நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்துத்துவம் என்பதன் பொருளே...

தெருவில் ஒரு கும்பல் ஒருவனைச் சூழ்ந்துகொண்டு அடித்துக் கொன்று போடுதல் என்பது அண்மைக்காலமாகத்தான் நம் நாட்டில் நிகழ்ந்து வருகிறது.

ஜோதிர்லதா கிரிஜா


தெருவில் ஒரு கும்பல் ஒருவனைச் சூழ்ந்துகொண்டு அடித்துக் கொன்று போடுதல் என்பது அண்மைக்காலமாகத்தான் நம் நாட்டில் நிகழ்ந்து வருகிறது. இது தொடங்கியதற்குக் காரணமே, ஆட்சி பீடத்தில் பாரதிய ஜனதா கட்சி அமர்ந்ததுமே சில இந்து அமைப்புத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி பிரதமர் நரேந்திர மோடியால் உடனுக்குடனாய்த் தண்டிக்கப்படாமல் போனதுதான்.
காங்கிரஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராய்த்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்தார்களே தவிர,  ராம ஜன்ம பூமியில் ராமருக்குக் கோயில் கட்டப்படும் என்கிற நம்பிக்கையால் அன்று என்பதைப் புரிந்துகொள்ளாமல் மத ரீதியான சிந்தனைக்கு இடம் அளித்ததன் விளைவுதான் தலைவர்கள் சிலரின் உளறல்களும் அறிவிப்புகளும். 
அண்மையில் மோட்டார்சைக்கிள் திருடன் என்று தாங்கள் சந்தேகித்த ஓர் இஸ்லாமிய இளைஞனை அடித்து நொறுக்கியதோடு, ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்!  என்று கூறுமாறு அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவர் மீது சந்தேகம் இருப்பின் காவல் துறையில்தானே புகார் செய்திருக்க வேண்டும்? முஸ்லிமான அவரை இந்துக் கடவுள்களின் பெயர்களைக் கூறுமாறு வற்புறுத்தியது அநாகரிகமல்லவா?
பிரதமர் மோடி அதைக் கண்டித்திருப்பதுடன், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளார். எனினும், இந்த நிகழ்வை வைத்து ஒட்டுமொத்தமாய் ஜார்க்கண்ட் மாநிலத்தைக் குறை கூறக்கூடாது என்றும் அறிவித்திருக்கிறார். 2014-இலிருந்து இன்று வரையிலுமான இந்த நிகழ்வுகள் சார்ந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும், இதுவரை எவருமே தண்டிக்கப்படவில்லை. பசுவதை, பசு மாமிசம் உண்பது போன்ற காரணங்களுக்காக கும்பல் வன்முறைக்குள்ளாகி இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். பிற மதத்தவரின் உணவுப் பழக்கங்களில் தலையிடுவது கூடாது என்பதை பா.ஜ.க. எப்போது புரிந்துகொள்ளும்? இந்துக்களிலும் கணிசமான எண்ணிக்கையினர் மாட்டு மாமிசம் உண்பவர்களாக உள்ளனரே. அவர்களை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கோ மாதா, கோ மாதா என்று புலம்புகிற இவர்கள், நம் இந்துக் கோயில்களில் பராமரிக்கப்படும் பசுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தார்களா? அவற்றின் தீவனத்துக்காக ஒதுக்கப்படும் பணத்தையெல்லாம் விழுங்கிவிட்டு, மாடுகளை எலும்பும் தோலுமாய் வைத்திருக்கிறார்களே...அதிக பாலுக்காக அவற்றின் கன்றுகளைப் பட்டினி போட்டுவிட்டு, அவற்றின் மடிகளில் ஊசி போட்டுச் சித்திரவதை செய்வது, இந்த கோ-மாதா புலம்பர்களுக்குத் தெரியாதா? பெற்ற மாதா-பிதாக்களை முதியோர் இல்லங்களில் கழற்றிவிடும் இந்து மகன்களைக் கண்டிப்பதை விடுத்து, கோ-மாதா புலம்பல் என்ன வேண்டிக் கிடக்கிறது?
இந்தக் குற்றவாளிகளைத் தக்கபடி தண்டிக்க புதிதாய் எந்தச் சட்டமும் தேவையில்லை. இன்று அமலில் இருக்கும் சட்டங்களிலேயே அதற்குப் போதுமான இடம் இருக்கிறது. புதிய இன்னும் கடுமையான சட்டங்கள்  வரும்போது வரட்டும். அதுவரையில் இந்த ஈவிரக்கமற்ற மூடத்தனமான மதவாதிகள் தண்டனையின்றிக் குளிர்காய வேண்டுமா என்ன?
இந்துத்துவம் என்பதன் அடிப்படையான கொள்கைகளில் தலையாயது அதன் எம்மதமும் சம்மதமே என்று சொல்லும் மதச்சார்பின்மைதான் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?  இவை ஒருபுறமிருக்க, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும், உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களும் இஸ்லாத்தின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நிறைய எண்ணிக்கையில் ஏன் குரல் கொடுப்பதில்லை?  இங்கொன்றும் அங்கொன்றுமாய் மிக மிகச் சிலரே குரானில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிகளுக்கு மாறாக அவர்கள் நடப்பதாக நாளேடுகளில் எழுதிவருகிறார்களே தவிர, அவர்களைத் திருத்த இவர்கள் செய்யும் முயற்சிகள் மிகக் குறைவு.  நம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்துவந்துள்ள முஸ்லிம்களேகூட, காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களான பண்டிட்டுகள் உள்ளூர் முஸ்லிம்களால் விரட்டியடிக்கப்பட்டது பற்றி வாயே திறந்ததில்லையே! 
கடவுளைச் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்கிறது  இந்து மதம். அப்படி இருக்கையில், குறிப்பிட்ட இடத்தில்தான் ராமர் கோயில் கட்டுவோம் என்று இந்துக்கள் ஏன் பிடிவாதம் பிடிக்க வேண்டும்?  வங்கதேசத்தின் மிகத் தொன்மையான காளி கோயில்கள் நூற்றுக்கணக்கில் தகர்க்கப்பட்டு, அவை கொள்ளையும் அடிக்கப்பட்டன.
முஸ்லிம்கள் அந்தக் காலத்தில் இந்துக் கோயில்களை இடித்துக் கொள்ளையும் அடித்தார்கள் என்பது உண்மைதான். என்றோ நடந்ததற்கு இன்று இந்துக்கள் பழிவாங்க வேண்டுமா? பாபர் மசூதியை  இடித்ததன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதை இந்துக்கள் அனைவரும் அறிவார்களா? (அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா எனும் வங்க நாவலின் ஷேம் என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கலாம்.)
நம் நாட்டில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பஞ்சமே இல்லை.  ஒரு முஸ்லிம் முதலாளி தம்மிடம் பணிபுரிந்த  உறவுகள் அற்ற இந்து முதியவர் ஒருவருக்கு இந்து மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்ததாக 28.6.2019 அன்று நாளேடுகளில் செய்தி வந்தது.
அதேபோல் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று பிரசவ வலிக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு பிள்ளையார் கோயில் வளாகம் ஒன்றில் இந்துக்கள் பிரசவம் பார்த்த செய்தியும் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த முஸ்லிம் தம்பதி அந்தக் குழந்தைக்கு கணேஷ் என்று பெயரிட்டதாகவும் செய்தி வந்தது. இது போல் அவ்வப்போது மனம் குளிரும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. 
இந்துக்களும் முஸ்லிம்களும் நட்போடுதான் பழகிவருகிறார்கள். ஒருசில மதவாதிகளும் அரசியல்வாதிகளும் புரிந்துவரும் அடாத செயல்களால்தான் இன்று ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டுள்ளது. மிக மோசமான பல அநியாயங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்காகச் சில நியாயமான செயல்களைக்கூடச் செய்யாதிருத்தலே அறிவுடைமை என்பதை பாபர் மசூதியை இடித்ததை ஏற்பவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT