மாறவேண்டும் மனப்பான்மை!
கல்வி கற்றலின் அவசியமாக, பயனாகத் திருவள்ளுவர் கூறுவது யாது ? மணற்கேணியில் தோண்டுமளவு நீர் ஊறுவது போலக் கற்குமளவு அறிவு வளரும் என்கிறார். சரி, அறிவாவது யாது?
கல்வி கற்றலின் அவசியமாக, பயனாகத் திருவள்ளுவர் கூறுவது யாது ? மணற்கேணியில் தோண்டுமளவு நீர் ஊறுவது போலக் கற்குமளவு அறிவு வளரும் என்கிறார். சரி, அறிவாவது யாது? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' - அதாவது பலவற்றையும் அறிதல் மட்டும் அறிவாகாது. அறிந்தவற்றின் மெய்ம்மையை ஆராய்ந்துணரும் சுய சிந்தனைத்திறனே அறிவாகும். அதன்படி இன்றைய படிப்பறிவு, பல்கலைக்கழகப் பட்டங்கள் சுய சிந்தனைத்திறனை ஏற்படுத்துகின்றனவா எனச்சிந்தித்தால் இல்லை' என்பதே வருந்தத்தக்க விடையாகின்றது.
அதே வள்ளுவர், மனம் போகும் போக்கில் போக விடாது தீயதை விலக்கி நல்வழியிற் செலுத்துவதே அறிவாகும் எனவும் கூறுகிறார். ஆனால் இன்று கொலை, கொள்ளை, பண மோசடி, லஞ்சம், ஊழல் என ஊரைக் கெடுத்து உலையில் போடுபவர்கள் எல்லாரும் படிப்பறிவற்றவர்கள் அல்லவே? எனவே, இந்த வகையில் வள்ளுவர் தோற்றுவிட்டார் எனல் தவறாகாது. வள்ளுவர் மட்டுமா ? கல்வி பற்றிக் காந்தியார் கூறுவதென்ன ? நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்கு உதவி செய்யும் கல்வி முறையே உண்மையான கல்வி என்று சொல்ல முடியும்' என்பது காந்தியார் கருத்து.
சரி, நல்லொழுக்கமாவது யாது? மற்றவர்கள் நம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டால் நமக்கு மகிழ்ச்சியும், இன்பமும் ஆகிறதோ அவ்வாறே நாமும் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுதலே நல்லொழுக்கமாகும்' என்கிறார் ஈ.வெ.ரா. பெரியார். ஆனால், நடைமுறையில் மெத்தப் படித்தவர்களே தம்மால் மற்றவர்களுக்கு ஏற்படும் சங்கடத்தையும், துன்பத்தையும் பொருட்படுத்தாதவர்களாகிறார்கள். ஆக இன்றைய கல்வி முறை சுய சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கும் பயன்படவில்லை; பிறரைச் சங்கடப்படுத்தாமல் நடந்து கொள்ளும் நல்லொழுக்க உணர்வை வளர்ப்பதற்கும் பயன்படவில்லை. காரணம், தற்காலம் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதன் நோக்கம் வேறாகின்றது. படிப்பு என்பதைப் பொருளீட்டுதற்குரிய கருவியாகவே இன்றையை பெற்றோர் கருதுகின்றனர்.
எனவே என்ன படிப்பு படித்தால் பெரும் பொருள் ஈட்டலாம் எனக்கணித்து அதற்கேற்ற படிப்பை அளித்தலே தந்தை மகற்காற்றும் நன்றி'யாக எண்ணுகின்றனர். அதன்படி இன்றைய சூழலில் மருத்துவமும், பொறியியலுமே பெரும் பொருள் ஈட்டுதற்குத் துணையாவதால் தம் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சத்தில் நல்ல பிள்ளை என மதிப்புப் பெற வேண்டுமென்பதைப் பதிப்பதற்கு மாறாக, எப்படியாவது மருத்துவராக, பொறியாளராக ஆக வேண்டுமெனும் வெறியுணர்வைப் பதிக்கின்றனர்.
தம் பிள்ளைகள் மருத்துவராக பொறியாளராக ஆக வேண்டுமெனப் பெற்றோரும், தான் மருத்துவராக - பொறியாளராக ஆக வேண்டுமெனப் பிள்ளைகளும் விரும்புதல் தவறல்ல. ஆனால், அதுதான் சாதனை, அப்படியாகாவிட்டால் அவமானம் என எண்ணுதலே தவறாகின்றது. சிறு வயது முதலே பிள்ளைகளை மருத்துவர் கனவில் வளர்ப்பதுதான் கனவு நிறைவேறவில்லையெனத் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தாக முடிகின்றது.
மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் மாணவர்களே சாதனையாளர்கள், அவர்களைத் தயார்ப்படுத்தும் பள்ளிகளே சாதனைப் பள்ளிகள் என்பது சமூக மனப்பான்மையாக உருப்பெற்றுவிட்டது. இவ்விடத்தே சில கேள்விகள் எழுகின்றன.
முதலாவது, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் சாதனையாளர்களாக மாணவர்களைத் தயார்ப்படுத்துவோர் மருத்துவரும் பொறியாளரும் அல்லவே? மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க மாட்டாது கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பட்டப்படிப்பை முடித்து, அத்துடன் ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்றவர்களல்லவா மாணவர்களை மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் சாதனையாளர்களாக்குகிறார்கள்.
அங்ஙனமாகவும் மருத்துவர்களும் பொறியாளர்களுமே அறிவுத்திறத்தில் மேம்பட்டவர்கள் மற்ற படிப்பாளிகள் அவர்களினும் அறிவுத் தரத்தில் கீழ்ப்பட்டவர்கள் என்னும் பான்மையில் பேசுதலும் நடந்து கொள்ளுதலும் என்னென்று சொல்லத்தக்கது? அடுத்து காந்தி, நேரு முதலான தலைவர்களும், சகதீசு சந்திரபோசு, சர்.சி.வி.இராமன், அமர்த்தியா சென் போன்றோரும் அப்துல் கலாம், டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களும், தாகூர், பாரதி போன்ற கவிஞர்களும் எவ்வகையும் சமூகத்திற்குத் தேவைப்படாத வேலையற்ற வெட்டிப் பேர்வழிகளா?
மருத்துவர்களும், பொறியாளர்களும் அல்லாத மற்றவர்கள் வாழ்வது வாழ்க்கையில்லையா ? அரசுப் பள்ளியாயினும், தனியார் பள்ளியாயினும் எங்கள் பள்ளி மாணவர்கள் இவ்வளவு பேர் மருத்துவர்களாக - பொறியாளர்களாக ஆகியிருக்கிறார்கள்' என்னும் பட்டியலுடன், பிறதுறைகளில் சிறந்து விளங்கும் இன்னின்னார் எங்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள்' என்பதையும் பெருமையுடன் குறிப்பிடும் நாளே நாட்டிற்குப் பொன்னாளாகும்.
சரி, இன்றைய பிரச்னைக்கு வருவோம். 1988 வரையும் பள்ளியிறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன், அவ்வத்துறை சார்ந்த வல்லுநர் குழுவின் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களும் கூட்டப்பட்டு அதனடிப்படையில் மருத்துவம் பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.
நேர்முகத் தேர்வு ஊழல் மயமாகிவிட்டது எனக்கூறி 1989-இல் மருத்துவம், பொறியியல் கல்லூரிக்கென நுழைவுத் தேர்வு நுழைக்கப்பட்டது. அதில் பெறும் மதிப்பெண்களும் பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண்களும் கூட்டப்பட்டு அந்தத் தரவரிசைப்படி சேர்க்கை நடைபெற்றது. 2006 -இல் நுழைவுத் தேர்வு கைவிடப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம், பொறியியல் கல்லூரிச் சேர்க்கை நடைபெற்றது.
கடந்த இரண்டாண்டுகளாக மீண்டும் நுழைவுத்தேர்வு நுழைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி? அனைத்திந்திய அளவில். அதுவும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகளுக்கான பாடத்திட்டப்படி. அதாவது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிறுதித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்று என்றாகிறது. மாநிலப் பாடத்திட்டப்படிப் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டும் வெவ்வேறாகின்றன.
இப்படியொரு குரூரமான நடைமுறை இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்கேனும் நடைபெறுதல் உண்டா ? அது மட்டுமா? பழைய நேர்முகத் தேர்விலும், பிந்தைய நுழைவுத் தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்கப்பட்டு, அந்தத் தரவரிசைப்படிக் கல்லூரிச் சேர்க்கை நடைபெற்றது. இப்போது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை என்றாகிவிட்டது.
அதாவது பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கெனப் படித்த படிப்பும், பெற்ற பயிற்சியும், உழைத்த உழைப்பும் விழலுக்கிரைத்த நீராகின்றது.
மத்திய அரசு இப்படியோர் அடாவடித்தனத்தை மேற்கொள்ளுதல் எப்படிச் சாத்தியமாகிறது ?
இங்கேதான் நீட்' தேர்வு என்பதன் மூலம் முடங்கிக் கிடக்கிறது. 1975 -இல் நெருக்கடி நிலை அறிவித்த இந்திராகாந்தி நெருக்கடிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி விட்டார். பல மொழியினங்களைக் கொண்ட இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையர் கிறித்துவ மதத்தினர். அமெரிக்காவில் வாழும் அனைவரும் பேசும் மொழி ஆங்கிலம். ஆனாலும் அங்கே கல்வி என்பது முற்றிலும் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டதாகிறது. ஆனால், இந்தியாவை, இந்து இந்தியா' என்னும் ஒருமுகத் தன்மையாக்குதலை உள்நோக்கமாகக் கொண்ட இந்துத்துவ ஆட்சியாளர்கள் அதற்கான அடிப்படையாகக் கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சியின் முதற்கட்டமாக நீட்' தேர்வை நீட்டுகிறார்கள். அடுத்தடுத்த கட்டங்களாக பன்னிரெண்டு, பத்து, எட்டு வகுப்புக்களையும் அனைத்திந்திய பொதுத் தேர்வு வளையத்திற்குள் கொண்டுவரும் திட்டத்தையும் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவறிக்கையைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, சமயச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்துக் கல்வியை பழையபடி மாநில அதிகாரப்பட்டியலுக்கு உரித்தாக்குதலே பிரச்னைக்கு நிலையான, சரியான தீர்வாக அமையும். இடைக்கால ஏற்பாடாக, பழைய நுழைவுத் தேர்வு முறையில், நீட் தேர்வு மதிப்பெண், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் இரண்டின் சராசரி அடிப்படையில் கல்லூரிச் சேர்க்கையை நடத்த வேண்டும்.
தமிழக அரசு தெளிவான, சரியான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும், காவிரிப் பிரச்னையில் கர்நாடக எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் நடந்து கொள்வதுபோல, மாநில அரசுடன் சேர்ந்து போராட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தோல்வி கண்டு துவளாது, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அதனில் தமது திறமையை வெளிப்படுத்தி, சாதனை படைக்கும் மனப்பான்மையராகப் பிள்ளைகளை வளர்க்கும் மனப்பான்மைக்குப் பெற்றவர்கள் மாற வேண்டும். மருத்துவமும், பொறியியலுமே உயரிய படிப்பு என்பதும், பணம் படைத்தவர்க்கே முதல் மரியாதை என்பதுமான மனப்பான்மையிலிருந்து சமூகம் விடுபட வேண்டும்.