கார்ப்பரேட் விவசாயம்
இந்தத் தலைப்பைப் பார்த்தும் தமிழ்நாட்டு இடதுசாரிகளும், தமிழ்ப் போராளிகளும் எதிர்பார்க்கும் ஒரு எதிர்ப்புக்குரல் என்று மகிழ வேண்டாம்
நடுப்பக்கக் கட்டுரைகள்கார்ப்பரேட் விவசாயம்
இந்தத் தலைப்பைப் பார்த்தும் தமிழ்நாட்டு இடதுசாரிகளும், தமிழ்ப் போராளிகளும் எதிர்பார்க்கும் ஒரு எதிர்ப்புக்குரல் என்று மகிழ வேண்டாம்
இந்தத் தலைப்பைப் பார்த்தும் தமிழ்நாட்டு இடதுசாரிகளும், தமிழ்ப் போராளிகளும் எதிர்பார்க்கும் ஒரு எதிர்ப்புக்குரல் என்று மகிழ வேண்டாம். இது அம்பானி, அதானி, டாடா, பதஞ்சலி, நெஸ்லே, லீவர் பிரதர்ஸ், பேயர், மான்சான்டோ விஷயம் இல்லை. இது விவசாய உற்பத்தியாளர்களுக்காக, விவசாய உற்பத்தியாளர்கள் மட்டுமே பங்குதாரர்களாகச் செயல்பட்டு, இடைத்தரகர்கள் பெறக் கூடிய லாபத்தை விவசாயிகள் மட்டுமே பெறும் இந்த ஒருங்கிணைந்த கார்ப்பரேட் விவசாயம், இந்தியா முழுவதும் நாளை மலரப் போகிறது! இப்போது ஒரு தொடக்கமே. இது வளர்ந்த வரலாற்றைப் பதிவு செய்வோம். ஊன்றிய விதை முளைத்துத் துளிர்விட்டுள்ளது! நாளை இது விருட்சமாகும். யார் விதை ஊன்றினார்கள்?
இந்தியாவில் இயங்கும் அமுல் பால் நிறுவனம் ஆசியாவில் முதல் நிலை வகிக்கும் பொதுத்துறை நிறுவனம் என்பதை உலகம் அறியும். அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு விதை ஊன்றிய வர்கீஸ் குரியன்தான் "விவசாயிகளின் கார்ப்பரேட்'டுக்கு விதை போட்டவர். "கூட்டுறவு' என்றால் நாளடைவில் அரசியல் தலையீடும் ஊழலும் ஏற்பட்டு நேர்த்தியாகச் செயல்படாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு கூட்டுறவுக்கு பதில் கார்ப்பரேட் உருவாக்கம் பொருத்தமாயிருக்கும் என்று 2001-ஆம் ஆண்டே திட்டமிட்டு முயன்றார். இந்தக் கார்ப்பரேட்டுகளின் முக்கிய நோக்கம் விவசாயிகள் ஒருங்கிணைந்து, தாம் உற்பத்தி செய்த விளைபொருள்களை சந்தைப்படுத்துவது ஆகும். இவ்வாறு கார்ப்பரேட்டாகச் செயல்படும்போது விற்பனை வரிப் பிரச்னை ஏற்பட்டதால் நினைத்த அளவில் லாபம் பெற இயலவில்லை. அதனால் 2018-19 பட்ஜட்டை சமர்ப்பித்த மத்திய நிதி அமைச்சர், "விவசாயிகளின் கார்ப்பரேட்'டுகளுக்கு 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் இல்லை என்று அறிவித்தவுடன், படிப்படியாக இதன் பலன் வெளி உலகுக்குத் தெரிந்தது.
உதாரணமாக, மத்தியப்பிரதேசத்தில் மண்ட்லா பழங்குடி விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனம் 2012-இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சொந்தமாக ஒரு தானியக் கிட்டங்கியும் கட்டியுள்ளது. மொத்தம் 1160 பழங்குடி விவசாயிகள் பங்கு தாரர்களாயுள்ளனர். எல்லோருமே விதைநெல் உற்பத்தியாளர்கள். இதில் சுனில் படேல் ஒரு முக்கியப் பங்குதாரர். அவர் விவசாயத்தைக் கைவிட்டுக் கூலிவேலை செய்து கொண்டிருந்தார். 2014-இல் கிராமத்திற்குத் திரும்பி, விவசாயத்தில் கவனம் செலுத்தினார்.
2017- ம் ஆண்டு சுனில் படேல் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் சேமிப்பு போக மீதியான 6 டன் விதை நெல்லை விற்று முதல் முறையாக ரூ.90,000 வருமானம் பெற்றார். கொள்முதல் விலையைவிட 100 கிலோ நெல்லை ரூ.500 கூடுதலாகப் பெற்றார். கிட்டிய விலை ரூ.2000.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், விவசாயத்துறையின் ஊழலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சமதர்மம் என்று நம் தமிழர்கள் நிறையப் பேசுவது உண்டு. அது ஏனோ தெரியவில்லை, சமதர்மம் பேசிப் பதவி பெற்றவர்கள், விதை நெல் உற்பத்தியாளர்கள்களுக்கு ஊக்கம் அளித்து, ஏழை விவசாயிகளை வாழ வைப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மூச்சுக்கு மூச்சு சமதர்மம், சமூக நீதி என்று கூறி ஓரிரு தலைவர்களைப் பெயரளவில் உச்சரிக்காத மற்ற மாநிலங்களில் ஏழை விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் சிறப்பாயுள்ளது. எப்படி? தன்னலமற்ற சமதர்மம் தேவைபடுகிறதோ? விதை நெல்லுக்கே நல்ல விலை இல்லை என்றால் சாப்பாடு நெல்லுக்கு சொல்லவே வேண்டாம். களத்திலேயே வந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்று விடுவதால், அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையைவிடக் குறைவாகவே கிட்டுகிறது. அரசு நிர்ணயித்த விலைக்கு விற்று லாபம் பெறுவோர் இடைத்தரகர்களே. இவர்களுக்கு சொந்தமான அரிசி மில்லும் இருக்கும். இடைத்தரகர்களுக்கு இடையில் ஏஜண்டாகவும் சிலர் களத்தில் நெல் வாங்குவோரும் உண்டு. பாவம், தமிழக நெல் விவசாயிகள்.
விவசாயிகளை வாழ வைத்த வரலாற்றுக்கு வரலாம். வர்கீஸ் குரியன் எந்த சமூக நீதித் தலைவரைப் பற்றியும் பேசிக் கொண்டிராமல், விவசாய உற்பத்தியாளர் கார்ப்பரேட் சட்டத்தை வரைந்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2002-இல் வாஜ்பாயின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வர்கீஸ் குரியன் வகுத்தளித்த விவசாய உற்பத்தியாளர் கார்ப்பரேட் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர் பதவிக்கு வந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வர்கீஸ் குரியன் வகுத்து வழங்கிய விவசாயிகள் கார்ப்பரேட்டைப் பிற்போக்கு என்று கிடப்பில் போட்டு பன்னாட்டு உணவு வர்த்தக கார்ப்பரேட்டுகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்தது.
அவர்கள் பாட்டுக்கு வரட்டும், கூடவே இவர்கள் வளர வேண்டும் என்று மோடி அரசு கருதி, கிடப்பில் போடப்பட்ட விவசாயிகள் கார்ப்பரேட் சட்டத்திற்குப் புத்தூக்கம் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில், ஏராளமான தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி, விவசாயிகளின் கார்ப்பரேட் மூலம் விற்பனையை உறுதி செய்து, ஏழை விவசாயிகளை வாழ வைக்கின்றன. நமக்கோ மொழியைவிட வேறு எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை. மொழியின் பெயரில் திக் கெட்டும் முழங்கிவிட்டு, வரும் கமிஷனை வாங்கிப் போடுவதில் குறியாக இருக்கிறார்கள். காவிரியில் நீர் வறண்டு உற்பத்தி குறைந்தாலும் மண்ணில் பாடுபடும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையைக் கூடப் பெறாமல் குறுக்கே நிற்பது யார்? அவர்களும் தமிழர்களே.
"இவ்வளவு நியாயம் பேசுகிறீர்கள், சார், ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து, களத்து மேட்டை விட்டால், வேறு எங்கு போய் ஏழை விவசாயி விற்க முடியும்? அவனுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து நாங்கள் களத்திலேயே வாங்கி மண்டியில் விற்று மீதியை வழங்குவதும் ஒரு உதவிதானே?' என்று யாராவது சமாதானம் கூற முடியும். உண்மையில் இதுதான் பிரச்னை. உதவிதான். ஆனால் சும்மாவா? அடிக்கிற லாபம் கொள்ளையாச்சே!
இந்தப் பிரச்னையை மத்தியப் பிரதேசத்தில் இயங்கும் ராம் ரகீம் பிரகதி விவசாயிகள் கார்ப்பரேட் எப்படி தீர்த்தது என்பதை நம்மவர்கள் புரிந்துகொள்வது மிக அவசியம். ஒரு சிறு விவசாயி எந்த இடைத்தரகரிடமும் முன்பணம் வாங்காமல் நெல் அல்லது மக்காச் சோளம் பயிர் செய்வதாகக் கொள்வோம். 10 மூட்டை அல்லது 15 மூட்டை விளைவதைத் தனி வண்டி பிடித்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கமிஷன் மண்டிக்கு கொண்டு சென்றால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். கணக்குப் பார்த்தால் வந்த விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பதுதான் லாபம் என்று அந்த சிறு விவசாயி உணர்வார். இரண்டாவதாக, "லோடு' கணக்காக இறக்கப்படும்போது சற்று நல்ல விலையும், தனி ஆளாகக் குறைந்த அளவு விற்பனை செய்யும்போது குறைவான விலையும் பெறும் நிலை ஏற்படும். சரக்கில் சுத்தமில்லை என்று பேசலாம். ஆனால் 5,6 சிறுவிவசாயிகள் கார்ப்பரேட் அமைத்து ஒரு பங்குதாரராக இருந்தால் கூட்டாக ஒரு லாரி பிடித்து முழு லோடு அனுப்பினால் போக்குவரத்து செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். கமிஷன் மண்டியில் பேரம் பேசி நல்ல விலை பெற முடியும். ராம் ரகீம் விவசாயிகள் கார்ப்பரேட் பங்குதாரர்களில் ஒருவரான விஜய்சங்கர், தான் விளைவித்த 8 மூட்டை சோயா, மொச்சையை தனியாக எடுத்துச் செல்லாமல் கார்ப்பரேட் பங்குகாரர்களை ஒருங்கிணைத்து, முழு லோடு கொண்டு சென்று, நல்ல விலை பெற்றதாகக் கூறுகிறார்.
இப்போது விவசாயிகள் உலகத்தில் கார்ப்பரேட், கார்ட்டல், கன்சோர்ஷியம் என்றெல்லாம் பேசி முதலாளித்துவ அகராதியைத் திருத்தி எழுதி வருகிறார்கள். கார்ப்பரேட் அமைப்புக்கு மேல் கன்சோர்ஷியம். மத்திய பிரதேசத்தில் ஒன்று, மகாராஷ்டிரத்தில் ஒன்று என இரு பெரிய கன்சோர்ஷியம்கள், ஆங்காங்கே சிறிதாயுள்ள சிறுவிவசாயிகளின் கார்ப்பரேட்டுகளை ஒருங்கிணைத்து, அதே விவசாயிகளைப் பங்குதாரர்களாக்கிப் பெரிய நிறுவனக் கட்டமைப்புகளைக் கட்டியுள்ளன.
சொந்தமாக தானிய கிட்டங்கிகளைக் கட்டி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை, உர மானியங்களின் பலனை விவசாயிகளே அனுபவிக்கும் உத்திகளைச் செய்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய விவசாய நிறுவனங்களை உருவாக்கப் பின்புலமாயிருந்த யோகேஷ்வர் தொராத்தின் கருத்துப்படி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இரண்டு வறண்ட மாநிலங்களிலும் ஆங்காங்கே நெல்லுடன், கம்பு, வரகு போன்ற புஞ்சை தானியங்களும், துவரை, சோயா, சூரியகாந்தி, கடுகு போன்றவை விளைந்தும், விலையில்லாமல் இருந்த நிலை மாறிவருகிறது. விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுத் துன்பம் சூழ்ந்து, கொந்தளிப்பு உருவாகக் கூடிய கிராமப் பகுதிகளில் நபார்டு வங்கியின் முயற்சியால் பல சிறுவிவசாயிகள் கார்ப்பரேட்டுகள் உருவாகியுள்ளன. இதனால் சிறு விவசாயிகளின் துயர் குறைந்து அமைதி நிலவுவதாகவும் தொராத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மீண்டும் விவசாயிகளின் கொந்தளிப்பு எழாமலிருக்க மேற்கொண்டு 4000 சிறுவிவசாயி கார்ப்பரேட்டுகளை உருவாக்கத் திட்டமிடப்படுள்ளது.
கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவில்- குறிப்பாக வறட்சி மாவட்டங்களில்- விவசாயி கார்ப்பரேட்டுகள் திறனுடன் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் போற்றும்படியான முன்னேற்றம் இல்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடியை மட்டும் முக்கியக் கோரிக்கையாக வைத்துப் போராடுகிறதே தவிர, இடைத்தரகர்களின் லாபத்தை விவசாயிகள் பெற்று லாபமுறும் மாற்று சிந்தனைகளை யோசிப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டுக்கு நல்ல தரமான பச்சரிசி, புஞ்சை தானியங்கள், பருப்பு வகைகள் எல்லாம் மகாராஷ்டிரம் அல்லது மத்தியப் பிரதேசத்திலிருந்து வருகிறது. பருப்பு விலை மலிந்துள்ளதை கவனிக்கலாம், இடைத்தரகு குறைந்துள்ளதும் விலை மலிவுக்கு ஒரு காரணம். இடைத்தரகு இல்லாமல், விளைவிக்கும் விவசாயிகளே முழுமையாக சந்தைப்படுத்தும் நாள் தமிழ்நாட்டில் வர வேண்டும். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்போது, விவசாயிகளின் ஒருங்கிணைந்த கார்ப்பரேட் கம்பெனி உருவாக்கத் திட்டம் வாழ்கவெனக் கூறுவோம்!