நடுப்பக்கக் கட்டுரைகள்

எதிர்க்கட்சிகளா, எதிரிக்கட்சிகளா?

ஜோதிர்லதா கிரிஜா

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆம் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்துக் கூச்சலிடும் எதிர்க்கட்சிகளின் அறியாமை, 80 வயது கடந்தோரிடையே சிரிப்பையே தருகிறது.  இவர்களில் பெரும்பாலானோர் இந்திய விடுதலையின்போது பிறந்திருக்கவே இல்லை என்பதுடன், நம் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறிய முற்படவே இல்லை என்பதையே இவர்களது  எதிர்ப்புக்குரல் காட்டுகிறது.  அதிலும், காஷ்மீர் பற்றி அஆஇஈ கூட இவர்களுக்குத் தெரியவில்லையா அல்லது தெரிந்துகொண்டே பிரதமர் நரேந்திர மோடி அரசு என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இவர்களின் நிலைப்பாடா? 


பிரதமர் மோடி அரசுக்கு 100 சதவீதம் வக்காலத்து வாங்க முடியாதுதான். தவறுகளைத் தட்டிக்கேட்க வேண்டும்தான்.  ஆனால், தவறே இல்லாததைக்கூட எதிர்ப்பதைப் பற்றி என்ன சொல்ல? காஷ்மீர் பிரச்னை பற்றிய உண்மைகளைத் தொடக்கத்திலிருந்து அறிந்தால்தான், பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயலில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியப் பிரிவினைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டபோது, முதலில் இந்தியாவில் ஆங்காங்கு முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்த பகுதிகள் யாவற்றையும் பாகிஸ்தானுக்கு உரியவையாக்கும் நிலைப்பாடு எழுப்பப்பட்டது. இந்திய   எல்லைக்குள் சில குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி நடந்தது. ஹைதராபாத் சமஸ்தானத்தினுள் பாகிஸ்தான் ரஜாக்கர்கள் எனும் முரட்டுப் போராளிகளை ஆயிரக்கணக்கில் அனுப்பிவைத்தனர்.  ஏராளமான ஹைதராபாத் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ரஜாக்கர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வல்லபபாய் படேல் இந்தியப் படைகளை அனுப்பி  அந்த முயற்சியைத் தோற்கடித்து ஹைதராபாதை இந்தியாவுடன் இணைத்தார்.
காஷ்மீர் அப்போது தனி நாடாகச் செயல்பட்டது. ஆயுதம் தாங்கிய முரட்டு மலைவாசிகளை பாகிஸ்தான் அங்கு அனுப்பியதுடன், திடீர்ப் படையெடுப்பிலும் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான காஷ்மீரிகளைக் கொன்று குவித்தது. 
காஷ்மீரின் ஒரு பகுதி தம் கையை விட்டுப் போனபின், அதன் மகாராஜா இந்தியாவைத் துணைக்கு அழைத்தார். இந்தியாவுடன் இணையவும் சம்மதித்தார். அதன் பின் இந்தியப் படைகள் பாகிஸ்தானின் நபர்களையும் அதன் படையையும் தோற்கடித்து விரட்டியது. அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நினைத்திருந்தால் பாகிஸ்தான் படையை முற்றிலுமாக விரட்டி, முழு காஷ்மீரையும் மீட்க முடிந்திருக்கும். அதைச் செய்யாமல், பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை அமெரிக்கா சென்றிருந்தபோது, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு எடுத்துச் சென்றது, என் தந்தை (ஜவாஹர்லால் நேரு) செய்த மாபெரும்  தவறு என்று அறிவித்தார்.
அதன் பின் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு, தீர்மானத்தை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டது. பாகிஸ்தான் தன் படைகளுடன் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும். அதன் பிறகு,  பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் நேரடிக் கண்காணிப்பில் காஷ்மீர் மக்களின் நிலைப்பாடு பற்றி ஐ.நா. மேற்பார்வையாளர்கள் வாக்கெடுப்பு நடத்துவார்கள் என்பதே அந்தத் தீர்மானம். 
ஆனால்,  ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தை பாகிஸ்தான் ஏற்காததால்தான் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லையே ஒழிய, அன்றைய பிரதமர் நேரு தம் வாக்குப்படி நடக்கவில்லை என்பது அநியாயமான குற்றச்சாட்டாகும். அன்று ஐ.நா.வின் யோசனையை ஏற்காத பாகிஸ்தான், இன்று மறுபடியும் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. சபைக்குக் கொண்டுசெல்லப் போவதாகக் கூறுவது தவறு.
அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு என்ன செய்திருக்க வேண்டும்? ஐ.நா.வை மதிக்காத பாகிஸ்தானுடன் போரிட்டு அதைத் துரத்திவிட்டு அது திடீர்த் தாக்குதலால் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியை மீட்டெடுத்திருந்திருக்க வேண்டும்; செய்யவில்லை. காந்தி வழியில் போவதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா?    
இதற்கிடையே காஷ்மீரின் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லா, பிரதமர் நேருவின் மிக நெருங்கிய நண்பர். காஷ்மீரைத் தனி நாடாக அறிவிக்கும் நோக்கமுடையவர் என்பது பின்னர் வெளிப்பட்டது. அவரது நட்பின் வலிமையால்தான் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவுக்கு பிரதமர் ஜவாஹர்லால் நேரு இணங்கினார் என்று கூறப்படுகிறது.
இதுவரை இந்தியாவுடன் அவ்வப்போது செய்த அனைத்து ஒப்பந்தங்களையும்  பாகிஸ்தான் பலமுறை மீறியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக் கோடுகளை மீறுவது குறித்துக் கேட்கவே வேண்டியதில்லை. இவற்றை இந்த எதிர்க்கட்சிகள் எப்போதாவது கண்டித்ததுண்டா?
காஷ்மீருக்கு வந்து தங்கிச் சென்றுள்ள பல்வேறு நாட்டு (நியூயார்க் டைம்ஸ் உள்பட) பத்திரிகையாளர்களும்  இந்தியாவை ஆதரித்தே தங்களது இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்துள்ளனர் என்பது இந்த ஜனநாயகவாதிகளுக்குத் தெரியுமா? அதிலும், 1965-இல் பல்வேறு நாடுகளிலிருந்து காஷ்மீருக்கு வந்து ஆராய்ந்த பத்திரிகை நிருபர்கள், தங்கள் பத்திரிகைகளில் எழுதியவை இந்தியாவுக்கு ஆதரவானவையாகவே இருந்துள்ளன.
அடிக்கடி ஊடுருவலாளர்களைக் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் பாகிஸ்தான்  அனுப்பித் தொல்லை கொடுத்து வருவது பற்றி சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழின் நிருபர், பிரான்ஸின் லா மான்டே இதழின் நிருபர் முதலானோர் குறிப்பிட்டுள்ளனர். தில்லியிலிருந்து பி.பி.சி. நிருபர் தமது குறிப்பில், இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் பல கொரில்லாக்களை பாகிஸ்தான் அனுப்பியும், உள்ளூர் காஷ்மீர்வாசிகளிடம் அவர்களுக்குச் சிறிதும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை  என்று தெரிவித்துள்ளார்.
முன்னறிவிப்பின்றி ஒரு நாட்டின் மீது படையெடுத்து வெற்றிகொண்டு, அதன் மக்களை அச்சுறுத்தி மத மாற்றம் செய்து  அல்லது விரட்டியடித்து விட்டு, அதன் பின் அதை அந்த மதத்துக்குரிய மனிதர்களுக்குச் சொந்தமானது என்று அறிவிப்பது என்ன நியாயம்?  இந்த (அ)நியாயத்துக்குத் துணை போகிறவர்கள், உண்மையில் தேசபக்தி என்பது சிறிதேனும் உள்ளவர்கள்தானா?
காஷ்மீர் ஹிந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களாக உடனே மதம் மாற வேண்டும்; இல்லையெனில் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்என 1990-இல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புச் செய்யப்பட்டதன் விளைவாக ஏராளமான பண்டிட்டுகளும் சீக்கியர்களும் வெளியேறினர்;  இன்றைய நியாயவாதிகள் அப்போது எங்கே போயிருந்தார்கள்?  
நம் எல்லைக்கு அருகே இருந்த பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைக் கண்டறிந்த நம் ராணுவத் தலைவர்கள், அவற்றை அழிக்க உத்தரவு கேட்டபோது தர மறுத்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அன்றே அவற்றை அழித்திருந்தால், பின்னர் விளைந்த பல தொல்லைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இன்றைய பிரதமர் மோடியோ, நம் ராணுவத் தலைவர்கள் தம் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அவ்வப்போதைய தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்தியாவிலுள்ள சில கட்சிகள் பிற நாடுகளிடம் விசுவாசம் உள்ளவை. இவற்றின் தலைவர்களில் சிலர் தங்களை அறிவுஜீவிகள் என்று வெளிப்படையாக கூறிக் கொள்பவர்கள். தொடக்கத்திலிருந்து பொய்யே பேசி வந்திருக்கும், ஒப்பந்தங்களை மீறியே வந்திருக்கும் பாகிஸ்தானுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பது அறிவுஜீவிகளின் நிலைப்பாடு. எழுபது ஆண்டுகளாக நம்மை ஏமாற்றிப் பொய்களையே கூறிவரும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒழித்த பிறகுதான் அதனுடன் பேச்சுவார்த்தை என்று நாம் சொல்வதே அர்த்தமற்றது. ஏனெனில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தபடியே அவர்களை ஒழித்துவிட்டதாகவே பாகிஸ்தான் பொய் சொல்லும். பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவதை பிரதமர் இம்ரான் கானே அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, சாதுத்தன்மை நிறைந்த ராமபிரான்போல் பிரதமர் நரேந்திர மோடி செயல்படக் கூடாது. நடைமுறைத்தன்மையும், ராஜதந்திரமும் நிறைந்த கிருஷ்ண பரமாத்மாவைப்  போல் அவர் செயல்பட வேண்டும்.  நம் நாட்டின் எதிர்க்கட்சிகளும் எதிரிக்கட்சிகளாய்ச் செயல்படுவதை விடுத்து, ஆக்கப்பூர்வமான எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் எதிர்க்கும் போக்கு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது, நேர்மையற்றதும்கூட.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT