்துக் கொள்ள முடியாதவர்கள் திருவள்ளுவரின் அறிவுரைப்படி தங்களது கொடுமையான நாவையேனும் ஒழுக்கமாகக் காத்துக் கொள்ள மாட்டார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.