அமைதியான போராட்டமே தேவை
ஆண்டுதோறும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடத்தி புவி வெப்பமாகி வருவதைத் தடுக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறது.
நடுப்பக்கக் கட்டுரைகள்அமைதியான போராட்டமே தேவை
ஆண்டுதோறும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடத்தி புவி வெப்பமாகி வருவதைத் தடுக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறது.
ஆண்டுதோறும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடத்தி புவி வெப்பமாகி வருவதைத் தடுக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறது. 23 -ஆவது உலக சுற்றுச் சூழல் மாநாடு 2017-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதியிலிருந்து 20 தேதி வரை ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்தது. பத்து நாள்; 20 அமர்வுகள். புவியின் அழிவைத் தடுப்பதே பல்வேறு அமர்வுகளின் கருப்பொருள்.
உலகக் காலநிலை அமைப்பு வழங்கிய புள்ளிவிவர அறிக்கையை ஒவ்வொரு அமர்விலும் விவாதித்தார்கள். அப்படி என்ன அந்த அறிக்கை கூறுகிறது? கடந்த 20 ஆண்டுகளில் புவி வெப்பமாகும் முறை குறையாமல் அதிகரித்தே செல்கிறது. ஆனால் 2017 -இல் சற்று எல்லை மீறிவிட்டது. 2017-ஆம் ஆண்டை மிக அதிகபட்ச வெப்ப ஆண்டாக அறிவிக்கக் கோரியுள்ளது. ஆம், 2017-ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்ப ஆண்டாக சாதனை படைத்துள்ளது. உண்மையில் இது சாதனை அல்ல வேதனை. 2013 முதல் 2017 வரையில் நிகழ்ந்த வெப்ப உயர்வு வரலாறு காணாத நிலை.
நாளுக்கு நாள் வெப்பம் அதிகமாவது இயல்புதானே' என்று கூற முடியாது. இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், இனி ஏற்படக்கூடிய விளைவுகளையும் மனதில் கொள்ள வேண்டும். கார்பன்-டை
ஆக்சைடின் உயர் குவி நிலை, கடல்மட்ட உயர்வு, மீனின அழிவு, வெளுத்துவரும் பவளப்பாறைகள், தென்துருவப் பனிமலையில் பனிக்கட்டி அளவு சராசரியை விடக் குறைதல், பாதுகாப்பு என்று கருதப்பட்ட அண்டார்ட்டிகா வடதுருவத்திலும் பனிக்கட்டிகள் குறைந்து வருதல், ஆல்ப்ஸ் சிகரங்களிலும், இமயத்துச் சிகரங்களிலும் வெள்ளிப்பனி மலைகள் குறைவடைந்து விட்டது ஆகியவை கவலையளிக்கும் செய்திகள்.
இதனால் புவியின் மையக்கோட்டுக்கு வடக்கில் உள்ள குளிர் மண்டலமும், தென் துருவத்து குளிர் மண்டலமும் சற்று சூடானதால் குளிர்நிலை குறைந்து வருகிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்ப - மித வெப்ப மண்டலத்தில் கதிர் வீச்சு கூடுதலாகியுள்ளது. நான்கு டிகிரி வெப்பம் கூடியதால் வறட்சியின் தாக்கமும் அதிகம்.
இந்நிலை தொடர்ந்தால் தென்துருவத்தின் பனிநிலை குறைந்து குளிர்மண்டலம் மிதவெப்பமண்டலமாக மாறலாம். வடதுருவத்தையும் பாதுகாப்பானது என்று மதிப்பிட முடியாது. அண்டார்ட்டிகாவில் லார்சன் ஸி ஐஸ்ல்ஃப்' வெப்ப மிகுதியில் துண்டாகிவிட்டது.
ஒட்டுமொத்தமாக கவனித்தால் மிக மிக அடிப்படைக் காரணம் புதைவு எரிசக்தி கொண்டு எழுந்த நச்சுப் புகையே. கார்பன்டை ஆக்சைடு மிகுந்த குளோரோ புளுரோ கார்பன் வெளிப்பாடு சரியான அளவில் கட்டுப்படாமல் உள்ளது. குளொரோ புளுரோ கார்பன் வெளிப்பாட்டில் முதல் எதிரி நிலக்கரி மூலம் பெறப்படும் தெர்மல் பவர் யூனிட்டுகள்.
உலகில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் எல்லாம் மூடப்பட்டு நமக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலமும் காற்று சக்தி மூலமும் பெற வேண்டும் என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாக ஐ.நா. உலகச் சுற்றுச் சூழல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தில்லி- மீரட் இடையே ஸ்மார்ட் நெடுஞ்சாலை, மாசு தவிர்க்கும் யோசனையுடன் திறக்கப்பட்டது. அந்நெடுஞ்சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெடுஞ்சாலை செல்லும் வழித்தடங்களில் நான்கு மிகப்பெரிய பாலங்கள், 46 சிறிய பாலங்கள், 3 மேம்பாலங்கள், 221 சுரங்கப் பாதைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலை மின் விளக்குகள் எல்லாம் சூரியசக்தி மூலம் எரியும். இந்நெஞ்சாûலையை ஒட்டி 8 சூரிய ஒளி மின் நிலையங்கள் இயங்குகின்றன, 500 மீட்டர் தூர இடைவெளியில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளும் உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையங்களில் தினம் 4 ஆயிரம் கிலோ வாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகிறது. புவி வெப்பமாதலின் முதல் எதிரி நிலக்கரி மூலம் உற்பத்தியாகும் அனல் மின் நிலயங்கள் என்பதை அன்றே உணர்ந்து, குஜராத்தை சூரிய மின்சக்தி மாநிலமாக மாற்றிய பெருமையும் மோடிக்கு உண்டு. நிலக்கரிக்கு முக்கியத்துவம் தரும் எரிசக்தி திட்டம் இனி இல்லை என்பதை மோடி வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டு நிகழ்வுகளை உலக நடப்புடன் ஒப்பிட்டு கவனித்தல் நலம்.
இன்றைய தமிழ்நாட்டில் சுற்றுச் சூழல் உணர்வு மிகவும் தூக்கலாகவே உள்ளது. நெடுவாசல், கதிராமங்கலம், தூத்துக்குடி என நெடிய போராட்டங்கள் நடந்தேறின. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நிகழும் அளவில் நிலைமை மோசமானது. உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை, மாவட்ட ஆட்சியர் பணி மாற்றம் எல்லாம் நடந்தன. மாநில அரசு அதிகாரம் ஸ்டர்லைட்டை மூடவைத்துள்ளது. இவ்வளவு சூழல் கேடுகள் ஏற்படும் என்ற கவலை இல்லாமல் அன்று தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்கப்பட்டது எப்படி? பல்லாயிரம் கோடி முதல் போட்டு ஒரு தொழிலை வளர்த்துப் பல்லாயிரம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு , வீட்டுவசதி, நிரந்தர வருமானம் வழங்கிய பின் நீ மூடிக்கொண்டு போ' இடத்தை காலிசெய்' என்று தும்பைப் பிடிக்காமல், வாலைப் பிடிக்கும் செயல் சரியா? இனி அரசு அதிகாரமா? நீதி அதிகாரமா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மூடச்சொல்லி போராடி மடிந்தவர்களுக்குத் தந்த மரியாதை 25 வருடமாகப் பணிபுரிந்த ஆலைத் தொழிலாளர்களுக்கு உண்டா? இல்லையா? ஸ்டெர்லைட் ஆலைப் பங்குதாரர்கள் கேட்கக்கூடிய இழப்புத் தொகை எத்தனை ஆயிரம் கோடிகளோ? புவிவெப்பமாதல், மாசுகள் என்ற சூழல்கேடுகள் இருப்பினும் வளர்ச்சியை முற்றிலும் புறக்கணிக்க முடியுமா? மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் நகரங்களிலும் உண்டு. உலகத்தில் சுமார் 70 சதவீத மக்கள் நகரங்களின் வாழ்கிறார்கள். கிராமங்கள் நகரங்களாக மாறிவருகின்றன. நகரங்கள் மாநகரங்களாகின்றன. ஊராட்சிகள் இப்போது பேரூராட்சிகளாகின்றன.
ஒரு பக்கம் சூழல் பிரச்னைகள் இருந்தாலும் மறுபக்கம் அவற்றை மீறி வளர்ச்சி, சூழல் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சூழல் பிரச்னைகளை ஆயுதமாக ஏந்திக் கொண்டு எந்த உலக நாடுகளும் தொழில்களைப் புறக்கணிக்கவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பசுமைத் தீர்ப்பாயம், போன்றவை மாநில அளவிலும் மத்திய அளவிலும் சுற்றுக் சூழல் - காலநிலை மாற்றம் அமைச்சரவைக் கட்டுப்பட்டின் கீழ் இயங்கி வளர்ச்சியின் போக்கைக் கண்காணித்து வருகின்றன. இவற்றில் பல குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை நாம் அமைதியான வழியில் திருத்தியமைக்கப் போராட வேண்டும். ஆயுதங்களைக் கொண்டு சூழல் போராளிகள் போர் தொடுக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விடும்.
சூழல் மாசு, கேன்சர் போன்ற பிரச்னைகள் தாமிர உற்பத்தியில் மட்டுல்ல. அதே தூத்துக்குடியில் நிலக்கரிப் பயன்பாட்டில் உற்பத்தியாகும் அனல் மின் நிலையம் இன்னமும் பயங்கரமானது. நெய்வேலி, எண்ணூரிலும் அதே பிரச்சினை உண்டு. கூடங்குளம், கல்பாக்கம் உள்ளது. சிமெண்ட் ஆலைகளின் புகையிலும் நுரையீரல் கேன்சர் வரலாம். தமிழ்நாட்டில் கணக்கிலடங்காத சாயப்பட்டறைகள் உள்ளன. சின்னாளப்பட்டியில் கூட சாயப்பட்டறைக் கழிவுநீர் சுற்றுப் பகுதிகளின் நிலத்தடி நீரை விஷமாக்குகிறது. திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகள், வாணியம்படி தோல் தொழிற்சாலைகள் என்று பட்டியல் போடலாம். எனினும், இப்படிப்பட்ட சூழல் கேடுள்ள தொழில்கள்தாம் ஏற்றுமதி மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணியையும் வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகின்றன.
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நகர்வாழ் மக்கள் தொகை 22 கோடியிலிருந்து 41 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014 - ஆம் ஆண்டின் நிலவரம். இன்று 50 கோடியாகியிருக்கலாம். 50 கி.மி. இடைவெளியில் 10 லட்சம் மக்கள் வாழும் நகரம் உருவாகியுள்ளது. இது தவிர புதிய பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் 90 இடங்களில் உருவாகின்றன. நகர்ப்புற்ற வளர்ச்சி வரவேண்டும், அதே நேரம் கூடவே சுத்தம், சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் சேமிப்பு முதலியவற்றிலும் கவனம் வேண்டும். எல்லாவற்றையும் விட புதிய புதிய தொழில்கள் வளரும் போது கூடவே மாசு நீக்கிய புகை வெளியேற்றம், ரசாயனக்கழிவு சுத்திகரிப்பு கட்டாயம் செயல்படும் அளவில் கடுமையான சட்டங்களும், விதிமீறலுக்கு அபராதங்களும் அவசியம்.
எல்லாவற்றையும் விட மிகவும் அவசரமான செயல்திட்டம், மாற்று எரிசக்திகளின் படிப்படியான அறிமுகம். உதாரணம், தில்லி-மீரட் நெடுஞ்சாலைதிட்டம். இவ்வாறு படிப்படியாக மாற்று எரிசக்திப் பயன்பாடு உயர்ந்து நிலக்கரிப்பயன்பாடு முற்றிலும் நீக்கப் பட வேண்டும். அதுவரை நமது வளர்ச்சிக்கு சில எரிவாயுத்திட்டங்கள் தவிர்க்க முடியாதவையாகும். நாள்தோறும் 14 லட்சம் மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடிபெயர்கின்றனர். மாட்டுவண்டி, சைக்கிள் சவாரி, காலாற நடந்து செல்லும்பழக்கம் எல்லாம் இப்போது மறந்து விட்டன. பன்னிரெண்டு வயதுப் பெண் கூட இலவச ஸ்கூட்டி ஓட்டுகிறார். எண்ணெய்க்கிணறுகளை எதிர்ப்பவர்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தத்தம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கனையோ, சமையல் எரி வாயுவையோ புறக்கணிப்பதாகத் தெரியவில்லை.
மீத்தேன் ஏன்? மாட்டுச்சாணி போதுமே என்பார்கள். அதுவும் சூழல் கேடுதானே. திறந்த வெளியில் மாட்டுச்சாணி கொட்டுவதும் மீத்தேன் மாசுதான். ஆகவே சூழல் எதிர்ப்பு அளவுடன் இருப்பதே நன்று. முக்கியமாக, அமைதி அவசியம். சுற்றுச்சூழலைக் காக்கும் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வளர்த்து வெடிக்கும் போர்களாலேயே உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருப்பினும் தமிழ்நாடு நசிந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.