'மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள். அவர்களே முடிவு எடுக்கிறார்கள். தங்களைத் தாங்களே வழி நடத்துகிறார்கள்'' என்ற அடிப்படைத் தத்துவம் சரியே! ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே. இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில், மக்களை வழிநடத்துபவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள்தான். நாள்தோறும் எழும் பிரச்னைகளில் முடிவு எடுப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதால், அவரே தேசத்தின் காப்பாளராக, எஜமானராகச் செயல்படுகிறார். இதுதான் நிதர்சனமான உண்மை.
அதனால்தான் தலைமைக்கான தகுதிகள் பற்றி தர்க்கங்களும், விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அதன் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஒரு முக்கிய வினாவை எழுப்பினார். ''அரசின் சட்டங்களை, திட்டங்களை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு ஓர் அடிப்படைக் கல்வித் தகுதியை நாம் நிர்ணயம் செய்கிறோம். ஆனால், சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓர் அடிப்படைக் கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டாமா?'' என்று வினவினார்.
''வாக்களிக்கும் உரிமையுள்ள எவரும் தேர்தல் களத்தில் நிற்கலாம். வெற்றி பெற்றால் ஆட்சி நடத்தும் உரிமையைப் பெறலாம். அப்படி இருக்கும்போது, கல்வித் தகுதியை ஏற்படுத்துவது ஒரு தடைக்கல்லே. அது வளரும் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல'' என்கிற தீர்க்கமான முடிவை அரசியல் நிர்ணய சபை எடுத்தது.
கல்வித் தகுதியை அடிப்படைக் காரணியாக வைத்திருந்தால், காமராஜர் போன்றவர்களின் ஆளுமையை தேசம் கண்டிருக்க முடியாது. மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்றவர்களின் மேலாண்மைத் திறனையும் தமிழகம் இழந்திருக்கும்.
அமெரிக்க அதிபர் பதவியை எவரும் இருமுறைக்கு மேல் வகிக்க முடியாது. அத்தகைய உச்சவரம்பை நாமும் கடைப்பிடிக்கலாமா என்ற கருத்தும் எழுந்தது. அது அதிபர் ஆட்சி முறைக்குத்தான் பொருந்தும். நாடாளுமன்ற ஆட்சிமுறைக்குப் பொருந்தாது. மேலும் வளரும் புதிய ஜனநாயக நாட்டிற்கு நீடித்த தலைமை நல்லது. அத்துடன் அனுபவம், அறிவாற்றல், நிதானம் போன்ற அருங்குணங்கள் அனுபவத்தால் வளரும். ஆகவே வயது வரம்பும் கூடாது, பதிவிக் காலஉச்சவரம்பும் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவால்தான் நேருஜியின் தலைமை தேசத்திற்கு 17 ஆண்டு காலம் நீடித்தது. இந்திரா காந்தியின் தலைமையும் அதே அளவு தொடர்ந்தது. நீண்ட காலம் பதவியில் இருந்ததால் நினைத்த திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.
தமிழகத்தில் காமராஜ், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியவர்களின் தொடர்ந்த ஆளுமையால்தான் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கவும், அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றவும் முடிந்தது.
இது ஒரு நன்மையே! ஆனால் ஒருவர் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்வதால் 'வாரிசு அரசியல்' உருவாகும் வாய்ப்பும் வந்துவிடுகிறது. இது எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுவிடும் விபத்து.
வலிமை, உறுதி, கருத்தொற்றுமையை உருவாக்கும் குணம் ஆகிய பண்புகள் ஒரு முன்மாதிரித் தலைவனுக்கு வேண்டிய முக்கிய தகுதிகள் எனக் கொள்ளலாம்.
உடல் நலம் என்பதைக் கடந்து, 'உடல் வலிமை'க்கு அமெரிக்கர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஜிம்மி கார்ட்டர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது சாலையில் உடற்பயிற்சிக்காக ஓடுவதை விளம்பரமாக வெளியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரொனால்டு ரீகன், 70 வயது ஆனவர் என்றாலும், ஓடும் குதிரையில் ஒய்யாரமாகச் சவாரி செய்வதை படம் பிடித்துக் காட்டினார். பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் என்ற பெயர் கொண்ட தந்தை, மகன் ஆகியோரும் காலை வேளையில் வாஷிங்டனில் ஓட்டப் பயிற்சி செல்வதை விளம்பரம் செய்தார்கள். பராக் ஒபாமா தானொரு சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் என்பதை விளம்பரப்படுத்தினார்.
1966-இல் சீன அதிபர் மாசே துங்கின் வயது 73. 'நோய்ப் படுக்கையில் மா சே துங்' என்ற செய்தி பரவியது. அதனை மறுக்க 16.7.1966 அன்று சீறிப் பாயும் யாங் நதியில் அவர் நீந்துவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. உலகம் அதனை உற்றுப் பார்த்து உண்மையைப் புரிந்து கொண்டது!
இவை ஒருபுறம் இருந்தாலும், கால் ஊனமான நிலையில் சக்கர நாற்காலியில் நகர்ந்துகொண்டே அமெரிக்காவை ஆண்டவர், உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றவர்தான் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்.
நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே தன் பெயருக்குள்ள மந்திர சக்தியால் மக்களைக் கவர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். உடல் நலிவுற்ற நிலையிலும் அதனை வெளிக்காட்டாமல் மக்களைச் சந்தித்தவர் ஜெயலலிதா. தள்ளாத வயதிலும் தளர்ந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து மக்களை ஈர்த்தவர் கருணாநிதி. தனது 73-ஆவது வயதிலும் 1962 தேர்தலை தேசம் முழுவதும் சுற்றி மக்களைக் கவர்ந்தவர் நேருஜி.
அகில இந்திய காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 47. இவ்வளவு இளையவருக்கு இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பா? எனக்
கேட்போர் உண்டு. இவரைவிட மூத்தவர்கள், முதிர்ந்த தலைவர்கள் இல்லையா? என்ற வினாவும் எழுகிறது.
ஆனால் காங்கிரஸின் வரலாற்றை ஆய்வு செய்தால், ஓர் உண்மை புலப்படும்.
அபுல்கலாம் ஆசாத் 1923-இல் காங்கிரஸ் தலைவரானபோது அவருக்கு வயது 35; கோபாலகிருஷ்ண கோகலே தலைவரானபோது (1905) அவரது வயது 39; நேருஜி தலைவரானபோது அவரது வயது 40; ராஜீவ் காந்தி தலைவரானபோது அவரது வயது 40; சுபாஷ் சந்திர போஸ் தலைவராகும்போது 41; இந்திரா காந்தி தலைவரானபோது அவரது வயது 42; கவிக்குயில் சரோஜினி தனது 45-ஆவது வயதில் காங்கிரஸ் தலைவரானார்.
மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு ஏற்றபோது அவரது வயது 48.
சோனியா காந்தி பொறுப்பேற்கும்போது வயது 52; இன்று பொறுப்பேற்கும் ராகுல் காந்தியின் வயது 47. ஆகவே வயதில் இளையவர் என்பது தகுதிக் குறைவு அல்ல. அத்தகுதியை ராகுல் காந்தி எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதுதான் கேள்வி.
அதற்காக முதியவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்களும் அல்ல. முதிர்ந்த அரசியல்வாதி நரசிம்மராவ், பேச்சைக் குறைத்து செயலை முன்னிறுத்திய பொருளாதார மேதை மன்மோகன்சிங், இருவரும் முதியவர்களே. அவர்கள் கூட்டணி ஆட்சியைத் திறம்பட நடத்தியவர்கள் மட்டுமல்ல, புதிய பொருளாதாரக் கொள்கையை ஒருவர் அறிமுகம் செய்ய, அடுத்தவர் திறம்படச் செயல்படுத்தியவர்.
வயது முதிர்ந்த வாஜ்பாய் தனது நாவன்மையால் மக்களையும் கவர்ந்தார். நடு நிலையாளர் என்ற நல்ல பெயரும் எடுத்தார்.
'பண்டித ஜவாஹர்லால் தன் பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்தில் பயணம் மேற்கொண்ட நாட்கள் 15, பேசிய பொதுக்கூட்டங்கள் சுமார் 15 முதல் 20 ஆகும். பொதுக்கூட்ட உரை ஒரு மணி நேரம் நீடிக்குமாம். மாணவர்கள், இளைஞர்கள், இயக்கத் தொண்டர்கள் கூட்டங்கள் சுமார் 40 நடக்குமாம். பேசுகின்ற நேரம் சுமார் 20 நிமிடங்கள் இருக்குமாம். கடந்த 6 ஆண்டு காலத்தில் அவரது 3000 பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். தேர்தல் காலமென்றால் ஒரே நாளில் 20 கூட்டங்களில் பேசுவார். அவரது பேச்சில் புதிய சிந்தனை, புதிய கருத்துக்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் புதிய பாடங்களும் அவை புத்துணர்ச்சி தருவதாகவும் அமையும்' என்று பிரதமர் நேருவின் பாதுகாப்பு அதிகாரி கே.எப்.ருஸ்தம்ஜி தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
வேகமாக வளர்ந்துவரும் இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு கட்சித் தலைவரின் கடமை கடினமானது. சுமை அதிகமானது. ஆளும் கட்சித் தலைவர் 12 மணி நேரம் உழைத்தால், எதிர்க்கட்சித் தலைவர் 18 மணி நேரம் பாடுபட வேண்டும். ஆகவே இளைஞர் ஒருவர் தலைமைப் பொறுப்பு ஏற்பது சரியே! 132 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட காங்கிரசுக்கு இளம் தலைமை இன்றும் வாய்த்திருக்கிறது.
ஆனால் தலைமை மாற்றம் மட்டுமே மக்கள் மனதை மாற்ற முடியாது. புதிய சித்தாந்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும். புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். மாற்று வழி ஒன்றை மக்களுக்குக் காட்ட வேண்டும். அதனை மக்கள் ஏற்கும் வகையில் சொல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.