நடுப்பக்கக் கட்டுரைகள்

புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை

மனிதன் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மகத்தானமானவை, பேசும் மொழியும் எழுதும் எழுத்தும்தான்.

சா.கந்தசாமி

மனிதன் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மகத்தானமானவை, பேசும் மொழியும் எழுதும் எழுத்தும்தான். அவற்றை விஞ்சும்படியாவோ, ஏன் அவற்றுக்கு இணையாகவோகூட எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
பேசும் மொழி என்பது வெறும் ஒலி கிடையாது. அது தன்னுள் இருக்கும் அளவற்ற அறிவையும் ஞானத்தையும் சொல்வது; மனத்தை நெகிழ வைப்பது; சுட்டுப் பொசுக்குவது; கடவுள் அருளை வேண்டி மனம் இரங்கப் பாடுவது; கட்டளை இடுவது; தண்டனை வழங்குவது. பேச்சால் நல்லதும் செய்யலாம், கெட்டதும் செய்யலாம். எனவேதான் கனிவாகப் பேச வேண்டும் என்று காலங்காலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால், எது கனிவான பேச்சு? இது பற்றி நிறைய கேள்விகள் வந்து விடுகின்றன. கெட்ட காரியங்களை தனி மனிதர் செய்தாலும் அரசு செய்தாலும் அதனை எதிர்த்துப் பேசுவது கனிவான பேச்சுதான்.
சரித்திரம் நெடுகிலும் பொது நலனில் ஈடுபாடும் சமூக அக்கறையும் கொண்டு, பலரும் அரசாங்கத்தின் அநீதிகளை எதிர்த்துப் பேசிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையான மனித நேயர்கள்; தேசபற்று மிக்கவர்கள். ஆனால், சுயநலவாதிகளும் சர்வாதிகாரிகளும் அவர்களை தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டி நீதிமன்றத்தின் வழியே தண்டிக்கிறார்கள். அவர்கள் நஞ்சுண்டு சாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறார்கள்.
நீதிமன்றம் சொல்வதாலேயே ஒருவன் தேச துரோகியோ, குற்றவாளியோ கிடையாது. குற்றம், தண்டனை என்பதெல்லாம் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டவை. மெசபடோமியா மன்னன் ஹம்முராபி, அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியன், மனு தர்மம் எழுதிய மனு இப்படிப் பலர் காலம் முழுவதிலும் இருக்கிறார்கள். அல்டாஃப் ஹிட்லர், மகிந்த ராஜபட்ச என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நல்ல காரியங்கள் செய்யப்போவதாகச் சொல்லி அமைந்த அரசு, தீமை புரிவதற்கு என்றே அமைந்தது போலாகி விட்டது. அரசுகள், எளிய மக்களை வதைப்பதையும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதையும் நீதியின் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டே வருகின்றன.
ஒன்று போல் இருக்கும் மனிதர்கள் எல்லாரும் ஒன்றில்லை. சமூக நலனில் அக்கறை கொண்டவர்களும் அநீதியைப் பொறுக்க முடியாதவர்களும் பேசவும் எழுதவும் முன்வருகிறார்கள். பேச்சு, கேட்கும்போது சுடுமென்றால், எழுத்து, எப்பொழுதும் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும். எழுத்து என்பது அணையாது கனலை வீசிக் கொண்டே இருக்கும். எனவேதான் எழுதப்பட்ட புத்தகத்திற்கு எல்லாரும் பயப்படுகிறார்கள். 
மூவாயிரம் ஆண்டுகளாக, புத்தகங்களை அழிப்பதும் நெருப்பில் போட்டு எரிப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்கு நாடு, மொழி, இனம் வேறுபாடு கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது என்று கருதும் புத்தகங்களைப் பறிமுதல் செய்து தீயிட்டு கொளுத்துகிறார்கள்.
அவர்கள் கூறுகிறார்கள்: புத்தகம், அரசாங்கத்தின் இறையாண்மையை கேள்வி கேட்கிறது. அரசியல் சாசனத்தை நிந்தனை செய்கிறது. வன்முறையைத் தூண்டுகிறது. பொது அமைதியைக் குலைக்கிறது. இப்படியெல்லாம் எழுத யாருக்கும் உரிமை இல்லை. இப்படி எழுதும் எழுத்தாளர்கள் நாட்டின் விரோதிகள். சுதந்திரமாக இவர்களை நாட்டில் உலவ விடக் கூடாது. இவர்கள் தங்களின் சொந்த லாபத்திற்காக சுதந்திரம் வேண்டி பேசியவர்களோ எழுதியவர்களோ இல்லை. மனித சமூகம் முழுவதற்கும் சுதந்திரம் வேண்டியவர்கள். இவர்கள் தேச துரோகிகள் என்கிறார்கள்.
அரசு என்பது தண்டனைக் கொடுக்கக் கூடியது என்பதை ஹம்முராபிடம் கற்றவர்கள், தண்டனைதான் சமூகத்தைச் சரியாக வைத்திருக்கும் என்று நம்புகிறார்கள். எனவேதான் தண்டனை கொடுக்க அதிகாரிகளையும், தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்ட பணியாளர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
அசலான தேசபக்தர்கள், உண்மையான சிந்தனையாளர்கள், மகத்தான கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் - இப்படி சமூக நலம் சார்ந்தவர்களைத் தண்டிப்பது வழக்கமாக இருக்கிறது. அது சர்வாதிகார நாட்டின் செயல்பாடு என்று சொல்ல முடியாது. எல்லா நாட்டின் செயல்பாடுகளும் அப்படித்தான். அதில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும் இடம் இருக்கிறது. மொகலாயர்கள் ஆண்ட இந்தியாவிலும், பிரிட்டிஷ்காரர்களின் இந்தியாவிலும்கூட இடம் இருந்தது.
அரசாங்கம் எப்பொழுதும் சர்வாதிகாரிகளின் கைகளில்தான் இருக்கிறது. சில சர்வாதிகாரிகள் வெளிப்படையாகத் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். பலர் கமுக்கமாகக் காரியங்கள் செய்து தங்களை மறைத்துக் கொள்வார்கள். 
நல்ல குடிமக்கள் என்போர், தேர்தலில் வாக்களிப்பவர்கள்; நேர்மையாக வரி கட்டக் கூடியவர்கள்; நன்றாக படித்து வேலைக்குச் செல்பவர்கள்; பிள்ளைகளின் கல்விக்காகப் பள்ளிக்கூடங்களுக்கு அலைகிறவர்கள்; தொலைக்காட்சியில் அரசியல் கட்சிகளின் மூன்றாம் தர விவாதங்களைக் கேட்டுக் கொண்டு அடிமை வாழ்வு வாழ்கிறவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த பிம்பத்தை உடைத்து, தங்களின் அரசு எதேச்சதிகார அரசு; சுதந்திரம் சமத்துவம் செயல்பாட்டில் இல்லை. ஏழை, எளிய மக்களை அரசு ஏமாற்றுக்கிறது. பெரிய பெரிய வண்ண பதாகைகளை சாலை நெடுகிலும் வைத்துக் கொண்டு மிரட்டுகிறது என்பதையெல்லம் எழுதினால் தேச துரோக வழக்கு; அவதூறு வழக்குப் போடுகிறது. சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்தே மக்களை அடக்க அரசு பல சட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.
அதுதான் மகாகவி பாரதியாரை, சென்னையில் வாழ விடாமல் புதுச்சேரிக்கு விரட்டியடித்தது. அவர், பத்தாண்டுகள் அரசியல் பற்றி பேசவும் எழுதவும் முடியாமல் முடக்கப்பட்டார். பாரதியார், 1910-ஆம் ஆண்டில் கனவு என்ற பெயரில் கவிதை வடிவில் தன் சுய சரித்திரத்தை எழுதினார். சொந்தப் பணம் போட்டு புத்தகமாகக் கொண்டு வந்தார். அப்போது அந்நூலின் விலை மூன்றணா. 
படைப்புக்கு விலையே கிடையாது. காகிதம், மை, அச்சுக்குத்தான் விலை உண்டு. படைப்புக்கு விலையென்பது படிகிறவர்கள் பெறும் லாபந்தான். புத்தகங்கள் படித்ததாலேயே பலர் புரட்சியாளர்களாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். அதைத்தான் அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
பிரிட்டிஷ் அரசு, பாரதியாரின் கனவு புத்தகத்தில், தேச துரோக கருத்துகள் உள்ளன என்று அறிவித்து, அந்நூலை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடை போட்டது. 
பாரதியார் காலமான பின்னர் அவர் மனைவி, பாரதியாரின் கவிதைகள் சிலவற்றைத் திரட்டி நூலாக வெளியிட்டார். அப்போது அதில் வந்த சொற்ப வருமானம்தான் அவர் வாழ்வாதாரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா, 1928-இல் பாரதியாரின் கவிதைகள் இறையாண்மைக்கு எதிராக உள்ளன. 
அவை தேச துரோகத்தை ஊக்குவிக்கின்றன என்று கூறி அந்நூலுக்குத் தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசும் அந்நூலுக்கு தடை போட்டது. புத்தகங்களைப் பறிமுதல் செய்ததது.
புத்தகம் எழுதிய ஆசிரியர்களின் கையைவெட்டுவது, அவர்களைத் தூக்கில் போடுவது, நாடு கடத்துவது, சிறையில் அடைப்பது - இவற்றாலெல்லாம் கருத்துப் பரவுதலைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. எழுதப்பட்ட புத்தகத்தை அழிப்பதால் அது இல்லாமல் போவதில்லை.
தேசப்பற்று, இறையாண்மை இவையெல்லாம் இயற்கையானவையல்ல. மனிதர்களின் கற்பனையே. ஒரு சமயத்தில் இருந்து பின்னர் இல்லாமல் போவது. ஒரு சிந்தனையாளனை, படைப்பாளியை அரசாங்கத்தின் அரசியல் சாசனத்தால் அளவிட முடியாது.
சட்டத்திற்கும் ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாது. சட்டம் பொது அமைதியை ஏற்படுத்த மனிதர்களே ஏற்படுத்திக் கொண்ட விதி. அது மாற்ற முடியாதது இல்லை. மாற்றக் கூடியது. ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் சாசன சட்டம் அடிக்கடி மாற்றப்படுகிறது.
அமெரிக்கச் சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்ஸன் அரசாங்கம் வேண்டுமா? எழுத சுதந்திரம் வேண்டுமா என்று கேட்டால், நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார்.
இந்த நூற்றாண்டில் தொழில்நுட்பம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து விட்டது. சர்வாதிகார ஆட்சியின் முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர் என்று பாராட்டப்பட்டவரின் பத்திரம் பறிக்கப்படுகிறது. 
பெயர் பெற்றவர்களும் புகழ் பெற்றவர்களும்தான், சுதந்திரம், சமத்துவம், மனித உரிமை, சமூக நீதி இவற்றைப் பற்றி பேச உகந்தவர்கள் என்பது இல்லை. 
மக்கள் விரோதிகள்தான், பொது நலன் சார்ந்து பேசுகிறவர்களை சிறையில் அடைப்பார்கள். அவர்களின் புத்தகங்களை அழிக்க முற்படுவார்கள்.
புத்தகங்கள் சாகாவரம் பெற்றவை அவற்றை எந்தவொரு சக்தியாலும் அழித்து ஒழித்து விட முடியாது. சரித்திரம் அதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT