பிறக்கும்போது உடன் பிறக்கும் ஜாதி, இறப்பிலும் தொடர்வதுதான் மனித வாழ்வின் அவலம். இடுகாடு, சுடுகாடு எங்கும் ஜாதிப் பெயர்கள். பிறப்பு என்பதனை பாலி மொழியில் ஜாதி' என்றே வழங்குவர். இந்த ஜாதி' என்ற சொல்லில் இருந்துதான் ஜாதகம்' என்கிற சொல் பிறந்தது. அது பிறப்புக் குறிப்புகளின் தொகுப்பு.
அருந்தவர்க்கு ஆயினும், அரசர்க்கு ஆயினும், ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்' என்று சக்கரவாளக் கோட்டம் குறித்து தேராவாத பெளத்த நூலாகிய மணிமேகலை' காட்டுகிறது.
சோழர் காலத்தில் சாதி கல் வழக்கம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக, முதலாம் ராஜேந்திர சோழன் செய்யாறு வட்டத்தில் பிரம்ம தேசத்தில் இறந்தபோது, அவனுடைய மனைவியருள் ஒருவரான வீரமாதேவி தீப்பாய்ந்து இறந்தார். அதே போன்று, இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் இறந்த பின், அவனுடைய மனைவி வானவன் மாதேவி உயிர்விட்டுள்ளார். இதனை திருக்கோயிலூர் கல்வெட்டும் ஆண்டிமலை சாசனமும் குறிப்பிடுகின்றன. இறந்த பின், அவர்கள் இருவருக்கும் ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் ஐம்பொன் சிலை நிறுவியுள்ளான்' என்று முனைவர் கோ.ஜெயகுமார் உரைக்கிறார்.
வடக்கிருந்து உயிர்நீத்த வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் ஏராளம். வெண்ணிப் பறந்தலையில், கரிகாற் சோழனுடன் போரிட்டு புறப்புண் ஏற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர்விட்டான். உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழனும், அவனுடைய நண்பர்களான பிசிராந்தையாரும், பொத்தியாரும் அதே போல வடக்கிருந்து உயிர்விட்டனர். வடக்கிருத்தலை சல்லேகனை' செய்தல் என்கிறது சமண சமயம்.
இறந்தவர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுவோர் அன்றி, நெல்லைத் தூவி வணங்கப்படும் கடவுளர் இவ்வூரில் இல்லை' என்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர் (கல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' புறம்: 335). போர்முனையில் பகைவரது யானைகளைக் கொன்று இறந்த வேந்தனுக்கு நம் முன்னோர் காட்டிய மரியாதை இது.
பதஞ்சலிக்குப் பின்னர் தென்னகத்தில் தோன்றிய நாகார்ஜுனர் (கி.பி.150 - கி.பி.250) என்ற பெளத்த குரு, சிறந்த சித்தர்; ரசவாதி; யோகப் பயிற்சி நிபுணர். ஆந்திரத்தில் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன கொண்டா என்ற இடத்தில் பிறந்தவர். நாகார்ஜுனரின் தந்தைவழிப் பாட்டனார் பெயர் தா - தோ. இவர் ஒரு சீனர். நாகார்ஜுனரின் தந்தை குமாராயனர் காஷ்மீரத்துப் பிராமணர். முன்னொரு காலத்தில் காஷ்மீரை விட்டு விலகி, பாமிர் பீடபூமியினைக் கடந்து குஷன் நாட்டு மன்னரின் சகோதரியான ஜீவா என்பவரை மணந்தார்.
கனதேவர்', போதிசத் தேவர்' என்று எல்லாம் அழைக்கப்படும் நாகார்ஜுனருடன் அவரின் சீடரான ஆர்யதேவரும் இணைந்து மஹாயான பெளத்தத்தில் மத்யமகா பிரிவினைத் தொடங்கினர். இத்தனைக்கும் ஆர்யதேவர், சிங்கள இளவரசர்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த ஏஜிங் என்ற சீனத்துறவியின் கருத்துப்படி, மஹாயானம்', ஹீனயானம்' ஆகிய இரு பிரிவுகளும் வினைக் கொள்கையினை ஆதாரமாகக் கொண்டவை. போதிசத்வரை ஏற்று, தர்ம வெண்தாமரைச் சூத்திர'த்தினைப் பின்பற்றுவோர் மஹாயானப் பெளத்தர்கள்.
மகாயான சூத்திரத்தில் முக்கியமானது ப்ரஜ்ஞப்பாரமிதை'. சம்ஸ்கிருத மொழியில் ப்ரஜ்ஞா - பிரக்ஞை, பாரமிதா - முழுமை என்க. இதுவும் நாகார்ஜுனரின் பங்களிப்பு ஆகும். ப்ரஜ்ஞப்பாரமிதை சூத்திரங்களில் கடல் நீருக்கு அடியில் வாழும் நாகங்களை வெல்லும் உத்திகள் உள்ளன. அத்தகைய மனிதர்கள் நாகர்களாம். அதனாலேயே பண்டைய ஹீனயானம் அல்லது சமணத்தினை ஏற்றுக்கொண்ட வடகிழக்கு இந்தியக் குடிகள் (நாகர்கள்) நாகாலாந்தில் வாழ்வதாக அமைந்துவிட்டது. தென்னக ஹீனயானர், சமணச் சார்புடைய தேவர் வாத பெளத்தர்கள். பிராந்திய மொழிகளில் தீவிர அக்கறை கொண்ட இப்பிரிவினரே தேராவாத பிராமணர்கள். மணிமேகலை' தேராவாதக் காப்பியம். கம்பராமாயணம்' சுட்டும் இலங்கையில் வைணவத் தாக்கம் கொண்ட மஹாயானப் பெளத்தமே பிரபலம்.
கோவலன் - கண்ணகி திருமணத்தில் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிட' என்று குறிப்பிடப்பட்டது இந்தத் தேராவாதப் பெளத்தர்களையே. மறைமொழி அந்தணர் அந்நாளில் வேதியர்', வைதிகர்' என்றே அழைக்கப்பெற்றனர்.
இல்லையென்றால், சமணரான இளங்கோ அடிகளின் காப்பியத்தை, பெளத்தப் புலவரான சாத்தனார் உடனிருந்து கேட்டிருப்பாரா? அந்நூலில், வயிற்றில் குத்துப்பட்ட ஒருவனுக்கு புத்தப்பள்ளியில் இடம் தர மறுக்கிற கதையும் இடம்பெறுகிறதே!
பாண்டிய வம்சத்தில் ஒரு புலவரான பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் இயற்றிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (156), ஒரு கிழவன், பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!' என்று பெளத்தப் பிராமணனை அழைத்து மருந்து கேட்கிறான்.
அந்தணர் என்போர் அறவோர். மற்ற எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு, சிகிச்சை செய்த மருத்துவர். சிவந்த புரச மரத்தின் பட்டையை அகற்றி விட்டு, தண்டு மட்டும் ஏந்தி, கமண்டலத்துடன் வருபவர். மரத்தின் தண்டு, பின்னாளில் முனிவர் தம் கை தாங்கும் தண்டு என்கிற வழக்கும் ஆகிவிட்டது.
பெளத்தர்களும் சமணர்களும் இறந்தவர் உடலைப் புதைத்தனர். பின்னாளில் வேதியர்கள் பழங்குடி மக்களோடு ஒத்து பிணங்களை எரித்தனர். சாம்பலை புனித நதிகளில் கரைத்தனர்.
தீ வழிபாடு தேராவாத, திராவிட (தீ -மூல, திரமிள ) மரபு. அதுவே பின்னாளில் சாமவேத கீதங்களுடன் எரியோம்பும் சம்பிரதாயமும் ஆயிற்று. ஈரானியப் பார்சிகளின் பழைய மதக் கோட்பாடும் இதுவே. பாலி மொழியில் தீயினை 'அக்கி' என்பர். சம்ஸ்கிருத மொழியில் அக்னி'; லத்தீனில் இக்னீ'.
இன்று நெருப்பைச் சுட்டும் ஆங்கிலச் சொல் - ஃபயர்'. கிரேக்க மூலச்சொல் பைர'. பிணங்களை எரிக்கும் சிதை விறகு - பைரெ'. அத்துடன் ந' என்ற எதிர்ப்பொருள் கூட்டி வாசியுங்கள், (ந - ரெ - பை', நெருப்பு) என்று வரும். இன்றைக்கும் கனல்நுட்பக் கருவிகளை பைரோடெக்னிக்' என்றே அறிவியலில் குறிக்கிறோம்.
தீ, நெருப்பு, அக்னி ஆகிய மூன்று கலைச்சொற்களும், இந்தியப் பழங்குடி-ஆதி ஈரானியம் - பழஞ்சீனம் ஆகியவற்றின் கலப்புக்கான மொழியியல் ஆதாரங்கள்.
ஆதிகுடிகள் இறந்தோரைத் தீ மூட்டி எரிப்பது வழக்கம். இறந்தோர் நெருப்புடன் வானில் கலந்து நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர் என்றும் நம்பினர். அவர்களையே வான் உறையும் தெய்வம்' என்கிறார் வள்ளுவர். சிவ' என்பது சைவ என்று ஆவதைப் போல, தீ' - தைவம்' - தெய்வம்' ஆகிறது. கிருத்திகையை 'அக்னிர் தைவதம்' என்றே பிற்காலத்திய வடமொழி வேதங்களும் குறிக்கும். இரவுதோறும் அந்த நட்சத்திரங்களைக் கண்டு வணங்கி வந்த முன்னோர், அவற்றின் தோற்ற நகர்வுகளை சூரிய சந்திரர்களோடு ஒப்பிட்டு நோக்கினர். வானவியல் பதிவுகள் இவ்விதமே ஆரம்பமாயின.
பொதுவாக, இறந்தவர் உடலைப் பாதுகாப்பதற்கு அந்நாளில் ஃபார்மாலின் (40% பார்மால்டிஹைடு கரைசல்), மெத்தனால் போன்ற வேதிமத் திரவங்கள் கிடையாதே.
அதனால் இயற்கையில் கிடைக்கும் மலர், மஞ்சள், பால், தயிர், குங்குமம் முதலிய ஏதேனும் ஒரு சுகந்தப் பொருளினால் குளிப்பாட்டுவர்.
வழிநெடுக, ஊரார்க்கு அறிவிப்பதற்காகத் தாரை, தப்பட்டை முழங்கும். ஜனன- மரணக் கணக்கு அலுவலகத்திற்குத் தெரிவிக்கவே சங்கு ஊதுவர். உறவினர் கையில் எடுத்துச் செல்லும் கனப்புச் சட்டி என்பது கிராமத்துக்கு வெளியே சிதைமூட்ட உதவும்.
சமணர் பெளத்தர் ஆகிய கீழை தேச பழஞ்சீன மக்கள் சடலத்தினை எரிப்பது இல்லை. மேற்கத்திய நாடுகளிலும் கல்லறையில் சடலம் அழுகாமல், நெய்பூசி, லினன் துணியில் பொதிந்து இருட்டுக் கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர்.
ஒரிசிஸ்' எனும் பழங்கடவுள் மாதிரி, பொதிந்து வைக்கப்பட்ட சடலத்தின் கண்கள், உதடுகளில் பெருங்கரண்டி ஒன்றினால் தொட்டால் பிணம் உயிர்த்து எழும் என்பது எகிப்தியர் நம்பிக்கை. பெருங்கரண்டி' என்பது பரிபாடல் (5:37)சுட்டும் ஏழ் உறை முனிவர் கூட்டம்'. ஏழு விண்மீன்கள் அடங்கிய சப்தரிஷி மண்டலம்'.
பதினெண் சித்தர்களில் போகர், சீன தேசத்தவர். விட்டமுடன் யானுமல்லோ சீன தேசம் விடுபட்டுப் போயிருந்து ...' என்கிறார்(போகர் ஏழாயிரம்) . போகநாதர் என்றும் அறியப்படும் சமணர், நம் திருமூலரின் சமகாலத்தவர். யோகா, வில் வித்தை, மூலிகை மருத்துவம் போன்ற பல துறைநூல்கள் இயற்றியவர். நவ பாஷாணத்தால் பழனி மலைக்கோவில் முருக விக்கிரம் சமைத்தவர். இன்றும் பீடத்தின் கீழ் நீருக்குள் சமாதி நிலையில் இருப்பதாக ஐதீகம்.
ஒருவர் இறந்த பின் அவர்', அது 'வாகி விடுகிறார். சடலத்தைப் புதைப்பதா, எரிப்பதா என்றும் சிலர் தீபாவளிப் பட்டி
மன்றம் நடத்தலாம்.
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.