நடுப்பக்கக் கட்டுரைகள்

காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம்

இந்திய நோபல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன் மறைவுக்கு ஏழாண்டுகள் முன்னரே அவரது சீடர்களான டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஜோமி ஜே. பாபா போன்றோரால் உயிர்த்து

நெல்லை சு. முத்து


இந்திய நோபல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன் மறைவுக்கு ஏழாண்டுகள் முன்னரே அவரது சீடர்களான டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஜோமி ஜே. பாபா போன்றோரால் உயிர்த்து எழுந்தது இந்திய விண்வெளித்துறை.
1988 நவம்பர் 7 அன்று பிறந்த சி.வி. ராமன், 1970 நவம்பர் 21 அன்று காலமானார். 1963 நவம்பர் 21 அன்று இந்திய மண்ணில் இருந்து முதலாவது வானிலை ஆய்வூர்தி நைக்கி அப்பாச்சி விண்ணில் சீறிப் பாய்ந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்பு 1967 அக்டோபர் 25 அன்று நம் நாட்டிலேயே தயாரித்த உந்து எரிபொருளால் ரோகிணி -75 விண்ணில் செலுத்தப்பட்டது. ஏறத்தாழ 7 கிலோ எடை. வெறும் 2.5 கிலோ கிராம் எரிபொருளால் ஏழு கிலோமீட்டர் உயரம் வரை பறந்தது.
கடந்த வாரம் (நவம்பர் 14 ) இந்தியாவின் ஜிஎஸ்எல்வி - மார்க் 3 என்கிற 640 டன் வாகனம் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் ஜிசாட்-29 என்கிற 3,430 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளினைச் சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது. 
இந்திய விண்வெளி வளர்ச்சியை உலக நாடுகள் கண்கூடாகக் கண்டு வருகின்றன. ஆங்கிலத்தின் ஏவியேசன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி, இன்டர்வியா, பிசினஸ் அண்ட் டெக்னாலஜி, சுவிட்சர்லாண்ட் அண்ட் சிஎஸ்ஐஆர்ஓ ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி நியூஸ் போன்ற பல்வேறு உலக விண்வெளிப் பத்திரிகைகள் இந்திய விண்வெளி சாதனையைப் பாராட்டி உள்ளன.
விண்வெளியில் தவழும் பருவத்தில் அயல்நாட்டின் பாலிவினைல் குளோரைடு எரிபொருளைக் கையாண்டோம். பின்னர் கார்பாக்சி வினைத்தொகுதி அடங்கிய பாலிபியூட்டா - டையீன் வகை பாலிமர் எரிபொருள்களால் எழுந்து நின்றோம். 
நாம் கூட 1979-80-ஆம் ஆண்டுகளில் சில எஸ்எல்வி-3 பயணங்களில் மட்டுமே இதனைக் கையாண்டோம். பின்னர் ஹைடிரக்சி வினைத்தொகுதி கொண்ட பன்கூறு எரிபொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பு. இந்த வகை எரிபொருள் கொண்ட கனம் மிக்க உந்துபொறி, பிரெஞ்சு நாட்டு ஏரியான் ஏவுகலனில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதற்கு அடுத்த இடம் இந்தியாவிற்குத்தான்.
ஜிஎஸ்எல்வி-மார்க் 3-யின் இரண்டு திட உந்து ஊக்கிப் பொறிகள் ஒவ்வொன்றும் 200 டன் என்றால் சும்மாவா? இந்த கனகர ஏவுகலன் உதவியால், நான்கு டன் எடையுள்ள செயற்கைக்கோளினை 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் புவி நிலைவட்டப் பாதையில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடலாம்.
வேண்டுமானால், 250-400 கிலோ மீட்டர் தாழ்புவி வட்டப்பாதையில் விண்சுற்று நிலையங்கள் கட்டமைக்க இந்த ஏவுகலன் போதும். இது எட்டு டன் எடையை அனாயாசமாகத் தூக்கிச் செல்லும்.
ஏற்கெனவே இந்த 200 டன் திட உந்து பொறிகள் (ஜிஎஸ்எல்வி-மார்க்) ஏவுகலனில் 110 டன் திரவ உந்து பொறியுடனும், திரவங்களற்ற கிரையோஜெனிக் கலனுடனும் சிஏஆர்இ (கேர்) என்ற திட்டத்தின் கீழ் 2014 டிசம்பர் 18 அன்று பரிசோதிக்கப்பட்டவை. கேர் என்னும் விண்வெளிக் கூடு மீட்புப் பரிசோதனை, 2017 ஜூலை 5 அன்று தனது முதல் வளர்ச்சிப் பயணத்தில், திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் பொறியுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டது.
இந்த இரண்டாம் பயணத்தில், மீண்டும் அதிகுளிர் திரவ ஹைடிரஜன் - திரவ ஆக்சிஜன் மிகப் பொருத்தமான எரிபொருள் ஜோடியினால் இயங்கும் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஆரம்பத்தில் ரஷியர்களிடம் வாங்கி நாம் கற்றுக்கொண்டது 7.5 டன் தொழில்நுட்பம். அத்தகைய கிரையோஜெனிக் பொறியினை தொடர்ச்சியாக 400 நொடிகளுக்கு மட்டுமே இயக்க முடியும். ஆனால் நம் கிரையோஜெனிக் பொறியினை இடைவிடாது 640 நொடிகளுக்கு இயக்கலாம். நில வாகனங்களைக் கையாள்வது போல, பொறியினை அணைத்து மீண்டும் இயக்கும் நுட்பம் அது. 
இன்று இந்திய மண்டலப் பயண அமைப்பியல் செயற்கைக்கோள் முறைமைத் திட்டத்தின்கீழ் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1பி ஆகியவை புவி ஒத்தியக்கச் சுற்றுப்பாதையில் அரேபியாவின் மேலாக (55 பாகை கிழக்கு தீர்க்கரேகையில் ) 29 பாகை சாய்மானத்தில் நில நடுக்கோட்டினைக் கடக்கின்றன. அதே 55 பாகை கிழக்கு தீர்க்கரேகை மேல் இயங்கும் வகையில் ஜி சாட்-29 அனுப்பப்பட்டு உள்ளது. 
அரபு நாடுகளின் மேல் சாய்வாகப் பறந்தபடி இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள், ஜம்மு - காஷ்மீர் பகுதிகளின் அடர்ந்த மலைகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கும் தகவல் பரிமாற்றம் நடத்த இயலும் என்பது இன்னொரு முக்கிய விண்வெளி வியூகம்.
இத்திட்டத்தின் ஏழு செயற்கைக்கோள்களின் பயன்பாட்டில் ஜி சாட்-29 உறுதுணை செய்யும். நாவிக் என்கிற அந்த அமைப்பின் செயற்கைக்கோள்களை 11 ஆக உயர்த்தும் எண்ணமும் உள்ளது. இதற்கு வசதியாக இந்தச் செயற்கைக்கோளில் லேசர் தகவல் தொடர்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. லேசர் கற்றை வழியே தகவல் பரிமாறும் தொழில்நுட்பங்கள் உலகின் இரண்டு நாடுகளில் மட்டுமே நடைமுறையில் இருந்தன. 
1992-ஆம் ஆண்டு அமெரிக்கா, வியாழன் கோளுக்கு அனுப்பிய கலிலியோ விண்கலம், அண்டவெளியில் பறந்தவாறே லேசர் ஒளிக்கற்றை வெளிச்சத்தில் புவிநிலையத்தினைப் பார்த்து மகிழ்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ஆர்த்திமிஸ், பிரெஞ்சு நாட்டு ஸ்பாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணைச் சுற்றியபடியே முதன்முறையாகத் தங்களுக்குள் அண்டவெளி இருட்டில் லேசர் ஒளிவீசி, கண்சிமிட்டிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டன. 
2011-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நிலா உளவு சுற்றி (லூனார் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர்) 3,90,000 கிலோ மீட்டர் தொலைவில் நிலா சுற்றுப் பாதையில் பறந்தபடி பூமியை நோக்கி ஒரு புன்னகை பூத்தது. மோனலிஸா ஓவிய பிம்பத்தை அனுப்பியது.
நம் ஜிசாட்-29 செயற்கைக்கோளின் லேசர் தகவல்தொடர்புக் கருவி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சிறப்பு அம்சம். அண்டவெளியில் இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையே தகவல் பரிமாற உதவும். 
இதற்கென மில்லி மீட்டர் அலை நீள் மின்காந்த வரிசை கையாளப்படுகிறது. உள்ளபடியே, 5-25 மில்லி மீட்டர் அலை நீள மின்காந்த அலைகளை உற்பத்தி செய்யும் கையடக்கமான கருவியைக் கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ் என்பது சிறப்புச் செய்தி. 
2012 செப்டம்பர் 14 அன்று இந்தக் கண்டுபிடிப்பு மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் நிறுவனம், மில்லி மீட்டர் அலைவரிசைப் பரிசோதனைகளில் இந்தியாவில் முதலாவது நிறுவனம் ஆகும் என்று அங்கீகரித்து உள்ளது. 
ஜகதீச சந்திர போஸ் 1858 நவம்பர் 30 அன்று பிறந்தவர். 1917 நவம்பர் 23 அன்று கல்கத்தாவில் இவர் தமது இல்லத்தினை ஒட்டினாற்போல் எழுப்பிய போஸ் நிறுவனம், நூற்றாண்டு கண்டுவிட்டது. அதன் 20-ஆம் ஆண்டு விழா நாளில், 1937 நவம்பர் 23 அன்று இயற்கை எய்தினார் போஸ். நவம்பர் 23 விஞ்ஞான உலகில் நினைவுகூரத்தக்க தினம் அல்லவா? 
இன்றைக்கு 5 ஜி அலைவரிசை செல்லிடபேசிகள் நுட்பத்திலும், அண்டவெளியில் இயங்கி வரும் செயற்கைக்கோள்களிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கும் உதவும் அதி உயர் அதிர்வெண் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கண்டுபிடிப்பு இது. 
செல்லிடபேசியில் வேண்டுமானால் 2 ஜி, 3 ஜி என்று 5 ஜி வரை தகவல் பரிமாறலாம். ஆனால் ஜிசாட்டின் தகவல் பரப்பு வேகம், நொடிக்கு 100 ஜி. இதன் வழியே, 500 பக்கம் கொண்ட 1,00,000 புத்தகங்கள் அடங்கிய மகா நூலகத் தகவல்களை முழுமையாகப் பரிமாறலாமே.
ஏற்கெனவே இத்தகைய அதிவேகத் தகவல் பரிமாற்றத்திற்கென வியாசாட் 1 என்ற செயற்கைக்கோள் 2011 அக்டோபர் 11 அன்று புரோட்டான் ஏவுகலனால் புவிநிலை வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது. அதன் தகவல் வேகம் 140 கிகாபைட் என்ற அளவில் கின்னஸ் சாதனை படைத்தது. இதன் உதவியினால் விமானத்தில் பறந்தபடி இணைய தளங்களில் மேயலாம். 
வியாசாட் 1 என்பது, அமெரிக்க வியாசாட் இன் கார்ப்பரேஷன் என்கிற ராணுவ-வணிக தகவல் தொடர்பு நிறுவனமும், கனடாவின் டெலிசாட் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. ஆனால், தனிநாடாக இந்த 100 கிகாபைட் ஜிசாட்-29 தயாரித்த வகையில் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். 
இதன் அலைபரப்புத் தகவல்களை தரவகக் கோல் (பென் டிரைவ்), மடிக்கணினி ஆகிய எதிலும் திருட்டுக் கையை விட்டு எந்தக் கொம்பனாலும் களவாட இயலாது. அவ்வளவு பாதுகாப்பானது.
இந்த ஜிஎஸ்எல்வி - மார்க் ஏவுகலன் 2019 ஜனவரி 30 அன்று நிலா ஊர்தியுடன் சந்திரயான்-2 என்கிற 4 டன் சஞ்சீவி பர்வதத்தினை ஏறத்தாழ 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலாவுக்கே சுமந்து செல்ல இருக்கிறது. 
அப்புறம் என்ன, இதே வாகனத்தில் இந்திய விண்வெளி வீரர் மூவருடன் அண்டவெளிக்குப் பயணம் மேற்கொள்ளும் ககன்யான் திட்டமும் 2022-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்படும்.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT