தேசிய அளவிலும் மாநில அளவிலும் கடந்த சில நாள்களாக காட்சி ஊடகங்கள் காட்டிய பரபரப்புகளால் மக்கள் மனநோயாளிகளாக மாறும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், அத்தனை களேபரங்களுக்கு நடுவில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் கவனிக்கத் தவறியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையும், புத்தாண்டும் கொண்டாடப்பட்டபோது, சத்தமே இல்லாமல் சீனப் படைகள் மீண்டும் இந்திய எல்லைக்குள் முகாமிட்டன. இதனால், இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, எல்லையில் கடும் பதற்றம் நிலவுவதாகத் தகவல் வெளியானது. தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கும் இந்த விவகாரம் நாட்டில் பெரும்பாலானோரின் கவனத்துக்கே கொண்டு செல்லப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் கட்டுமான வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவின.
இதுதொடர்பாக அந்தப் பகுதி கிராம மக்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்திய ராணுவத்தினர் சீனப் படைகளை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சீன புல்டோஸர்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிகழ்வுகளால் எல்லையில் மீண்டும் போர்ச் சூழல் உருவானது.
டோக்கா லாம் பிரச்னையில் தீர்வு எட்டப்பட்ட பிறகு இந்திய - சீன உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதையெல்லாம் தாண்டி எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளுக்கும் இடையே 20 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 22-ஆம் தேதி சீன எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி பிரதமர் மோடியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார். எல்லையில் சுமுகமான சூழல் நிலவுவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால், அதற்கு அடுத்த ஓரிரு நாள்களிலேயே இத்தகைய அத்துமீறலை சீனா அரங்கேற்றியிருக்கிறது.
முகத்துக்கு நேரே நட்பு பாராட்டுவதும், முதுகுக்குப் பின்னே குழி பறிப்பதும் சீனாவுக்குப் புதிதல்ல. அந்நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே, தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள சீனா எத்தகைய நிலைக்கும் செல்லும் என்பதை உணரலாம்.
திபெத், தென் சீனக் கடலின் குட்டித் தீவுகள் பகுதிகளை ஆக்கிரமித்த சீன ஆட்சியாளர்களின் மனதில் மண்ணாசை மறைந்திருக்கும் என எண்ணுவதே தவறுதான். அதன் விளைவாகவே இந்திய எல்லைக்குள் தடம் பதிக்கத் தற்போது அந்நாடு முயன்று வருகிறது.
சர்வதேசக் கடல் பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் சீனா முனைப்புடன் செயல்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இலங்கையிலும், பாகிஸ்தானிலும் துறைமுகங்களை அமைக்க அந்நாடு பெரும் முதலீடுகளைச் செய்து வருவது அதில் முதன்மையானது. இதன் மூலம் இந்தியாவின் கடல் வழி வர்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தலாம் என்பது சீனாவின் திட்டம்.
இந்தத் தருணத்தில், ஊடகங்களால் கவனிக்கப்படாத இன்னொரு முக்கிய தகவலையும் குறிப்பிட வேண்டியுள்ளது. கடந்த வாரம் ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சீன நாளிதழில் ஒரு செய்தி வெளியானது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் நீருக்கு அடியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை சீனா தொடங்கியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லை தாண்டி வந்து சர்வதேசக் கடலில் நங்கூரமிட்டதுடன், அந்த நீரின் தன்மையை சோதிக்கும் அளவுக்கு சீனாவின் அத்துமீறல் அதிகரித்திருப்பதை அந்தச் செய்தியின் மூலம் உணர முடிகிறது.
இத்தகைய செயல்பாடுகளின் வாயிலாக எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை எளிதில் வீழ்த்த முடியும் என்பதே அந்நாட்டின் எண்ணம் என்று கூறப்படுகிறது.
கடல்வெளியில் அமெரிக்காவுக்கு சவாலாக விளங்க வேண்டும் என்பது சீனாவின் தலையாய குறிக்கோள்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, அதன் கடற்படையில் தற்போது 199 போர்க்கப்பல்கள் உள்ளன. அதை முறியடிக்கும்விதமாக 2030-ஆம் ஆண்டுக்குள் 260 கப்பல்களை கடலில் அணிவகுக்க சீனா முடிவு செய்துள்ளது.
இவ்வாறாக, உலகின் முதன்மையான வல்லாதிக்க நாடாக உருவாக சர்வதேச விதிகளுக்குப் புறம்பான பல்வேறு நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகிறது. இவை அனைத்தையும் அரங்கேற்றுபவர் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின் பிங். தனது நடவடிக்கைகள் எல்லாம் இந்தியாவுக்கு எதிராக உள்ளதை அறிந்தே அவற்றை அவர் செயல்படுத்துகிறார்.
உலக வரலாற்றில் மா சே துங் போல நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் செயல்படுகிறார் என்பது மட்டும் உறுதியாகிறது. இதுவே அனுபவம் மிக்க சர்வதேசப் பார்வையாளர்களின் கருத்தாகவும் உள்ளது.
இந்த நேரத்தில் ஜீ ஜின்பிங் மறந்திருக்க வாய்ப்புள்ள மா சே துங்கின் ஒரு கூற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது:
'யுத்தகளத்துக்கு ஆயுதங்கள் தேவைதான்; ஆனால், அவை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது; அதைத் தாண்டி மக்கள் சக்தி என்ற ஒன்று உள்ளது' என்பதுதான் அது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.