முன்னொரு காலத்தில் அரசர்கள், சந்நியாசிகள் ஆனார்கள். இன்றோ சந்நியாசிகளே அரசர்கள் ஆகி வருகிறார்கள். பிறர்க்கு இலவச உபதேசம் சொல்பவர்கள் பெருகி விட்டனர். சொந்த மண்டபம் கட்டுவதில் எழுந்த நீதிமன்றச் சிக்கலைச் சந்தித்தவர், அமைச்சரை வைத்து சரிக் கட்டி விடுகிற 'சிஸ்டம்' சரி இல்லைதானே? ஆன்மிக அரசியலார் என்பவர்கள், ஆன்மிகவாதிகளிடம் அரசியல் பண்ணுவார்கள். அரசியல்வாதிகளிடம் ஆன்மிகம் பேசுவார்கள். ஆனால் இருவர் முன்னிலையில் சூப்பராக நடிப்பார்கள். இன்றைக்கும் தெருவிளக்கு இருட்டில் அவர்கள் நடந்து வரும்போது காலணியில் இருந்து நெருப்புப் பொறி பறக்க, வில்லன்களை துவம்சம் செய்துவிடுவார் என்று நம்புகிறார்களே.
'இந்த மன்னன் அறம் கெட்டவன். இவனுடைய இடத்தில் வேறு ஒருவனை நியமிக்கலாம்.' என்று மாறுவேடம் அணிந்த புரோகிதரின் ஒற்றர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கவேண்டும்.
இதற்கு இணங்காதவனே நேர்மையானவன் என்கிறார் சாணக்கியர். (அர்த்த சாஸ்திரம், பாகம் 1, அத்.10) முகநூல் வசதி இல்லாத காலத்தில் இவ்வித ரகசியக் கணக் கெடுப்பு உளவு முறை இருந்ததாமே. தர்மத்தின் பேரால் நடத்தப்படும் அறநிலைப் பரீட்சை .
இது தர்மோபதம், இதே முறையில் புரோகிதரிடம் பணத்தைக் காட்டி 'மன்னனைத் தொலைக்கவேண்டும்' என்று சோதிப்பது - அர்த்தோபதம்.
இவ்வகையில், அமாத்யர்கள் அல்லது அமைச்சர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் துறவிகளே ஈடுபட்டால் காமோபதம்; அதாவது அந்தப்புரத்தில் கௌரவம் பெற்ற சந்நியாசி ஒருவர், ஒவ்வொரு அமாத்யரிடமும் சென்று, 'அரசனின் மனைவி உன்னை விரும்புகிறாள்.' என்று கூறி ஒற்று அறிய வேண்டுமாம். சந்நியாசிக்கு நல்ல பணி?
இதே அத்தியாயத்தில், 'இந்த சந்யாச ஒற்றர்கள், விவசாய ஒற்றர்கள், வணிக ஒற்றர்கள் போன்றோர் எதிரி நாடுகளில் வசித்தபடி ஒற்றர்கள் பணி புரிந்து சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். இவர்கள் தங்கள் மன்னன் இடத்திலும் சம்பளம் பெறலாம்.
இவர்கள் இரண்டு சம்பளக்காரர்கள் என்கிறார் சாணக்கியர். (அர்த்த சாஸ்திரம், பாகம் 1, அத்.12) அப்படியானால், இன்றைய அரசியல்வாதிகள் இரட்டை வருமானம் பெறுவது நியாயம் என்கிறாரோ?
அவ்வாறே, அரசுப் பணத்தைக் கையாடல் செய்வதற்கு 40 வழிகள் இருப்பதாகப் பட்டியல் இடுகிறார். 'லஞ்சம் வாங்கிக் கொண்டு வரி வசூல் செய்யாமல் விட்டுவிடுதல்' 'மிக்க விலையுயர்ந்த பொருளை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் சாதாரண விலையுள்ள பொருளை வைத்தல்' (சில கோயில்களில் சாமி சிலைகள் விவகாரத்தில் நடந்தது போல) 'விலை நிர்ணயத்தில் ஏற்றத் தாழ்வு காட்டி மோசடி செய்தல்', 'எடைபோடும்போது ஏற்றத்தாழ்வு காட்டி மோசடி செய்தல்' என 40 திருட்டுக் கணக்குப் பாடம் நடத்துகிறார் சாணக்கியர். (அர்த்த சாஸ்திரம், பாகம் - 2, அத் - 8) நம் தலைவர்கள், வாயில் விரலைக் கொடுத்தால் கடிக்கத் தெரியாத பிஞ்சுக் குழந்தைகள் அல்லவா?
பாருங்கள், சாணக்கியர் ராஜநீதிப்படி, சொத்துக் குவிப்பு என்பது இருமடங்கு வரை அனுமதிக்கப்படுகிறதாம். (அர்த்த சாஸ்திரம் பாகம் - 2, அத் - 9) வருமானத்தை இருமடங்காகப் பெருக்கியவன் மக்களைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன். அந்த அதிகாரி அதிக வருமானத்தைப் பொக்கிஷத்தில் சேர்த்துவிட்டால், அவனைக் கண்டித்து விட்டுவிடலாம். குற்றம் பன்மடங்காக இருந்தால் மட்டுமே அவனைத் தண்டிக்க வேண்டுமாம். அர்த்த சாஸ்திர விதிப்படியே நம்மவர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.
அதே அத்தியாத்தில் ஊழலை நியாயப்படுத்தும் சூத்திரமும் இடம்பெறுகிறது. நாக்கின் மேல் வைக்கப்பட்து தேனோ, விஷமோ, ருசி பார்க்காமல் இருப்பது எப்படி இயலாத காரியமோ, அப்படியே பண விவகாரங்களைக் கையாளுகிற அதிகாரிகளும் கொஞ்சமாவது அரசாங்கப் பணத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள் என்று ஊழலுக்கு வக்காலத்து வாங்குகிறார் சாணக்கியர்.
ஏற்கெனவே குடும்பக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திய தென் மாநிலங்கள் தங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீட்டில் பிரச்சினை என்கிறார்கள். தமிழகம் (7.22 கோடி), கர்நாடகம் (11) கேரளம் (334), ஆந்திரப்பிதேசம் (493), புதுச்சேரி (0.12) ஆகிய மாநிலங்களின் இன்றைய ஜனத்தொகை ஏறத்தாழ 22 கோடி. வட மாநிலங்களில் மட்டும் ஏறத்தாழ 100 கோடி. ஆனால் இந்த மாநிலங்களின் ஜனத்தொகை வளர்ச்சி என்பது அபரிமிதம்.
பாருங்களேன், 1951ஆம் ஆண்டில் பிகார் (2.90 கோடி), தமிழ்நாடு (3.01) ஆகிய இரு மாநிலங்களின் ஜனத்தொகை ஒரே அளவாக இருந்தது. இன்றோ தமிழ்நாட்டின் ஜனத்தொகை இரண்டு மடங்கு (7.21 கோடி) ஆகி உள்ளது. அதே 60 ஆண்டுகளில் பிகார் ஜனதொகையோ மூன்று மடங்கு (10.41 கோடி) ஆகிவிட்டது. ஜனத்தொகையைப் பெருக்கிவிட்டு, பணத்தொகை அதிகம் கேட்டுப் பெறுகிறார்களோ? பெற்ற குழந்தையை இடுப்பில் ஏந்திச் சாலைகளில் குறுக்கே பிச்சை எடுப்பது யார் குற்றம்?
மன்னனுடைய ஒரே மகனும் துஷ்ட புத்திக்காரனாக இருந்து விடுவானேயானால், வேறு மகனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அன்றைய பிகாரின் சாணக்கியர். மன்னன், இப்படியெல்லாம் செய்யலாமே தவிர, நீதி நெறியறியாத தன் ஒரே மகனை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் மன்னனாக்கக் கூடாது என்கிறது அர்த்த சாஸ்திரம்.
இந்த ராஜநீதி நூலின் ஏறக்குறைய ஒரு மொழிபெயர்ப்பு வடிவமே திருக்குறளின் பொருட்பால் என்று புத்தகம் எழுதியவர்க்குப் பத்ம விருது உத்தரவாதம்.
பிரதமர் தொடங்கிவைத்த 10- ஆவது உலக இந்தி மாநாட்டில் பங்கெடுத்த ஜப்பானியர் ஒருவர், 30 ஆண்டுகளுக்கம் மேலாக ஒஸாகா பல்கலைக் கழகத்தில் இந்தி ஆசிரியர்.
'இந்தியர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் ஆங்கிலத்தில் உரையாடும்போது எனக்கு எரிச்சல் வருகிறது. இந்தி மொழியினை அவர்கள் இழிவாகப் பார்க்கின்றனரோ' என்பது போல உரையாற்றினாராம். (இண்டியன் எக்ஸ்பிரஸ், 12-9-2017, புதுதில்லி). அப்புறம் என்ன, பத்ம விருது வழங்கப்படவில்லை என்றால்தான் ஆச்சரியம்.
தஜகிஸ்தானில் தஜிக் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் மொழிகள் நிறுவனத்தின் சார்பில் துஷ்பான்பி நகரில் 2018 ஜனவரி 10 அன்று இந்தியக் கலாசார மையத்தில் 'விஸ்வ ஹிந்தி திவாஸ்' நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு பாரதப் பிரதமர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அந்த நிறுவனப் பேராசிரியருக்கு கல்வி - இலக்கியத்திற்குப் பத்ம விருது.
உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழிகளின் வரிசையில் மாண்டரின் (சீனம், 87.3 கோடி), இந்தி/உருது (57 கோடி), ஸ்பானிஷ் (33 கோடி), ஆங்கிலம் (32.8 கோடி), அரபி (23.2 கோடி), போர்த்துக்கீஸ் (22 கோடி), வங்கம் (20.3 கோடி), ரஷியன் (14.5 கோடி), ஜப்பானியம் (12.6 கோடி), பஞ்சாப் (10.9 கோடி) என்ற முதல் பத்து மொழிகளில் மூன்று இந்திய மொழிகள் இடம்பெறுகின்றன. 17ஆம் இடத்தில் தமிழ். இந்திய மொழிகளிலேயே 2004 ஆண்டு முதன் முறையாகச் செம்மொழி தகுதி பெற்றது தமிழ்.
உள்ளபடியே, சுதந்திர இந்தியாவின் அலுவலக மொழியாக உருது பதிவு செய்யப்பட்டு இருக்கும். பாகிஸ்தானியர் தமக்கென உருதுவை தேர்ந்தெடுத்ததால் இந்தியர் இந்தியை ஏற்கும்படி ஆயிற்று. இந்தி மொழிக்கு அதன் வளர்ச்சியின்போது, பல்வேறு கட்டங்களில் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. ஆரம்பக் கட்டத்தில் 'அபப்ரம்சா' என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியில் 'சிதைந்த'('Corrupted') அல்லது 'இலக்கண ஒழுங்கற்ற ('non - grammatical') என்று பொருள்.
1951 மே 11 அன்று குஜராத்தில் ப்ரபாஸ் பட்டாண் நகரில் 'சோமநாத் சமஸ்கிருத விஸ்வ பரிஷத்' அமைப்பிற்கு வித்து இடப்பட்டது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாடு, பாரம்பரியப் பெருமை காத்தல் போன்ற குறிக்கோள்களுக்கு 67 வயது. பிராகிருதம் பேச்சு வழக்கு மொழி. சமஸ்கிருதம் இலக்கிய மொழி. வேத மொழி. அதனாலேயே அசோகரின் ஆணைப்படி, புத்த மதக் கருத்துகள் பாலி, பிராகிருத மொழிகளில் பண்டைய இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளிலும் பரவின.
ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழி அழிந்துவிடும் என்று மொழியியலார் உரைக்கின்றனர். இன்றைய 30,000 மொழிகளில் ஆண்டுக்கு 10 மொழிகள் வீதம் செத்து விழுந்து கொண்டு இருக்கின்றன. மொழி அற்ற உரையாடல் அல்லது புதுமொழிக் கருத்துப் பரிமாற்றம் அடுத்த 3000 ஆண்டுகளின் பின் நிகழலாம்.
சொல்லப் போனால், 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதத்தினைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 14,135 இந்தியர்கள் மற்றும் 1,609 நேபாளியர்கள்.
கர்நாடக ஷிமோகா மாவட்டத்தில் மாத்தூர், மத்தியப் பிரதேசத்தில் ஆஜ்கார் மாவட்ட ஜீரி, ராஜஸ்தானில் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கனோதா, ஒடிசாவில் கெந்துஜார் மாவட்ட ஷியாம் சுந்தர்புர், மும்பையில் ஒரு குஜராத்திக் குடும்பத்தினர் என ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சமஸ்கிருதம் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது.
பழையன கழிந்துதான் புதியன தோன்றின . எல்லாமே அந்தக் காலச் செய்திகளைப் பின்பற்றுவதாக இருந்தால் இன்றைய தலைமுறைக்கு அவை உகந்ததாக இருக்க வாய்ப்பே இல்லை - அறிவியல் மற்றும் அறவியல் நீங்கலாக.
எந்த மொழியில் ஆகட்டும், என்ன தெரிந்து கொள்கிறோம் என்பதுதானே இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால். தொன்மையான மொழியில் புராண இதிகாசங்கள், காவியங்கள் படித்தாலும், இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பது முக்கியம் அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.