நடுப்பக்கக் கட்டுரைகள்

இயற்கைப் பேரிடரின் எச்சரிக்கை!

அண்மையில் வீசிய "கஜா' புயல் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாகச் சேதப்படுத்தி விட்டது.

உதயை மு. வீரையன்

அண்மையில் வீசிய "கஜா' புயல் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாகச் சேதப்படுத்தி விட்டது. உயிர்களையும், பயிர்களையும், தாவரங்களையும் சூறையாடிவிட்டது. உயிர்களில் மனித உயிர்களும், ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும் அடங்கும்.
 கஜா புயல், நவம்பர் 16-இல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் கரையேறி, 110 கி.மீ. வேகத்தில் தாக்கியுள்ளது. இந்தப் புயல் ஓர் இடத்தைக் கடந்து செல்ல இரண்டரை மணி நேரம் வரை எடுத்துக் கொண்டது. இந்த நேரத்தில் எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.
 புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கணக்கெடுக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாதிப்புகளைத் தாங்க முடியாமல் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்களும் தொடர்கின்றன. கால்நடைகள் மற்றும் கோழி முதலிய பறவையினங்களின் அழிவு பற்றிய கணக்கெடுப்பு முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.
 நீண்ட காலப் பயிரான தென்னை மரங்கள் அடியோடு சேதம் அடைந்துள்ளன. பலன் தரும் மரங்களான மா, பலா, கொய்யா, முந்திரி, எலுமிச்சை போன்றவையும், பணப் பயிர்களான தேக்கு, சவுக்கு போன்றவையும் அதிக எண்ணிக்கையில் சேதம் அடைந்துள்ளன.
 பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்த்து எறியப்பட்டுள்ளன. ஏராளமான மின் கம்பங்கள் முறித்து எறியப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மின் கோபுரங்கள் நொறுங்கி சாய்ந்துள்ளன. இதனால், மின் விநியோகம் இல்லாமல் கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் இணைப்பு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு எங்கும் நிலவுகிறது.
 ஒவ்வொரு முறையும் இயற்கைத் தாக்குதலிலிருந்து புதுப்புதுப் பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். 2004-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டையே புரட்டிப்போட்ட "சுனாமி' என்னும் ஆழிப் பேரலையை மறக்க முடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பெருவெள்ளம் சென்னை மாநகர மக்களை நடுங்கச் செய்யவில்லையா?
 அடுத்து வந்த வர்தா புயலும், ஒக்கி புயலும் கற்றுக் கொடுத்த பாடத்திலிருந்து வேறுபட்டு "கஜா' புயல் புதியதோர் அதிர்ச்சிப் பாடத்தை - அழிவுப் பாடத்தை அளித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்ததாகக் கூறப்பட்டாலும், மக்களின் அவலத்தைத் தடுக்க முடியவில்லை.
 புயல் அடித்துப் பல நாள்களாகியும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதுமான உணவும், நிவாரணப் பொருள்களும் ஒழுங்காகப் போய்ச் சேரவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிடுகின்றனர். சாலை மறியல் செய்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்புகின்றனர்.
 பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரூ.1000 கோடியை விடுவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதை எல்லா மக்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் கூறுகின்றனர். யானைப் பசிக்குச் சோளப் பொரி என்ற பழமொழியை எடுத்து வைக்கின்றனர்.
 கடந்த நவம்பர் 22 அன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர், புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடிக்கான கோரிக்கையை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணமாக ரூ.1500 கோடியும் இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது. மத்திய அரசாங்கம் இதனைப் பரிவோடு பரிசீலிக்க வேண்டும்.
 பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7 பேர் கொண்ட அந்தக் குழு, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மூன்று நாளில் முடித்துக் கொண்டது.
 கஜா புயல் தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், சீரமைப்புப் பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுவதாகவும் மத்திய குழுவின் தலைவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம் என்றும், அதன்பின் மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசின் வல்லுநர் குழு ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், புயல் சேதங்களை ஆய்வு செய்த மத்திய குழு இரு நாள்
 களில் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதைப் பரிசீலித்து தமிழக அரசுக்கு வழங்கும் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளச் சேதத்துக்கு தமிழகம் கேட்டது ரூ.25,912 கோடியே 45 லட்சம். ஆனால், மத்திய அரசு அளித்தது ரூ.1,759 கோடியே 55 லட்சம்தான். 2016-ஆம் ஆண்டு வர்தா புயலின்போது தமிழக அரசு கேட்டது ரூ.22,573 கோடியே 26 லட்சம். மத்திய அரசாங்கம் அளித்தது ரூ.1,793 கோடியே 63 லட்சம்தான். இதுபோலவே கடந்த ஆண்டு ஒக்கி புயலுக்காக ரூ. 9,302 கோடி நிவாரணம் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.413 கோடியே 55 லட்சம்தான் வழங்கியது.
 இந்நிலையில், இப்போது தமிழக முதலமைச்சர் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளார். மத்திய அரசாங்கம் மாநில தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் மட்டும் நிதி ஒதுக்கினால் தமிழகம் கேட்கும் நிதியைத் தர முடியாது என்பது வெளிப்படை.
 பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், மத்திய அரசாங்கத் துறைகளிலிருந்தும் ஒதுக்கீடு பெறுவதோடு பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தனியாகச் சிறப்பு நிதி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றப் பிரச்னைகள் காரணமாக மிகுந்த இயற்கைச் சீற்றங்களை கடலோர மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.
 கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நமது நாட்டில் பருவ நிலை மாற்றப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மையம் தெரிவித்துள்ளது.
 உலக அளவில் இயற்கைச் சீற்ற இழப்புகளால் 3 டிரில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்டுள்ள இழப்பீடுகள் முந்தைய 20 ஆண்டுகளைவிட 120 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
 கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் பருவ நிலை மாற்றச் சீற்றங்களால் 1.3 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். 44 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தும், காயமடைந்தும் உள்ளனர். இத்தகைய நடைமுறைச் சூழலில் பெரும் வெள்ள பாதிப்பைச் சந்திக்க நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் போதிய தயாரிப்பில் இல்லை.
 அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெரும் இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து நம் வேளாண்மை, கால்நடைகள், கட்டமைப்புகளைப் பாதுகாக்க இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய முன்னறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
 தமிழ்நாடு மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது. அப்பகுதியில், சுமார் 25 விழுக்காடு மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மதச் சிறுபான்மையினர். கடந்த பல தலைமுறையாகக் கடல் வளத்தை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் பருவநிலை மாற்றப் பிரச்னைகளால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களைப் பல காலமாகச் சந்தித்து வருகின்றனர்.
 கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தாக்கிக் கடும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமியை அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலுமா? அதன் பாதிப்புகளை கடலோர மாவட்டங்களில் இன்றளவும் பார்க்க முடியும்.
 "சுனாமி' பாதிப்புகளில் இருந்து தப்பிய விலங்குகள் கால்நடைகள், பறவைகள் பற்றிய செய்திகள் போதுமான அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. அப்போதைய குழப்பமான சூழலில் அவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை. நமது கடலோர மக்கள் பாரம்பரியமாகப் பின்பற்றி வரும் பருவநிலை மாற்றங்கள் பற்றி தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.
 இப்போது இயங்கும் செயற்கைக்கோள் மற்றும் வானிலைக் கருவிகள் உதவியுடன் கிடைக்கும் வானிலைத் தகவல்களைப் பெற்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்பட்டால் கடலோர மக்களை இயற்கைச் சீற்றத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
 சுற்றுச்சூழல் கேடுகளால் பூமி வெப்பமாகிக் கொண்டு இருக்கிறது. அதிகளவு மாசுகளால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு ஐ.நா. அறைகூவல் விட்டால் மட்டும் போதாது. உலக நாடுகள் பொறுப்போடு செயல்படுத்திட முன்வர வேண்டும். இதற்காகக் கூட்டப்படும் உலக மாநாடுகள் கூடிக் கலையாமல் தொடர் செயல்திட்டங்களை வகுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT