தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் நேரடியாக பலப் பரீட்சை நடத்தும் மாநிலம் என்பதால் மட்டுமல்லாது, கடந்த ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவும், காங்கிரஸூம் மாறி மாறி ஆட்சியில் உள்ள மாநிலம் என்பதாலும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள
சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ராஜஸ்தான் மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு தேசியக் கட்சிக்கு உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள் என்பது அந்த மாநிலத்தின் கூடுதல் சிறப்பு.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் என்பதாலும் பாஜகவும், காங்கிரஸூம் முழுவீச்சில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் அவரது ஆட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தி அலை மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் உயர்ஜாதிப் பிரிவினர் என இரு தரப்பினருமே ராஜஸ்தான் அரசு மீது அதிருப்தியில் இருப்பதை அண்மை நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
முக்கியமாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தை மாற்றி உச்சநீதிமன்றம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்சி, எஸ்டி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக மாநில போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தனர்.
இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவமும் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு மீது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஷாஜகான்பூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது மாநில அரசு மீது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் அதிருப்தியைப் போக்கும் வகையில் அதே கிராமத்தில் அம்பேத்கர் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மற்ற எந்த மாநிலத்தையும் விட, ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாக்கு பாஜகவுக்கு மிகவும் முக்கியம். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்த மாநில மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட பிரிவினர்; 13 சதவீதம் பேர் பழங்குடியின பிரிவினர். மேலும், அங்கு மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34 தொகுதிகள் எஸ்சி, எஸ்டி-களுக்கான தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டவை.
கடந்த 2013 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த 34 தொகுதிகளில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸூக்கு வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று கூற முடியாது என்றாலும், காங்கிரûஸவிட பாஜகவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவு தலைவர்களுக்கு அப்போது மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது என்பதை மறுக்க முடியாது.
2013 சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் ஆதரவும் ஒரு காரணம். ஆனால், இப்போது சூழ்நிலைகள் மாறிவிட்டதால், பாஜக எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ளும் என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
அடுத்ததாக, பாஜகவின் முக்கிய வாக்குவங்கியாகக் கருதப்படும் உயர்ஜாதி பிரிவில் வருபவர்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் வசுந்தரா ராஜே ஆட்சி மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் சேர்த்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றியது, ராஜஸ்தானைச் சேர்ந்த பிராமணர், ராஜபுத்திரர், ஜெயின் சமுதாயத் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு இந்த சட்டத்தை இயற்றியதை எதிர்த்து உயர் ஜாதி பிரிவினர் ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் பாஜக அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த விஷயத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவலே போன்ற பாஜக கூட்டணியில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவு தலைவர்களின் மிரட்டலுக்கு பாஜக பணிந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜஸ்தானில் பிராமணர், பனியா, ஜெயின் சமூகத்தினர் முக்கிய சக்தியாக விளங்கும் கோட்டா உள்ளிட்ட சில பகுதிகளில், அந்த சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ-க்களிடம் உயர்ஜாதிப் பிரிவினர் மனுக்களை நேரடியாக அளித்து அதிருப்தியை பதிவு செய்தனர்.
ராஜஸ்தானில் பெரும்பாலும் ஜாதி வாக்குதான் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறது.
பொதுவாக அங்கு ஜாட், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மற்றும் முஸ்லிம்கள் காங்கிரஸின் வாக்கு வங்கியாகும். ராஜபுத்திரர்கள் பாஜகவின் முக்கிய ஆதரவாளர்கள். இது தவிர பிராமணர்கள், பனியா, ஜெயின் சமூகத்தினரிடையே இரு கட்சிகளுக்கும் ஆதரவு உள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவில் தங்களைச் சேர்க்க கோரி வரும் குஜ்ஜார்களும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மீனா சமூகத்தினரும் இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருப்பார்கள்.
இப்போதைய சூழ்நிலையில் மாநிலத்தில் பல்வேறு சமூகத்தினரும் வெவ்வேறு காரணங்களால் ஆளும் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும் டிசம்பர் மாதம் வரை தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. தேர்தல் உத்திகளை வகுப்பதில் வல்லவராக கருதப்படும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கடைசி கட்டத்தில் கையில் எடுக்கும் உத்திகள், இந்த கணிப்புகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.
இதற்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலே சிறந்த உதாரணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.