நடுப்பக்கக் கட்டுரைகள்

கற்பதனால் ஆகும் பயன்? 

எதைக் கற்கிறோம்? எதற்காகக் கற்கிறோம்? எதைக் கற்றுத்தருகிறார்கள்? ஏன் கற்றுத் தருகிறார்கள்? 

முனைவர் ம. இராசேந்திரன்

எதைக் கற்கிறோம்? எதற்காகக் கற்கிறோம்? எதைக் கற்றுத்தருகிறார்கள்? ஏன் கற்றுத் தருகிறார்கள்? 
எதைக் கற்கிறோம்? எதற்காகக் கற்கிறோம்? என்பதில் கற்பவரின் விருப்பமும் நோக்கமும் கற்றலுக்கான காரணங்களாக இருக்கின்றன.
எதைக் கற்றுத் தருகிறார்கள்? ஏன் கற்றுத் தருகிறார்கள் என்பதில் கற்றுத்தருபவரின் விருப்பமும் நோக்கமும் காரணங்களாக இருக்கின்றன.விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்பப் பாடத்திட்டமும் பயிற்று முறையும் கட்டுப்பாடும் அமைகின்றன. பாடத்திட்டத்திலும் பயிற்று முறையிலும் கட்டுப்பாடு யார் கையில்இருக்கிறதோஅவர்களே மற்றவர்களின் கல்வி உரிமையைக் கையில் வைத்திருக்கிறார்கள். 
அப்படியென்றால் நமது கல்வி உரிமை யாருடைய கையில்?
போர்த்துக்கீசியர்கள், கைத்தொழில், வேளாண்மை, கணிதம், கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் ஆகியவற்றைப் பாடத்திட்டங்களாக்கித் தொடக்கப் பள்ளிகளை டையூ, டாமன் பகுதிகளில் நிறுவியபோது அங்குள்ள பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். 
கோவாவில் 1575 -இல் இலத்தீன் மொழி, இறையியல், தருக்கம், போர்த்துக்கீசிய இலக்கணம் ஆகியவற்றைப் பாடத்திட்டங்களாக்கிக் கல்லூரி தொடங்கியபோது, கல்லூரி மாணவர்களின் கல்வி உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார்கள். 
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1813 -ஆம் ஆண்டு இந்தியச் சட்டம் புதுப்பிக்கப்பட்டபோது, இந்திய மக்களின் அறிவியல் வளர்ச்சிக்காகவும், கல்விக்காகவும் ஒரு இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த மாதிரியான கல்விக்கு என்று குறிப்பிடவில்லை. இந்தியமுறைக் கல்விக்கா? அல்லது மேல்நாட்டுமுறைக் கல்விக்கா? எல்லார்க்குமா? அல்லது குறிப்பிட்ட உயர் சாதியினரின் உயர் கல்விக்கு மட்டுமா? தாய்மொழிவழிக் கல்விக்கா? அல்லது ஆங்கிலம்வழிக் கல்விக்கா? என்பதில் தெளிவு தேவைப்பட்டது. தெளிவாக்கும் பொறுப்பு மெக்காலேயிடம் தரப்பட்டது.
ஆங்கிலேயரின் விருப்பத்துக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப ஆங்கிலக் கல்விமுறைக்கு ஆதரவாக மெக்காலே அறிக்கை தந்திருக்கிறார். தேசபக்தர் கோபாலகிருஷ்ண கோகலே மைய சட்டப் பேரவையில் 1901-இல் கட்டாயக் கல்விக்குக் குரல் கொடுத்துள்ளார்.
சர் தாமஸ் இராலே தலைமையில் 1902 -இல் பல்கலைக்கழகக் கல்வி குறித்து வரையறுக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி, 1904 -இல் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்த விதியின்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி, பல்கலைக்கழகங்களை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் தீர்மானங்களுக்கு அரசின் உடன்பாட்டைப் பெற்றாக வேண்டும். இவ்வாறு கல்லூரிகளுக்கும் பாடத்திட்டங்களுக்கும் பயிற்று முறைகளுக்கும் அனுமதி அளிக்கும் கல்வி உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
செம்ஸ் போர்டு, 1917 -இல் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்விக்கு ஒரு குழுவை அமைத்து, கல்வி உரிமையை நிலைநாட்டிட வழிதேடியிருக்கிறார்.
ஆங்கிலேயே அரசு இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்திய பின் 1935 -இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி, பாதுகாப்பு தவிர ஏனைய துறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 
இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்தியக் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற காந்தியின் கல்வித்திட்டம், 1937- இல் வார்தா மாநாட்டில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஏழு ஆண்டுகள் கட்டாயக் கல்வி என்றும், மெக்காலே திட்டத்துக்கு மாறாகத் தாய்மொழியே பயிற்றுமொழி என்றும், கைத்தொழில் அடிப்படையில் கல்வி என்றும், கைத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஆசிரியர் ஊதியம் என்றும் வார்தா கல்வித்திட்டம் வலியுறுத்தியது. இவற்றின் அடிப்படையில் ஜாகிர் உசைன் குழு ஆதாரக் கல்வித்திட்டத்தை உருவாக்கி அது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவை உலகப்போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, ஆட்சியிலிருந்து காங்கிரஸ் விலகியபின்பு, இக்கல்வித் திட்டம் தளர்ச்சி அடைந்திருக்கிறது. மீண்டும் 1946-இல் காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தபின் ஆதாரக்கல்வித் திட்டம் நடைமுறைக்குவந்துள்ளது.
விடுதலைக்குப்பின் 1948 -இல் அனைத்திந்தியக் கல்வி மாநாடு நடைபெற்றிருக்கிறது. அதில்விடுதலை பெற்ற இந்தியாவின் கல்விக் கொள்கை பற்றிய ஆய்வுநடைபெற்றிருக்கிறது. டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையில், 1948-லும் டாக்டர் இலட்சுமணசாமி தலைமையில் 1952 லும் பேராசிரியர் கோத்தாரி தலைமையில் 1964-66- லும் இந்தியக் கல்விக் கொள்கைகள் குறித்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 
தொலைநோக்குடன் 1968- இல் உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில், மக்களின் வாழ்வோடு நிறைந்த உறவும் தொடர்பும் கொண்டதாகக் கல்விஅமைய வேண்டும் என்றும், கல்வியின் தரம்அனைத்து நிலைகளிலும் உயர்ந்திடவேண்டும் என்றும், சிறந்த அருள் உணர்வுகளை மேம்படுத்துவதாகக் கல்வி இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் இரண்டு அரசுகள் இருக்கின்றன. ஒன்று மாநில அரசு; மற்றொன்று மத்திய அரசு. இரண்டு அரசுகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான். மக்களின் கல்வி உரிமை எந்த அரசின் கையில் இருக்கிறது?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், நெருக்கடி நிலை காலகட்டத்தில் - 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட 42 -ஆவது திருத்தத்திற்கு முன்புவரை, கல்வி உரிமை, மாநில அரசின் கையில் இருந்தது. அதன்பின் பொதுப்பட்டியலுக்குப் போய்விட்டது.
அப்படி இல்லாமல், கல்வி உரிமை மாநில அரசின் கையில்தான் இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் என்னென்ன?
• இரண்டு அரசுகளுமே மக்களால் தாம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்றால் கல்வி உரிமை மாநில அரசின் கையிலேயே இருந்திருக்கலாமே!
• இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியவர்கள் கல்வியை மாநிலப் பட்டியலில்தானே வைத்திருந்தார்கள்? 
• ஈசுவர்பாய் படேல் குழு அறிக்கையில் பாடத்திட்டம் சமுதாயத் தேவைக்கு இணங்க இருக்க வேண்டுமென்றும் மாணவர்களுக்கு உழைப்பின் மேன்மை உணர்த்தப்பட வேண்டுமென்றும் சமுதாயத்திற்காகத் தங்கள் உழைப்பைத் தரவேண்டுமென்றும் கூறியிருப்பவற்றை மாணவர்கள் மனதில் பதிய வைக்க மாநிலப் பட்டியலில் கல்வி உரிமை இருந்தால் முடியாதா?
• ஜப்பானில் டோக்கியோவில் 1949 -இல் தொடங்கப்பட்டிருக்கும் கல்வி ஆராய்ச்சி தேசிய நிறுவனம் போலவோ அல்லது 1968 -இல் பாரிசு நகரில் தொடங்கப்பட்டிருக்கும் கல்வி ஆராய்ச்சிப் புதுமையாக்க மையம் போலவோ கல்விக் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் ஆய்வுகளைத் தொகுத்து இந்தியச் சூழலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இந்தியக் கல்வியில் உலகத் தரத்தைக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடத் தடையாக இருப்பது எது?
• மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடிநிலை காலத்தில்தானே பொதுப்பட்டியலுக்குப் போனது? நெருக்கடி நிலை போனபின்பு பழைய நிலைக்குத் திரும்பலாமே.
• தாய்மொழியைக் கற்பதற்கும் தாய்மொழியில் கற்பதற்கும் தனது பண்பாட்டை அறிவதற்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கல்வி உரிமைகளைப் பெற மாநிலப் பட்டியலில் கல்வி இருப்பது வழிவகுக்காதா?
• இந்திய அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி முறைக்கு முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் நாடு கனடா. அது உலகின் இரண்டாவது பெரிய நாடு. அந்நாட்டில் 10 மாகாணங்களும் 3 துணைநிலை மாகாணங்களும் இருக்கின்றன. 1931- இல் விடுதலை அடைந்திருக்கிறது. வளர்ந்த நாடாக ஆகியிருக்கிறது. அங்கே கல்விக் கொள்கை, பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை ஆகிய கல்வி உரிமைகள் மாகாண அரசுகளிடம்தான் இருக்கின்றன.
• இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைக்கு முன்மாதிரியாகக் கொண்டுள்ள நாடு அமெரிக்க ஐக்கிய நாடு. அங்கே, கல்விக்கான நிதி, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை, பாடத்திட்டம் ஆகியவை குறித்த கல்வி உரிமைகள் மாநிலங்களிடமே உள்ளன.
• இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அடிப்படைக் கடமைகளுக்கு முன்மாதிரியாக சோவியத் ரஷியாவைப் பார்த்திருக்கிறது. அங்கே மத்தியத் திட்டக் குழுதான் கல்வி உரிமைகளை வைத்திருந்திருக்கிறது. ஆனால் அது சரியான முன்மாதிரியாக இல்லை. உக்ரேனியன் போன்ற தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமைகளை மறுக்கிற கல்வித் திட்டமாக அது மாறிவிட்டது.அவர்களின் தாய்மொழியைப் பள்ளியிலோ கல்லூரியிலோ பல்கலைக்கழகங்களிலோ பயன்படுத்த அனுமதிக்கவில்லை. தாய்மொழியில் செய்தித்தாள், புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு தடுக்கப்பட்டது. நீதிமன்றங்களில் அவர்களின் தாய்மொழிக்கு இடம் மறுக்கப்பட்டது. 
ஆகவே, ஒருவருக்குக் கல்வி உரிமை என்பது அவரது வாழிடச் சூழலை அறியும் உரிமையும் தாய்மொழி உரிமையும் பண்பாட்டு உரிமையுமேயாகும். இந்தியாவில் கல்வி எந்தப் பட்டியலில் இருக்கலாம் என்பது, எந்த மொழியையும் பண்பாட்டையும் பாடப்பொருளாக யாருக்குக் கற்றுத் தருவது என்பதில் அடங்கி இருக்கிறது. 

கட்டுரையாளர்:
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT