நடுப்பக்கக் கட்டுரைகள்

கல்விக்கும் அறமே துணை!

உலகத் தரமான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டிலும் (2018) முதல் இருநூறு இடங்களில் இந்திய பல்கலைக்கழகம், உயர்கல்வி நிறுவனம் ஒன்று கூட இடம் பெறவில்லை.

பாரதிபாலன்

உலகத் தரமான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டிலும் (2018) முதல் இருநூறு இடங்களில் இந்திய பல்கலைக்கழகம், உயர்கல்வி நிறுவனம் ஒன்று கூட இடம் பெறவில்லை. இந்தத் தர ஆய்வுக்கு 77 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் உட்படுத்தப்பட்டன. கற்பித்தல், ஆய்வு, மேற்கோள்களில் இடம் பெறுதல், உலக அளவிலான வெளிப்பாடு, தொழில் துறையின் வாயிலாகப் பெறும் வருவாய் ஆகியவற்றை அளவீடுகளாக வைத்து, தன்னாட்சியான வல்லுநர் குழுவை கொண்டு, 'THE TIMES HIGHER EDUCATION WORLD UNIVERSITY'  என்ற அமைப்பால், மதிப்பீடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் மாணாக்கர்களின் எண்ணிக்கை, ஆசிரியர் - மாணாக்கர் விகிதம், வெளிநாட்டு மாணாக்கர்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டின் உலகத் தர பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இடத்தினை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், இரண்டாவது இடத்தினை கேம்பிரிஜ் பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தினை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. ஹாவர்டு பல்கலைக்கழகம் ஆறாவது இடத்திலும், சிகாகோ பல்கலைக்கழகம் ஒன்பதாவது இடத்திலும், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் பத்தாவது இடத்திலும் உள்ளன. இப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மிகத் தொன்மையானவையாகும்.
இந்தத் தர வரிசைப் பட்டியலில் 27 நாடுகள், முதல் 200 இடங்களில் குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகமாவது இடம்பெறும் நிலையைப் பெற்றுள்ளன.
நமது இந்தியப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இந்தத் தரவரிசை பட்டியலில் 251 முதல் 300 வரையிலான இடங்களில் தான் உள்ளன. இதில் எட்டுக்கும் மேற்பட்ட இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐ.ஐ.டி.), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இவற்றோடு எஸ்.ஆர்.எம், சாஸ்த்ரா, சத்தியபாமா போன்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும்.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தர வரிசை பட்டியலில் இடம் பெறும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டதுதான் தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பு' (National Institutional Ranking Frame work – NIRF). இந்த அமைப்பு ஆண்டுதோறும் உயர்கல்வி நிறுவனங்களை, கற்றல் - கற்பித்தல், ஆராய்ச்சி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணாக்கர்களின் திறன் வெளிப்பாடு என்ற அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பிட்டு, தலைசிறந்த நூறு உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2018-இல் வெளியிடப்பட்ட தேசிய தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்த (Overall) பிரிவில், முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மத்திய அரசு நிறுவனங்கள் 2, மாநில அரசு நிறுவனங்கள் 8, அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் 3, தனியார் நிறுவனங்கள் 9. இதில் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 2-ஆவது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்திலும், பாரதியார் பல்கலைக்கழகம் 20-ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.
பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை, தமிழ்நாட்டின் 21 பல்கலைக்கழகங்கள் தேசிய அளவில் முதல் நூறு இடங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றும், மாநில பல்கலைக்கழகங்கள் பத்தும், தனியார் பல்கலைக்கழகங்கள் பத்தும் இடம் பெற்றுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழகம் 4-ஆவது இடத்திலும், கோவை அமிர்தா விஷ்வ வித்யா பீடம் 8-ஆவது இடத்திலும், சென்னைப் பல்கலைக்கழகம் 18-ஆவது இடத்திலும் உள்ளன.
இதேபோன்று பொறியியல் கல்விப் பிரிவில், தேசிய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 உயர்கல்வி நிறுவனங்கள் முதல் நூறு இடங்களுக்குள் வந்துள்ளன. இவற்றில் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு, அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் 3, தனியார் நிறுவனங்கள் 12 இடம் பெற்றுள்ளன. இவற்றில் சென்னை இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (IIT)  முதலிடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 11-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. வேலூர் வி.ஐ.டிக்கு 16 ஆவது இடமும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரிக்கு 29-ஆவது இடமும், எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு 36-ஆவது இடமும், மதுரை தியாகராசர் கல்லூரிக்கு 39-ஆவது இடமும் கிடைத்துள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகள் பிரிவில் தேசிய தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகள் 5, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 26, தனியார் கல்லூரிகள் 7 இடம் பெற்றுள்ளன. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 
3-ஆவது இடத்திலும், சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி 5-ஆவது இடத்திலும், லயோலா கல்லூரி 6-ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் தற்போது 864 பல்கலைக்கழகங்கள், 40,026 கல்லூரிகள், 11,669 தனிக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தேசிய கல்வி நிறுவனங்களில் தரவரிசைக் கட்டமைப்பின் பட்டியலில் இடம் பெற்றிருந்த முதல் 50 கல்வி நிறுவனங்களில் இருந்து 20 நிறுவனங்களை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்து, ஒவ்வொன்றுக்கும்ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி அவற்றை மேம்பட்ட கல்வி நிறுவனங்களாக (Institutions of Eminence) தரம் உயர்த்தி உலகத்தர வரிசையில் இடம் பெறச் செய்யும் வகையில் திட்டம் வகுத்துள்ளது. தமிழ்நாட்டில், சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இதற்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளன.
மற்றொரு சீரிய முயற்சியாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியத் தர மதிப்பீட்டு நிர்ணயக் குழுமத்தின் (National Assessment and Acredition Council - NAAC) வாயிலாக மதிப்பிட்டு வழங்கப் பெறுகின்ற தர புள்ளிகளின் அடிப்படையில். இந்தியப் பல்கலைக்கழகங்களை வகைப்படுத்தி, தன்னாட்சி நிலை வழங்கி உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் முதல் தகுதி நிலை (Categorty - I Status)  பெற்று தன்னாட்சி நிறுவனங்களாகின்றன. இதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் - (UGC)  வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தங்களுக்கான நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திக் கொள்ளலாம்.
நமது பல்கலைக்கழகங்கள், உலகத் தர வரிசையில் இடம் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. அதே வேளையில், நாம் மரபு வழியாகப் பெற்றுள்ள நமது கல்வியின் அடிப்படை நோக்கங்களையும் பேண வேண்டும். மனிதர்களுக்குள் புதைந்து கிடக்கும் முழுமையை வெளிப்படுத்துவதும், அதை முறையாக வெளிப்படுத்தும் ஆற்றலையும் பெற்றுத் தன்னம்பிக்கையோடு வாழ்வதும், பிறர் வாழ்வதற்கு உதவுவதுமே நமது கல்வியின் நோக்கமாக உள்ளது.
தொழில்நுட்பத் திறன் என்பது வேறு, புதுமை படைக்கும் ஆற்றல் என்பது வேறு. பல்கலைக்கழகங்கள் பொருள் உற்பத்தி, தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களை உருவாக்குவதோடு மட்டும் நின்று விடக்கூடாது. நமது பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்தைப் பேணுவதுடன், நமது அறக்கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி மேம்பாட்டை உருவாக்குவதிலும் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
துறை சார்ந்த அறிவையும் ஆற்றலையும் பயிற்றுவிப்பதைத் தாண்டி பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் ஆளுமைகள் ஒட்டு மொத்த சமுகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக, ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்களாக, சிந்தனையாளர்களாக படைப்பாளிகளாக மலர வேண்டும். இதனையே பல்கலைக்கழகங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் அறிவுசார் ஆலோசனைகள் வாயிலாக பல்கலைக்கழகத்திற்கு எவ்வளவு வருவாய் ஈட்டித்தந்தார்கள் என்று மதிப்பிடும் அதே வேளையில், சமூக வளத்திற்கும் மேன்மைக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பங்கினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிந்திக்க வேண்டிய மற்றொரு அம்சம், பல்கலைக்கழக ஆய்வுகள். ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்க ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் பட்டங்களைப் பெறவும் பதவி உயர்வினை அடையவுமே பயன்படுகின்றன. அதனால், அவை பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களோடும் நூலகங்களோடும் தேங்கிவிடுகின்றன என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பல ஆய்விதழ்கள் வணிக நோக்கம் கொண்டவையாகவும், சில போலியானவைகளாகவும் உள்ளன.
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக்கழகங்களைத் தரம் பிரிப்பது. இதில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கப்பட்டு மாணாக்கர்களிடையே தாழ்வு மனப்பான்மை உருவாகி விடக் கூடிய அபாயம் உள்ளது.
இவற்றை எல்லாம் நாம் நன்கு உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் தரம், அவை உருவாக்கும் அறக் கோட்பாடுகளில்தான் உள்ளது என்பதை நாம் எப்போதும் 
மறக்கலாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT