ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஆணையம், 'தலித்' என்ற சொல், அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும், அதை அரசாங்கங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் 2008-ஆம் ஆண்டு அறிவித்தது. 2018-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில், 'தலித்', 'ஹரிஜன்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒருவர் பொதுநல வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றமும், 'ஒரு வகுப்பினரைத் தாழ்ந்தவர்கள் என்று சொல்வது தவறு; அச்சொற்களைப் பயன்படுத்துவதும் தவறு' எனத் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், உயர்நீதிமன்றமும் சரி, அரசும் சரி பழைய வரலாற்றை மறந்துவிட்டே பேசிவருகின்றன. 'ஹரிஜன்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகளை வற்புறுத்தியவர், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு குழுவினரே.
மராட்டிய மாநிலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், ஒட்டுமொத்த புறக்கணிக்கப்பட்ட மக்களையும் பொதுப்படையாகக் குறிப்பதற்கு ஒரு சொல்லைத் தேடினர். அங்குள்ள 'மகார்', 'மாங்கு', 'சாமர்', 'தோர்' போன்ற மக்களைப் பொதுப்படையாக குறிப்பதற்கு 'தலித்' என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். அர்ச்சுன் டாங்களே, ஜோதிபா பூலே போன்ற பெருமக்கள் இச்சொல்லை நாடு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று பரப்புரை செய்தனர். இச்சொல் மேல்தட்டு மக்களால் சுமத்தப்பட்ட ஒன்றன்று. அதுபோலவே, 'ஹரிஜன்' என்ற சொல்லையும் மகாத்மா காந்தி பயன்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்கள் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளே ஆவர்.
காந்தியடிகள் தீண்டப்படாதவர்களை முதன் முதலில் 'அச்சுத்' என்றுதான் இந்தி மொழியில் அழைத்து வந்தார். 1933-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தக்கர் பாபா ஜயந்தியைக் கொண்டாடுவதற்காக அவர் சென்னை வந்தார். அப்பொழுது அவரைச் சந்தித்த ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றவர்கள் தங்களைக் கூலிகள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அழைப்பது அவமானமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். அப்பொழுது காந்தியடிகள் 'வேறு சரியான பெயர் சொல்லுங்கள்' எனக் கேட்டார். அதற்கு அக்குழுவில் இருந்த ஒருவர் 'ஹரிஜன்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும், அச்சொல் நரஸிம் மேத்தா இயற்றிய கவிதையில் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
தனது மானசிக குருவான நரஸிம் மேத்தாவின் பெயரைச் சொன்னதும், காந்தியடிகளுக்கு 'ஹரிஜன்' என்ற சொல் பிடித்துப் போய்விட்டது. நரஸிம் மேத்தா அச்சொல்லை துளசிதாசரின் இராமாயணத்தில் இருந்து எடுத்திருக்கிறார். 'அந்தணர்கள், பசுக்கள், ஹரிஜனங்கள் ஆகியோருக்கு யாரும் தீங்கிழைக்கக் கூடாது' என துளசிதாசர் இராமாயணத்தில் பதிவு செய்திருக்கிறார். கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்த கங்காசதி எனும் பெண் கவிஞர் குஜராத்தியில் பக்திப் பாடல்களை எழுதி வந்தவர், தம்மைக் குறிப்பதற்கு 'ஹரிஜன்' என்ற சொல்லையே பயன்படுத்தினார். காந்தியடிகளும் அச்சொல்லைப் பிரித்துப் பார்த்து, 'திருமாலின் பிள்ளைகள்' எனப் பொருள் தருவதால் மகிழ்ச்சியோடு ஏற்றார்.
பாபாசாகேப் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டில் கொடுத்த அறிக்கையில், 'சாதியற்ற இந்துக்கள் அல்லது எதிர்ப்புணர்வு இந்துக்கள்' என்றே குறித்துள்ளனர். அதே அம்பேத்கர் 23.10.1928இல் சைமன் குழுவினருக்குக் கொடுத்துள்ள அறிக்கையில் 'தீட்டை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் இந்துக்கள்' என்றே பதிவு செய்துள்ளார்.
இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்த காந்தியடிகள், புறக்கணிக்கப்பட்டோரின் ஈடேற்றத்தை மனத்தில் கொண்டு, தாம் நடத்தி வந்த 'யங் இந்தியா' பத்திரிகையை நிறுத்திவிட்டு, 'ஹரிஜன்' எனும் பெயரில், ஆங்கிலத்தில் ஒன்று, இந்தியில் ஒன்று, குஜராத்தியில் ஒன்று என மூன்று பத்திரிகைகளைத் தொடங்கினார். ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக 'ஹரிஜன் சேவா சங்க'த்தையும் தொடங்கினார். மேலும், தீண்டாமையை ஒழிப்பதற்குத் தாழ்த்தப்பட்டோர் தங்கள் தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும் என்றும், மேட்டுக்குடி மக்கள் தங்களுடைய உயர்சாதியுணர்வை நீக்க வேண்டும் என்றும், பேச்சிலும் எழுத்திலும் வற்புறுத்தினார். மகாகவி பாரதி, 'இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே' எனப் பாடினார்.
பாரத நாட்டு மக்கள் பிறப்பினால் வரும் தனி அடையாளங்களை இழந்தால் ஒழிய சமதர்ம சமுதாயத்தைக் கொண்டு வர முடியாது. இதை நன்குணர்ந்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் தங்களுடைய வாழ்க்கையிலேயே இதனைக் கடைப்பிடித்துக் காட்டினர். திருஞானசம்பந்தர் தாம் தல யாத்திரைக்குப் புறப்படும்போதெல்லாம், திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனும் புறக்கணிக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவரைத்தான் உடன் அழைத்துச் சென்றார். திருஞானசம்பந்தர் இயற்றமிழில் இயற்றும் பதிகங்களை எல்லாம், திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் எனும் இசைக்கருவியின் மூலம் இசைத்தமிழ் ஆக்குவார். மதுரைத் திருக்கோயிலில் சம்பந்தருக்கு மட்டும் ஆசனம் தந்தபோது, யாழ்ப்பாணருக்கும் ஆசனம் தந்து அமரச் செய்தார் சம்பந்தர்.
திருஞானசம்பந்தர் ஒருநாள் இரவு திருநீலநக்கர் எனும் வேதியர் வீட்டில் தங்க நேர்ந்தது. அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மட்டுமன்றி, அவருடைய மனைவியார் மதங்கசூளாமணி அம்மையாரும் வேதியரின் வீட்டிலேயே தங்கும்படியாக ஞானசம்பந்தர் பணித்தார். மதங்கசூளாமணி அம்மையாரை யாகசாலையின் பக்கத்திலேயே உறங்கும்படியான ஏற்பாட்டைச் செய்தார் திருநீலநக்கர். யாழ்ப்பாணர் தம்பதியரிடத்தும் தாழ்வு மனப்பான்மையில்லை; திருநீலநக்கர் குடும்பத்தாரும் உயர்வு மனப்பான்மையை உதறினார்கள்.
மனிதர்களை மாற்ற முடியும், உயர்த்த முடியும் என்பதில் பெரு நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள் நம் அருளாளர்கள். 'பசுவினுடைய தோலை உரித்துத் தின்று வாழும் புலையர்கள் கூடச் சிவபெருமானுடைய அன்பர்கள் ஆகிவிட்டால், அவர்களை கடவுளர்களாகவே தொழுவேன்' என்றார், அப்பரடிகள். ('ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில், அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே).
திருஆளவந்தார் எனும் வைணவ ஆச்சாரியன் மரணப் படுக்கையில் இருக்கும்பொழுது பெரியநம்பியும் திருக்கோட்டியூர் நம்பியும் அருகில் சென்று, தங்களுக்குத் தஞ்சமாய் இருக்கும் வழியைச் சொல்லும்படிப் பிரார்த்தித்தனர். அதற்கு ஆளவந்தார், 'ஸ்ரீரங்கநாதன் பக்கத்திலுள்ள திருப்பாணாழ்வார் விக்கிரகத்தை ஒவ்வொரு நாளும் திருவடியிலிருந்து திருமுடிவரை சேவித்துக் கொள்ளுங்கள்' எனப் பணித்தார். திருப்பாணாழ்வார் புறக்கணிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஆளவந்தாரின் சீடர் மாறநேரி நம்பி சேரியில் வாழ்ந்தவர். அவருக்குப் பிளவை நோய் கண்டபொழுது, பெரிய நம்பியே சேரிக்குச் சென்று மாறநேரியின் புண்களைத் துடைத்துச் சீழ் எடுத்து மருந்திட்டு வந்தார். மாறநேரி நம்பி திருநாடு அலங்கரித்தபோது, பெரியநம்பியே இடுகாட்டிற்குச் சென்று ஈமக்கடன்களைச் செய்தார்.
எம்பெருமானார் இராமாநுசர் காவிரிக்கு நீராடச் செல்கையில் முதலியாண்டான் மீது ஒரு கரத்தையும், கூரத்தாழ்வான் மீது இன்னொரு கரத்தையும் போட்டுக் கொண்டு நடப்பார். நீராடிவிட்டுத் திரும்பும்போது, ஒரு கரத்தை உறங்காவில்லி (ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்) தோள் மேல் போட்டுக்கொண்டு நடந்தார். இதைக்கண்டு அதிசயித்த சீடர்கள் காரணம் கேட்டபொழுது, 'உறங்காவில்லி அகப்பற்று - புறப்பற்று இரண்டும் அற்ற பரம பாகவதர்; அவருடைய ஸ்பரிசத்தால் நாம் தூய்மை பெறலாகும்' என்றார். மேலும், மிகப்பெரும் சமத்துவப் போராளியாகிய இராமாநுசர், புறக்கணிக்கப்பட்டவர்களைத் 'திருக்குலத்தார்' என அழைத்தார். 'திரு' எனும் அடைமொழி தெய்வத்தோடு சம்பந்தப்பட்டவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
உறங்காவில்லியின் மற்றொரு பெயர் தநுர்தாசன் என்பதாகும். அவனைத் தம் திருமடத்திலேயே மற்ற சீடர்களுடன் தங்குவதற்கு எம்பெருமானார் அனுமதித்தார். உறங்காவில்லி திருநாடு அலங்கரித்தபோது, எம்பெருமான் இராமாநுசரே தம் கரத்தால் ஈமக்கடன்களை ஆற்றினார். உறங்காவில்லியினுடைய மனைவி பொன்னாச்சி ஒரு தேவதாசி ஆவார். அவரையும் தம் தொண்டார் குலத்தில் ஒருவராக ஏற்றார், எம்பெருமானார். பொன்னாச்சி திருநாடு அலங்கரித்த காலத்திலும், எதிராசராகிய இராமாநுசரே தகனக் கிரியைகளைச் செய்தார்.
பாபாசாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மனிதர்களையும் உயர்நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதை நம்பியிருக்கின்றார். 'இந்துக்களுக்கு வேதம் வேண்டும் என்றபொழுது, சாதி இந்து அல்லாத வியாசர்தான் அதனை வகுத்திருக்கிறார். இந்துக்களுக்குக் காப்பியம் வேண்டும் என்றபொழுது, தீண்டத்தகாத வால்மீகிதான் தந்தார். இந்தியர்களுக்கு அரசமைப்புச் சட்ட வரைவியல் வேண்டியபொழுது, நான்தான் அதனைத் தந்தேன்' என்று முழங்கியிருக்கிறார், டாக்டர் அம்பேத்கர்.
ஒரு மாமரம் இனிப்பான பழங்களைத் தராவிட்டால், அதனோடு இன்னொரு உயர்ந்த மாமரக் கன்றை ஒட்டி, ஒட்டு மாமரம் ஆக்குவது போல், மனிதர்களையும் சமநிலைக்கு உயர்த்த முடியும். பாண்டங்களை மாற்றுவதைக் காட்டிலும் பண்டங்களை உயர்த்துவது நன்று.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.