நடுப்பக்கக் கட்டுரைகள்

மறைந்திருக்கும் மருந்துகள்

எல்லா உயிரினங்களுமே அறிவு பெற்றிருக்கின்றன. தத்தமக்கு உள்ள புலன்களின் வாயிலாக அவை ஒன்று, இரண்டு என்று ஆறுவகையான அறிவுப் பகுப்பினைப் பெற்றுள்ளன.

அருணன் கபிலன்

எல்லா உயிரினங்களுமே அறிவு பெற்றிருக்கின்றன. தத்தமக்கு உள்ள புலன்களின் வாயிலாக அவை ஒன்று, இரண்டு என்று ஆறுவகையான அறிவுப் பகுப்பினைப் பெற்றுள்ளன.
உணர்ந்து கொள்ளக் கூடிய உடம்பிலிருந்து தொடங்கி, வாய், மூக்கு, கண், செவி என்னும் உடல் உறுப்புகளைப் பெற்று மனிதன் விலங்கொடு விலங்காகவே தோன்றுகிறான்.
பின்னர் மனம் என்னும் ஆறாவது புலன் வளர வளர அவனுக்குள் உள்ள விலங்கு நிலை மறைந்து நல்லறிவு தோன்றி மனித நிலைக்கு ஆளாகிறான். ஆனபோதும் ஏனைய ஐந்தறிவு உயிர்களைப் போலவே உடலமைப்பினைப் பெற்றிருப்பதால் உண்டு, உறங்கி, இயங்கி உயிர் வாழ்கின்றான்.
இந்த உடல் விலங்கு நிலைக்கு இணையானது. இயற்கையோடு இயைந்து இயங்கும் தன்மையுடையது. அதனால் சூழல் மாறுபாட்டிற்கேற்ப அவ்வுடல் மூப்பு, பிணி முதலியவற்றை எய்துகிறது. அத்தகைய உடலை அவ்வப்போது பற்றும் பிணிகள் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப் போக்கு முதலியன. இதற்கான மருந்துகள் மனிதர்களின் உணவுப் பொருள்களோடு கலந்த இயற்கை நிவாரணிகளாகவே விளங்கின. 
அவற்றுள் தனித்த மருந்துப் பொருள்களும் உண்டு. பல மருந்துகள் சேர்ந்த கலவை மருந்துகளும் உண்டு. இவை மனித உடலுக்கு நேரக்கூடிய நோய்களிலிருந்து காப்பாற்றி நல்ல குணத்தையும், முழு நலத்தையும் அளிக்க வல்லவை. மனிதன் வளர வளர அவனுடைய உடலைப் போலவே மன உணர்வுகளும் வளரத் தொடங்கின. உடலைப் போலவே மனத்திற்குள்ளும் நோய்கள் புகுவதை மனிதர்கள் கண்டுணர்ந்தார்கள்.
காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம் என்னும் ஐந்து பிணிகளைப் பஞ்சமா பாதகங்கள் என்கின்றன இலக்கியங்கள். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்று அவற்றுள் நான்கைச் சுட்டி, இவற்றைத் தவிர்த்ததே அறம் என்கிறது திருவள்ளுவம். உடலை வருத்திய நோய்களைப் போலவே மனத்தை இந்த நோய்கள் அரிக்கத் தொடங்கியபோதுதான் மனித அறிவு அறத்தைத் ஆராயத் தொடங்கிற்று. 
இன்பமான வாழ்வின்போது இனிய இயற்கைக் காதல் சூழலை வெளிப்படுத்திய தமிழ் இலக்கியங்கள், மனத்தின்பால் ஏற்பட்ட மாசுகளால் உண்டாகிய நோய்களுக்கு வேண்டிய மருந்தாக அற இலக்கியங்களை இயற்றத் தொடங்கின. உடல் நலனுக்கு உதவுகின்ற மாமருந்துகளைப் போலவே மன நலத்துக்கு உதவும்படி இந்த அற இலக்கியங்கள் இன்றும் நலம் பரப்பி வருகின்றன. ஆனால், நாடி நலம்பெறுவோர்தான் குறைவு. 
மனித உடலின் மிக முக்கியமான உறுப்புக் கருவி பற்கள். இவற்றைப் பாதுகாக்க ஆலும் வேலும் துணை செய்யும் என்கின்றன மருத்துவ நூல்கள். அதுபோலவே மனத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களை உறுதியாக்க இரண்டு அடிகளால் அமைந்த திருக்குறளும், நான்கு அடிகளால் அமைந்த நாலடியாரும் பயன்படுகின்றன.
சுக்கு, மிளகு, திப்பிலி என்று மூன்று மருந்துப் பொருள்கள் ஒன்றாகக் கலந்து செய்யப்படும் கலப்பு மருந்து, உடலின் வாத, பித்த, கப நாடிகளைக் கட்டுப்படுத்தி உடல்நலத்தை நல்குகிறது. மூவா மருந்து என்றும் திரிகடுகம் என்றும் பெயர் பெற்ற அம்மருந்துகளைப் போலவே மனத்திற்குத் தேவையான மூன்று அருமையான அறக் கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் கொண்டு திரிகடுகம் என்றே ஒரு நூல் அமைந்துள்ளது. 
மனித உடலுக்கு இன்னின்னவை இனியவை என்றும் இன்னாதவை என்றும் மருத்துவக் குறிப்புகள் வலியுறுத்துவதைப் போலவே மனத்திற்கு உரிய இனியனவற்றையும் இன்னாதனவற்றையும் பற்றிய நாற்பது நாற்பது பாடல்களைக் கொண்டு இனியவை நாற்பது என்றும் இன்னா நாற்பது என்றும் இரண்டு நூல்கள் அறம் புகட்டுகின்றன.
பல உடற்பிணிகளுக்குப் பழமே மருந்தாவதைப் போல, மனப்பிணிகளை நீக்கத் தகுந்த சான்றுகளைக் காட்டும் பழமொழிகளாலாகிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ள பழமொழி நானூறு என்னும் நூல் பழுத்த அறம் கற்பிக்கிறது. எல்லா நோய்களுக்கும் பொதுவான மருந்தாகத் திகழ்வது பஞ்சமூலம் என்னும் கலவை மருந்தாகும். 
பஞ்சம் என்றால் ஐந்து, மூலம் என்றால் வேர். கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களையும் கலந்து செய்யப்படும் மருந்து உடல் நலத்திற்கு உறுதியாகிறது. அதுபோலவே மனித மனத்திற்குத் தேவையான ஐந்து மூலமான அறக்கருத்துகளை எடுத்துக் கூறும் நூலாக சிறுபஞ்சமூலம் விளங்குகிறது. ஏலத்தை (ஏலக்காய்) முதலாகக் கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஏனைய ஐந்து மருந்துப் பொருள்களும் உடன்சேர்ந்து கலந்து செய்யப்படுவது ஏலாதி என்னும் மருந்து. இந்த ஆறு பொருள்களும் உடலின் இயற்கைத் தன்மையை நிலைக்கச் செய்கின்றன. இதனை அடியொற்றியே அரிய ஆறு அறக்கருத்துகளை ஒவ்வொரு பாடல்களிலும் கொண்டு தோன்றியது ஏலாதி என்னும் அற இலக்கியம்.
இன்றைய காலத்தில் உடலுக்கு ஏற்படுகிற நோய்களுக்கும் சரி, மனத்தில் ஏற்படுகிற நோய்களுக்கும் சரி, மருந்துக் கடையும், மருத்துவமனையும் மருத்துவருமே கதியெனக் கிடக்கிற நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். 
அருந்தமிழ் நூல்களில் உடலுக்கு மருந்து உணவிலும் உளத்துக்கு மருந்து உணர்விலும் அறமே வடிவாய் ஒளிந்து கிடக்கிறது. யாவும் தமிழ் நூல்களில் மறையாகவே கிடைக்கிறது. தேடிக் கண்டடைந்தால் உடலையும் மனத்தையும் உலகத்தையும் சேர்த்து ஒருசேரப் பேணிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT