சுவாமி விவேகானந்தர், பாரதத்தின் உயிர் நாடி ஆன்மிகம். சாந்தியையும் சமாதானத்தையும் எடுத்துக்கூறத் தகுதியுடைய நாடு பாரதம் மட்டுமே. பாரதம் அழிந்தால் சாந்தியும் சமாதானமும் இன்றி உலகு அழியும் என்றார். உலகின் மிகப்பெரிய மதங்களான கிறித்துவம்-இஸ்லாம் இடையே எழுந்த ஒன்பது சிலுவைப் போர்களால் (கி.பி. 711-1492) லட்சக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் மாண்டனர்.
கிறித்துவத்தில் உள்ள புராட்டஸ்டன்ட்- கத்தோலிக்கப் பிரிவினர்க்கிடையே 30 ஆண்டுகள் (கி.பி. 1618-1648) நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியில் மட்டும் 2000 அரண்மனைகள் 1800 கிராமங்கள், 1500 நகரங்கள் கொள்ளையிடப்பட்டன.
ஜெர்மானிய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேரும், செக்கோஸ்லாவியா நாட்டு மக்கள்தொகையில் 33 சதவீதம் பேரும் மரணத்தை தழுவினர். கிறித்துவம், தொல் சமயமான யூத மதத்தை கொத்து கொத்தாக அழித்தது.
இத்தாலி, ஆஸ்திரியா, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பேரழிவை சந்தித்தன.
நம் நாட்டில் இது போன்ற மதவழிப் போர்கள் நடைபெற்றதில்லை. காரணம், தாய் சமயமான இந்து சமயம் பெரும்பான்மை சமயமாக இருந்ததுதான். நம் முன்னோர் உலகையே ஒரு குடும்பமாக உருவகப்படுத்தினார்கள்.
புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நம் நாட்டில் பெரும்பான்மையோர் இந்து சமயத்தினர் என்பதால், அச்சமயத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.
மத வழி சிறுபான்மைப் பிரிவினர்க்கு கல்வியில், பணியில், பதவி உயர்வில் இன்ன பிறவற்றில் சலுகைகள் வழங்குவதற்கு என்றே அமைச்சகம் உருவாக்கப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே சிறுபான்மை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.
நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருப்பதால் சில மதப் பிரசாரகர்கள் அதனைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். தங்களது மதம் பரவ வேண்டும் என்பதற்காக, தங்களின் மதக் கூட்டங்களில், பிற சமய நம்பிக்கைகளை, கோயில்களை, கோயில் நகரங்களை, திருமடங்களை ஏளனம் செய்கின்றனர். இதனால் மத ஒற்றுமை வளராது. மாறாக, வெறுப்பும் கசப்புமே பல்கி பெருகும்.
ஒரு நாட்டின் தொல் விழுமியங்களை எல்லாரும் போற்ற வேண்டும். இதுநாள் வரை முன்னோர்கள் கட்டிக் காத்த மரபுகளை நாம் அழிக்கலாகாது. மேலைநாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் நம் நாட்டு மெய்ஞ்ஞானத்தை ஆய்வு செய்யும் இந்நாளில், புற சமயப் பரப்புரையாளர்கள் தாய் நாட்டு புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, தெய்வங்களை, மரபுவழி நடைமுறைகளைப் பரிகசித்தல் முறையன்று.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க மதத் தலைவர் போப் மும்பையில் கூறினார். முதல் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பாவை கிறித்துவ மதமாக்கினோம். இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவை மதம் மாற்றினோம். இப்போது மூன்றாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆசியா முழுவையும் கிறித்துவ மதமாக்க வேண்டும். இதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். இந்நாட்டின் மதச் சடங்குகளை நம் மதத்திற்குள் கொண்டு வரலாம் என்றார்.
இதனால்தான் சர்ச்சுகளில் குத்து விளக்கு ஏற்றுவது, கொடி மரம் நடுவது, தேர் பவனி நடத்துவது, துவராடை அணிவது, நேர்த்திக் கடன் செலுத்துவது, பாத யாத்திரை போவது போன்ற தாய் மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறார்கள்.
நம் நாட்டு கிறித்துவர்கள் இன்றும் ஒரு படி மேலே போய், அவர்களின் ஜெபப் பாடல்களை கர்நாடக இசையில் இசைக்கிறார்கள். தாய் சமய தெய்வ திருவுருவங்களை அவர்தம் பாணிக்கு ஏற்ப மாற்றவும் முனைகிறார்கள். முன்னைச் சுவடுகளை அழித்து அவர்தம் மதத்தடங்களை அமைக்கின்றனர்.
பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படும் சிவனைப் பெற்றவர் யாரும் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை மத கண்டனத்திற்கு உட்படுத்தல் சரியன்று. உலகெங்கிலும் மதமாற்றப் பணியில் முன் நிற்பவர்கள் கிறித்துவ மதப் பிரசாரகர்களே.
இவர்களின் பிரசாரம் தேசப்பிதாவைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை பட்லர் என்ற கிறித்துவர் காந்தியிடம் உபமானங்கள் என்ற நூலைத் தந்து படித்து விட்டுக் கருத்து கூறுங்கள் என்றார். காந்தியார் படித்து முடித்து விட்டு, கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே. கடவுளிடம் மனிதரைச் சேர்க்க வல்லவர் அவர் ஒருவரே என்பதை நிரூபிக்க கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனதை கவரவில்லை என்றார் (நூல்: சத்திய சோதனை).
தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கிறித்துவ மதப் பிரசாரகர் ஒருவர், எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்து விட்ட பாவங்கள் குறித்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வருந்திக் கொண்டு இருப்பது நீங்கள் சொல்லுவதில் இருந்து தெரிகிறது. உங்களுக்கு மன சாந்தியே இராது. எங்கள் மத நம்பிக்கை பரிபூர்ணமானது. பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தொடர்ந்து தாங்க முடியும்? அப்பளுவை நாம் ஏசு கிறிஸ்து மீது போட்டு விடத்தான் முடியும். அவரை நம்புகிறவரே நித்தியமான வாழ்வை அடைவார் என்றார்.
காந்தி அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே பல தவறுகளை அவர் செய்தார். அந்தத் தவறுகள் அவரை கவலைபடுத்தவில்லை என்பதை அவர் காட்டி விட்டார் என்று கூறினார் (நூல்: சத்திய சோதனை).
இதுபோன்றே சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றும்போது, நாங்கள் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ளோம். இம்மாநாட்டில் தினசரி கர்த்தரை ஏற்றுக் கொள்பவனே செழிப்பான் எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள். அவ்வாறு செழிப்படைந்த இங்கிலாந்து நாட்டை நாங்கள் கூர்ந்து நோக்குகிறோம். நீங்கள் அடைந்துள்ள செல்வம் கர்த்தரால் வழங்கப்பட்டது அல்ல. அவை 25 கோடி ஆசிய மக்களின் குரல்வளையை நெரித்துப் பெற்ற செழிப்பே என்பது எங்களுக்குத் தெரியும்.
கிறித்துவ ஐரோப்பாவின் செல்வம், மேற்கிந்திய தீவுகளையும் மெக்ஸிகோ நாட்டின் பூர்வகுடி மக்களையும் கொள்ளையடித்ததால் பெறப்பட்ட செல்வம் என்பதும் சரித்திர பூர்வமாக எங்களுக்குத் தெரியும் என்று முழங்கினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சமயப் பூசல், போர், பஞ்சம், பசி, நோய் இவற்றின் காரணமாக கடல் கடந்து அமெரிக்க நிலப்பரப்பை அடைந்தார்கள் ஐரோப்பிய கிறித்தவர்கள். அமெரிக்க சிவப்பிந்தியர்கள் இவர்களை வரவேற்று உபசரித்து, தங்க இடமும், உண்ண உணவும், குளிரிலிருந்து தப்பிக்க கம்பளி ஆடைகளையும் வழங்கினர். இதனை டேனியல் சி.சாண்டர்ஸ் என்ற அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை சிவப்பிந்தியர்கள் அறிந்திராத மதுவைத் தந்து, அவர்களை மதம் மாற்றி அவர்களது பண்டை நாகரிகங்களை, கிரேக்க, ரோமானிய கலாசாரங்களை அழித்ததுபோல அழித்து விட்டனர். எதிர்த்தவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாயினர். சுவாமி விவேகானந்தரும் அமெரிக்கா சென்றார். அந்நாட்டு மக்களின் மனதை வென்றார். எப்படி? அவர்களிடத்து மந்திர, தந்திர உத்திகளைக் காட்டியோ, அற்புதங்கள் நிகழ்த்தியோ அல்ல. அவர்களின் உண்மையான ஆன்மிக, ஞானத் தேடலுக்கு தொல்சமய மெய்ஞ்ஞானத்தை வழங்கினார். இதனால், கற்றறிந்த மக்கள் அவரைத் தங்களின் அவதார புருஷராக ஏற்றுக் கொண்டனர்.
பாரத மெய்ஞ்ஞானம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியது என்பது மிகையல்ல. 1642-இல் உலகம் உருண்டை என்று சொன்ன மேலை நாட்டு விஞ்ஞானிக்கு கிறித்துவ மதத்தலைமை கடுந்தண்டனை வழங்கியது. பாரத நாட்டு விஞ்ஞானி கி.பி. 499-லேயே பூமி உருண்டையானது, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அதற்கான கால அளவு 23:58:04 மணித்துளிகள். பூமி சூரியனை சுற்றி வர 365 நாள் ஆகிறது என்று கூறினார்.
பாஸ்கல் விதியையும், ஆர்க்கமிடீஸ் தத்துவத்தையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுணர்ந்தவர்கள். உடல் உறுப்பு சிகிச்சைகளை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே நடைமுறைப் படுத்தியவர்கள் இந்நாட்டுத் தவ சீலர்கள்.
விண்ணியல், மண்ணியல், சித்திரவியல், சிற்பவியல், கட்டடவியல், நீரியல், உழவியல் கடல் கடந்த வணிகவியல் போன்ற துறைகளில் மட்டுமல்லாது பூஜ்யத்தையும் கண்டவர்கள்.
இதனால்தான் இந்நாட்டின் தொன்மை சமயத்தை லியோ டால்ஸ்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹஸ்டன் ஸ்மித், பெட்ரன்ட் ரஸல், பெர்னார்ட் ஷா போன்ற உலகின் தலைசிறந்த அறிஞர்கள் போற்றி மகிழ்ந்தனர்.
ஆனால், மதம் மாற்றுவதையே குறிக்கோளாக கொண்ட மதப் பிரசாரர்கள் தொல் சமயத்தை மதிக்க மறந்து மனித நேயம் வளர்க்கத் தவறுகிறார்கள். மனம் போனபடி மாற்றுச் சமயங்களை இகழவும் செய்கிறார்கள். இனியாவது தொல் சமயத்தை மதிப்போம்; மத நல்லிணக்கம் காப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.