நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்தியத் தேர்தலில் புதின் வாக்களிப்பார்!

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அதிமுக்கியமான நிகழ்வு. தேர்தல் என்பது வெறும் ஆட்சியாளர்களை மட்டும் தேர்வு செய்வது அல்ல.

சு. வெங்கடேஸ்வரன்


தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அதிமுக்கியமான நிகழ்வு. தேர்தல் என்பது வெறும் ஆட்சியாளர்களை மட்டும் தேர்வு செய்வது அல்ல. அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே தேர்வு செய்வதாகும். அத்தகைய மிகமுக்கியமான தருணத்தில் இப்போது இந்தியா உள்ளது. 
உலகமயமாகிவிட்ட இப்போதைய பொருளாதாரத்தில் ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் என்பது உள்நாட்டு நிகழ்வு என்றநிலை மாறி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் கண்
காணிக்கப்படுகிறது. ஏனெனில், தேர்தலுக்குப் பிறகு ஒரு நாட்டில் ஏற்படும் ஆட்சி மாற்றம் என்பது தங்களுக்கு எந்த அளவுக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் அமையும் என்பது குறித்து ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு கணக்கீடுகள் உள்ளன. அந்த வகையில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான், அண்மையில் இந்தியாவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான தாமஸ் ஃபிரைட்மேன் இந்தியத் தேர்தல் குறித்து ஒரு பரபரப்பான விஷயத்தைப் பேசியுள்ளார். இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்தியத் தேர்தலில் புதின் வாக்களிக்க (புதினின் தலையீடு) அதிக வாய்ப்பு உள்ளது என்பதுதான் அவரது கருத்தின் சாராம்சம். ரஷியா மீது அமெரிக்கா கொண்டுள்ள மறைமுக காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது என்று இதனை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், இந்தக் கருத்தைக் கூறிய ஃபிரைட்மேன் சர்வதேச அரசியலில் சுமார் அரைநூற்றாண்டு அனுபவமிக்கவர். அமெரிக்க அரசின் செயல்பாடுகளையே பல முறை நேரடியாக விமர்சித்து கட்டுரைகளை எழுதியவர்.
அவரது கருத்து எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. தங்கள் நாட்டு அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்தது குறித்து விசாரிக்க அமெரிக்க அரசு விசாரணைக் குழுவை அமைத்ததும், அந்தக் குழு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் விசாரணை நடத்தியதும் நாம் அனைவரும் அறிந்ததுதான். 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா மறைமுகமாகச் செயல்பட்டது. முக்கியமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இதற்காக ரஷியா பயன்படுத்தியது என்பது முக்கிய குற்றச்சாட்டு.
இது தவிர ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் பொதுவாக்கெடுப்பிலும் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்த புகாரை பிரிட்டன் விசாரித்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, ரஷியா குறித்த ஃபிரைட்மேனின் கருத்து எளிதில் புறம்தள்ளிவிடக் கூடியதல்ல.
உளவுத் துறை, கண்காணிப்பு ஆகியவற்றில் இந்தியாவைவிட பலமடங்கு ஆற்றலுடன் செயல்படும் அமெரிக்க நாட்டின் தேர்தலிலேயே ரஷியாவால் தலையிட முடிகிறது என்னும்போது, இந்தியத் தேர்தலில் தாங்கள் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது ரஷியாவுக்கு அவ்வளவு கடினமான விஷயமாக இருக்காது.
இது தொடர்பாக மேலும் சில முக்கிய கருத்துகளை தனது இந்தியப் பயணத்தின்போது ஃபிரைட்மேன் கூறியுள்ளார். அதில், ரஷியாவுக்கு நமது நாட்டுத் தேர்தலில் தலையிட என்ன அவசியம் இருக்கிறது என்று நீங்கள் (இந்தியர்கள்) நினைக்கலாம். ஆனால், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் ரஷியா தனது வேலையைக் காட்டுவதற்கு வாய்ப்பளிப்பதாகவே
இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முகநூல் நிறுவனத்தையும் ஃபிரைட்மேன் கடுமையாக விமர்சித்துள்ளார். உலகில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் முகநூல், சமூகப் பொறுப்பு என்பதே இல்லாமல், சுயலாபத்துக்காக பயனாளர்களின் தகவல்களை விற்பது மட்டுமல்லாது, தேர்தலில் தவறான பிரசாரத்துக்கும் துணைபோகிறது. 
முக்கியமாக தேர்தல் நேரத்தில் எவ்வித ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பிரசாரத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வழி வகுக்கிறது. அதற்காக நாம் பெரும் விலையைக் கொடுத்து வருகிறோம். இதனை இப்படியே விட்டால் எதிர்காலத்தில் மேலும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது அவரது குற்றச்சாட்டு.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கருத்தைப் பதிவிட முடியும் என்ற நிலை உள்ளதையும், அதனால் பரவும் புரளிகளையும் நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம். குழந்தை கடத்தல்காரர்கள் என்று சமூக வலைதளத்தில் பரவிய புரளியால் அப்பாவிகள் சிலர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சோக நிகழ்வுகளை மறந்துவிட முடியாது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று தனி சமூக வலைதளக் குழுவை அமைத்து மாற்றுக் கட்சிகளை எள்ளி நகையாடுவது முதல் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு உள்ளாக்குவது வரை சமூக வலைதளத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்டது பெரும் சோகம்.
கருத்துகளைத் தெரிவிக்கும் சுதந்திரம் சமூக வலைதளங்களில் உள்ளது என்ற நிலை மாறி கருத்துத் திணிப்புக்கான தளமாக அவை மாறிவிட்ட சூழ்நிலையில், ரஷியா மட்டுமல்ல, வேறுசில அந்நிய நாடுகளும் அவற்றை நமக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT