நடுப்பக்கக் கட்டுரைகள்

சூதாட்டமாகும் தேர்தல் களம்!

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்குள் கணக்கில் வராத பணம் சுமார் ரூ.1,600 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்குத்தான் முதலிடம்.

ஆர். வேல்முருகன்


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்குள் கணக்கில் வராத பணம் சுமார் ரூ.1,600 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்குத்தான் முதலிடம்.
பொதுவாகத் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடாவை எளிதாகவும்  எதிர்க்கட்சியினர் மிகுந்த சிரமத்துடனும் நடத்துவார்கள். ஆளும் கட்சியினரின் கடுமையான கெடுபிடிகளையும்  மீறி ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டோக்கன் கொடுத்ததாகக் கூறப்படுவது வேறு. 
தேர்தல் அறிவித்தவுடன் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் மிகக் கொடுமையானவை. வரியில்லாமல் கிடைக்கும் என்பதற்காக ரசீதுகள் இல்லாமல் பொருள்களை வாங்குபவர்கள்தான் பறக்கும் படையினரிடம் சிக்குகின்றனர். இதே நிலையைத்தான் ரசீதுகள் இல்லாமல் வெள்ளிப் பொருள்களைக் கொடுக்கும் சேலம் வியாபாரிகளும் சந்திக்கின்றனர்.
வியாபாரிகளிடம் பறிமுதல் செய்வதெல்லாம் லட்சக்கணக்கில் மட்டுமே. ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; தேர்தலில் வாக்குக்குப் பணம் தரக்கூடாது என்று பொது இடங்களில் அரசியல்வாதிகள் பேசுகின்றனர். ஆனால், தங்களுக்கு ஆதரவாக  வாக்களிப்போருக்கு அவர்கள்  வைத்திருக்கும் தொகை பல கோடிகள். இதுதான் இப்போது பறிமுதல் செய்யப்படுகிறது. இவர்கள்தான் நம்மைப் பாதுகாக்க தேர்தலில் போட்டியிடும் ரட்சகர்கள்! 
இலைமறைவு, காய்மறைவாக இருந்த வாக்குக்குப் பணம் தரும் கலாசாரத்தைப் பகிரங்கப்படுத்திய பெருமைக்குரியது தமிழகத்தின் திருமங்கலம் இடைத்தேர்தல்தான். அதன்பின்தான் இந்த நடைமுறைக்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயரே சூட்டப்பட்டது.
பொதுவாக ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவழிக்க வேண்டுமென்றால் காசோலையாகத்தான் தர வேண்டும். பின் எதற்காக பல லட்சம் ரொக்கக் கையிருப்பு?ரொக்கக் கையிருப்பு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அந்தத் தொகை முழுவதையும் பறிமுதல் செய்யலாம் அல்லது அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்.
 வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக  பொருளாளர் துரைமுருகன் வீடு, மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலில் ரூ.19 லட்சம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை உண்மை என்று துரைமுருகனே ஒப்புக் கொண்டிருக்கிறார். கதிர் ஆனந்தின் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தபடி ரூ.9 லட்சம் ரொக்கக் கையிருப்பு போக மீதி ரூ.10 லட்சத்தை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். உடனே, இது மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சி. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று துரைமுருகன் கூறினார்.
 இந்த நிலையில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துடன் தொடர்புடைய கட்சி ஆதரவாளர்கள் சிலரின்  வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தெரு வாரியாக வாக்குக்குப் பணம் வழங்குவதற்காக சுமார் ரூ.11.50 கோடி வைத்திருந்ததை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். இத்துடன் கல்லூரி தொடர்பான ஆவணங்கள் பலவும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை நடத்திய வருமான வரித்துறையினரே  தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வைத்துப் பிடித்துவிட்டதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டுகிறார்.
 அட்டைப் பெட்டிகளிலும் சாக்குகளிலும் வார்டு வாரியாகப் பணம் கொடுப்பதற்காக வார்டு எண்ணுடன் கவர்களில் புதிய ரூபாய் நோட்டுகளுடன் பல கோடி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை யார், எங்கிருந்து வாங்கினார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்.
இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும்  பங்கு இருந்தது உண்மையென்றால் அக்கல்லூரியின் அங்கீகாரத்தை, அது எந்தக் கல்லூரியாக, யாருடையதாக இருந்தாலும்  அரசு ஏன் ரத்து செய்யக் கூடாது? அல்லது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் கல்லூரி, பள்ளிகளைத் தங்களுக்குக் கேடயமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு பயம் ஏற்படும்.
ஒரு வேட்பாளர் வாக்குக்குப் பணம் தருவது நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்காவது எந்தத் தேர்தலிலும் அவரோ அவரது குடும்பத்தினரோ போட்டியிடக் கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். யாரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறதோ அவர்களை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்.  செலவுகளைக் காசோலை மூலம் செய்வதை உறுதிப்
படுத்த வேண்டும்.  
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேர்தலின்போது கட்சியினர் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்வார்கள். ஆனால், இப்போது பணம் தந்தால் மட்டுமே கட்சியினரே பணியாற்றும் நிலை. கூட்டணிக் கட்சியென்றால் கேட்கவே வேண்டாம். வேட்பாளர் கணிசமான தொகை கொடுத்தால் மட்டுமே தேர்தல் பணி. இல்லாவிட்டால் வேறு தொகுதி என்ற நிலைதான். வாக்குச்சாவடி முகவர்களும் விலை போவதைத் தடுக்க முடியவில்லை.
இந்த முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு தேர்தலிலும் இதே நிலை தொடரும்.
ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா தேர்தல்தான். ஆனால், அந்தத் தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் வகையில் அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.
வாக்காளர்களுக்குப் பணம் தருவதைத் தடுக்கக் கடும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாவிட்டால் தேர்தல் என்பது சூதாட்டமாவதைத் தடுக்க முடியாது. அதற்குப் பதிலாக யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் என்று நிர்ணயிக்கலாம். இவ்வாறு இருந்தால் ஏழை மக்கள் என்றுமே மக்கள் பிரதிநிதிகளாக  உருவாக முடியாது. இதற்குத் தீர்வுதான் என்ன, கடுமையான தண்டனையைத் தவிர?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT