நடுப்பக்கக் கட்டுரைகள்

உயர்கல்வி ஆணையம் - மாற்றமும் நோக்கமும்

தேவைக்கேற்ப உயர்கல்வியும் மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. மாற்றம் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாக உரு மாறுவது மட்டுமில்லை.

முனைவர் ம. இராசேந்திரன்

தேவைக்கேற்ப உயர்கல்வியும் மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. மாற்றம் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றாக உரு மாறுவது மட்டுமில்லை. அது, மொட்டு மலராவதைப் போன்ற வளர்ச்சியாக இருக்க வேண்டும். சுதந்திர வாழ்க்கைக்கு வழியமைப்பதாக இருக்க வேண்டும். ஆகவே மாற்றங்களுக்கு நோக்கங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். அவ்வப்போது நிலவும் அரசியல் சமுதாய நிலைகளுக்கு ஏற்ப நோக்கங்களும் வேறுபடும். அவ்வப்போது சொல்லப்படும் நோக்கங்களும் உணரப்படும் நோக்கங்களும் கூட வேறுபடும்.
நாளந்தா, தட்சசீலம் என்று இந்திய வரலாற்றில் உயர்கல்விக்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக, உலக உயர்கல்வி வரலாற்றில், வெளிநாட்டு மாணவர்களும் வந்து தங்கிக் கற்றுச் சென்றிருக்கிற வரலாறும் இந்தியாவுக்கு உண்டு.
இந்தியா விடுதலை அடைந்த பின், இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கும் உடனடி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை வேண்டி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகக் கல்வி வாரியம் 1948 -இல் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி 28.12.1953-இல் அப்போதைய கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத்தால் தொடங்கிவைக்கப்பட்ட பல்கலைக்கழக நல்கை ஆணையம், முறைப்படி 1956-இல் தான் சட்டம் பெற்றிருக்கிறது. அவ்வப்போது சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டு இப்போதுவரை நடைமுறையில் உள்ளதுதான் இந்தப் பல்கலைக்கழக நல்கை ஆணையம். 
இது அனைவருக்கும் தரமான உயர்கல்வி என்பதை இலக்குரையாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் பயனடையும் வகையில், புணே, ஐதராபாத், கொல்கத்தா, போபால், கெளகாத்தி, பெங்களூரு என்று ஆறு இடங்களில் தன் செயற்பாட்டுக் களங்களை அமைத்துக்கொண்டுள்ளது.
அப்படியான ஆணையத்தைக் (UGC) கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் (Higher Education Commission of India - HEI) என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர இருக்கிறது.
ஒப்பீட்டளவில் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக நல்கை ஆணையத்துக்கும் சட்டம் கொண்டுவரக் கருதும் உயர்கல்வி ஆணையத்துக்குமான வேறுபாடுகள் வருமாறு:
நோக்கங்களில் மாற்றங்கள்: பல்கலைக்கழக நல்கைக் குழு பகுதிவாரியான கல்வியையும் ஆராய்ச்சியையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் ஆறு கிளை அமைப்புகளோடு செயற்பட்டு வருகிறது. ஆனால், உயர்கல்வி ஆணையம் இந்தியா முழுவதுக்கும் ஒரே தரத்தில் கல்வியையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்தவும் நிலைப்படுத்தவும் கண்காணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அமைப்பு முறையில் மாற்றங்கள்: புதிய அமைப்பிலும் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உறுப்பினர்கள் 10 பேருக்குப் பதிலாகப் 12 பேர் இருப்பார்கள். மத்திய அரசு அலுவலர்கள் இரண்டு பேருக்குப் பதிலாக மூன்று பேர் இருப்பார்கள். உறுப்பினர்களில் ஒருவர் தொழிலதிபராக இருப்பார். இப்போதுள்ள அமைப்பில் 50 விழுக்காட்டுக்குக் குறையாமல் கல்வியாளர்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 
புதிய அமைப்பில் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. 12 உறுப்பினர்களில் பணியில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இருவரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருவருமாக நான்கு பேர் மட்டுமே அதாவது 25 விழுக்காடு அளவே கல்வியாளர்கள் இருப்பார்கள். அவர்களும் பணியில் உள்ளவர்களாக இருக்க வேண்டுமாம். அப்போதுதான் அரசு கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும். இப்போதிருக்கும் ஆணையத்தில் 50% க்குக் குறையாமல் கல்வியாளர்கள் இருக்க வேண்டும் என்ற விதி புதிய ஆணையத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.
தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களைக் கல்வியாளர்கள் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இனி மத்திய அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தேடல் மற்றும் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்குப் பட்டியல் அனுப்பும். மத்திய அரசு நியமனம் செய்யும். வயது வரம்பு 65-க்குப் பதிலாக 70-ஆக இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர் அல்லாதவர்தான் தலைமைப் பொறுப்புக்கு வர இயலும் என்ற நிலை மாறியுள்ளதோடு 10 ஆண்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியப் பணி அனுபவம் மட்டும் தகுதியாக இருப்பதும் மாற்றப்பட்டு, பணி அனுபவம் அல்லது சிறந்த கல்வியாளர் என்று தகுதி மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. 
இதனால் பேராசிரியராக இல்லாதவர்களும் கல்வியாளர் பெயரில் தலைவர், துணைத்தலைவர் ஆகலாம். ஆட்சியில் உள்ளவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரமுறையில் மாற்றங்கள்: பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் கல்வியாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் கைகளில் நேரடியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. வரப்போகிற புதிய ஆணையம் எந்த வித நிதி அதிகாரமும் இல்லாமல் அரசை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலையில் வைக்கப்படும்.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தையும் கல்வியின் நிலையையும் மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் மதிப்பிடுவதும் வரப்போகிற உயர் கல்வி ஆணையத்தின் பணிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தரம் குறைந்திருப்பதாக ஆணையம் கருதும் நிலையில், மாணவர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து நிறுவனத்தை மூடும் அதிகாரம் வரப்போகிற ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் என்பதை இந்த ஆணையமே இனி வரையறை செய்யும். புதிதாகப் பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் மூடவுமான விதிமுறைகளை இது வரையறுக்கும். துணைவேந்தர்கள், இணைவேந்தர்கள் , இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோரின் தகுதிகளை இதுவே வரையறை செய்யும். கல்விக்கட்டணங்களையும் வரையறை செய்யும்; கண்காணிக்கும். ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அளிக்கும். இந்த உயர்கல்வி ஆணையச் சட்டம் செயற்பாட்டுக்கு வந்த பின் இதன் அங்கீகார அனுமதியின்றி புதிதாக எந்த உயர்கல்வி நிறுவனமும் யாருக்கும் பட்டமோ பட்டயமோ வழங்க முடியாது.
ஏற்கெனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களும், இந்தச் சட்டம் அறிவிக்கையாக வந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஆணையத்தின் அங்கீகார அனுமதியைப் பெற்றாக வேண்டும். இப்படிப் புதிய ஆணையத்தில் அங்கீகார அனுமதி பெறத் தவறுகிற உயர்கல்வி நிறுவங்களின் முந்தைய அனுமதியும் திரும்பப் பெறப்படும்.
மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்குப் போனது. பொதுப்பட்டியல் என்பதே மத்திய அரசின் பட்டியல்தான். ஏனெனில், பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு பொருள் பற்றி மாநில அரசும் மத்திய அரசும் சட்டம் இயற்றுகிற நிலை வருமானால், அப்போது மத்திய அரசு சொல்வதுதான் சட்டமாகும். ஆனாலும் மாநில அரசு சட்டமியற்ற வாய்ப்பிருக்கும். முனைவர் வசந்திதேவி சொல்வதைப்போல பொதுப்பட்டியலில் இருந்து உயர்கல்வி மத்திய அரசுப் பட்டியலுக்குத் தந்திரமாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.
உயர்கல்வி ஆணைய அங்கீகாரம் இல்லாமல் இனி மாநில அரசு புதிதாகப் பல்கலைக்கழகமோ உயர்கல்வி நிறுவனங்களோ தொடங்க முடியாது. முன்பே தொடங்கப்பட்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களும் மூன்றாண்டுகளுக்குப் பின் தொடர்ந்து செயற்பட உயர்கல்வி ஆணையத்தின் அனுமதி வேண்டும்.
உயர்கல்வி ஆணையம் அமைப்பு நிலையிலும் நிதி முதலான அதிகார நிலையிலும் மத்திய அரசு அலுவலர்களுக்கு அடங்கி நடக்க வேண்டிய ஆணையமாக இருப்பதால் ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே இந்திய உயர்கல்வி இனி ஆட வேண்டியிருக்கும்.
கல்விச் சுதந்திரம்: கல்வி என்பது சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டுவது. சுதந்திரம் என்பது சமுதாய மேம்பாட்டுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கற்றுத் தருவது. அதிகாரம் உள்ளவர்களின் விருப்பத்துக்கு அடங்கி நடக்க மறுக்கக் கற்றுத் தருவது. அடுத்தடுத்தத் தலைமுறைகளும் வாழ்வதற்கான விழுமியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் கைமாற்றிக் கொடுப்பது. சாதி, மத, அரசியல், நாடு எனும் எல்லைகளைக் கடந்து மானுட நேயம் வளர்க்க வேண்டிய கல்வி, சுதந்திரத்திற்கான தடைகளைக் கடந்து வந்த வரலாறு புனிதமானது. 
பெரும்பான்மைக் கருத்து, அரசியலில் வாக்கு வங்கிக் கணக்குக்குத் தேவைப்படலாம். ஆனால் வாழும் தலைமுறையின் எழுச்சிக்கும் வருங்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்குமான கல்விக்கு அது பொருந்தாது. சமுதாயம் தந்த கடந்த கால அனுபவம் மற்றும் அறிவின் தொப்புள் கொடியிலிருந்து அடுத்தடுத்தத் தலைமுறைக்கான விழுமியங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தனிப்பட்ட சான்றோர்களே வழங்கி சாதனைப் படைத்திருக்கிறார்கள்; வாழும் காலப் பெரும்பான்மை எந்தக் காலத்திலும் வருங்காலத்திற்கு அப்படி வழங்கியதாகத் தெரியவில்லை.
கல்வியாளர்கள் கைவசம் இருக்க வேண்டிய கல்வியை அதிகாரிகளின் கைகளுக்கு மாற்றி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள் வரலாற்றில் நிலைபெற்றது இல்லை.
இதுவரை இருந்ததைப் போல இல்லாமல், நவீன தொழில்நுட்பம் புதிய புதிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கும் சமுதாயத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஒரு சிக்கலுக்கு ஒரே தீர்வுதான் என்பது மாறி, தாய்லாந்து குகையில் சிக்கிய குழந்தைகளை மீட்பது மாதிரி ஒரே நேரத்தில் பல்வேறு தீர்வு வழிகளையும் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. 
ஒரு சிக்கலுக்குப் பல்வேறு தீர்வுகளைக் கண்டறியும் திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டிய கல்வியை, ஒற்றைச் சிந்தனைக்கானதாக மாற்றுவது, மாற்றுச் சிந்தனை மரபின் ஊற்றுக்கண்களை அடைப்பதாகும். அது சிந்திக்கும் உரிமையைச் சிறையில் அடைப்பதில் போய் முடியக்கூடும்.

கட்டுரையாளர்:
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT