ரூபாய்: சரிந்த மதிப்பு உயருமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவு கடும் சரிவை சந்தித்துள்ளது. மே மாதம் 16-ஆம் தேதி ரூபாயின் மதிப்பு டாலருக்கு 68.07 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது.
உலக நாடுகளின் பல்வேறு கரன்ஸிகளின் அன்றாட மதிப்போடு ஒப்பீடு செய்துதான், இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த ஒப்பீடுகளில் சர்வதேச கரன்ஸியான அமெரிக்க டாலர்தான் முக்கிய இடம் பெறுகிறது. அதாவது சர்வதேச பணச் சந்தையில் ஒரு டாலரை வாங்குவதற்கு எவ்வளவு ரூபாய் தரவேண்டும் என்பதை பொருத்துதான், இந்திய ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. டாலரின் விலை இவ்விதமாக உயருகையில் ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணங்களால் சரிந்தது. எனினும் இந்திய ரூபாயின் மதிப்பு, முதல் முறையாக ரூ. 60-க்கும் அதிகமாக சரிந்தது 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்தான். பொருளாதாரச் சிந்தனையாளர்கள் இதனை ஓர் அபாய அறிவிப்பாகப் பார்த்ததில் வியப்பில்லை.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டில் மட்டும் 6.2 விழுக்காடு அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது கவலையளிக்கும் செய்தி. ஏற்கெனவே சர்வதேச அளவில், பல்வேறு ஆசிய நாடுகளின் கரன்ஸிகள் மதிப்பு இழந்துள்ளன என்றும், அவற்றில் இந்திய ரூபாயும் ஒன்று எனவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள், அதன் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவுக்கு காரணங்களாக அமைந்துவிட்டன.
முன்னதாக, சுமார் நான்கு ஆண்டு காலம் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைவாகவே இருந்து வந்தது. இது இந்தியா போன்ற, பெட்ரோலியப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஒரு வரமாக இருந்தது. அந்த நிலை இப்போது திடீரென மாறிவிட்டது.
பொதுவாக இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போதெல்லாம் இந்தியப் பண்டங்களின் ஏற்றுமதி அதிகரிப்பது வாடிக்கை. காரணம், இந்தியப் பொருள்களுக்கு வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் குறைவான டாலர்களை வழங்கினால் போதும் என்கிற நிலை இருக்கும். இப்போது ரூபாய் மதிப்பு குறைந்து, விலை குறைந்துள்ள போதிலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பது கவலையளிக்கும் விஷயம் மட்டும் அல்ல; அது ஏன் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தவும் வேண்டும்.
2018 ஏப்ரல் மாதம் இந்திய ஏற்றுமதி குறிப்பாக, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், ஆபரணக் கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது.
கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி கடந்த ஒரு ஆண்டில் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியின் மதிப்பு 10.4 பில்லியன் டாலராக (சுமார் ரூ.70,000 கோடி) அதிகரித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் 22-ஆம் தேதி பெட்ரோலிய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் கூட்டம் நிகழ உள்ளது. அப்போது பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயர்த்தப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் நிதி கொள்கை காரணமாகவும் வளரும் நாடுகளிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுகின்றன. இதனாலும் உள்நாட்டில் டாலருக்கு தட்டுப்பாடு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு சரிகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து அந்நிய முதலீடுகள் 15,500 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இந்தியாவில் வட்டி விகிதங்களைப் பொருத்தவரை, கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்திட வேண்டும் என்பதும், அப்போதுதான் வளர்ச்சி பெருகும் என்பதும் மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், ஏற்கெனவே பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி பெரிதும் தயங்குகிறது.
இந்த விஷயத்தில் ஆறுதல் அளிக்கும் அம்சங்களும் இல்லாமல் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் இறக்குமதி கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 விழுக்காடு தங்க இறக்குமதி குறைந்திருப்பது வரவேற்கத்தக்க நிகழ்வு. இது வர்த்தகப் பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய உதவும்.
கரிய மேகங்களுக்கிடையே ஓர் ஒளிக்கீற்று போல் விளங்குவது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாரம்பரியமாக தங்கள் தாய் நாட்டுக்கு தவறாமல் அனுப்பும் மாதாந்திரப் பணம். இந்தப் பணம் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடும்பங்களுக்காகவும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காகவும் அனுப்பும் பணம்; டாலரில் வரும் பணம். இந்தத் தொகையின் வரத்து குறைவதில்லை.
மாறாக, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு வருகிறது. உதாரணமாக, 2017-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணம் அதற்கு முந்தைய ஆண்டைவிட 9.97% அதிகம். அதாவது 2017-இல் அனுப்பப்பட்ட பணம் 69 பில்லியன் டாலர் (சுமார் ரூ.447 லட்சம் கோடி).
இதன்மூலம் உலகிலேயே, வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் தங்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் முதல் இடத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. பிலிப்பின்ஸ், மெக்ஸிகோ, பிரான்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எந்தெந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அதிகபட்சமாக பணம் அனுப்புகிறார்கள் என்பதை கணக்கிட்டால் மேற்கு ஆசிய நாடு, அதற்கு அடுத்தபடியாக ஆசிய நாடு, அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் வாழும் இந்தியர்கள் அதிகபட்சமாக இந்தியாவுக்கு பணம் அனுப்புகிறார்கள். இந்த 12 நாடுகளில் 6 நாடுகள் மேற்கு ஆசிய நாடுகள்.
இது ஒருவகையில் இந்திய ரூபாயின் மதிப்பை தாங்கிப் பிடிக்க உதவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, கவலை அளிக்கும் விஷயம், அதிகரித்து வரும் மின்னணுப் பொருள்களின் இறக்குமதி. 2011-12-இல் மின்னணுப் பொருள்களின் இறக்குமதி மதிப்பு 3.4 பில்லியன் டாலராக (சுமார் ரூ.23 கோடி) இருந்தது. இது 2016-17-ஆம் ஆண்டில் 42 பில்லியன் டாலராக (சுமார் ரூ.285 கோடி) அதிகரித்துவிட்டது. அதாவது 5 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இந்த இறக்குமதி சீனாவிலிருந்து நிகழ்ந்துள்ளது. இந்த விரும்பத்தகாத அதிகரிப்பு திட்டமிட்டு குறைக்கப்படாவிட்டால், மின்னணு இறக்குமதி மதிப்பையும் அடுத்த சில ஆண்டுகளில் தாண்டிவிடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
இந்திய ரூபாயின் சரிவு என்பது, மக்களை நேரடியாக பாதிக்கிறது. அவர்களது அன்றாடச் செலவு அதிகரிக்கின்றது. காரணம் பணமதிப்பின் சரிவு விலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. அடுத்து வட்டி விகிதம் அதிகரிக்கிறது. வியாபாரிகளை பெரிதும் பாதிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு, ரூபாய் மதிப்பு வீழ்வதைத் தடுத்திட, ரிசர்வ் வங்கி அவ்வப்போது தலையிடுவது உண்டு. அந்நிய செலவாணி கையிருப்பில் ஒரு பகுதியை, வங்கிகள் மூலம், அவ்வப்போது பணச் சந்தையில் விற்பது வழக்கம். இதனால் அந்நியச் செலவாணியின் புழக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் இடைக்காலமாக நிவாரணம் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எல்லா நேரங்களிலும் மேற்கொள்வதில்லை. காரணம், அந்நியச் செலவணியின் இருப்பு குறைந்துவிட்டால், நமது இன்றியமையாத இறக்குமதிக்கு பணம் இருக்காது. நாட்டின் உடனடித் தேவைக்கு வெளிநாட்டில் கடன் வாங்க நேரிடும். அதற்கான வட்டி பொதுமக்கள் தலையில் வரி வடிவத்தில் விழும்.
இதையெல்லாம் பார்க்கும்போது ஏற்றுமதியை அதிகரிப்பதுதான் மிகவும் முக்கியம். இதற்கு ஜி.எஸ்.டி வரியை திரும்ப அளிக்கும் நடைமுறையில் தற்போது நிகழும் தாமதங்கள் தவிர்க்கப்படவேண்டும். அந்தப் பணப்பட்டுவாடா துரிதப்படுத்தபட வேண்டும்.
இரண்டாவதாக, வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளை டாலரில் இந்தியாவுக்குக் கொண்டு வரும் வகையில், 'சாவரின்' அரசு பாண்டுகளை வெளியிடலாம். கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டு, வெற்றி பெற்ற திட்டம் இது.
1991-இல் 'இந்தியா டெவலப்மெண்ட் பாண்டு', 1998-இல் 'சர்ஜண்ட் இந்தியா பாண்டு' மற்றும் 2001-இல் 'இந்திய மில்லினம் டெபாசிட்' ஆகிய திட்டங்கள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டன. அவற்றில் சில குறைபாடுகள் இருந்தன என்றாலும், அவற்றில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் புதிய முதலீட்டுத் திட்டத்தை காலத்துக்கேற்ப வடிவமைத்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் வண்ணம் செயல்படுத்தலாம். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளும் கிடைக்கும்; பெரிய அளவில் டாலர் வரத்தால், டாலர் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு உயருவதும் சாத்தியம் ஆகும்.