நடுப்பக்கக் கட்டுரைகள்

தாய்மொழியில் அறிவியல் வளர்ப்போம்

இந்தியாவில் நவீனக் கல்வி முறை அறிமுகமானதில் கிறித்தவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகீஸ், டச்சு, டேனியம் ஜெர்மானியம் ஆகிய பல மொழிகள் அறிந்த

நெல்லை சு. முத்து

இந்தியாவில் நவீனக் கல்வி முறை அறிமுகமானதில் கிறித்தவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகீஸ், டச்சு, டேனியம் ஜெர்மானியம் ஆகிய பல மொழிகள் அறிந்த அலெப்போ  என்ற மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இந்தியாவில் தமிழ் கற்றவர் சீகன்பால்கு என்கிற கிறித்தவப் பாதிரியார். அவர், இந்து சமயம் மீது மரியாதை கொண்டு தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள், புராணங்கள் பலவும் கற்று உணர்ந்தார். 
சீகன்பால்கு பாதிரியார் வேண்டிக் கொண்டதன் பேரில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1713-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சகம் ஒன்று தொடங்கப்பட்டது. 1716 -ஆம் ஆண்டு, சீகன் பால்கு தமிழ் - லத்தீன் ஒப்பிலக்கண ஆய்வுத் தொகுதியை வெளியிட்டார். 1717- ஆம் ஆண்டு, சென்னையிலும் கடலூரிலும் டேனிய நாட்டுக் கிறித்தவத் தொண்டர்களால் தோற்றுவிக்கப்பட்ட பள்ளிகளிலும், 1770- ஆம் ஆண்டு தஞ்சை, இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட கல்விக்கூடங்களிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ்வழிக் கல்வி போதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜெர்மன் லூத்தரன் திருச்சபையைச் சேர்ந்த ஃபிலிப் ஜோஹான் ஃபப்ரீஷியஸ் என்ற பாதிரியாரின் பங்களிப்பு அறிவியல் தமிழில் முக்கியத்துவம் பெற்றது. அவரே இன்றைய கிறித்தவத் தமிழின் முன்னோடி. அவரது உழைப்பினால் 1799- ஆம் ஆண்டு மலபார் இங்கிலீஷ் டிக்ஷனரி எனும் முதலாவது ஆங்கில - தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. 
ஜெர்மனியைச் சேர்ந்த சி.டி.இ. ரேனியஸ் பாதிரியார் - லண்டனில் உள்ள தேவாலய ஊழியர் சங்கத் தீர்மானத்தின் படி 1814 ஜூலை மாதம் சென்னை வந்து இறங்கினார். கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒத்துப் போகும் சென்னை ஆங்கலிகன் சபை தமிழகத்தின் சாதி பேதங்களை அனுசரித்து வந்ததை இரேனியஸ் பாதிரியார் விரும்பவில்லை. அதனால் அவர் தாழ்த்தப்பட்ட மக்களையும் திருச்சபையில் சேர்ப்பதிலும், அவர்களுக்கு கல்வி புகட்டுவதிலும் தனிக்கவனம் செலுத்தினார். 
சீகன் பால்கு, அன்டிரீக்ஸ், ராபர்ட் டி நொபிலி போன்றோருக்கு தமிழ் கற்பித்த தமிழறிஞர்கள் பெரும்பாலும் அந்தணர்கள். இரேனியஸ் பாதிரியாருக்குத் திருப்பாற்கடல் நாதன் என்கிற வைணவ வேளாளர் தமிழ் கற்பித்ததாகத்தெரிகிறது. 
கிழக்கிந்திய கம்பெனிச் சட்டம் 1813-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தால் திருத்தப்பட்டது. அதன்படி, இந்தியர் கல்விக்காக ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாம். 1814-ஆம் ஆண்டு சென்னையில் மதபோதனைக்காக இரேனியஸ் பாதிரியார் சிறுசிறு துண்டுப் பிரசுரங்கள் வழி சமயக் கருத்துகளைப் பொதுமக்களிடையில் எளிதில் பரப்பலாம் என்று கருதினார். அதற்காகவே 1818 செப்டம்பர் 29 அன்று (சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்) சென்னை துண்டறிக்கை சங்கத்தை நிறுவினார். தாம் எழுதிய துண்டறிக்கைகளை பாமர மக்களிடம் படித்துக் காட்டுவதற்காக கிறிஸ்தியான் என்பவரை நியமித்தார்.
இவரது முயற்சியினால் முதன்முதலில் 1931-ஆம் ஆண்டு தமிழ் மாகஸின் என்ற முதலாவது அறிவியல் தமிழ் இதழ் வெளியானது. 1830 -ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்ப் பயிற்சிமொழித் திட்டம் தமிழகப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டது. அறிவியல் நூல்களைத் தமிழாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துண்டறிக்கைச் சங்கம் 1832- ஆம் ஆண்டு இரேனியஸ் தமிழில் எழுதிய பூமி சாஸ்திரம் என்ற முதல் அறிவியல் நூலினை வெளியிட்டது. அது இருநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட நூல். அட்டையில், பூமி சாஸ்திரம் - இந்தப் பூமியினுடைய தன்மையையும் அதிலுள்ள கண்டங்களையும் சமுத்திரங்களையும் தீவுகளையும் அவைகளிலுள்ள ஆளுகை வகை முதலானவைகளையும் அந்தத் தேசத்தாருடைய சரித்திரங்களையும் விவரித்துக் காட்டியது - தமிழருக்கு அறிவுண்டாகும்படி பாளையங்கோட்டையிலுள்ள இரேனியுசையராலே செய்யப்பட்டது - சென்னப்பட்டினத்திலே சார்ச்சி மிசியோன் அச்சுக் கூடத்திற் பதிக்கப்பட்டது என்றும் அதன் அடியில் பதிப்பித்த ஆண்டு தமிழ் எண் உருக்களிலேயே 1832 என்றும் அச்சிடப்பெற்று உள்ளது.
1834-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் சுப்ரீம் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் முக்கிய உறுப்பினரான மெக்காலே பிரபு 1835 பிப்ரவரி 2 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சாரம் இது: என்னைப் பொருத்தமட்டில் இந்தியாவில் பிச்சைக்காரர்கள் என்று யாரும் இல்லை. திருடர்களையும் பார்க்க முடியாது. அத்தனைக்கு செல்வம் படைத்தவர்கள், உயர்ந்த அற ஒழுக்கமும், உயர்ந்த விழுமியங்களும் உடையவராக இருக்கிறார்கள். அதனால் இந்நாட்டின் முக்கிய முதுகெலும்பான ஆன்மிக, கலாசாரப் பாரம்பரியத்தை உடைத்து எறிந்தால் ஒழிய இந்தியாவை நம்மால் கீழடக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆதலால் அந்நாட்டின் பழைய, தொன்மையான கல்வி முறையை மாற்றி அமைக்கப் பரிந்துரைக்கிறேன். 
அந்நியக் கல்வி முறையும், ஆங்கிலமும் தங்கள் கல்வி, மொழி அமைப்புகளை விட நன்மையானதும், மேன்மையானதும் என்று அவர்கள் நினைத்தால் மட்டுமே தங்கள் சுய மதிப்பையும் சொந்த கலாசாரத்தையும் இழப்பார்கள். அதன் பின்னர் நாம் விரும்பியபடி நம் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடாக மாறிவிடும். மெக்காலே அறிக்கையின்படி இங்கு ஆங்கிலம் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வியும் தடையின்றித் தொடர்ந்தது. அன்றைய சென்னபுரியை (சென்னை) பொருத்த மட்டில் ஏழை மாணவர்களுக்காக 1842- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பள்ளிக் கூடங்களில் தமிழும் தெலுங்கும் பயிற்று மொழிகள் ஆயின. பள்ளிக்கான நூல்கள் வெளியிட சென்னை பள்ளிப் பாடநூல் கழகம் 1850-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
அறிவியல் தமிழ்ப் படைப்புகளில் கையாளப் பெறும் கலைச்சொற்கள் பெரும்பாலும் வடமொழி வார்த்தைகளாகவே அமைந்தன. இதழ், நூல்களின் தலைப்புகள் மட்டுமன்றி, மொழிநடையும் அவ்விதம் வடமொழி கலந்தே இருந்தது. எடுத்துக்காட்டாக, பூர்ண சூர்ய கிரஹண விவரம் (1871) என்ற நூலில், இப் பூர்ணச் சாயையின் மத்திய ரேகையானது யவன சமுத்திரத்திலிருந்து விரிந்து தேசத்தின் பச்சிம கடற்கரையில் பிரவேசித்து, தக்ஷிண ஹிந்து ஸ்தாபனத்தைக் கடந்து மன்னார் ஜலசந்தியைத் தாண்டி, யாழ்ப்பாணத்திற்குப் பத்து மைல் தென்மேற்காகவும் இலங்காதிவீபத்திற்கு வட பாகத்திலும் செல்லும் என்று உள்ளது. அந்நாளில் புரிந்து கொள்ளப்பட்ட அறிவியல் தமிழ் இது. இருபதாம் நூற்றாண்டை, அறிவியல் தமிழின் புது மலர்ச்சி காலம் எனலாம். உரைநடையின் வளர்ச்சிப் போக்கும், நவீன அறிவியலின் முன்னேற்றங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் வெகுவாகப் பதிவாயின.
இராமநாதபுர மன்னர் பாண்டித்துரை தேவர் 1902- ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தினைத் தோற்றுவித்தார். 
அதன் வெளியீடாக - மு. ராகவையங்காரை ஆசிரியராகக் கொண்டு செந்தமிழ் என்னும் சஞ்சிகை வெளிவந்தது. அதில் அறிஞர்கள் ராஜாஜி, பால்வண்ண முதலியார், சுப்பிரமணிய முதலியார், சுப்பிரமணிய ஐயர், ராம கிருஷ்ண ஐயர், மறைசிவ சிதம்பர ஐயர், வி. நரசிம்ம ஐயங்கார், சி. கணேச ஐயர், சுவாமிநாத ஐயர், சோம சுந்தர தேசிகர், வி.எஸ். அருணாச்சலம் பிள்ளை , வெ. சாமிநாத சர்மா, ஆர்.எஸ். நாராயணசாமி போன்றோர் அறிவியல் கட்டுரைகள் எழுதினர்.
அதே காலகட்டடத்தில் திருநெல்வேலியில் தமிழர் கல்விச் சங்கம் ஒன்றும் உருவானது. அறிவியலை தமிழில் தர வேண்டும் என்ற முனைப்பில் - நீதிபதி சதாசிவம், அ. மாதவையா, அ. ரங்கசாமி, சி.ஆர். சீனிவாசன், எஸ். பவானந்தம் போன்ற தமிழறிஞர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு அது. அதன் வெளியீடாக, 1917 ஜூலை மாதம் தமிழர் நேசன் என்னும் முதலாவது நவீன அறிவியல் தமிழ் இதழ் வெளிவந்தது.
இதில், பௌதிக சாஸ்திரம், பூதத்துவ சாஸ்திரம், உயிர் நூல், தாவர நூல், வேதிய நூல், வான சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், ஜீவ சரிதைகள், தமிழ்ச் செல்வர், கவிகள், கதைகள் பொது அறிவுச் செய்திகள், அறிவுநூல் மொழிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளும் செய்திகளும் இடம்பெற்றன.
அந்நிய மொழியில் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதால் நமது குழந்தைகளுக்கு மூளைச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. அது நமது குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிய நிர்ப்பந்தத்தை விளைவித்திருக்கிறது. எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணுபவர்களாகவும், சுயமாகச் சிந்திக்கவோ, செயல்படவோ தகுதி அற்றவர்களாகவும் செய்து விட்டது. தாம் பெறும் அறிவை மக்களுக்கோ, தம் குடும்பத்தினருக்கோ திருப்பிச் சொல்லிக் கொடுக்க முடியாதபடியும் செய்து விட்டது. அந்நியப் போதனா மொழி காரணமாக நமது குழந்தைகள் தம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போலாகி விட்டனர் என்று காந்தியடிகள் கவலையுற்றார் (யங் இந்தியா, 1-9-1921). 
நம் நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் வளர வேண்டும். உலக அரங்கில் இந்தியா உயர்வு பெறவேண்டும் என்பது அப்துல் கலாம் கண்ட கனவு. அறிவியலுக்கு நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. ராமன் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. அது அறிவியல் மட்டுமே என்று கூறியதே உண்மை.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு). 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT