தெய்வம் தந்த வனங்கள்
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளை ஒன்றுகூட்டிப் புவி வெப்பமாகி வருவதால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப் பணிகளை விவாதித்து
நடுப்பக்கக் கட்டுரைகள்தெய்வம் தந்த வனங்கள்
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளை ஒன்றுகூட்டிப் புவி வெப்பமாகி வருவதால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப் பணிகளை விவாதித்து
ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளை ஒன்றுகூட்டிப் புவி வெப்பமாகி வருவதால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப் பணிகளை விவாதித்து முடிவு எடுப்பதை அறிவோம். அதில் சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்திப் பயன்பாடு பெற்றுவரும் முக்கியத்துவத்திற்கு இணையாக காடு வளர்ப்பு திட்டம் ஏனோ விவாதிக்கப்படாமல் புறந்தள்ளப்படுகிறது.
மாற்று எரிசக்திப் பயன்பாடும், காடு வளர்ப்பும் மனிதனின் இரு கண்கள் போன்றவை. வனங்களே நமது பாரம்பரியம்என்று தீர்மானம் போட்டுப் பயனில்லை! அண்மைக்காலப் புள்ளிவிவரப்படி இந்தியாவில் பெயரளவில் வனநிலப்பரப்பு கூடியுள்ளதாகக் கூறப்பட்டாலும், அடர்த்தியான காடுகள் என அறியப்படுவன அடர்த்தியில்லாமல் வெற்றிடமாகக் காட்சி தருவதாகச் செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. காரணம், அடர்த்தியற்ற காடுகளில் அடர்த்திக்காக தைல மரங்களையும், சவுக்குமரங்களையும் நட்டு காகிதத் தேவைக்கு வெட்டிவிடுவதால் அடர்த்திக்கு வாய்ப்பில்லை. வெட்டுப்படாமல் இருக்க அரசு, ஆல், இலுப்பை, சால் என்ற சாம்பிராணி மரம், வாகை, கொன்றை, கோங்கு, வேம்பு, புங்கை, நாவல், விளா, வில்வம் போன்ற நாட்டு ரக மரங்களை நடவேண்டும். அதேசமயம் தெய்வம் தந்த வனங்களில் அடர்த்தி காப்பாற்றப்படுவதாகவும் சுற்றுச்சுழல் வனத்துறை தெரிவித்துள்ளது.
அது என்ன தெய்வம் தந்த வனங்கள்?
பக்தியும் பாசுரங்களும் வளர்ந்த தமிழ்நாட்டில் "சாமியாவது பூதமாவது' என்று பேசும் நாத்திகக் கூட்டமும் ஒரு நோய்போல் தொற்றியுள்ளது. ஆனால், சுற்றுச் சூழலைப் பொருத்தவரை தெய்வ நம்பிக்கை, பேய், பிசாசு, குலதெய்வம், போன்ற பலதரப்பட்ட காரணங்களால் உலகில் உள்ள மொத்த வனநிலப்பரப்பில் 1 சதவீத அளவு காடுகள் என்றுமே அழிக்கப்படாமல் காலம் காலமாகக் காப்பற்றப்படுவதாகச் சூழலியல், வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவைதான் தெய்வம் தந்த வனங்கள்! வனங்களில் அடர்த்தியைக் காப்பாற்றும் ஆன்மிக உயிர்ச் சூழல் அதாவது, spiritual ecology என்ற கருத்துருவமே தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டுவிட்டது. திருத்தலங்களைச் சுற்றியிருந்த வனங்கள் அழிக்கப்படுள்ளன. அதேசமயம் கம்யூனிஸம் வேரூன்றியுள்ள கேரளம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தெய்வம் தந்த வனங்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன.
இன்று காலநிலை மாற்றம் என்ற எமன் படுத்தும் பாட்டிற்கும் அரணாக நிற்பது ஆன்மிக உயிர்ச் சூழலே. இந்த உண்மையை உலகச் சுற்றுச்சூழல் நிறுவனம் உணர்ந்து தெய்வம் தந்த வனங்களை sacred groves என வரையறுத்து அவற்றைக் காப்பாற்ற நிதியும் வழங்கி வருகிறது. மரங்களுக்கு தெய்வச் சாற்றுதல் உள்ளதால் மரங்களை வெட்டுவதற்கு முன் மனிதர்கள் சற்று யோசிப்பார்கள். தெய்வம் தந்த வனங்கள் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டுள்ளன. வேப்பமரம் மாரியம்மன் குடியிருப்பு என்று பேசப்பட்டாலும், தனியாக வளர்ந்தால் தேவை வரும்போது பலகைக்கு ஆகும் என்று வெட்டுவோரும் உண்டு. அதே வேப்பமரம் தெய்வச் சாற்றுதல் உள்ள தோப்போடு இருந்தால் காப்பாற்றப்படும். அப்படியும் சில தனியான வேப்பமரங்களுக்குக் கீழ் மாரியம்மன் சிலையை வைத்து கும்பிட ஆரம்பித்துவிட்டால் வேப்பமரம் பிழைத்துவிடும். கூடவே சிலமரங்கள் வளரும்.
அரச மரத்திற்கு அந்த யோகம் நிறையவே உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான பிள்ளையார் படங்களைச் சேர்த்து செருப்பால் அலங்கரித்து சேலத்தில் ஊர்வலம் நடத்தினார். "பிள்ளையாரைக் கும்பிடாதே' என்ற இயக்கத்தின் எதிர்வினையாக ஒவ்வொரு நகரங்களிலும் புதிய பிள்ளையார் கோயில்கள் முளைத்துவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் கணக்கெடுத்துப் பார்த்தால் பத்து லட்சம் பிள்ளையார் கோயில்கள் இருக்கலாம். பிள்ளையார் கோயிலுக்குத் துணையாகப் பல லட்சம் அரச மரங்களும் நடப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டுக் கோயில்களுடன் இணைந்துதிருந்த நந்தவனக் காடுகள் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டபோதிலும், பிள்ளையார், மகமாயி, கருப்பணசாமி, முனிசாமி, மாரியாத்தாள், காளியம்மன், பத்ரகாளி, காத்தாயி போன்ற பற்பல சிறு தெய்வங்களின் வழிபாட்டை அனுசரித்தும், பல தெய்விக மரங்கள் நடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல், வனவளர்ப்பு, புவிவெப்பமாதலுக்குரிய தீர்வாகப் பொதுநல விழிப்புணர்வுள்ள பலர் மரம் நடும்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மர நர்சரிகளும் மிகுந்துள்ளன. இவ்வாறு நர்சரித் தொழில் செய்யும் ஆர்வலர்களிடம் விசாரிக்கும்போது தெய்விகத் தொடர்புள்ள தல மரக்கன்றுகளுக்கு மவுசு கூடிவருவதாகத் தெரிவிக்கிறார்கள். நாகலிங்கம், அரசு, ஆல், நாவல், அத்தி, கடம்பு, வேம்பு, புங்கன், மகிழம், வெண்மருது போன்ற நாட்டு மரங்களின் கன்றுகள் விரும்பப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
வாழ்வுக் கலை மையம் என்ற பெயரிலும், யோகாசன -ஆன்மிக மையங்களிலும், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற பல பிரபலங்களும், ஆன்மிகம், யோகக்கலையில் ஈடுபட்டுப் பிரபலமாகாத வேறு பலரும் தெய்வத்தன்மையுள்ள மரங்களை நட்டுப் புதிய வனங்களை உருவாக்குகின்றனர்.
இருப்பினும், பாரம்பரியம் மாறாமல் பழைய கட்டமைப்புடன், காலம் காலமாக மாறாமல், உள்ளது உள்ளபடி உள்ள தெய்விக வனங்களில் மரங்களை வெட்டாமல் அவை பட்டுபோகும் வரை காப்பாற்றப்பட்டிருக்கும். பட்டமரம் அருகில் பக்கவேர் மூலம் பலமரங்கள் வளர்ந்திருக்கும். கீழே கொட்டிக் கிடக்கும் இலைகள், பூக்கள், கனிகள், விதைகள் எதையுமே யாரும் தொடுவது கூட இல்லை. அப்படிக் தொடுவதுகூட தெய்வ குற்றமாக எண்ணிப் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டிருக்கும். அந்தச் சூழலையே ஆங்கிலத்தில் sacred groves என்கிறார்கள். அங்கு பல்லுயிர்ப் பெருக்கம் வளம் பெற்றிருக்கும். அபூர்வமான பறவைகள், புள், பூச்சிகள், ஊர்வன எல்லாம் நிறைந்திருக்கும்.
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட பாரம்பரியம் மாறாத ஒரு காடு எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரான செருவாவிடுதியில் உள்ளது. இது பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ளது. இங்கு 150 ஏக்கர் பரப்பில் போத்தியம்மன் காடு என்ற பெயரால் அறியப்படுகிறது. காப்பிடமாக வனத்துறை அறிவித்து காவலும் போடப்பட்டுள்ள இந்தக் காடு, தெய்விக வனங்கள் பட்டியலில் உள்ளது. கடந்த நூற்றாண்டில் 1000 ஏக்கர் வரை காடாக இருந்ததை அழித்துப் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டிருந்தாலும், மிச்சமுள்ள 150 ஏக்கர் மட்டுமே எஞ்சி நிற்கக் காரணம், அந்த ஊரில் வாழ்ந்த பல ஜாதி மக்களின் தெய்வங்கள் உறைந்துள்ளதால் அங்குள்ளோர் யாரும் உள்ளே சென்று மரங்களை வெட்டுவதில்லை. சிறு வயதில் நான் பார்த்தபோது அந்தப் போத்தியம்மன் காட்டைச் சுற்றி நிறைய ஏரி, குளங்கள் இருந்தன. ஏராளமாகப் பறவைகள் வரும். மிகவும் அரிதாகிவிட்ட பாலை மரங்கள், xantolis tomentosa வகை பாலை மரங்கள், நிறைய இருந்தன. பழம் ஈச்சம்பழம் போல் துவரும் தித்திப்புமாக இருக்கும். மதுக்குடம் என்ற திருவிழா மிகவும் சிறப்பாக நடக்குமாம். போத்தியம்மன் கோயிலின் பாதுகாவலர்களாக இருந்த பிராம்மண குருக்களும் வேறு சில பிரிவினரும் பல தலைமுறைகளுக்கு முன்பே ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் திருவிழா கொண்டாடப்படவில்லை என்றும் பேச்சுண்டு. இன்று ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுச் சுற்றியுள்ள நிலங்கள் முழுக்கவும் காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ளதால், முன்னொரு காலத்தில் செழிப்புடன் பசுமையாயிருந்த போத்தியம்மன் காடு இன்று பசுமை குறைந்து காணப்பட்டாலும், அழியும் நிலையிலிருந்த பற்பல தாவரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வனத்துறை வழங்கும் தகவல்கள் அடிப்படையில், இந்தியாவில் உள்ள காப்பிட வனப்பரப்பில் 1% அளவு நெருக்கமான மரங்கள் வனத்துறைக்கு சொந்தம் என்றாலும், ஒரு பகுதி தனிப்பட்ட குடும்பம் அல்லது பழங்குடி சமூக உரிமையுள்ளனவாகவும் உள்ளன.
தனியார் நிலங்களில் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட்டு வரும் தெய்வம் தந்த வனங்களுக்கு உலகச் சுற்றுச்சூழல் நிறுவனம் நிதி வழங்குகிறது. அப்படிப்பட்ட தெய்வம் தந்த வனங்களை உள்ளது உள்ளபடி போற்றி, மாற்றுப் பயன் செய்யாமல், தரிசாகவே - அதன் இயல்பான வளர்ச்சிக்கு விட்டு, இயற்கை வழியில் சும்மா இருந்தால் நிதி உதவி உண்டு. இப்படி வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்பதால் தனியார் நிலங்களில் உள்ள தெய்வ வனங்கள் விவசாயத்திற்கோ, வேறு கட்டுமானங்களுக்கோ அழிக்கப்படுகிறது.
எனினும், தெய்வத்தை மையமாக வைத்து பக்தர்கள் பலர் நடத்தும் ஆசிரமங்களில் நீண்ட காலப் பயனையும், மருத்துவ குணங்களையும் கொண்ட பாரம்பரிய மரங்கள் வளர்க்கப்படுமானால், தலைமுறை தலைமுறையாக, 500 ஆண்டுகள் மரம் தானாகப் பட்டு விழும் வரை வளர்க்கப்படுமானால், ஓசோன் படலத்திற்கு உரமேற்றிய பெருமையுடன், புவியைக் காப்பாற்றும் தெய்வம் தந்த வனப் பணி நிறைவு உடையதாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.